இரக்கம் எனும் ஓர் இறைப்பண்பு - பா.ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்.

இரக்கம்  எனும் குணம் இருபாலருக்கும் பொது என்றாலும்  இருவரில் யாருக்கு அதிகம் என்றால் அதில் பெண்ணுக்குதான் முதலிடம். 
இரக்கம் எனும் ஓர் இறைப்பண்பு - பா.ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்.

இரக்கம்  எனும் குணம் இருபாலருக்கும் பொது என்றாலும்  இருவரில் யாருக்கு அதிகம் என்றால் அதில் பெண்ணுக்குதான் முதலிடம்.  மனோதத்துவ  ரீதியான காரணமும் இதற்கு உண்டு.  கண் முன்னே காணும் ஒரு நிகழ்வை, ஓர் ஆண் அறிவை முன் வைத்தும் உணர்வைப் பின்வைத்தும் பார்க்கிறான். ஆனால், பெண்ணோ உணர்வையும் அறிவையும் ஒரு சேர  வைக்கிறாள்.  அதனால் அங்கே இரக்கம் முந்திக்கொள்கிறது.  எனவே, இரக்கப்படுவதில் பெண்ணுக்கே முன்னிலை - அதுவே அவளின் தெய்வநிலை.

துன்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு அத்துன்பத்தை நீக்கும் வாய்ப்புபெறும் ஒரு பெண், இரக்கத்துடன் உதவுவது இயல்பானதே. ஆனால் துன்பம் நீக்கும் பெண்ணிடம் அதிகார பொறுப்பும் சேர்ந்து இருந்தால் அங்கே அவள் காட்டும் இரக்கம் எப்போதும் இரட்டிப்பாக இருக்க வேண்டும். 

தன்னிடம் மருத்துவ உதவி வேண்டி வந்த ஒரு பெண்ணிடம் சாதாரணமாகக் காட்ட வேண்டிய இரக்கத்தைக் கூட காட்ட மறுத்த ஓர் அதிகார பொறுப்பு கொண்ட  பெண்மணி குறித்து பேசப்போகிறேன்.  "பிறழ்மாதிரி'யான இவர்போல் யாரும் பெயரெடுக்கக் கூடாதென வேண்டுகிறேன்.

2000ஆம் வருடத்தில் கடலூர் மாவட்டத்தில் எனக்கு நேர்ந்த அனுபவம். அம்மாவட்டத்தில் அப்போது மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.  மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அடுத்த பதவி; மாவட்ட வருவாய் துறைக்கு தலைமை மற்றும்  மாவட்ட கூடுதல் நீதிபதி என பல்வகை நிலைகளில் பொறுப்பு.  முகாம் அலுவலகத்துடன் கூடிய அரசு பங்களாவில் வசிப்பு.

ஒருநாள் இரவு, உணவுக்குப் பின்னர், வீட்டின்முன் விசாலமாக இருந்த தோட்டத்தில் அமர்ந்து, மாமனார், மாமியார், கணவர் என குடும்பத்தினர் அனைவரும் பேசிக்கொண்டிருந்தோம். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் செல்லிடப்பேசிகள் வந்திருக்கவில்லை.  நேரம் பத்தரை மணி இருக்கும்.  முகாம் அலுவலகத்தில் தொலைபேசி ஒலித்தது. யாரென்று பார்த்து வருகிறேன் என்று கணவரிடம் சொல்லிவிட்டு அலுவலக அறைக்குள் சென்று தொலைபேசி அழைப்பை ஏற்றேன். மறுமுனையில் ஒருவர் மிகவும் பதட்டமாகப் பேசினார். தனது தங்கை பிரசவத்திற்காக அரசு  தலைமை மருத்துவமனைக்கு மாலை ஐந்து மணிக்கே வந்ததாகவும், அரசு மருத்துவர் பரிசோதனைக்குப் பின் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்து விட்டார் எனவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் பேறுகாலப் பிரிவு கட்டடத்திற்கு வெளியே கிடப்பதாகவும் உடனே ஏதாவது உதவி செய்யுங்கள் என்றும் படபடத்தார். "ஆவன செய்கிறேன்' என்று சொன்னேன். நேரத்தைப் பார்த்தேன். மணி 10.35 ஆகியிருந்தது. இதுகுறித்து  ஆர்.டி.ஓ வையோ, தாசில்தாரையோ அல்லது மாவட்ட மருத்துவ அதிகாரியையோ தொலைபேசியில் கூப்பிட்டுச் சொல்லி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ள ஏனோ எனக்கு தோன்றவில்லை. கர்ப்பிணிப்பெண் ஒருவர்  மருத்துவ உதவி இன்றி துன்பத்தில் இருக்கிறார் என்று வந்த  செய்தி, நானே அங்கு செல்ல வேண்டும் என்றே என்னை உந்தியது.

எனது கணவரிடம் அவரது இரு சக்கர வாகனத்தை எடுக்கச் சொன்னேன். நான் போட்டுக் கொண்டிருந்த  சுடிதார் உடையிலேயே அவருடன் கிளம்பி விட்டேன்.  எங்களது குடியிருப்பில் இருந்து அரசு  தலைமை மருத்துவமனை ஒரு கிலோமீட்டர் தூரம் கூட இருக்காது. அடுத்த ஐந்து நிமிடத்தில் இருவரும் அங்கிருந்தோம்.  பேறுகாலப் பிரிவு, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் பிரதான கட்டடத்தின் பின்பக்கம் இருந்தது. ஒரு வாரத்திற்கு முன்புதான் அங்கு தாய்ப்பால் வார விழா என் தலைமையில் நடந்திருந்ததால் அவ்விடத்திற்கு என்னால் நேரடியாகச் செல்ல முடிந்தது. அதிக வெளிச்சம் இல்லாமல்  அப்பகுதி  இருட்டாக இருந்தது.  பேறுகாலப் பிரிவு கட்டடத்தில்  எரிந்த விளக்குகளின் வெளிச்சம் அதன்  வாசலுக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்தது.

பிரசவ வார்டு என்பதால் என் கணவர் வாகனத்தின் அருகிலேயே நின்று கொண்டார். வார்டின் வாசலில் கர்ப்பிணிப் பெண்ணைத் தேடினேன். வெளிச்சப் பகுதியில்  அவர் இல்லை. கண்களை குறுக்கிக் கொண்டு கூர்மையாகப் பார்க்கையில்  இருபதடி தூரத்தில் இருட்டுப் பகுதியில் ஒரு வயதான பெண்மணி கால் நீட்டி அமர்ந்திருந்தது தெரிந்தது. அருகில் சென்றேன். பேச்சு கொடுத்தேன். அவரிடம் பதிலில்லை. கையை மட்டும் சைகையாக பக்கத்தில் காட்டினார். கை காட்டிய பக்கம் பார்த்தேன். யாரோ படுத்திருப்பது தெரிந்தது. ஆனால் கரிய இருட்டில் சரியாகத் தெரியவில்லை. சற்று தூரத்தில் இரு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.  நான் தேடுவதைப் பார்த்து ஓர் இளைஞர் அருகில் வந்தார். தன் கையில் இருந்த டார்ச்சை படுத்திருந்த உருவம் மீது திருப்பினார். நான் கண்ட காட்சி என்னை  ஒரு கணம் தூக்கிப்  போட்டு விட்டது. தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டதைவிட மிக மோசமான நிலையில் ஒரு பிள்ளைதாச்சிப் பெண் கிடந்தாள். மண்ணோடு மண்ணாக உழன்று, மயக்க நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தாள். அவளது பெரிய வயிறு சரிந்து கிடந்தது. 

வயதான பெண்மணியிடம்  "என்ன நடந்தது?' என கேட்டேன்.  இப்போதும் அவரிடம் பதில் இல்லை  செய்கைதான் செய்தார்.  பின்னர்தான் புரிந்தது, அவருக்கு சுத்தமாக  காது கேட்கவில்லை. விரக்தியின் விளிம்பில் இருந்த அவருக்கு பேசவும் பிடிக்கவில்லை போலும். விபரீதம் உணர்ந்தேன்,  உடனடியாக பேறுகால பிரிவுக்குள் ஓடினேன். செவிலியர்  ஒருவரும் இரு பெண் உதவியாளர்களும் இருந்தனர். "நிறைமாத கர்ப்பிணிப் பெண் வெளியில் கிடக்கிறாள்  நீங்கள் எல்லாம் என்ன செய்கிறீர்கள்? உங்கள் மருத்துவ அலுவலர் எங்கே?' என கேட்டேன். "அவர் தூங்கப் போய் விட்டார்'   என அந்த செவிலியர்  சாதாரணமாக சொன்னார். "அவரது அறை எங்கே?' என்றேன். அறையைக் காட்டினார். தாள்போட்டிருந்த அறைக்கதவை  படபடவென்று  தட்டினேன். 

அரசு மருத்துவமனையில், அரசு மருத்துவர் பணி செய்து, அரசு சம்பளம் பெறும் பெண் மருத்துவப் பெருந்தகையார் தூக்கம் கலைந்து எழுந்து வந்தார். ஏன் இப்படி கதவைத் தட்டுகிறாய்? என்று கண்களால் கேட்டார். "நீங்கள் யார்?' என வார்த்தைகளால்  வினவினார். என்னை அறிமுகம் செய்தேன். நான் என்ன அதிகாரி என்றே அவருக்குத் தெரியவில்லை அல்லது புரியவில்லை.

"வெளியில் கிடக்கும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏன் நீங்கள் மருத்துவம் செய்யவில்லை?' என கோபமாகக் கேட்டேன். யார் குறித்து கேட்கிறேன் என்பதை செவிலியரிடம் வினவினார். "ஐந்து மணிக்கு வந்த அந்த கேஸ்' என்று செவிலியர் அடையாளப்படுத்தினார். உடனே பெண் மருத்துவர் என்னிடம் "அது காம்பளிகேட்டட் கேஸ். நான் எப்பவோ ஜிப்மருக்கு ரெஃபர் செய்து விட்டேன். இன்னும் அந்த கேஸ் போகலையா?' என்று கேட்டார் சலனமின்றி. ஜிப்மர் என்பது பாண்டிச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனை. அங்கு செல்ல அங்கிருந்து ஒருமணி நேரம் பயணிக்க வேண்டும். எனக்கு கோபம் எல்லை தாண்டிவிட்டது. "ஏற்கெனவே மிக முன்னெடுத்த நிலையில் (அக்ஸ்ஹய்ஸ்ரீங்க் நற்ஹஞ்ங்) பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு வந்திருக்கும் அப்பெண்ணை கவனிக்காமல் உங்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது?'   என பெண் மருத்துவரிடம் கேட்டேன். "இன்று ஐந்து சிசேரியன் செய்தேன். அதனால் அலுப்பில் படுத்து விட்டேன்' என்றார். "இந்த காம்பளிகேட்டட் கேûஸ நான் பார்க்க முடியாது' என மறுத்தார். "இது நியாயமில்லை டாக்டர். நீங்கள் அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தே ஆக வேண்டும். இன்னமும் நேரம் தாண்டி அவளை ஜிப்மருக்கு கொண்டு செல்லும் வரை அவள் தாங்க மாட்டாள். பிரசவத்திற்கு உடன் ஏற்பாடு செய்யுங்கள். ஐந்து மணிக்கே அவளை நீங்கள் ரெஃபர் செய்திருந்தாலும் அவள் அங்கே சென்று விட்டாளா? என்பதை நீங்கள் உறுதி செய்திருக்க வேண்டாமா? அவளை அரசு மருத்துமனையின் ஆம்புலன்ஸிலேயே அனுப்ப ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா?' என அடுக்கினேன். மருத்துவரோ செவிலியரோ சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.  ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்.

நான் அவர்களை எதிர்பார்க்காமல் வெளியே வந்தேன். அங்கு நின்றிருந்த அந்த இரு இளைஞர்களை உதவிக்கு கூப்பிட்டேன். அவர்கள் உதவியுடன் கர்ப்பிணிப் பெண்ணை தூக்கிக் கொண்டு வார்டுக்குள் வந்து அங்கிருந்த  ஒரு படுக்கையில் படுக்க வைத்தேன். பெண் மருத்துவர் இன்னமும் வார்டுக்கு வரவில்லை. செவிலியரிடமும் பெண் உதவியாளர்களிடமும் "இப்பெண் என்னுடைய பேஷண்ட். நானே வந்து அட்மிஷன் போட்டிருக்கிறேன்.  உடனடியாக பிரசவம் பார்த்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றுங்கள். இவளுக்கு  ஏதாவது நேர்ந்தால் நடப்பது வேறு' என்று உரத்த குரலில்  சொன்னேன்.

மருத்துவ உயரதிகாரியிடம் இது குறித்து  தெரிவிக்க வேண்டும் என தொலைபேசி தேடினேன்.  பேறுகாலப் பிரிவில் தொலைபேசி இல்லை. மருத்துமனையின் பிரதான கட்டடத்திற்கு சென்றேன்.  கணவரும் உடன் வந்தார். அங்கே வரவேற்பு பிரிவில் இருந்த  தொலைபேசியில் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநரை அழைத்து விவரம் சொன்னேன். பெண் மருத்துவரின் உதாசீனம் குறித்து கோபப்பட்டேன். அவர் கேட்டார், "மேடம்... பேஷண்ட் உங்களுக்கு சொந்தமா? இந்த இரவு நேரத்தில் வந்திருக்கிறீர்களே?'.   நான் சொன்னேன், "அவளது பெயர்  கூட எனக்கு தெரியவில்லை. யாரோ ஒருவர் போனில் சொன்னார். உதவி கேட்டார்.  அதனால் வந்தேன்' என்றேன். முதலில் வியந்தார். பின்னர், "நான் பார்த்துக் கொள்கிறேன். பிரசவத்திற்கு உடன் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் கிளம்புங்கள். நாளை காலை உங்களுக்கு அப்பெண் குறித்து தகவல் சொல்கிறேன்' என்றார். 

      மனது கேட்காமல் மீண்டும் பேறுகால பிரிவிற்கு வந்தேன்.  வார்டினுள் படுக்கையில் கிடத்தப்பட்டு இருந்த கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்து உதவியாளர்களில் ஒருத்தி, "உன்னை அப்பவே ஜிப்மருக்கு போகச் சொல்லியும் இன்னமும் ஏன் இங்கேயே இருக்கிறாய்?' என கடிந்து கொண்டிருந்தார். கர்ப்பிணிப் பெண்ணின் மீது ஒட்டியிருந்த மணலை பெண் உதவியாளர்கள் துடைத்திருந்தார்கள். அவள் கொஞ்சம் ஆசுவாசமாகி லேசாக கண் திறந்திருந்தாள். பக்கத்தில் வந்து நின்ற என்னைப் பார்த்தாள். பேசவில்லை. கண்களில் நன்றி காட்டினாள். அவளிடம், "தைரியமாக இருங்கள் நல்லதே நடக்கும்' என்றேன், அவளை கடிந்த உதவியாளரை நான் மிகக் கடிந்தேன். பேஷண்ட்டுக்கு ஏதாவது ஆகிவிட்டால் யாரையும் சும்மா விட மாட்டேன் என சொன்னேன்.  மீண்டும் பெண் மருத்துவரின் அறைக்குச் சென்று மருத்துவ பணிகள்  இணை இயக்குநரிடம் நான் பேசி விட்டதை தெரிவித்து விட்டு, கர்ப்பிணிக்கு மருத்துவம் பார்த்து அவளையும் அவள் குழந்தையையும் காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டு "அவளுக்கு ஏதாவது நடந்தால் நான் நடவடிக்கைக்கு பரிந்துரைக்க வேண்டி இருக்கும்' எனவும் சொல்லி விட்டு  கணவருடன் வீட்டிற்கு திரும்பி  விட்டேன்.

மறுநாள் காலை 7.30 மணிக்கு இணை இயக்குநர் தொடர்பில் வந்தார்.  அப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டதாகவும் பெண் குழந்தை பிறந்தது எனவும் ஆனால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை எனவும், தாயை மிகவும் கஷ்டப்பட்டு காப்பாற்றி விட்டதாகவும் தெரிவித்தார். "பெரிய உயிராவது காப்பாற்றப்பட்டதே' என நான் மகிழ்ந்து பிரச்னை முடிந்ததென நினைத்தேன். எனது பிற பணிகளில் கவனம் செலுத்தலானேன். ஆனால் பிரச்னை அப்போதுதான் ஆரம்பமாகி இருந்தது என்பது அப்போது எனக்கு தெரியவில்லை.

(அடுத்த இதழில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com