

இந்தியாவில், மகளிர் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்க்க... உற்சாகப்படுத்த, பெண்களே அதிகமாக வருவதில்லை. அதே சமயம், ஆண்கள் ஆடும் கிரிக்கெட்டை, பெண்கள் செலவு செய்து வெளிநாடு சென்றும் பார்க்கிறார்கள்... உற்சாகப் படுத்துகிறார்கள். மகளிர் கிரிக்கெட்டைப் பார்க்க வரும் கூட்டத்தை விரல் விட்டு எண்ணிவிடலாம். பார்வையாளர்கள் நூறைத் தாண்டினாலே ஒரு சாதனைதான். மார்ச் 15ல் ப20 உலகக் கோப்பைக்கான மேட்ச் பெங்களூருவில் நடந்தது. இந்திய மகளிர் அணியும், பங்களாதேஷ் மகளிர் அணியும் மோதியது. இந்த ஆட்டத்தைக் காண வந்தவர்களின் எண்ணிக்கை இருநூறைத் தாண்டவில்லை. ப20 மேட்ச்சுகளுக்கே இந்த கதி என்றால், சாதாரண மேட்ச்சிற்கு எவ்வளவு பார்வையாளர்கள் வருவார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.
தீண்டாமை மகளிர் கிரிக்கெட்டுக்கும் உண்டு போலும். மகளிர் கிரிக்கெட் பொதுவாக டிவி சானல்களில் ஒளிபரப்பப்படுவதில்லை. பெண் கிரிக்கெட் வீரருக்கு குறைந்த சன்மானம் தரப்படுகிறது. ஆட்டத்திற்கு ஒதுக்கப்படும் பரிசுத் தொகையின் மதிப்பும் சொற்பம். விமானத்தில் எக்கானமி வகுப்பு பயணம். ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு பிசினெஸ் கிளாஸ் விமானப் பயணம். ஆண் கிரிக்கெட்டில் பல நூறு கோடிகள் புழங்கும் போது, மகளிர் கிரிக்கெட்டில் சில லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுவதே அதிகம் என்று சொல்லப்படுகிறது. மகளிர் கிரிக்கெட்டிற்கு ஸ்பான்சர்கள் இல்லை. தரப்படும் விளம்பரங்களும் குறைவு. சர்வதேச கிரிக்கெட் ஆடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் யதார்த்த நிலைமை இதுதான்.
இந்தியக் கிரிக்கெட் வாரியம், மகளிர் கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும், தற்போது நிலைமை முன்னேறி வருகிறது.
சமீபத்தில், மித்தாலி ராஜ் தலைமையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ப20 தொடரில் ஆஸ்திரேலியாவையும், ஸ்ரீ லங்காவையும் தோற்கடித்துள்ளது. கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்பதே முக்கியக் கனவு.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜின் தாய் மொழி தமிழ். 33 வயதாகும் மித்தாலி ஜோத்பூரில் பிறந்தவர். தந்தை துரைராஜ், இந்திய விமானப் படையில் அதிகாரியாகப் பணி புரிந்தவர். அம்மா பெயர் லீலா. பத்து வயதில் கிரிக்கெட் மட்டை எடுத்து விளையாட ஆரம்பித்த மித்தாலி, பதினேழாம் வயதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தேர்வு பெற்றார். 1999ல் அயர்லாந்திற்கு எதிராக நடந்த ஆட்டத்தில் மித்தாலி சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்திற்கு அறிமுகம் ஆனார் . தற்சமயம் மித்தாலி ஹைதராபாத்தில் வசிக்கிறார். மித்தாலிக்கு பரத நாட்டியம் நன்றாக ஆட வரும்.
சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தில் பேட்ஸ் உமன் தர வரிசையில் மூன்றாம் இடத்தில் நிற்பவர். பத்மஸ்ரீ, அர்ஜுனா விருதுகளும் மித்தாலிக்கு வழங்கப்பட்டுள்ளன. மித்தாலி இந்திய மகளிர் கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் ஒரு நாள் மேட்ச் ஆட்டங்களில் 5000 ரன்கள் எடுத்து முதலிடத்தில் நிற்பவர். உலக தர வரிசையில், 5000 ரன்கள் எடுத்த பெண்களில் மித்தாலிக்கு இரண்டாமிடம். 1999இல் 214 ரன்கள் எடுத்து உலக சாதனை ஏற்படுத்திய போது மித்தாலிக்கு வயது 19தான்.
தன்னைப் பற்றியும் , ப20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் மித்தாலி ராஜ் மனம் திறக்கிறார்:
ஆஸ்திரேலியாவில் ப20 தொடர் போட்டிகள் நடந்த போது, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, விராட் கோலி, ஹர்பஜன் சிங், அஜின்க்யா ரஹானே, இந்திய மகளிர் அணியினரைச் சந்தித்து, உற்சாகம் கொடுத்ததுடன் சில வழிகாட்டல்கள் தந்தனர். ஆஸ்திரேலியாவை இந்திய மகளிர் அணி தோற்கடிக்க இந்த சந்திப்பு நன்றாகவே உதவியது.
கிரிக்கெட் ஆட்டத்தில் அடக்கி ஆடவோ... எச்சரிக்கையுடன் ஆடவோ தேவையில்லை. திறமையை முழுமையாகக் காட்டி தைரியமாக ஆட வேண்டும். இதைத்தான் மாற்று அணியினர் கடைப்பிடிக்கிறார்கள். போட்டியாளர்கள் எப்படி விளாசுகிறார்களோ அப்படி நாமும் ஆட வேண்டும் என்று கோச் சொல்வார். அப்படியே செய்ய முயற்சிக்கிறோம் .
மகளிருக்கான கிரிக்கெட்டில் ஐடக மற்றும் ப20 போட்டிகள் நடக்க வேண்டும். இந்தப் போட்டிகள் சாத்தியப்படும் விதத்தில் இந்திய மகளிர் அணி திறமையாக விளையாடவேண்டும். இதுதான் தகுந்த தருணம். அதை நாங்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். வேகப் பந்து வீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஓர் வரப் பிரசாதம் என்றே சொல்லலாம். அவர்தான் இந்திய மகளிர் அணியின் துணைத் தலைவி.
எங்கள் கோச் பூர்ணிமா ராவ், எங்களுக்கு முழு சுதந்திரம் தந்திருக்கிறார். தைரியமாக விளையாடி பார்வையாளர்களைக் கவர வேண்டும். மகளிர் கிரிக்கெட்டைப் பற்றி நாலு பேர் பேசும்படி விளையாடவேண்டும். ப20 உலகக் கோப்பையை வென்றாக வேண்டும்.. என்று உற்சாகப்படுத்துகிறார் .
உடல் வலிமை கிரிக்கெட்டிற்கு அவசியம்தான். பொல்லார்ட் மாதிரி கெத்தா நிக்கணும். அவர் மாதிரி நானும் இருந்தா... என்று கற்பனையில் மூழ்குவதுண்டு. அதுதவிர மகளிர் கிரிக்கெட்டிற்கு விளம்பரம் தேவை.. தோனி, கோலி என்றால் அவர்கள் உருவம் மட்டுமல்ல, அவர்கள் ஆடும் கிரிக்கெட்டும் மக்கள் நினைவுக்கு வரும். அது போல, பெண் ஆட்டக்காரர்கள் மக்கள் மனதில் பதிய வேண்டும். எனது பெயரைப் பலரும் தெரிந்து வைத்திருக்கலாம். ஆனால் என்னை நேரில் பார்த்தால் அவர்களால் மித்தாலி என்று அடையாளம் கண்டு கொள்ள முடியாது. ஒரு விளையாட்டை பிரபலப்படுத்தும் போது -அந்த விளையாட்டை ஆடும் ஆட்டக்காரர்களையும் பிரபலப்படுத்த வேண்டும். அப்போதுதான், மக்களுக்கு அந்த ஆட்டக்காரர்கள், ஆட்டம் குறித்து தெரிய வரும்.
திருமணமா? கிரிக்கெட்டா? என்றால் கிரிக்கெட் பக்கம்தான் சாய்வேன். ஆஸ்திரேலிய, இங்கிலாந்து பெண்கள் 34, 35 வயதிலும் கிரிக்கெட் ஆடுகிறார்கள். எனக்கு 33 தானே ஆகிறது. திருமணம் செய்து கொள்ள கொஞ்சம் நாளாகும். எனக்கு இரண்டு தருணங்களில் அறிமுகம் ஆனவர்களுக்கு, என்னால் நேரம் ஒதுக்க முடியாமல் போனது. அதனால் அந்த உறவுகள் திருமணத்தில் முடியவில்லை. மனது காயப்பட்டது உண்மைதான். நல்லவேளை. கிரிக்கெட்டில் பிசியாகிப் போனதால் அதைப் பற்றி கவலைப்பட நேரம் கிடைக்கவில்லை, இனி நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு கிரிக்கெட் ஆடினால். திருமண பந்தத்திற்கும் சரி.. கிரிக்கெட்டிற்கும் சரி... பொறுப்புகளை சரிவரச் செய்ய முடியாது..
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய வேண்டும். கிரிக்கெட் ஆட்டக்காரரை திருமணம் செய்யலாமா என்று இதுவரை சிந்திக்கவில்லை. வரன் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த துறையில் உள்ளவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை. என்னை புரிந்து கொள்ளவேண்டும். கிரிக்கெட் மீதுள்ள எனது ஆர்வத்தை உணர்ந்து கொள்ளவேண்டும். ஒரு வேளை, திருமணத்திற்குப் பிறகு, உடல் கிரிக்கெட் விளையாட பிட்னசாக இருக்கும் பட்சத்தில் கிரிக்கெட் ஆட வாய்ப்பு வந்தால், எனது விருப்பத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமே. நல்ல துணை கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன். திருமணத்திற்குப் பிறகு கிரிக்கெட்டிற்கு வர மாட்டேன்.
நான் கிரிக்கெட்டிற்கு வர முக்கிய காரணம் எனது பெற்றோர்கள்தான். நான் ரொம்ப சோம்பேறி என்பதால் என்னை கிரிக்கெட் ஆடச் சொன்னார்கள். அப்போதாவது மகள் சுறுசுறுப்பாகட்டும் என்று நினைத்தார்கள். ஆனால் கிரிக்கெட் என்னைக் கொஞ்சம் கூட மாற்றவில்லை. இப்போதும், உறக்கம் எனக்கு பிடித்தமான விஷயம்.
கிரிக்கெட்டுடன் என்னை சீரியஸôக இணைத்துக் கொண்ட போது, உறவினர்களுக்கு அது பிடிக்கவில்லை. தாத்தா "நீ கிரிக்கெட் ஆட வேண்டாம்' என்றார். அவர்களுக்கு கிரிக்கெட் என்பது ஆண்களின் விளையாட்டு. ஆண்களுக்கான ஆட்டம்; மகளிர் கிரிக்கெட் ஆடக் கூடாது. குடும்பத்தில் நடக்கும் நல்லதுகளுக்குப் போகும் போது, உறவினர்கள், கிரிக்கெட் ஆடும் என்னை ஒருமாதிரி பார்ப்பார்கள். ஆனால், பெற்றோர்கள் எனக்கு படு உற்சாகம் தந்தார்கள். கிரிக்கெட்டில் பெயர், புகழ் கிடைக்கத் தொடங்கியதும், உறவினர்கள் என்னைப் பாராட்டும் அளவிற்கு மாறிவிட்டார்கள். கிரிக்கெட்டிற்காக பாரத நாட்டியத்தை தொடராமல் தியாகம் செய்தவள் நான் .
மகளிர் கிரிக்கெட்டில் எல்லோரும் மெதுவாக ஆடுகிறார்கள். அதனால் ஆட்டத்தில் சுவாரஸ்யம் இல்லை என்ற குறை பொதுவாகச் சொல்லப்படுகிறது. மகளிர் கிரிக்கெட்டிற்கு பார்வையாளர்களை வரச் செய்ய, ஸ்பான்சர்களைப் பெற ப20 சரியான தளம். ஆண்கள் கிரிக்கெட்டில், ப20 சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அது போல் மகளிர் கிரிக்கெட்டிலும் வரவேண்டும். ஸ்லெட்ஜிங் எனப்படும், எதிர் அணியைச் சேர்ந்தவரைத் திட்டுவது, வெறுப்பேத்துவது, ஆண்கள் கிரிக்கெட்டில் இருப்பது மாதிரி மகளிர் கிரிக்கெட்டில் இல்லவேயில்லை. மகளிர் கிரிக்கெட்டில், போட்டி. போட்டி. ஆரோக்கியமான போட்டி மட்டுமே உள்ளது.
ஆண்கள் கிரிக்கெட் விளையாடும் போது பெண்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். ரசிக்கிறார்கள். உற்சாகம் ஊட்டுகிறார்கள். ஆண் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குப் பெண்கள் ரசிகைகளாகவும் இருக்கிறார்கள். அதே மாதிரியான ஆர்வம், ஈடுபாடு, ஈர்ப்பு பெண்கள் கிரிக்கெட்டில் ஆண்களுக்கு உண்டு என்று சொல்ல முடியாது.
ப20 உலகக் கோப்பைக்கான புதிய விளையாட்டு உடை (த்ங்ழ்ள்ங்ஹ்) அறிமுகம் செய்யப்பட போது, இந்திய கிரிக்கெட் வாரியம், ஆண் - பெண் கிரிக்கெட் அணியைக் கலந்து நிற்கச் செய்தது, மகளிர் கிரிக்கெட்டிற்கு இனி அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.