ஆரோக்கிய சமையல்

ஆரோக்கிய சமையல் வகைகள் உங்களுக்காக
Updated on
5 min read

கத்தரிக்காய் வதக்கல்

தேவையான பொருள்கள் :

சின்ன  கத்தரிக்காய்   - கால் கிலோ

மிளகாய்த்தூள்   - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்   - கால்  தேக்கரண்டி

நல்லெண்ணெய்  - 4  தேக்கரண்டி

உப்பு  - தேவையான அளவு

கறிவேப்பிலை  - சிறிதளவு

கடுகு  - கால் தேக்கரண்டி

செய்முறை: கத்தரிக்காயை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  கடுகு  கறிவேப்பிலை தாளித்து அதனுடன்  நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை  சேர்த்து வதக்கவும். அத்துடன்  மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி மூடிவிட்டு சிறுதீயில்  10 நிமிடம்  வேக வைக்கவும். காய் நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும். இது சாம்பார் சாதம், தயிர்சாதத்திற்கு தொட்டுக் கொள்ள அருமையோ அருமை.

***

முளைக்கீரை  மசியல்

தேவையான பொருள்கள் :          

முளைக்கீரை   - 1 கட்டு

தேங்காய் எண்ணெய் - 2  தேக்கரண்டி

நெய்   - 2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல்  - 4

உப்பு - தேவையான அளவு

செய்முறை:  கீரையை நன்கு அலசி ஆய்ந்து பொடியாக நறுக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு  குக்கரில்  1 விசில்  விட்டு வேக வைக்கவும். பின்பு கீரையை  தண்ணீர் இல்லாமல்  ஒரு தட்டில் ஆற வைக்கவும். பின்பு   அதை   மிக்ஸி   ஜாரில்    போட்டு   சிறிது   உப்பு   சேர்த்து   ஒரு சுற்று சுற்றி  எடுக்கவும். பின்னர், கடாயில்  தேங்காய் எண்ணெய், நெய் ஊற்றி  சூடானவுடன்  கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து  கீரை மசியலை  கடாயில் ஊற்றி  ஒரு  தடவை கிளறி இறக்கவும். இந்த மசியல் வற்றல் குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

 முளைக்கீரை  உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது.  இது கோடைக் கால வெயிலுக்கு உகந்த  சமையல். 

***

எலுமிச்சை ரசம்

தேவையான பொருள்கள் :

எலுமிச்சை - 2

தக்காளி -  1

மிளகு  - 1 தேக்கரண்டி

சீரகம்  - 1 தேக்கரண்டி

மல்லிவிதை  1 தேக்கரண்டி

பூண்டு - 4 பல்

மிளகாய் வற்றல்  -  1

மஞ்சள் தூள் - கால்  தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கொத்துமல்லி - கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 2  தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தக்காளியை நன்கு நசுக்கி விட்டு பிசைந்து கொள்ளவும்.

பூண்டு, மிளகு, சீரகம், மல்லி விதை, மிளகாய் வற்றல் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.  எலுமிச்சை பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு  பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி நசுக்கி வைத்திருக்கும் தக்காளிச் சாறு,    அரைத்த மசாலா, மற்றும்  பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கொத்துமல்லி தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்பு  கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். பின்னர் தக்காளி மசாலா கலவையை சேர்த்து மிதமான  தீயில் வைக்கவும். ரசம்  நுரைத்து கொதி வரும் சமயம் எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கி மூடி விடவும். சுவையான  எலுமிச்சை ரசம் ரெடி. ரசம் அதிகம் கொதித்துவிட்டால் கசந்துவிடும்.

***

பேபி கார்ன் (சோளக்கதிர்) மசாலா

தேவையான பொருள்கள் :

பேபி கார்ன் - 1 பாக்கெட்

வெண்ணெய்  - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 1

சீரகம் - 1 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2  தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 2   தேக்கரண்டி

மல்லித் தூள் - 12  தேக்கரண்டி

கொத்துமல்லி - சிறிதளவு

எண்ணெய் - 2  தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை: முதலில் பேபி கார்னை  சிறு சிறு துண்டுகளாக  நறுக்கி கொள்ளவும்.  கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி  வதக்கி இறக்கி ஆற வைத்து, பின் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், கடாயில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகத்தைத் தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள  தக்காளி கலவையைச் சேர்க்க வேண்டும். பின்னர், மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து 2  நிமிடம் கிளறி,  அதனுடன்  நறுக்கி  வைத்துள்ள பேபி கார்னை   சேர்த்து  நன்கு  கிளறவும். மசாலா பச்சை வாசனை போனவுடன்  2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து  தொக்கு பதம் வந்தவுடன் மல்லி இலை போட்டு இறக்கவும். இது  சப்பாத்திக்கு  தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும்.

***

மீல் மேக்கர் பக்கோடா

தேவையான பொருள்கள் :

மீல் மேக்கர் - 20

கடலைப் பருப்பு - ஒரு கிண்ணம்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

தேங்காய்த் துருவல் - ஒரு தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

பிரெட்  - 3

எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

கொத்துமல்லித் தழை - சிறிதளவு,

எண்ணெய் - தேவையான அளவு,

உப்பு - தேவையான அளவு

செய்முறை : மீல் மேக்கரை கொதி நீரில் போட்டு, ஐந்து நிமிடம் கழித்து அதை பிழிந்து, பின் பச்சை தண்ணீரில் அலசி, மிக்சியில் அடித்து உதிர்த்துக் கொள்ளவும். கடலை பருப்பை ஒரு விசில் வரும் வரை வேக விடவும். பின்னர், கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு, மீல் மேக்கர், கடலைப் பருப்பு, உப்பு, பிரெட் ஸ்லைஸ், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, மிக்சியில் அரைத்து எடுத்து சூடான எண்ணெயில் பக்கோடா போல் உதிர்த்து போட்டு பொரித்தெடுத்தால், வித்தியாசமான சுவையில் மீல்மேக்கர் பக்கோடா ரெடி.

***

மஷ்ரூம்(காளான்) புலாவ்

தேவையான பொருள்கள் :

மஷ்ரூம் - 100 கிராம்

பாஸ்மதி அரிசி - 1 கிண்ணம்

வெங்காயம் - 2

ப.மிளகாய் - 3

புதினா - 1 கைப்பிடி

கொத்துமல்லி - 1 கைப்பிடி

பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 2

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

தயிர் - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை : வெங்காயம், ப.மிளகாய், புதினா, கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து அதனுடன் புதினா, கொத்துமல்லி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர்,  வெங்காயம், பச்சை மிளகாய், காளான் சேர்த்து வதக்கவும்.  நன்கு வதங்கியதும் தயிர் சேர்த்து அதனுடன் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு 1 1/2 கிண்ணம்  தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்கு கொதித்தவுடன் குக்கரை மூடி விசில் போட்டு 10 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும். பின்பு 10 நிமிடம் கழித்து  நன்கு கிளறி  சிறிது நெய் சேர்த்து பரிமாறவும். சுவையான மஷ்ரூம் புலாவ் ரெடி.

***

சாமை தயிர் சாதம்

தேவையான பொருள்கள் :

சாமை - 1 கிண்ணம்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 4 கிண்ணம்

தயிர் - கால் கிண்ணம்

பால் - இரண்டு கிண்ணம்

கேரட் துருவியது - 1

பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி - சிறு துண்டு (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை

தாளிப்பதற்கு...

கடுகு - கால் தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை: சாமையை சுத்தம் செய்து குக்கரில் ஒன்றுக்கு நான்கு அளவில் தண்ணீர் விட்டு குழைய வேகவிட்டு எடுக்கவும். பின்னர், கடாயில்  எண்ணெய் ஊற்றி காயந்ததும்  கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கி தயிர் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும், அதனை வெந்த சாமை  சாதத்தில் கொட்டி, கேரட் துருவல், உப்பு சேர்த்து கிளறினால், சாமை தயிர் சாதம் ரெடி.

***

பப்பாளி கேசரி

தேவையான பொருள்கள் :

பப்பாளித் துண்டுகள் - ஒரு கிண்ணம்

ரவை - ஒரு கிண்ணம்

சர்க்கரை - ஒரு கிண்ணம்

பால் - கால் கிண்ணம்

நெய், முந்திரி - தேவையான அளவு

ஏலக்காய் - 2

 செய்முறை: பப்பாளித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு  ரவையை வறுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து வறுக்கவும். அதன்பிறகு ஒரு கிண்ணம் ரவைக்கு 2 கிண்ணம் தண்ணீர் விட்டு கலர் பொடி,ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை மற்றும் அரைத்த பப்பாளி விழுதை சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ரவையைக் கொட்டி கட்டி தட்டாமல் கிளறி விடவும். ரவை ஒன்று சேர்ந்து வெந்து கெட்டியாகி வரும்போது இறக்கவும். சுவையான பப்பாளி கேசரி தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com