மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சுருக்குப்பை தந்த திருப்புமுனை! -  பர்வீன் சிக்கந்தர்

சிறந்த தொழில் முனைவோருக்கான மகளிர் குழு விருது, "வீவா' விருது, பெமினா எதிக்ஸ் பிசினஸ் அவார்ட், அண்ணா யுனிவர்ஸிட்டி

News image
Updated On :3 மே 2016, 11:55 am

ஸ்ரீதேவி குமரேசன

சிறந்த தொழில் முனைவோருக்கான மகளிர் குழு விருது, "வீவா' விருது, பெமினா எதிக்ஸ் பிசினஸ் அவார்ட், அண்ணா யுனிவர்ஸிட்டி விருது என பல விருதுகளுக்குச் சொந்தக்காரர் பர்வீன் சிக்கந்தர். வெறும் 1000 ரூபாய் மூதலீட்டில் ஆரம்பித்து இன்று கோடிகளில் புரண்டு கொண்டிருக்கும் இவரது தொழில் என்னவென்றால் பெண்களைக் கவரும் ஆன்டிக்ஸ் நகைகளை விற்பதுதான். எந்த சூழ்நிலையையும் தன்வசமாக்கிக் கொள்ளும் வித்தையைக் கற்றிருக்கும் இவர், தான் கடந்துவந்த முட்பாதையை மலர் பாதையாக மாற்றிக் கொண்ட ரகசியத்தை நம்முடன்  பகிர்ந்து கொள்கிறார்:

Story image

""எனக்கு பூர்வீகம் மதுரை. என் அப்பா காவல் துறையில் அதிகாரியாக இருந்தார். அதனால் சிறு வயது முதலே சென்னையில்தான் வளர்ந்தேன். பி.ஏ. ஆங்கிலம் படித்தேன். படிப்பு முடிந்ததும் ஒரு தொழிலதிபருக்கு என்னை திருமணம் செய்து வைத்தார்கள்.   அவருக்கும் மதுரைதான் பூர்வீகம். திருமணத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் மதுரையில்தான் இருந்தோம். அதன்பிறகு வேலை நிமித்தமாக மலேசியாவில் உள்ள பினாங் என்ற தீவில் சென்று செடிலாகி இருந்தோம். 

 ஒருநாள் ஓட்டலில் சாப்பிட சென்றிருந்தோம். அப்போது திடீர் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு என் கணவர் மாரடைப்பால் அங்கேயே இறந்துவிட்டார்.  அப்போது எனக்கு 27 வயது.  என் பிள்ளை சல்மானுக்கு ஏழு வயது.  அடுத்து என்ன செய்வது என்றே புரியாத நிலையில் கலங்கி நின்றேன். இந்நிலையில் என் மகனின் பள்ளி கையேடில் சில இந்தியர்களின் முகவரி இருந்தது. அதைவைத்து அவர்களிடம் உதவி கேட்டேன்.  அவர்கள் எனக்கு உதவி செய்தனர். அவர் இறந்த ஒரு வாரம் கழித்து பார்த்தால் ஏகப்பட்ட கடிதங்கள் கரண்ட் பில், போன் பில், வீட்டு லோன் என ஏகப்பட்ட பில் இருந்தது. இதையெல்லாம் எப்படி கட்டுவது? என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏனென்றால் அதுவரை  அக்கம்பக்க வீடுகளுக்கோ, காய்கறி வாங்கவோ, மருத்துவமனை என எதற்குமே வீட்டை விட்டு வெளியே வந்ததில்லை. எல்லாவற்றையும் என் கணவர்தான் பார்த்துக் கொள்வார். இந்த நிலையில் மலேசியாவிலேயே  இருப்பது என்பது இனி சரி வராது, கஷ்டமோ, நஷ்டமோ  நம்ம ஊருக்கே போய்விடலாம் என்று முடிவு செய்து அங்கிருந்த அத்தனை பொருள்களையும் விற்றுவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டேன். 

நான் ரொம்ப சிறுவயதாக இருந்ததால் மறுமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் வற்புறுத்தினர்.  ஏற்கெனவே என் குழந்தை பயந்து போயிருந்தான். அதனால் மறுமணத்தை பற்றி நான் யோசிக்கவே இல்லை. மேலும் என் கணவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரை பார்க்கவே முடியாது.  எந்த பெண்ணுக்கும் கிடைக்காத அப்படி ஒரு சொகுசான வாழ்க்கை எனக்கு அமைந்திருக்கிறதே என்று சில நேரங்களில் நினைத்துக் கொள்வேன். என் கண்ணே எனக்கு பட்டுப் போச்சு போல. அவரை மறந்து இன்னொரு வாழ்க்கையை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை.

அதன்பிறகு நான் இருந்த சோகத்தை பார்த்துவிட்டு என் அப்பாவின் நண்பர் ஒருவர்  இவள் வேலைக்குச் சென்றால் மனநிலை மாறிவிடும் என்றார். சென்னை தூர்தர்ஷனில்  மெட்ரோ ஸ்கேன்ஸ் ஆங்கில செய்தி வாசிக்க  ஆள் எடுப்பதாகவும், போய் பார்க்கும்படியும் சொன்னார். அப்பா என்னை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார். உடனே தேர்வு ஆகிவிட்டேன். ஆடிஷன் எல்லாம் முடிந்து,செய்தி வாசிக்க தயாராக இருந்தேன். இந்நிலையில் அங்கே தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வராமல் போய்விடவே என்னை அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கச் சொன்னார்கள். முதல் நிகழ்ச்சியே நேரடி ஒளிபரப்பு. அந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்தேன். அதற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன.  அங்கிருந்த பரபரப்பு, பாராட்டு, உழைப்பு எல்லாம் என் மனநிலைக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அதனால் தொடர்ந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆரம்பித்தேன். இன்றுவரை 1500க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறேன்.

இதற்கிடையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கைவினைக் கலைஞர்கள் பற்றி ஒரு குறும்படம் தயாரித்தேன். அதாவது நான் சிறு வயதாக இருந்தபோது மீனாட்சி அம்மன் கோயிலில்தான் எந்நேரமும் இருப்பேன். அப்போது கோயில் வளாகத்திற்குள் கைவினை கலைஞர்களின் கலைப் பொருள்கள் நிறைய இருக்கும். அதற்காகவே ஒரு கூட்டம் அங்கே இருக்கும்.நாளடைவில் அந்த கைவினைக் கலைஞர்கள் நலிவடைந்துவிட்டார்கள். இவ்வளவு கைவேலைகள் தெரிந்தவர்களின் நிலைமை இப்போது என்ன? என்ற  எண்ணம் வந்து அதனை குறும்படமாக தயாரித்தேன்.

 அப்போது அங்கிருந்த ஒரு கடையில் சின்ன சுருக்கு பைகள் இருந்தது. அதைப்பார்த்ததும்  ஆசையில் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு சுருக்கு பைகள் வாங்கிவிட்டேன். இவ்வளவு பைகள் எதற்கு என்று அம்மா திட்டினார்கள். யாருக்காவது கொடுத்துவிடு என்றார்கள். அப்போது நான் மலேசியா உமன்ஸ் அசோஷியேனுக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கே இந்தப் பைகளை கொண்டுபோய் விற்பனை செய்தேன். 10 ரூபாய்க்கு வாங்கின 1 பை 10 டாலருக்கு விற்றது.  கிட்டத்தட்ட பத்து மடங்கு லாபம் கிடைத்தது.  இது நல்ல லாபம் தரும் தொழிலாக தோன்றியது. அதனால் மீண்டும் இரண்டு முறை பைகள் வாங்கிச் சென்று விற்றேன். அதன்பிறகு  மிகவும் சொற்ப விலையில் தோடு, ஜிமிக்கி என்று சிறு சிறு நகைகளாக வாங்கி வந்து நான் குடியிருந்த வீட்டு வாசலிலேயே  ஒரு பெட்டியில் வைத்து விற்க தொடங்கினேன்.

 ஒவ்வொருவராக வர தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் கூட்டம்  கூட்டமாக  வர தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு விற்பதற்கு என்னிடம் இருந்த நகைகள் போதவில்லை. கூட்டம் அதிகமாக வந்ததால், நான் குடியிருந்த பிளாட்டில் பிரச்னை வந்தது.  அங்கே வைத்து விற்பதற்கு அனுமதிக்கவில்லை.

அப்பாவுக்கு சொந்தமான கோட்டூரில் இருந்த  பங்களாவின் கார் ஷெட்டை ஒதுக்கித் தரும்படி கேட்டேன். அப்போது அந்த பங்களா வாடகைக்கு விடப்பட்டிருந்தது. உடனே அப்பா, அந்த பங்களாவையே எனக்கு தந்தார்.  சிறியதாக "தாமினி ஆர்ட்டிசைன்ஸ்' என்ற ஒரு ஆன்டிக்ஸ் நகைகளுக்கான கடையை திறந்தேன். பார் கோட், கிரெடிட் கார்ட்  என  லேட்டஸ்ட் வசதிகளுடன் கடை இருந்தது.  ஆரம்பத்தில் நான் ஒரே ஆளாக இருந்து கொண்டு எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டேன்.   கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் அதிகரித்தது. இதனால், வேலை ஆட்களை வைத்துக் கொண்டேன். எனக்கு ஒரு நல்ல டீம் அமைந்தது. தற்போது என்னிடம் 35 பேர் வேலை பார்க்கிறார்கள். சென்னையில்  4 கடைகளும், பெங்களூர், கோயம்புத்தூர், கொச்சின் என்று எனது கடைகளை விரிவு படுத்தியிருக்கிறேன். உற்சாகமாக இருக்கிறது.''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.