அவசரம் அல்லற்பாற்படும் - பா. ஜோதி நிர்மலாசாமி ஐஏஎஸ்

அருமையான பாட்டு. அற்புதமான இசை. ஆனால் பாட்டின் பொருள்  இப்பாட்டினைப் பாடும்  தலைவன் சொல்லும் மொழிகளை பதினாறு வயதில் ஒரு பெண் புரிந்து கொள்ளும் மன வளர்ச்சி கொண்டவளாக இருப்பாளா என்ன?

எண்ணிரண்டு பதினாறு வயது - அவள்
கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது...

அருமையான பாட்டு. அற்புதமான இசை. ஆனால் பாட்டின் பொருள்  இப்பாட்டினைப் பாடும்  தலைவன் சொல்லும் மொழிகளை பதினாறு வயதில் ஒரு பெண் புரிந்து கொள்ளும் மன வளர்ச்சி கொண்டவளாக இருப்பாளா என்ன? இப்பாட்டினைக் கேட்டு விட்டு என் பிள்ளை எனைக் கேட்டான். "ஏனம்மா பதினாறு வயது என்று பாட்டெழுதுகிறார்கள் அப்போது அவள் பதினோராம் வகுப்பில் தானே இருப்பாள். "பாட்டை ஒருமுறை காணொளியாகப் பார் ' என்றேன் அவனிடம்,  பார்த்ததும் அவனுக்கு புரிந்து விட்டது. அதில் நடித்தவர்கள் யாரும் அவன் ஐயுற்றது போல் இல்லை என்பதால் சமாதானமாகி விட்டான்.  இப்போது, அதை விட குறைந்த வயது காதலை, குறைந்த வயது குழந்தைகளை வைத்தே படமெடுக்கிறார்கள் என்பது நாம் கடந்து கொண்டிருக்கும் ஒரு சமூக சங்கடம்.

 இந்த பதினாறு வயதினை நமது கவிஞர்களும் கதாசிரியர்களும் ஏன்  பாராட்டி மகிழ்ந்தார்கள் என்று தெரியவில்லை, ஹார்மோன்களின் வளர்ச்சியால்  எதிர்பாலின ஈர்ப்புக்கு இடம் தரும் இயல்பு இந்த வயதில் அதிகம் என்பது உண்மைதான்.  ஆனால் இதனைக் கையாளும் வழிவகைகளை நம் பெண் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தர வேண்டிய நிலையில் பாட்டுகளும், வசனங்களும் இந்த வயதினை , இப்படி ஆராதிக்கையில் அதற்கு செவி மடுக்கும் மடந்தைகள் மனம் குழம்பி தெளிய வேண்டியுள்ளது. உடலும் உள்ளமும் முதிர்ச்சியடையாத இவ்வயதினை  திருமணம் செய்தால் சட்டத்தின் முன் செல்லாததாகக் கருதப்படும் இவ்வயதினை; இனியாவது நம் பாடலாசிரியர்களும் வசனகர்த்தாக்களும் காதலின்பாற் போற்றாதிருப்பாராக.

பதினோராம் வகுப்பு படிக்கையில் படிப்பில் முனைப்புடன் இருக்க வேண்டியுள்ளதை நம் பெண் குழந்தைகள் கவனிக்க வேண்டும்,  பன்னிரண்டாம் வகுப்பில்  எடுக்கும் மதிப்பெண்களே அவர்களின் மேற்படிப்பை முடிவு செய்கின்றன என்பது இன்றைய சூழலின் தவிர்க்க முடியாத ஓர் அழுத்தம்,  போட்டிகள் ஒரு பக்கம்   மனதை சலனப்படுத்தும் காட்சி ஊடகங்களும் சமூக ஊடகங்களும்  ஒரு பக்கம். சமீப காலமாகப் பெருகி வரும் குடும்ப உறவுச் சிக்கல்கள் ஒரு பக்கம் என இப்பருவத்துப் பெண்களுக்கு நெருக்கடி அதிகம்.  இவையெல்லாம் தாண்டி கல்வியில் கவனம் செலுத்தி காலூன்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.  2015-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ்  தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து ஐ.ஏ.எஸ் ஆன 22 வயது டில்லி பெண் டீனா டாபியை பற்றியும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக எண்ணிக்கையில் தேர்வாகி முதலிடங்கள் பலவற்றையும் தாங்களே பிடித்துக் கொண்ட பெண் குழந்தைகளைப்  பற்றியும் பத்திரிகைகளில் படிக்கையில் பெருமிதம் கொள்கிறோம். 

பள்ளி படிப்பிலேயே காதல் வயப்பட்டு கல்வியை விட காதலை வளர்த்து அவசர முடிவுகள் எடுத்து விட்டதால்  திருமண வாழ்வில் தோல்வியடையாவிட்டாலும், பொருளாதார சுதந்திரமின்றி புழுங்கித் தவிக்கும் பெண்களைப் பார்க்கிறோம்.    அவசர முடிவுகளால் கல்வியை இழந்து, வாழ்வை இழந்து, வசதியை இழந்து, நடந்ததை எண்ணி நலிந்து கொண்டிருக்கும் பெண்களை விமர்சிக்கிறோம்.

பள்ளி பருவத்தில் துளிர்க்கும் காதல் மலர்வினை  அகிலம் தழைக்க ஆண்டவன் தந்த அழகான அந்த அற்புத உணர்வினை, பெண் குழந்தைகள் அறிவு பூர்வமாக அணுக வேண்டும்.  அவ்வுணர்வு, தான் பெறும் கல்வியை விழுங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  திரைப்படங்களும், திரையிசைப் பாடல்களும், கதைகளும், கவின்மிகு கவிதைகளும் விவரிக்கும் காதல் எல்லாம் கல்விக்கு அப்பால்தான்.

நமது சங்க இலக்கியங்கள் களவையும் கற்பையும் நமது ஒழுக்க நெறிகளாகக் காட்டுகின்றனதான், திருமணத்திற்கு முந்தைய காதல்  களவாகவும் திருமணத்திற்கு பிந்தைய காதல்   கற்பாகவும் பேசப்படுகின்றன.  இங்கு களவு எனச் சொல்லப்படும் காதல் உணர்வு. கல்வியைக் கெடுத்தால் அது வாழ்க்கையையே கெடுப்பதாக அமையும், காதல் கெடுக்காத கல்வி கடைசி வரை கைகொடுக்கும், கல்வி கற்கும் காலத்தில்  காதலால் எடுக்கப்படும் கடின முடிவுகள் சோகமாகியும் போவதுண்டு.  சோகமாகிப் போன அப்படி ஒரு சம்பவத்தை சொல்லவும் வேண்டும்.

நான் களப்பணி ஆற்றிய மாவட்டத்தில், ஒரு கடற்கரை கிராமத்தில், ஒருநாள் காலை, உள்ளுர் கிணற்றில் இறந்து மிதந்த வெளியூர் மாணவியின் உடலை சட்ட சம்பிரதாய ங்களுக்குப் பிறகு அக்கிராமத்தினர், அம்மாணவி வந்து தங்கியிருந்த அவளது தோழியின் ப ங்களா ஒத்த வீட்டினில் நடு ஹாலில் புதைத்து கல்லறையும் கட்டி விட்டார்கள்.  வீட்டில் இருந்தவர்களை கிராமத்தை விட்டு விரட்டி விட்டார்கள். நடந்தது இதுதான்... இறந்த பெண்ணும் அவளது தோழியும் வேறு ஒரு நகரத்தில் விடுதியில் தங்கி ஆசிரியர் பயிற்சி கல்வி பயின்று வந்தனர்.  தோழியைப்  பார்க்க விடுதிக்கு வந்த அவள் அண்ணனைப் பார்த்து காதல் வந்தது அப்பெண்ணுக்கு. அண்ணனின் தங்கைக்கும் அது சம்மதமாகப்பட்டது.  அதற்கு பின்னர் அப்பெண் தோழியின் வீட்டிற்கே வந்து அடிக்கடி தங்கியிருக்கிறாள்  அதன் மூலம் அக்கிராம மக்களுக்கும் பரிச்சயமாகியிருக்கிறாள். எப்போதும்போல் இம்முறையும் வந்து தங்குகையில், தன் காதலனைக் காணாது அவன் குறித்து கேட்டிருக்கிறாள்.  வீட்டிலிருந்தவர்கள் அதுவரை ஒன்றுமே நடந்திராததுபோல் அவளிடம், அவன் வெளிநாடு சென்று விட்டதாகவும் அவனுக்கு வேறிடத்தில் பெண் பார்த்து முடிவு செய்து விட்டதாகவும் சொல்லியுள்ளனர்.  மறுநாள் காலை தன் ஊருக்கு தான் புறப்பட்டுச்  செல்வதாக சொல்லிவிட்டு உறங்கச் சென்ற அப்பெண் காலையில் கிணற்றில் பிணமாக மிதந்திருந்தாள் தற்கொலை செய்து கொண்டு.

அவள்தான் அவ்வீட்டின் மருமகள் என்று அக்கிராமமே எண்ணிக் கொண்டிருந்ததால் இறப்புக்குப் பிறகும் அவள் அந்த வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து வீட்டில் இருந்த குடும்பத்தினரை விரட்டி விட்டு வீட்டின் நடுஹாலில் அவளைப்  புதைத்து கல்லறையும் கட்டி விட்டனர்.  என்னிடம் புகார் கொடுக்க வந்த தோழியின் குடும்பத்தை காவல்துறையினரிடம் ஆற்றுப்படுத்தினேன். வழக்கு பதிந்தும் காவல்துறையால் அக்கிராமத்துக்குள் நுழைய முடியவில்லை.  சட்டத்தின் பார்வையில் தவறானதைச் செய்தாலும் இறந்து பட்ட பெண்ணுக்கு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தங்களுக்கு தெரிந்த வகையிலான தர்மத்தைச் செய்த அக்கிராமத்தினரை எப்படி சமாதானம் செய்வது?  நடுவீட்டிற்குள் வைக்கப்பட்ட கல்லறையை நீதிமன்ற உத்தரவு பெற்று தோண்டி எடுத்து உடலை பொது மயானத்தில் மீண்டும் அடக்கம் செய்ய சிறிது காலம் பிடித்தது.

படிக்கும் காலத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல் காதல் உணர்வுக்கு மதிப்பளித்து உண்மையற்ற ஒரு காதலனை நம்பி தன் உயிரையே விட்ட ஒரு பெண்ணால்,  இச்சமூகம் ஒரு ஆசிரியையை இழந்தது. அவசரப்பட்டதால் இன்று அவளும் இல்லை; அவளுடைய குடும்பத்திற்கு ஆறுதலும் இல்லை.

கோயம்பேட்டில் மிக பிரதானமாக இருக்கும் எமது அலுவலகத்தினுள் சமீபத்தில் ஒருநாள்  காலையில் எனது வாகனத்தில் நுழையும்போது அலுவலக வாசலை ஒட்டி அமைந்த நடைபாதையில் ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க சிறுமியும் அவளை விட சற்றே வயதில் பெரிய பையனும் டைட்டானிக் படத்தில் வரும் நிலைக்காட்சியைப் போல், ஒரே திசை பார்த்து,  ஒருவரின் பின்னால் ஒருவர் ஒட்டி நின்று. கைவிரித்து அசைந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  இவர்களின் இச்செய்கையை நண்பனொருவன் தன் இருசக்கர வாகனத்தில் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருந்தான்.  விநோதமாகப் பட்டதால் விசாரிக்க விழைந்தேன்.  எனது வாகனத்தில் இருந்து இறங்கி அவளிடம் சென்று கேட்டேன். அவன் உன் காதலனா என்று. இல்லை என்றாள். பொது இடத்தில் இப்படி அவனுடன் நிற்கிறாயே  என்ன படிக்கிறாய் என்று கேட்டேன்.  விக்கித்த அவளால் ஒன்றும் பேச முடியவில்லை.  வாகன நண்பன் மட்டும் சாரி என்றான்.  உடனே மூவரும் கிளம்பி போய் விட்டனர்.  "இவள் யார் பெற்ற பெண்ணோ?'  என மனம் பதைத்தது.  ஆயிரம் பேர் நடமாடும் அவ்விடத்தில் அவளையே மறக்கடித்து கிறங்கடிக்கும் இந்த மிதமிஞ்சிய காதலுணர்வில்  இருந்து அவள் தன்னைக் காப்பாற்றிக்  கொள்ள வேண்டுமே என்று கொஞ்ச நேரம் கவலைப்பட்டேன்.  எனது ஆட்சேபனை அவளை சிறிதாவது சிந்திக்க வைத்திருக்கும் என நம்பினேன். 

ஓர் ஆணின் அருகாமையை தன் கல்வி முடியும்வரை அவள் தள்ளி வைக்க வேண்டும் என்பதை யார் அவளுக்கு சொல்லித் தருவது. படிக்கும் பெண்கள்... அதிலும் குறிப்பாய் பதின்மர் வயதினர்... காதல் உணர்வை கடக்க நேர்ந்தால் அதை கல்விக்கு அடுத்தே வைக்க வேண்டும்.  காதலா... கல்வியா என சோதனை வருங்கால்  கல்வியின்பாலே நிற்க வேண்டும். இதில் அவசரம் என்றும் அல்லற்பாற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்தே இருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com