புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஊதியத்தில் பாலின வேறுபாடு ஏன்?""

ஆண் - பெண் பாகுபாடு கூடாது என்று கொள்கை  அளவில் பேசினால் மட்டும்  போதாது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2018, 4:30 am

அ. குமார்

ஆண் - பெண் பாகுபாடு கூடாது என்று கொள்கை  அளவில் பேசினால் மட்டும்  போதாது. செயல்படுத்த அரசு மட்டுமல்ல, தொழிலதிபர்களும் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் வாய்ப்பளிக்க  முன் வர வேண்டும்'' என்கிறார் பயோகான் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிரண் மஜூம்தார் ஷா.
 
""உலக பொருளாதாரத்தில் மறைமுகமாக 50  சதவீதம் பெண்களின் பங்களிப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். கடந்த பத்தாண்டுகளில் பெண்கள் ஆரோக்கியம், கல்வி, பொருளாதார பங்களிப்பு, அரசியல் தலைமை போன்றவைகளில் குறிப்பிடும் வகையில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், சம உரிமை பெறுவதில் ஆண்- பெண் வித்தியாசம் இன்னமும் இருக்கிறது. அண்மையில் உலக பொருளாதார பொது மன்றம் வெளியிட்ட பாலின இடைவெளி அறிக்கையின்படி நம்முடைய நாட்டில் இந்த வித்தியாசம்  மறைய இன்னும்  சில நூற்றாண்டுகள் ஆகுமென்பது  தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கையின்படி, உதாரணமாக 2017 -ஆம் ஆண்டில் உலக அளவில் பெண்களின் சராசரி ஆண்டு வருமானம் அமெரிக்க டாலர் 12 ஆயிரம் அதே நேரத்தில் ஆண்களின் ஆண்டு வருமானம் அமெரிக்க டாலர் 21 ஆயிரம். ஆண்கள் செய்யும் அதே நேரம், வேலை, இலக்கு அனைத்தும் பெண்களுக்கு இருந்தாலும் ஊதியம் குறைவு. இது உலக அளவில் நடப்பதுதான். பெண்களுக்கு குறைந்த சம்பளம் வழங்குவது மட்டுமல்ல. மூத்த நிர்வாகம் அவர்களுக்குரிய மரியாதையையும் அளிப்பதில்லை. அமெரிக்காவில் உள்ள 500 மிகப் பெரிய நிறுவனங்களிலேயே 4  சதவீதம் பெண்கள் மட்டுமே தலைமை செயல்  அதிகாரி பதவியில் உள்ளனர்.

இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு மான்ஸ்டர் ஊதிய புள்ளி விவரப்படி ஆண்கள் சம்பாதிக்கும் ஊதியம் மணிக்கு ரூ. 346 என்றால், பெண்கள் ஊதியம் மணிக்கு ரூ.200 ஆகும். இதுபோன்ற பாகுபாடு காரணமாக பெண்களின் கடின உழைப்பு,  தகுதி ஆகியவை ஊதியம் மற்றும் பதவி உயர்வு போன்றவைகளால் பாதிக்கப்படுவதால் நிர்வாகங்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது. பொறியியல், கணிதம், கம்ப்யூட்டர் புரோகிராம், அறிவியல், விளையாட்டு போன்றவைகளில் பெண்கள் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் உள்ள 20 சதவீதம் விஞ்ஞானிகளில் 13 ஆயிரம் பேர் பெண்கள். என்னுடைய பயோகான் நிறுவனத்திலும் 20  சதவீதம் பெண் விஞ்ஞானிகள் உள்ளனர். 

இந்தியாவில் பெண்கள் மீதான ஆதிக்கம் குறைந்து வருவதாக தெரியவந்திருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தினாலும்,  அதே நேரத்தில் பாலின பாகுபாட்டிற்கும் முடிவு கட்டுவது அவசியமாகும். பெண்களுக்கு சரிசமமான வாய்ப்புகளை அளிப்பது, பொருளாதாரம் மூலமாக அதிகாரமளிப்பது நியாயமானது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரமும் நல்ல வளர்ச்சி அடையும். அதற்கான உத்திரவாதம் அளிப்பதற்கு முன் நாம் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளது.

பெண்கள் உண்மையிலேயே சந்திக்கும் ஆரோக்கியம், கல்வி, வேலை வாய்ப்புக்கான கொள்கை திட்டங்களை நிறை வேற்றுவதுடன், சுயமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் குறிப்பிட்ட தொகையை  அளிக்க ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியம்.

கல்வி பாட திட்டத்தை பெண்கள் எளிதில்  கிரகித்து   கொள்ளும் வகையில் அமைக்க வேண்டும். பாட புத்தகங்களில் வழக்கமாக இடம் பெறும் படங்களுடன் பெண்களை மேன்மை படுத்தும்படியான  படங்களை சேர்க்க வேண்டும். பெண்களுக்கு அறிவியல்,  தகவல் தொழில் நுட்பம், பொறியியல், கணிதம்   போன்றவைகளை தேர்ந்தெடுத்து கற்க  ஊக்கமளிக்க வேண்டும்.
சமூக மட்டத்தில் பெண்களுக்கு அதிகாரமளிப்பது பெண்கள் கல்வியை உயர்த்த உதவும். எப்போது ஒரு தாய் கல்வி கற்றவளாக, அதிகாரம் மிக்கவளாக, தன் வாழ்க்கையை தானே அமைத்து கொள்பவளாக இருக்கிறாளோ அவள்தான்  தன் பெண்ணை பள்ளிக்கு அனுப்பும் சக்தியுடையவளாக இருப்பாள்.

ஆண்களை விட பெண்களுக்கு ஊதியம் குறைவாக கொடுக்கும் முறை இன்னமும் ஏன் தொடர்கிறது  என்ற கேள்வியை கேட்க வேண்டிய  தேவை உள்ளது. வேலை செய்யும் இடத்தில் ஒரே மாதிரியான வேலை, நேரம் என்றிருக்கும்போது, ஆண்களைவிட பெண்களுக்கு குறைவான ஊதியம் அளிப்பதை எதிர்த்து உலக அளவில் "சமமான ஊதியம், சமமான வேலை' என்ற போராட்டம் நடத்தப்பட வேண்டும். இதற்கான  சட்டமியற்ற அரசு முன் வர வேண்டும்.

உள்ளூர் மாநில  மற்றும்  மத்திய அரசு மட்டத்தில் அரசியலில் பெண்கள் பங்கேற்கும் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். சட்டமியற்றும் போதும், அரசியலிலும் பெண்கள் தொடர்பான பிரச்னைகளில் தெளிவாக பேச அனுமதிப்பதன் மூலம் ஆண்- பெண் என்ற இடைவெளியை குறைக்க  உதவும். 
காரியதரிசி, செவிலியர், ஆசிரியை, விற்பனையாளர் என குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமே பெண்களை ஒதுக்குவதை தவிர்த்து, அவர்களது திறமைகளுக்கேற்ற பணிகளை வழங்கும் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் சமூக, பொருளாதார அமைப்புகளில் பெண்கள் ஆரோக்கியத்திற்காக செலவிடும் தொகையை விட ஆண்களுக்கு ஒதுக்கப்படும் தொகை அதிகமாகும். ஆய்வறிக்கைகளின்படி தாயின் ஆரோக்கியத்துக்கு அளிக்கப்படும் உதவிகள்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கும், நன்னடத்தைக்கும்,  திறமையாக கல்வி கற்பதற்கும் உதவும். அது மட்டுமல்ல, குடும்பத்தினர் நலனுக்கும் பெண்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. தற்போதுள்ள பலமற்ற சட்டத்தை இன்னும் கடுமையாக்க அரசு, அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். இப்போதுள்ள சட்டத்தில் குற்றவாளிகள் சுலபமாக தப்பிக்க முடிகிறது. இதை தவிர்க்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து,  பாலியல் வழக்குகளை துரிதமாக விசாரித்து தண்டனை வழங்குவதன் மூலம் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடி நீதி கிடைக்கும்.

பால்ய விவாகங்களை  தடை செய்ய சட்டம் இருந்தாலும், இந்தியாவில் இன்னும்பால்ய விவாகங்கள் நடைபெறுவதை தடுக்க முடியவில்லை. அதிகாரப் பூர்வமான ஆய்வறிக்கையில் இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில், மூன்றில்  ஒன்று மணமகள் 18 வயதுக்குட்பட்டவளாகவே இருக்கிறார். பால்ய விவாகங்கள் பெண்களின் கல்வியை பாதிக்கும் மிகப் பெரிய இடையூறாக  உள்ளது.  பெண்கள் தடையில்லா கல்வி பெற வேண்டுமெனில்  பால்ய விவாகங்களுக்கு முற்றுப் புள்ளி  வைக்க வேண்டும். இவையனைத்தும் மத்திய அரசு உடனடியாக செய்ய வேண்டியவையாகும்''  இவ்வாறு கிரண் மஜூம்தார் ஷா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.