ஓய்வு உடலுக்கு அல்ல!
கர்நாடக மாநிலம் கதக் நகரத்தில் வசிக்கும் துங்காபாய் பந்தர் ஆசிரியை பணியிலிருந்து 55-ஆவது வயதில் ஒய்வு பெற்றவர், தற்போது 94 வயதாகியும் தொடர்ந்து சோர்வின்றி உழைத்து வருகிறார்.


கர்நாடக மாநிலம் கதக் நகரத்தில் வசிக்கும் துங்காபாய் பந்தர் ஆசிரியை பணியிலிருந்து 55-ஆவது வயதில் ஒய்வு பெற்றவர், தற்போது 94 வயதாகியும் தொடர்ந்து சோர்வின்றி உழைத்து வருகிறார். ""ஆசிரியை பணிக்குத் தான் ஓய்வே தவிர என்னுடைய உடலுக்கு அல்ல'' என்று கூறும் துங்காபாய், தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்து வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தில் சிறிது நேரம் உலாவிவிட்டு காலை சிற்றுண்டி உள்பட மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு 8.45 மணியளவில் பள்ளிக்கூட பஸ் பிடித்து, 5 கி.மீ. தொலைவில் உள்ள சிக்கட்டி பள்ளியில் சமையல் கண்காணிப்பாளராக காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புகிறார்.
கடந்த 18 ஆண்டுகளாக இப்படி உழைத்து வரும் துங்காபாய், வேகமாக நடப்பது, உடன் பணியாற்றும் மூன்று பேர்களுடன் துரிதமாக சமையல் வேலைகளை கவனிப்பது போன்ற இவரது அயராத உழைப்பை பார்த்தவர்கள், இவரை "மெர்க்குரி பாட்டி' என்று அழைப்பதுண்டு.
1980- ஆம் ஆண்டு ஆசிரியைப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், சில சிறிய நிறுவனங்களில் வேலையில் சேர்ந்து கடினமாக உழைத்தார். 2000-ஆம் ஆண்டு சிக்கட்டி பள்ளியில் சமையல் கண்காணிப்பாளர் வேலை கிடைத்தது. வீட்டில் வெறுமனே உட்கார்ந்து நேரத்தை வீணடிப்பது பிடிக்காமல் வேலைக்காக அலைந்தபோது, சிலர் இவரது வயது காரணமாக வேலை தர மறுத்தார்களாம். அப்போதுதான் சிக்கட்டி பள்ளி நிறுவனர் இவருக்கு சமையல் கண்காணிப்பாளர் வேலையை கொடுத்தாராம். மகிழ்ச்சியுடன் அந்த வேலையை ஏற்றுக் கொண்ட துங்காபாய், 18 ஆண்டுகளாக தொடர்ந்து வேலை பார்த்து வருகிறார்.
1925-ஆம் ஆண்டு கதக் நகரத்தில் பிறந்த துங்காபாய், பத்தாம் வகுப்பு வரை படித்த பின்னர், இந்தி ராஷ்ட்ரபாஷா சான்றிதழ் பெற்றிருந்த காரணத்தால் ஷிராஹட்டி என்ற இடத்தில் பள்ளி ஆசிரியை வேலை கிடைத்தது. மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆறு பாடங்களில் பாடம் நடத்த கூறியவர்கள், கூடவே ஆங்கிலமும் கற்பிக்கும்படி பள்ளி நிர்வாகம் இவரை கேட்டுக் கொண்டதாம். ஆங்கிலம் தெரியுமென்றாலும் இலக்கணம் தெரியாததால், குருராஜ் ஜோஷி என்பவரிடம் ஆங்கில இலக்கணம் கற்றுக் கொண்டாராம்.
குருராஜ் ஜோஷியின் மகன்தான் இந்திய சங்கீத உலகில் பிரபலமாக விளங்கிய பீம்சேன் ஜோஷி என்பதை நினைவு கூர்கிறார்.
துங்கா பாய்க்கு திருமணமாகி மூன்றாண்டுகளில் கணவர் இறந்துவிட்டதால், ஷிரா ஹட்டியிலேயே தங்கி தனியாக வசித்து வந்தார். ஒய்வு பெற்றபின் கதக்கில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி, சிக்கட்டிக்கு சென்று வருகிறார். காலையில் வேலைக்குச் செல்ல பள்ளிக் கூட பஸ்ûஸ பிடிக்க தினமும் 300 மீட்டர் தொலைவு எவ்வித உதவியுமின்றி தடுமாறாமல் நடந்து செல்கிறார்.
""பொதுவாகவே கிராமத்து மக்கள் நல்ல ஆயுளும், திடகாத்திரமான உடல் வலிமையும் உள்ளவர்கள் என்று சொல்வதுண்டு. நான் இன்னமும் வலிமையுடன் இருக்கிறேன். பள்ளியில் உழைப்பது போலவே வீட்டிலும் உழைக்கிறேன். ஏதாவது வேலை இல்லை என்றால் தேடிபிடித்து செய்வேன்.
தினமும் யோகா பயிற்சியோ , உணவு கட்டுப்பாடோ இல்லை. எனக்கு புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். கடந்த ஓராண்டு காலமாக கண்பார்வை சற்று மங்கியிருப்பதால் முன்னைப் போல் படிக்க முடியவில்லை'' என்கிறார் துங்காபாய்.
பள்ளி நிறுவனர் எஸ்.ஒய். சிக்கட்டி கூறுகையில், ""94 வயதிலும் இவர் இள வயதினரைப் போல் உழைப்பது எங்களை பிரமிக்க வைக்கிறது. ஓய்வு எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு வழி காட்டினால் போதும் என்று கூறினாலும் இவர் கேட்பதில்லை. எல்லா வேலையையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வார். சம்பளத்திற்காக நான் வேலை செய்ய வில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக உழைக்கிறேன். என்று அவர் சொல்வது எங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. 18- ஆண்டுகளில் ஓரிரு நாட்கள்தான் பள்ளி பஸ்ஸை தவறவிட்டிருக்கிறாரே தவிர மற்ற நாட்களில் சரியான நேரத்தில் வேலைக்கு வந்துவிடுவார்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...