கருப்பு சீருடையில் கலக்கும் பெண் பவுன்சர்கள்!
அரசியல்வாதிகள் பாதுகாப்பு, ஆன்மிக நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள், கண்காட்சி, பார்கள் போன்றவைகளில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் சமாளிக்க ஆண் பவுன்சர்களை அமர்த்துவதுண்டு, இதற்காகவே


அரசியல்வாதிகள் பாதுகாப்பு, ஆன்மிக நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள், கண்காட்சி, பார்கள் போன்றவைகளில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் சமாளிக்க ஆண் பவுன்சர்களை அமர்த்துவதுண்டு, இதற்காகவே பயிற்சிபெற்ற ஆண் பவுன்சர்கள் அமைப்பு பெருநகரங்களில் செயல்படுகின்றன. மூன்றாண்டுகளுக்கு முன் புனேவை சேர்ந்த தீபா பராப் (40) என்பவர், இதே போன்று பெண் பவுன்சர் அமைப்பொன்றை துவங்கினால் என்ன என்ற எண்ணத்தில் "ரன் ராகினி பவுன்சர்ஸ் குருப்' என்ற அமைப்பை துவங்கினார். இன்று இந்த அமைப்பில் 500=க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பெண் பவுன்சர்கள் என்ற அடையாளத்துக்காக கருப்பு நிற சீருடை கொடுக்கப்பட்டுள்ளது.
துவக்கத்தில் தீபாவுக்கு பவுன்சர் ஆக வேண்டுமென்ற எண்ணம் ஏதுமில்லை. போலீஸ் வேலையில் சேர வேண்டும்மென்ற விருப்பத்தில் பெற்றோருக்கு தெரியாமல் போலீஸ் துறையில் சேர்ந்து பயிற்சிப்பெற்று வந்தார். இதை கண்டு பிடித்த இவரது அம்மா , "உடனடியாக பயிற்சிக்கு போவதை நிறுத்தும்படியும், குடும்ப கௌரவத்தைக் கெடுக்காதே, பெண்கள் வீட்டிற்குள்தான் அடைந்து கிடக்க வேண்டும்' என்று கண்டிப்புடன் கூறவே போலீஸ் வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதாயிற்று.
தன்னுடைய கனவு நிறைவேறாமல் போகவே குடும்பத் தொழிலான வடை, பாவ்பஜ்ஜி வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினார். 27=ஆவது வயதில் திருமணமாகி கணவர் வீட்டில் புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியதாயிற்று. கணவரின் பெற்றோர் காலமானவுடன், 2015=ஆம் ஆண்டு சுய தொழில் ஏதாவது செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார்.
"இதுவரை எல்லா வேலைகளையும் செய்து விட்டேன். புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்' என்று தன் கணவரிடம் தீபா கூறியபோது, அவர் தீபாவை மும்பைக்கு அழைத்து வந்தாராம். மும்பையில் திரைப்படத் துறையில் துணை நடிகையாகவும், மேக்அப் உமனாகவும் பணியாற்றியபோது, கருப்பு சீருடை அணிந்த ஆண் பவுன்சர்கள் போலீûஸ போல் கூட்டத்தை கட்டுபடுத்துவது, பாதுகாப்பு கொடுப்பது போன்ற பணிகளை செய்வதை பார்த்தார். ஆனால் பெண்கள் கூட்டத்தையும் ஆண்களே கட்டுப்படுத்துவதை பார்த்த தீபாவுக்கு பெண்கள் பாதுகாப்புக்காக தனி பெண்கள் பவுன்சர் அமைப்பைத் துவங்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியதாம். பவுன்சர்களுக்கு எப்படி பயிற்சியளிப்பது, என்னென்ன பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்ற தகவல்களை கேட்டறிந்த பின், புனேவுக்கே திரும்பி, "ரன்ராகினி பவுன்சர்ஸ் குரூப்' என்ற அமைப்பை தொடங்கினாராம். தன்னுடைய முயற்சி எப்படி வெற்றிப் பெற்றது என்பது குறித்து தீபா கூறுகிறார்:
""ஏற்கெனவே நான் சிறிது காலம் போலீஸ்துறையில் எடுத்துக் கொண்ட பயிற்சி, இத்திட்டத்திற்கு உதவியாக இருந்தது. முதலில் இரண்டு பெண் பவுன்சர்கள், மற்றவர்கள் செக்யூரிட்டி கார்ட்ஸ் என்ற முறையில் 12 பேரை தேர்ந்தெடுத்தேன். இவர்களது உடல் தகுதி, வயது, குடும்ப பின்னணி, கல்வி ஆகியவைகளை கருத்தில் கொண்டு உடற்பயிற்சி மற்றும் கலவரத்தின் போது எப்படி செயல்படுவது, பாதுகாப்பு அளிப்பதுபோன்ற பயிற்சிகளை அளித்தேன். துவக்கத்தில் எங்களை பயன்
படுத்திக் கொள்ள மக்கள் தயங்கினாலும், ஒரு கோயில் திருவிழாவின் போது கூட்டத்தை கட்டுப்படுத்த எங்களை அழைத்திருந்தார்கள். அதன்பிறகே எங்கள் அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்தது. தற்போது சுமார் 8 ஆயிரம் பேரை சமாளிக்க எங்களில் எட்டுபேர் போதும். போலீஸ் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்கள் மத்தியில் எங்கள் அமைப்பு பிரபலமாகியுள்ளது.
மாதம் முழுவதும் வேலை இல்லை என்றாலும் தற்போது நிறைய அழைப்புகள் வருகின்றன. பாதுகாப்பு பணிகளில் மட்டும் எங்களது அமைப்பை சேர்ந்த 500 பேர் ஈடுபட்டுள்ளனர். வேலையில்லா பெண்கள் நிறைய பேர் எங்களது அமைப்பில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள். இதன்மூலம் மாதந்தோறும் சுமார் 6 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றனர்.
பவுன்சர் என்றால் கைகளும், கால்களும் வலுவாக இருக்க வேண்டும். அப்போதுதான் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இதனால் தினமும் அவரவர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய கற்றுக் கொடுத்துள்ளேன். மேக் அப், மோதிரம், பிரேஸ்லெட், சங்கிலி, விலையுயர்ந்த காதணி போன்றவைகளை அணிய அனுமதிப்பதில்லை. காவல்துறை சில சமயங்களில் எங்களை அமர்த்திக் கொள்வதால், வித்தியாசம் தெரிவதற்காக எங்கள் அமைப்பு பெண்களுக்கு கருப்பு நிற சீருடை அளித்துள்ளோம். பாலின வேறுபாடு காட்டாமல் மக்கள் எங்கள் சேவையை பயன்படுத்திக் கொள்கின்றனர். போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்ற என்னுடைய கனவு, வேறொரு வகையில் பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில் நிறைவேறி இருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது'' என்கிறார் தீபா பராப்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...