புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசியலை  விட்டு விலகும் எண்ணமில்லை!  - விஜயசாந்தி

1980-முதல் இருபதாண்டுகள் தெலுங்கு படவுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த விஜயசாந்தி, பின்னர் அரசியலில் ஈடுபட்டவுடன் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தவர், 13-ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வந

News image
Updated On :13 நவம்பர் 2019, 12:30 pm

பூா்ணிமா

1980-முதல் இருபதாண்டுகள் தெலுங்கு படவுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த விஜயசாந்தி, பின்னர் அரசியலில் ஈடுபட்டவுடன் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தவர், 13-ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். 53 வயதாகும் விஜயசாந்தி, தான் நடித்துக் கொண்டிருந்த காலத்திற்கும் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கும் இடையில் தனக்கேற்பட்ட அனுபவங்களை இங்கு நினைவுபடுத்தி கூறுகிறார்:

""2006-ஆம் ஆண்டு நான் நடித்து வெளியான "நாயுடம்மா' தான் என்னுடைய கடைசிப்படமாகும். அதன்பின்னர் அரசி யலில் தீவிரமாகி மக்கள் சேவைக்கு முன்னுரிமை கொடுத்துவந்தேன். இடையில் பட வாய்ப்புகள் வந்தபோதும், அரசியல் ஈடுபாடு காரணமாக ஏற்க மறுத்து வந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் அனில் ரவிபுடி படத்தில் நடிக்கும்படி கேட்டபோது மறுக்க முடியவில்லை. அண்மையில் தேர்தல் முடிந்ததும் மீண்டும் அவர் என்னை அணுகியபோது, அவர் சொன்ன "சரிலேறு நீக்கேவரு' என்ற கதையில் வரும் பாத்திரம் எனக்கு பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

1989-ஆம் ஆண்டு கிருஷ்ணாவின் இயக்கத்தில் அவருடன் "கொடுக்குதிப்பின காப்பூரம்' என்ற படத்தில் நடித்த போது, குழந்தை நட்சத்திரமாக என்னுடன் நடித்த அவரது மகன் மகேஷ்பாபு வளர்ந்து இன்று பிரபல நடிகராக உள்ள நிலையில் அவருடன் 30 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின் முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்றபோது. ஏதோ இனம்புரியாத பயம் எனக்குள் ஏற்பட்டது. இன்றைய திரையுலகில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் எனக்கு புதிய அனுபவம் போலவும், முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தை போலவும் தோன்றியது. நான் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் பெண்களை முன்னிலை படுத்தி படமெடுக்கும் திறமையான இயக்குநர்கள் இருந்தனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும் படங்களில் நடிப்பது பெரிய சவாலாக இருந்தது.

இப்போது அப்படியில்லை. ஹீரோவுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள்தான் தயாரிக்கப்படுகின்றன. பெண்களை முன்னிலைபடுத்தும் படங்கள் பெரும்பாலும் திகில் படங்களாக உள்ளன. இந்த நிலைமையை மாற்ற இயக்குநர்கள் முன் வரவேண்டும்.

இன்றைய திரையுலகம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் நிறையவே மாறியுள்ளது. இயக்குநர்களும் இன்றைய ரசனைக்கேற்ப படமெடுக்கின்றனர். நாங்கள் நடித்த காலத்தில் நாள் முழுக்க உழைப்போம்.

காலை 5 மணிக்கெல்லாம் தொடங்கும் படப்பிடிப்பு மறுநாள் காலை வரை நீடிப்பதுண்டு. தூங்குவதற்கு கூட நேரம் கிடைக்காது. ஒரே ஆண்டில் 17 முதல் 18 படங்கள் வரை நடித்ததுண்டு. அந்த அளவு ரசிகர்களிடம் எனக்கு வரவேற்பு இருந்தது. அந்த நிலை இன்றைய கதாநாயகிகளுக்கு இல்லை. ஒரு ஹீரோவோ, ஹீரோயினோ வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களில் நடித்தால் போதுமென்று நினைக்கிறார்கள். இதை குறையென்று சொல்லமுடியாது. கதைகளைத் தேர்வு செய்வதில் காட்டும் ஆர்வமாக கூட இருக்கலாம்.

இன்று வாழ்க்கையில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிப்பதால் பெண்களைப் பற்றிய தவறான கருத்துகள் வேகமாக பரவுகின்றன. பெண்களைப் பொருத்த வரை திரையுலகில் மட்டுமல்ல; எல்லாத் துறைகளிலும் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் திரையுலகில் நடக்கும் பிரச்னைகள் மட்டுமே பெரிதாக விமர்சிக்கப்படுகின்றன. இவைகளை விசாரிக்க எத்தனை கமிட்டிகள் அமைத்தாலும், அரசாங்கம் கடுமையான சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கும் வரை எந்த மாற்றமும்  ஏற்படாது என்பது என்னுடைய கருத்தாகும்.

நாங்கள் நடித்த காலத்தில் தொழில்மீது அக்கறையும், ஒழுக்கமும் இருந்தது. ஒரு குடும்பம் போல் செயல்படுவோம். எந்த பிரச்னையும் எழுந்ததில்லை. படப்பிடிப்பு தளத்தை ஒரு பள்ளிக்கூடம் போல் கருதினோம்.

இப்போது நான் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். அடுத்து எத்தனை படங்களில் நடிப்பேன் என்று தெரியாது. படங்களில் நடிப்பதால் அரசியலிலிருந்து விலகும் எண்ணம் ஏதுமில்லை. மக்கள் சேவையை தொடர்ந்து செய்வேன். கொள்கைக்காக எந்த அரசாக இருந்தாலும் எதிர்த்து போராடுவேன்'' என்கிறார் விஜயசாந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.