9 வயதில் தொழில் முனைவர்!

"கேக்' என்றால் பெரியவர்களே விரும்பி சுவைக்கும் போது குட்டீஸ்கள் கேக்கைப் பார்த்ததும் எப்படி பரவசப்படுவார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? கேக்கை சுவைத்தால் மட்டும் போதாது...
9 வயதில் தொழில் முனைவர்!
Updated on
2 min read

"கேக்' என்றால் பெரியவர்களே விரும்பி சுவைக்கும் போது குட்டீஸ்கள் கேக்கைப் பார்த்ததும் எப்படி பரவசப்படுவார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? கேக்கை சுவைத்தால் மட்டும் போதாது... செய்து பார்க்க வேண்டும் என்று எத்தனை குட்டீஸ்கள் நினைத்திருப்பார்கள்? அப்படியே நினைத்தாலும் எத்தனை பிள்ளைகள் சுவைபட செய்து பார்த்திருப்பார்கள்? ஒன்பது வயதாகும் வினுஷா "ஃபோர் ஸீஸன்ஸ் பேஸ்ட்ரி' என்ற பிராண்ட் பெயரில் பலவகை கேக்களைத் தயாரித்து தொழில் முனைவராகியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ? நம்பித்தான் ஆகவேண்டும். வினுஷாவிற்கு கேக் தயாரிப்பில் ஆர்வம் வந்தது எப்படி ? வினுஷாவே சொல்கிறார்:

""எல்லா குழந்தைகளுக்கும் கேக் மேல் இருக்கும் ஆர்வம் போல் தான் எனக்கும் இருந்தது. விதம் விதமான "கேக்குகள்' பல வித சுவைகளில் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை. பிறகு கேக்கை "நாமே செய்து சாப்பிட்டால் என்ன' என்று தோன்றியது. வீட்டில் அம்மாவின் துணையை நாடினேன். யூ டியூபில் கேக் தயாரிப்பில் பல காணொளிகளைக் கண்டு கேக் தயாரிப்பில் "அ முதல் ஃ' வரை புரிந்து கொண்டேன்.

என்னதான் செய்முறை தெரிந்தாலும் கேக்கை செய்து பார்க்க பார்க்க தானே கேக் தயாரிப்பில் கை பக்குவம் வரும்.. அனுபவம் கிடைக்கும். அதனால் வீட்டில் செய்முறைகளைத் தொடங்கினேன். எட்டு வயதில் அம்மாவின் பிறந்த நாளுக்காக கேக் செய்தேன். அதுதான் ஒரு நிகழ்வுக்காகவும், அம்மாவுக்காகவும் நான் செய்த முதல் கேக்.

கேக் தரத்துடன், சுவையுடன் அமைந்தது இன்னொரு ஆச்சரியம். அம்மாவும், கேக்கைச் சுவைத்தவர்களும் என்னைப் பாராட்டியபோது எனக்குள் தன்னம்பிக்கை ஏற்பட்டது. அங்கே தான் எனது தொடக்கம் ஆரம்பமானது.

தொழிலாக கேக் தயாரிப்பைத் தொடங்குமுன், கேக் தயாரிப்பில் முறையான பயிற்சி பெற்று என்னைத் தீட்டிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன். பெற்றோர் ஊக்குவிக்க பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன்.

பிறகென்ன.. தினமும் கேக் தயாரிப்புதான். தெரிந்தவர்களுக்கும் நான் தயாரித்த கேக்குகளைக் கொடுத்து அவர்களின் விருப்பங்களையும், ஆலோ சனைகளையும் பெற்றுக் கொண்டு இனி கேக் தயாரிப்பில் சுவையில் என்னென்ன புதுமைகள் செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கினேன். கடைகளில் கிடைக்கும் "கப்' கேக்குகள் ஒரே மாதிரியாக இருக்கும். பார்ப்பதற்கும்.. சுவைப்பதற்கும். நான் அதில் மாற்றம் கொண்டு வந்தேன். பல நிறங்களில் பல்வேறு சுவைகளில் "கப்' கேக்குகளைத் தயாரித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு உருவானது. அந்த உற்சாகத்தில் கேக் தயாரிப்பை ஒரு சிறு தொழிலாகத் தொடர்கிறேன்.

எனக்குப் பிடித்த கேக் தயாரிப்பில் என் எதிர்காலம் இருக்கிறது என்ற உணர்ந்ததினால் எனக்கென்று ஒரு பிராண்டை உருவாக்கி அதை சந்தையில் பிரபலமாக்க வேண்டும் என்ற நோக்கமும் சேர்ந்து கொண்டது. ஒரு தொழில்முனைவராக என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தேடல் உருவானது. கோடை, குளிர், இலையுதிர், இளவேனில் என்ற நான்கு பருவங்களுக்குப் பொருந்தும் வகையில் வெவ்வேறு சுவைகளில் "கப்' கேக்குகளைத் தயாரித்து வழங்கி வருகிறேன்.

அவ்வப்போது ஆங்காங்கே நடக்கும் கேக் தயாரிப்பு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். போட்டிகளின்போது போடப்படும் எனது ஸ்டால்கள் அதில் வைக்கப்படும் எனது கேக் தயாரிப்புகள் பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்ததால் எனக்கான வாடிக்கையாளர்கள் உருவாகிவிட்டனர். இப்போதைக்கு வீட்டில்தான் கேக் தயாரிப்பு நடக்கிறது. மாலைவேளைகளில் தயாரிப்பில் ஈடுபடுவேன். ஆன்லைனில் வரும் ஆர்டர்களுக்குத் தகுந்தவாறு கேக் தயாரிக்கிறேன். அப்பா முத்துராமலிங்கம் விநியோகம் செய்வதைக் கவனித்துக் கொள்கிறார். அம்மா கவிதா சிறு குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். வீடு சென்னை ராமாபுரத்தில் உள்ளது. நான் ராமாபுரம் அம்ரிதா வித்யாலயத்தில் நான்காம் வகுப்பில் படித்து வருகிறேன். விற்பனை சூடு பிடித்தால் கேக் தயாரிப்பை விரிவு படுத்துவேன். இப்போதைக்கு கேக் தயாரிப்பது நான் மட்டும்தான். உதவியாளர்கள் யாரும் வைத்துக் கொள்ள வில்லை. நுகர்வோருக்குத் தேவையான எல்லா வகை கேக்குகளையும் என்னால் சுவையுடன் செய்து தர முடியும்.

மாஸ்டர் செஃப் கார்லோஸ், மாஸ்டர் செஃப் சஷி செல்லையா ,செஃப் கீதா கிருஷ்ணன் ஆகியோர் எனது மானசீக குருக்கள். நான் கேக்குகள் தவிர சாலட் வகைகள், பர்கர் தயாரித்து வழங்கி வருகிறேன். போட்டிகளின் போது அசைவ உணவுவகைகளையும் சமைப்பேன். அசைவ உணவு சமையலுக்காக  செ ஃ ப் தாமு வின் பாராட்டைப் பெற்றுள்ளேன்'' என்கிறார் வினுஷா.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com