ரத்த சோகையைப் போக்கும் உணவுகள்!

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் ஹீமோகுளோபின் என்ற ரத்த நிறமிகளை சுமந்து, அவற்றின் மூலமாக பிராணவாயு என்ற ஆக்ஸிஜனை உடலின் அனைத்து பாகங்களுக்கும் உள்ள
ரத்த சோகையைப் போக்கும் உணவுகள்!

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் ஹீமோகுளோபின் என்ற ரத்த நிறமிகளை சுமந்து, அவற்றின் மூலமாக பிராணவாயு என்ற ஆக்ஸிஜனை உடலின் அனைத்து பாகங்களுக்கும் உள்ள செல்களுக்கு எடுத்துச் செல்லும் வேலையைச் செய்கின்றன. இந்த ரத்தநிறமிகளின் வரையறுக்கப்பட்ட சரியான அளவு குறையும்போது, போதுமான ஆக்ஸிஜன் செல்களுக்குக் கிடைப்பது சிரமமாகிறது. இந்த பற்றாக்குறை நிலையே ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது.

ரத்த நிறமிகள் உருவாகக் காரணமான இரும்புச் சத்து மற்றும் அமினோ அமிலங்களின் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, நாட்பட்ட பிற நோய்கள் போன்றவையே ரத்தசோகை ஏற்படக் காரணமாகின்றன. குழந்தைகளைப் பாதிக்கும் ரத்த சோகையின் அளவு 20 முதல் 25 சதவிகிதம் இருப்பதாக உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளும் கூறுகின்றன. 
ரத்தசோகை ஏற்படுவது ஏன்?
உலக சுகாதார மையத்தின் அளவீடுகளின்படி ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவானது 6 முதல் 59 மாதங்கள் உள்ள குழந்தையின் ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் 11 கிராமுக்குக் குறைவாகவும், 5 முதல் 11 வயதுள்ள குழந்தையின் ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் 11.5 கிராமுக்குக் குறைவாகவும், 12 முதல் 14 வயது வரை உள்ள குழந்தையின் ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் 12 கிராமுக்குக் குறைவாகவும் இருந்தால், அவர்களுக்கு ரத்த சோகை நோய் இருப்பதாக வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. மலேரியா, ஹெல்மின்த் எனப்படும் குடற்புழு, நாட்பட்ட காசநோய் மற்றும் எய்ட்ஸ் போன்றவையும் குழந்தைகளிடம் ரத்த சோகையை ஏற்படுத்துகின்றன. 
போலிக் அமிலத்தின் குறைபாட்டாலும் ரத்தசோகை ஏற்படுகிறது. இதனுடன் சேர்ந்து குழந்தைகளுக்கு ஏற்படும் பிற வகை ரத்த சோகைகளான பிறவியிலேயே உருவாகி வளர்ச்சி குறைபாட்டை ஏற்படுத்தும் ரத்தசோகையானது பரம்பரை வழியாக ஏற்படுகிறது என்றும் சிக்கில் செல் நோய் (Sickle Cell Animia) என்றழைக்கப்படும் ரத்த சோகை மத்திய ஆப்பிரிக்க நாட்டு குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறது என்றும் பீட்டா தாலசேமியா (Betta Thalasemia) எனப்படும் ரத்த சோகையானது மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியப் பகுதி குழந்தைகளிடம் காணப்படுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 
சுமார் 6 முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 5 மி.கிராமும், 1-3 வயதிற்கு 9 மி.கிராமும், 4-6 வயதிற்கு 13 மி.கிராமும், 7-9 வயதிற்கு 16 மி.கிராமும் இரும்புச் சத்து தேவைப்படுகிறது. குழந்தைகளுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்தானது கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவு வகைகளை அடிக்கடி கொடுப்பதன் மூலம் எளிதில் உடலுக்குக் கிடைக்கப் பெறுகிறது.
தானியங்கள் - கம்பு, கேழ்வரகு, அவல், முளைகட்டிய கோதுமை
பருப்பு வகைகள் - வறுத்த கடலை, காராமணி, வறுத்த பட்டாணி, சோயாபீன்ஸ்
கீரைகள் - காலி பிளவர், மணத்தக்காளி, முள்ளங்கிக் கீரை, பசலைக்கீரை
கிழங்கு வகைகள் - கேரட், கருணைக்கிழங்கு
பிற காய்கள் - பீன்ஸ், தாமரைத்தண்டு, வெங்காயத்தாள், வாழைக்காய், சுண்டைக்காய்
கொட்டை உணவுகள் - பாதாம், முந்திரி, கொப்பரைத்தேங்காய், தர்பூசணி விதை
பழங்கள் - நெல்லிக்காய், பேரீட்சை, கொய்யாப்பழம், கொடுக்காப்புளி, தர்பூசணி, அன்னாசி, மாதுளை, உலர் திராட்சை, சீத்தாப்பழம்
இனிப்புகள் - வெல்லம், ஜவ்வரிசி
அசைவ உணவுகள் - முட்டை, ஆட்டு ஈரல், சிறு மீன்கள்
இரும்புச் சத்து குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகையை சரி செய்வதற்கு கீழ் வரும் உணவுக் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.
ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரும்புச் சத்து உட்பட அனைத்து விதமான சத்துகளும் சரியான அளவில் இருக்குமாறு சரிவிகித உணவைக் கொடுப்பது மிக அவசியமாகும்.
ரத்தசோகை உள்ள குழந்தைகளுக்கு 100 கிராம் முதல் 150 கிராம் புரதச்சத்தும் அதிகமான கலோரியும் உள்ள உணவைக் கொடுக்க வேண்டும்.
தாமிரச் சத்து, வைட்டமின் "பி6" மற்றும் வைட்டமின் "ஈ" பற்றாக்குறையாலும் ரத்தசோகை ஏற்படுவதால், அந்த சத்துகள் அதிகமுள்ள உணவுகளான சிறு மீன்கள், ஆட்டிறைச்சி, தோலுடன் கூடிய பருப்புகள், கொட்டை உணவுகள் போன்றவற்றை தொடர்ச்சியாகக் கொடுக்க வேண்டும். 
வைட்டமின் "சி" சத்தானது, ரத்தத்தில் இரும்புச்சத்து உட்கிரகிக்கும் தன்மையை ஊக்கப்படுத்துவதால், அந்தச் சத்து அதிகமுள்ள உணவுகளான எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யாப்பழம், தக்காளி, பெர்ரி பழங்கள், அடர் பச்சைநிற காய் மற்றும் கீரைகள் ஆகியவற்றை தினந்தோறும் உணவில் சேர்க்க வேண்டும். 
குழந்தை பிறந்து ஆறு மாதத்திற்குப் பிறகு தொடங்கப்படும் இணையுணவில் இரும்புச் சத்து போதுமானதாக உள்ள உணவுகளைச் சேர்க்க வேண்டும். 
இரும்புச் சத்து உட்கிரகித்தலை தடுக்கும் பொருட்களான டீ, புளி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் மதிய உணவில் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது கீரை அரைக்கீரை பொரியல் உபயோகப்படுத்துவதை தவிர்த்து, உடைத்த கோதுமை, கம்பு, கேழ்வரகு சேர்த்த பொங்கல் அல்லது உப்புமா, கேரட், தக்காளி, பப்பாளி சேர்த்த கலவை சாதம், முட்டை சேர்த்த முருங்கைக்கீரை, வாழைப்பூ பொரியல், எலுமிச்சை, தக்காளி, நெல்லிக்காய் சேர்த்த ரசம், மாதுளை, திராட்சை, அன்னாசி கலந்த பழ ஜுஸ் போன்ற கூட்டு உணவு முறையைப் பின்பற்றுவதால், இரும்புச் சத்து மற்றும் அதனை உட்கிரகிக்கும் பிற சத்துகளை அதிகப்படுத்தலாம். 
உலர் பழங்கள், பக்குவப்படுத்தப்பட்ட அரிசி உணவுகள் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்கும் என்பதால் அவற்றை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.
விளம்பரங்களில் காண்பிக்கப்படும் இனிப்புகள், ஜெல்லி பொருட்கள், துரித உணவுகள், டின்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், மசாலா சேர்த்த அசைவ உணவுகள், குளிர் பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழ ஜுஸ் ஆகியவை வளரும் குழந்தைகளின் செரிமான மண்டலம் மற்றும் குடலின் உட்கிரகிக்கும் தன்மை ஆகியவற்றை சிறிது சிறிதாக பாதித்து, தீவிரமான ரத்தசோகையை ஏற்படுத்தி அதன்மூலம் அவர்களின் அன்றாட செயல்பாடுகள், கல்வி, வயதிற்கேற்ற உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சி ஆகியவற்றில் நிரந்தர பிரச்னைகளை ஏற்படுத்தி விடுவதால், இவ்வகை செயற்கை உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். 
இயற்கை உணவுகள், வீட்டில் வளர்க்கும் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களின் நன்மைகள், வீட்டில் செய்து தரப்படும் இடையுணவுகளின் சத்துகள் அவற்றால் கிடைக்கும் நன்மைகள், சரியான உடல் சுகாதாரம் மற்றும் முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை குழந்தைப்பருவம் முதற்கொண்டே பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும். இவைகளும் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகையைப் போக்க உதவிபுரியும். 
டாக்டர். ப. வண்டார்குழலி இராஜசேகர்
உதவி பேராசிரியர், மனையியல் துறை, 
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, 
காரைக்கால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com