பிளாஸ்டிக்கைத் தண்ணீராக மாற்றும் காளான்..!
By - பிஸ்மி பரிணாமன் | Published On : 11th September 2019 06:14 PM | Last Updated : 11th September 2019 06:14 PM | அ+அ அ- |

அற்புதங்கள் எப்போதாவதுதான் நிகழ்கின்றன. புதிய கண்டுபிடிப்புகளும் அற்புதங்கள்தான். அதுவும் மனித சமுதாயத்திற்கு உடனுக்குடன் நேரடி பயன் தரும் கண்டு பிடிப்புகள் மிக மிக அவசியம். அந்தவகை கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் "பெஸ்டலோடியோப்சிஸ் மைக்ரோஸ்போரா' (Pestalotiopsis microspora) இது ஒருவகை காளான் ஆகும். இந்த காளானின் மகத்துவம் என்ன தெரியுமா? இன்று நீர், நிலம், காற்றினை மாசுபடுத்தி உலகை, உலக மக்களை அச்சுறுத்தி வரும் பிளாஸ்டிக் கழிவுகளை சிதைத்து, உடைத்து மிக வேகமாக மண்ணோடு மக்கும் கரிமப் பொருளாக மாற்றும் சக்தியைக் கொண்டவை இந்தக் காளான்கள்.
ஆழ்கடலின் மிக ஆழத்தில் இருக்கும் அகழியில் கூட பிளாஸ்டிக் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கால்நடைகள் மட்டுமல்ல மிகப் பெரிய திமிங்கலங்கள் கூட தவறுதலாக பிளாஸ்டிக்கை உட்கொண்டு இறக்கின்றன. இதிலிருந்து பிளாஸ்டிக் அபாயம் எப்படி பூதாகரமாக உலகைப் பல கோணங்களில் பயமுறுத்தி வருகிறது என்பதை உணர முடியும்.
"பெஸ்டலோடியோப்சிஸ் மைக்ரோஸ்போரா' காளான் பாலியுரிதேனை உணவாக மாற்றிக் கொள்ளும் சக்தி படைத்தது. பாலியுரிதேன் என்பது பிளாஸ்டிக் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மூலப் பொருள். இந்தச் சிறப்பு வகைக் காளான், பிளாஸ்டிக்கைச் சிதைத்து கரிமப் பொருளாக (organic matter) வினை மாற்றம் செய்கிறது. பிளாஸ்டிக்கை கரிமப் பொருளாக மாற்ற இந்தக் காளான் எடுத்துக் கொள்ளும் கால அளவு சில வாரங்கள்தான். பொதுவாக பிளாஸ்டிக் பொருள்கள் மக்கும் தன்மை அடைய குறைந்தது நானூறு ஆண்டுகள் ஆகும். அப்படி இருக்கும் போது, பிளாஸ்டிக் மக்கிப் போக சில வாரங்கள் என்ன ஒரு சில மாதங்கள் எடுத்தாலும் பரவாயில்லை... இந்த உலகுக்கு மாபெரும் உதவியாக நிம்மதி தரும் நம்பிக்கையாக அமையும்.
பிளாஸ்டிக் உருவாக்கும் அபாயங்களைப் பற்றி என்னதான் சொன்னாலும், சட்டம் போட்டு என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபாடில்லை. அதே சமயம் பிளாஸ்டிக் கழிவுகள் மனித குலத்தையும் சுற்றுப்புறச் சூழலையும் பயமுறுத்தும் சக்தியாக மாறி வருவதால், அழியாவரம் பெற்றிருக்கும் பிளாஸ்டிக்கையும் அழிக்கும் ஆயுதமாக இந்தக் காளான் மாறியுள்ளது. இந்தக் காளானை வளர்க்கும் தொடக்கநிலை ஆய்வக சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன. கூடிய விரைவில் இந்த காளான்களை எங்கே எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
"பெஸ்டலோடியோப்சிஸ் மைக்ரோஸ்போரா' காளான்கள் அமேசான் மழைக் காடுகளில் வளருகிறது. இந்தக் காளானை இனம் கண்டு கொண்டவர்கள் அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழக மாணவர்கள். இந்தக் காளான்கள் வளர உயிருடன் இருக்க ஆக்சிஜன் தேவையில்லையாம். இப்படி பிளாஸ்டிக்கைச் சாப்பிட்டு வளரும் காளான்களால் நேரடி அபாயம் இல்லை. இவை ஒன்றை ஒன்று தின்று கொள்ளுமாம். அதனால் காளான்களின் பெருக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம். சில காளான்களை உணவாக மனிதர்கள் உட்கொள்ளலாம் என்றாலும், பிளாஸ்டிக்கைத் தின்று வளரும் காளான்களை உணவாக மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம். அப்படி உணவாக ஏற்றுக் கொண்டாலும் பின்விளைவுகள் ஏதும் ஏற்படுமா என்றும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் காளான்கள் பிளாஸ்டிக் கழிவுகளை சிதைத்ததும் கிடைக்கும் கரிமப் பொருள்களைக் கொண்டு செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்களைத் தயாரிக்கலாம்.... கரிம எரி எண்ணெய்யை உருவாக்கலாம் என்ற கோணத்திலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இன்னொரு பக்கம் பிளாஸ்டிக்கை தின்னும் புழுக்களையும் இங்கிலாந்தில் கண்டுபிடித்துள்ளனர். 12 மணிநேரத்தில் ஒரு பிளாஸ்டிக் பையை இந்த வகை புழுக்கள் தின்று தீர்த்துவிட்டனவாம். இந்தப் புழுக்களை மீனைப் பிடிக்க தூண்டிலில் வைக்கப்படும் உணவாகவும் பயன்படுத்தலாமாம்...!
சமீபத்தைய ஆய்வின்படி, 2050-இல் கடல்களில் வாழும் மீன்களை விட எண்ணிக்கையில் பிளாஸ்டிக் கழிவுகள்தான் இருக்கும் என்று கணித்துள்ளனர். பல நாடுகளும் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கொட்டி வருகிறார்கள். கேட்க ஆளில்லை என்பது பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுபவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. கடலில் நீந்தும், மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கார்பன் டை ஆக்சைடாகவும், தண்ணீராகவும் மாற்றும் பாக்டீரியாக்களை அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழக மாணவிகளான ஜெயான்னி யாவ், மிராண்டா வான் கண்டுபிடித்துள்ளார்கள். இந்தக் கண்டுபிடிப்பிற்காக இந்த மாணவிகள் ஆறு விருதுகள் பெற்றுள்ளனர். இந்த கண்டுபிடிப்பின் மூலம் கடலைமட்டுமல்ல .. கடற்கரையையும் சுத்தம் செய்துவிடலாம்.
"மக்கள் பிளாஸ்ட்டிக் பொருள்களை பயன்படுத்துவதை நிறுத்தவே முடியாது. அதனால் பிளாஸ்டிக்கை சிதைத்து மக்கிப் போகும் தன்மையுள்ளதாக மாற்றிவிடுவதுதான் புத்திசாலித்தனம். அதனால்தான் நானும் என் தோழியும் சேர்ந்து பிளாஸ்டிக்கை சிதைத்து கார்பன் டை ஆக்ûஸடு மற்றும் தண்ணீராக மாற்றும் பாக்டீரியாக்களைக் கண்டு பிடித்தோம்'' என்கிறார் மிராண்டா.
எப்படியோ... இந்த பிளாஸ்டிக் கழிவுகள் குளம், ஏரி, ஆறுகள், கடல், நிலம் இவற்றில் குடியேறி குவிவதை குறைத்தால் சரி..!