/

சமையல் சமையல்

அரிசி, உளுந்தம் பருப்பு இரண்டையும் சேர்த்துக் களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் (இட்லி மாவு போல் கெட்டியாக நைசாக அரைத்து உப்பு சேர்த்து எடுக்கவும்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:24 pm

லோ. சித்ரா

பால் பணியாரம்

தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 1 ஆழாக்கு
உளுந்தம் பருப்பு - முக்கால் கிண்ணம்
உப்பு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - அரை கிலோ
சர்க்கரை - முக்கால் ஆழாக்கு
தேங்காய் - 1

Story image

செய்முறை: அரிசி, உளுந்தம் பருப்பு இரண்டையும் சேர்த்துக் களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் (இட்லி மாவு போல் கெட்டியாக நைசாக அரைத்து உப்பு சேர்த்து எடுக்கவும். தேங்காயைத் துருவி 2 ஆழாக்குப் பால் எடுத்து சர்க்கரையைக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கோலிக்குண்டு அளவு உருண்டையாக எடுத்துப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பொரித்து எடுத்த பணியாரத்தை தேங்காய்ப் பாலில் போட்டு ஊறவைத்து பரிமாறவும்.

குறிப்பு: தேங்காய்ப் பாலுக்கு பதில் பசும் பாலைக் காய்ச்சி பயன்படுத்தலாம்.

கேழ்வரகுப் பணியாரம்

தேவையான பொருள்கள்:
கேழ்வரகு மாவு - 2 ஆழாக்கு
எண்ணெய் - அரை கிலோ
வெல்லம் - முக்கால் ஆழாக்கு

Story image

செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கேழ்வரகு மாவில் வெல்லக் கரைசலை விட்டு கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய்யைக் காய வைத்து சிறிதளவு மாவை எடுத்து உருட்டித் தட்டி போடவும். பணியாரம் மேலே எழும்பி வந்ததும் திருப்பிவிட்டு எடுக்கவும். சுவையான கேழ்வரகுப்
பணியாரம் தயார்.

பாசிப்பருப்புப் பணியாரம்

தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 2 ஆழாக்கு
வெல்லம் - ஒன்றரை ஆழாக்கு
பாசிப்பருப்பு - கால் ஆழாக்கு
எண்ணெய் - கால் கிலோ

Story image

செய்முறை: அரிசியைக் கழுவி அரை மணிநேரம் ஊற வைத்து வடித்து சற்று உலர்த்தி மிஷினில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை பாதி அளவு மாவுச் சல்லடையிலும் மீதம் உள்ள மாவை ரவைச் சல்லடையிலும் சலித்து எடுக்கவும். பச்சைப் பருப்பை சற்று வதக்கி முக்கால் வேக்காட்டில் வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும். பருப்பு வடித்த தண்ணீர் வெல்லத்தைத் தூள் செய்து போட்டு கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து கொதி வந்ததும் இறக்கவும். வெல்லம் ஆறிய பின் மாவில் ஊற்றி வேக வைத்த பருப்பைச் சேர்த்து மாவை பணியாரம் ஊற்றும் பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை கரண்டியால் எடுத்து ஊற்றவும். பணியாரம் எழும்பி மேலே வந்ததும் திருப்பி விட்டு எடுக்கவும். சுவையான பாசிப்பருப்பு பணியாரம் ரெடி.

ரவை பணியாரம்

தேவையான பொருள்கள்:
ரவை - 400 கிராம்
தேங்காய் - 1 மூடி
சர்க்கரை - 400 கிராம்
எண்ணெய் - 500 கிராம்

Story image

செய்முறை: ரவையில் தாராளமாக தண்ணீர் விட்டு ஒரு மணிநேரம் ஊற வைத்து பிறகு தண்ணீரை வடித்து விடவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். முதலில் ஊற வைத்த ரவையை அரைத்து அதனுடன் சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்து எடுக்கவும். வட்டமான ஆழம் அதிகமில்லாத ஏந்தல் கரண்டியால் மாவை எடுத்து காய்ந்த எண்ணெய்யில் ஊற்றி ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்து வைக்கவும். இது மிகவும் ருசியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.