மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வன்கொடுமைக்கு எதிரான குரல்!

2017 -ஆம் ஆண்டு. சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வரும் சுனில்குமார் பத்ரன், விடுமுறையில் கேரளாவில் தன்னுடைய நண்பன் வீட்டில் மூன்று மாதம் தங்கியிருந்தபோது, நண்பனின் உறவுக்கார 13 வயது சிறுமியை

News image
Updated On :16 ஏப்ரல் 2020, 2:19 pm

பூா்ணிமா

2017 -ஆம் ஆண்டு. சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வரும் சுனில்குமார் பத்ரன், விடுமுறையில் கேரளாவில் தன்னுடைய நண்பன் வீட்டில் மூன்று மாதம் தங்கியிருந்தபோது, நண்பனின் உறவுக்கார 13 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அப்பெண்ணின் குடும்பத்தாருக்கு விஷயம் தெரிய வந்ததும், சுனில்குமார் மீது போலீசில் புகார் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், சுனில்குமாரை கைது செய்ய தேடியபோது, அவன் ஏற்கெனவே சவூதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. அந்த குடும்பத்திற்கு சுனிலை அறிமுகம் செய்து வைத்த நண்பர் குற்ற உணர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ பரிசோதனைக்குப் பின் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட அச்சிறுமியும் இறந்து போனாள். இந்த வழக்கு மேற்கொண்டு விசாரணையின்றி கிடப்பில் போடப்பட்டது.

2019- ஆம் ஆண்டு ஜூன் 8 -ஆம் தேதி கொல்லம் நகர போலீஸ் கமிஷனராக பதவியேற்ற மெரின் ஜோசப் என்ற பெண் அதிகாரி பணியில் சேர்ந்தவுடன், தேங்கி கிடந்த பழைய வழக்குகளைப் புரட்டி பார்த்தார். இரண்டாண்டுகளுக்கு முன் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, இரண்டு உயிர்கள் பலியாக காரணமான சுனில்குமார் வழக்கு முற்று பெறாமல் இருப்பது அவர் கண்களில்பட்டது. தண்டனை அனுபவிக்க வேண்டியவன் சவூதி அரேபியாவில் சுதந்திரமாக திரிவதை உணர்ந்த மெரின் ஜோசப், இந்த வழக்கை கையிலெடுத்து குற்றவாளியை சவூதி அரேபியாவிலிருந்து மீண்டும் கேரளா அழைத்து வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

கேரளாவைப் பொருத்தவரை சர்வதேச அளவில் இன்டர்போல் உதவியுடன் குற்றவாளியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஏகப்பட்ட பிரச்னைகள் இருப்பதோடு, இதுவரை வெளிநாட்டிலிருந்து எந்த குற்றவாளியையும் அழைத்து வந்ததில்லை என்பதை உணர்ந்த மெரின், முதன்முறையாக இன்டர்போல் உதவியுடன் சவூதி அரேபியாவுடன் தொடர்பு கொண்டு சுனில்குமாரை கைது செய்து அழைத்துவர, சிபிஐ மற்றும் என்ஐஏவில் பயிற்சி பெற்ற மாநில தலைமை போலீஸ் அதிகாரி லோக்நாத் பெஹராவிடம் கலந்தாலோசித்தார்.

ஏற்கெனவே 2013 - ஆம் ஆண்டு மியூச்சுவல் லீகல் அசிஸ்டன்ஸ் ட்ரீட்டி மூலம் இந்தியா, சவூதி அரேபியாவுடன் ஒப்பந்தம் செய்திருந்ததால், இரு நாடுகளுக்கிடையே குற்றவாளியை பற்றிய விவரங்கள் பரிமாறப்பட்டு சுனில்குமாரை கைது செய்து, கேரள காவல்துறையிடம் ஒப்படைக்க சவூதி அரேபியா அரசு ஒப்புக்கொண்டது.

கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சுனில்குமாரை, மெரின், சவூதி அரேபியா சென்று அரசு உதவியுடன் அழைத்து வந்தார். பின்னர் பழைய வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு முறைப்படி நீதிமன்ற விசாரணைக்குப் பின் சுனில்குமார் சிறையில் அடைக்கப்பட்டான். மெரின் நடவடிக்கையால் கேரள காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக இன்டர்போல் உதவியுடன் குற்றவாளி ஒருவன் பிடிபட்டு தண்டனை பெற்றது, கேரள காவல்துறைக்கு புகழையும், பெருமையையும் பெற்று தந்தது. மக்களுக்கும் காவல்துறை மீது நம்பிக்கை பிறந்தது.

இத்தனை பெருமைக்கும் காரணமான மெரின் ஜோசப், பிறந்தபோதே போலீஸ் அதிகாரியாக வேண்டுமென்று நினைத்தவர்போல், முதல் தேர்விலேயே வெற்றிப் பெற்று ஐபிஎஸ் அதிகாரி ஆனார். பதவியேற்றவுடன் கேரள காவல்துறைக்கு புகழை சேர்க்கும் வகையில் பணியாற்றுவதை கடமையாக கருதுகிறார். காவல்துறையை தேர்ந்தெடுத்தற்கும், தன்னுடைய எதிர்கால திட்டத்தையும் இங்கு விவரிக்கிறார்:

""சிறுவயதுமுதலே பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பது என் லட்சியமாக இருந்ததால் காவல்துறையில் சேர ஆர்வம் காட்டினேன். பணியில் அமர்ந்தவுடன் கடத்தப்படும் பெண்கள், குழந்தைகளை மீட்கும் கேரள மாநில துணை செயல் அதிகாரி மற்றும் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை செயல் அதிகாரி ஆகியோருடன் இணைந்து சட்டத்தின் துணையோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத் தருகிறேன்.

தில்லியில் நடந்த நிர்பயா சம்பவத்திற்குப் பின் பாலியல் பலாத்கார சம்பவங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது. குழந்தைகளை வன்கொடுமைப்படுத்துவது கடுமையான குற்றமாகும். இதில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதற்கு ஏற்ப போக்சோ சட்டத்தில் மரணதண்டனை விதிப்பது உள்பட பல மாற்றங்களை அரசு இயற்றியுள்ளது.

காவல்துறை மிகவும் பரந்தது. இதில் பணியாற்றுபவர்கள் குற்றவாளிகளை தண்டித்து சட்டத்தின் மூலம் மக்களுக்கு நீதி கிடைக்க பாடுபடுவதோடு மக்கள் மற்றும் காவல் துறைக்கு இடையே சுமுகமான சூழ்நிலையை உருவாக்கி நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர் அதற்கேற்ப மக்கள்பயமின்றி காவல்துறையை அணுகும் முறையை மாற்றியுள்ளோம். பாதிக்கப்படுபவர்கள் அச்சமின்றி புகார் கொடுக்கவும், தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் சமூக வலை தளங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதற்கு நல்ல வரவேற்பிருப்பதால், காவல்துறையும் இவர்களை உடனுக்குடன் கவனித்து நடவடிக்கை எடுக்க முடிகிறது.

இதே சமூக தளத்தில் என்னைப் பாராட்டியும் விமர்சனங்களும் செய்தவை வெளிவருகின்றன. என் தோற்றத்தை வர்ணித்து விமர்சனம் செய்பவர்களை நான் கண்டுகொள்வதில்லை. இதனால் என்னுடைய பணிக்கு பிரச்னை இல்லையென்றாலும் வரம்பு மீறும்போது நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. சில ஆண்டுகள் கழிந்ததும் இதுபோன்ற விமர்சனங்கள் அடங்கிவிடும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து என்னுடைய பணியை செய்கிறேன்.

பெண்களால் தொடர்ந்து மற்ற துறைகளில் பணியாற்றுவது போல் காவல்துறையில் பணியாற்றமுடியுமா என்று பலர் கேட்பதுண்டு. இதற்கு பதில் அளிப்பது சிரமம்தான். ஒவ்வொரு நாளும் எவ்வளவு திறமையாக பணியாற்றினாலும், ஆண்கள் நிறைந்த இந்தத் துறையில் தனித்து பெயரெடுப்பது கடினம்தான்.

மேலும் காவலர் பணியை தவிர உயர் அதிகாரிகளாக பணியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை குறைவுதான். பாலின வேறுபாடின்றி காவல்துறையில் பணியாற்ற நிறைய பெண்கள் முன்வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும்.

அதே நேரத்தில் இந்தத் துறையில் நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு வீட்டில் குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிக்க வேண்டுமென்றால் சிரமம்தான். குடும்பத்தினரின் ஆதரவு இல்லையெனில் பெண்கள் இத்துறையில் பணியாற்ற முடியாது. காவல்துறை மேலதிகாரிகளால் சில பெண் அதிகாரிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் கிடைப்பதுண்டு. பெரும்பாலான பெண் காவலர்களை சட்டம் - ஒழுங்கு பிரச்னையிலிருந்து ஒதுக்கி, காவல்நிலையத்திற்குள்ளே பணிகளில் அமர்த்தப்படுவதை ஆண் காவலர்கள் விரும்புவதில்லை. இத்துறையில் ஆண்-பெண் வித்தியாசமின்றி பணிகளை ஒதுக்குவதால் இந்த மனக்குறை நீங்கி சுமூகமாகப் பணியாற்ற முடியுமென நினைக்கிறேன். அப்போதுதான் பெண்களும் தங்கள் திறமையை நிருபிக்க வாய்ப்புகள் கிடைக்கும்.

நாள்தோறும் பணிக்கு கிளம்பும்போது, ஒரு நல்ல அதிகாரியாக செயல்படவேண்டுமென்ற எண்ணத்துடன் கிளம்புவேன். எதிர்காலத்தில் என்னை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. அது நிச்சயம் பெண்கள், குழந்தைகள் நலன் பற்றியதாகவே இருக்கும்'' என்கிறார் மெரின் ஜோசப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.