அமிதாப் புகழ்ந்து தள்ளிய ஆர்யாதயாள்!

அமிதாப் புகழ்ந்து தள்ளிய ஆர்யாதயாள்!

எனது நண்பர் இந்தக் இசை காணொளியை அனுப்பியிருந்தார். பாடியவர் யாரென்று எனக்குத் தெரியாது.
Published on

எனது நண்பர் இந்தக் இசை காணொளியை அனுப்பியிருந்தார். பாடியவர் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். பாடியவருக்கு செம திறமை. கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இது மாதிரி இனியும் திறமை காட்டிப் பாடணும். மருத்துவமனையில் இருக்கும் எனக்கு இந்த கர்நாடக மேற்கத்திய சங்கீத சங்கமம் புத்துணர்ச்சியை அள்ளித் தந்துள்ளது..' என்ற அமிதாப்பச்சனின் சமீபத்தைய "டிவிட் செய்தி' வளரும் பாடகியான ஆர்யா தயாளை ஒரு நிமிடத்தில் அகில இந்திய பிரபலமாக ஆக்கியிருக்கிறது.

அமிதாப், ஆர்யா பாடியிருக்கும் காணொளியையும் பதிவேற்றம் செய்து "கண்டு கேட்டு மகிழுங்கள்' என்று பரிந்துரையும் செய்திருக்கிறார். அடுத்த கணம் அந்தக் பாடல் காணொளி வைரல் ஆனது. அமிதாப்பைத் தொடர்ந்து பாடகர் ஸ்ரீனிவாஸ், ஹரிஹரன், ஷாபாஸ் அமன் ஆர்யாவைப் பாராட்டிஉள்ளார்கள். தொடர்ந்து சமூக தள, சங்கீத ஆர்வலர்களிலிருந்து பாராட்டு மழையில் ஆர்யா நனைந்திருக்கிறார்.

அமிதாப் புகழ்ந்து தள்ளிய ஆர்யா தயாள் யார் ?

ஆர்யா கேரளம் கண்ணனூரைச் சேர்ந்தவர் என்றாலும் தற்சமயம் பெங்களூருவில் வாழ்ந்து வருகிறார். புள்ளியலில் முதுகலை பட்டதாரி.

""அமிதாப் என்னைப் பாராட்டி பதிவிட்டுள்ளார் என்று அப்பா தெரிவித்ததும் என்னால் நம்ப முடியவில்லை. பிறகு அது உண்மை என்று தெரிந்ததும் எனக்கு தலை கால் புரியவில்லை. ஒரு லெஜண்ட்டிடமிருந்து அல்லவா எனக்குப் பாராட்டு கிடைத்திருக்கிறது' என்று சிலிர்க்கும் ஆர்யா தொடர்கிறார்.

கர்நாடக சங்கீதத்தின் "சுத்த தன்யாசி' ஸ்வரத்துடன் எட் ஷீரனின் "யுக்கலேலி'
ஆங்கிலப் பாடலையும் இணைத்துப் பாடியிருந்தேன். அதை ஒரு மாதத்திற்கு முன் பதிவேற்றம் செய்திருந்தேன். அந்தக் காணொளி சமூக தளங்களில் காண கேட்கக் கிடைக்கும். அந்தக் காணொளி அமிதாப் பார்வைக்குப் போக, இப்போது எனது வாழ்வை மாற்றியிருக்கிறது.

எனது காணொளி முன்பும் பேசப்பட்டுள்ளது. 2016 -இல் வெளியான "சகாவு' மலையாளப் பாடல் சர்ச்சைக்குள்ளானது. பாராட்டுகளும் குவிந்தன. அதைத் தொடர்ந்து கர்நாடக, மேற்கத்திய பாடல்களை இணைத்து பாட ஆரம்பித்தேன். பதிவுகளும் போட்டேன்.

கர்நாடக சங்கீதத்தை சிறுவயதிலிருந்து கற்றுள்ளேன். மேற்கத்திய இசையில் பயிற்சி ஏதும் பெறவில்லை.

ஊரடங்கு காலத்தில் வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் கிழக்கு மேற்கு சங்கீதங்களை இணைத்து பாடல்களை பாடி பயிற்சி செய்கிறேன். சிறப்பானவற்றைப் பதிவிடுகிறேன். உண்மையில் எனது காணொளிகளுக்கு விமர்சனங்களை எதிர்பார்த்தேன். ஆனால் பாராட்டுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. எனக்கு இந்திய இசை பிடிக்கும். சுதந்திரப் பாடகியாக வலம் வர வேண்டும் என்பதுதான் லட்சியம். அதற்காக பின்னணிப் பாடகியாகமாட்டேன் என்று அர்த்தம் அல்ல. "TRY MY SELF” ஆங்கிலப் பாடலை எழுதி இசை அமைத்து வெளியிட்டுள்ளேன். தொடர்ந்து ஆங்கிலப் பாடல்களை எழுதி இசை அமைத்து காணொளிகள் வெளியிடுவேன்.

பாடகர்கள் அனைவரும் வசதியுள்ளவர்கள் அல்ல. வாழ்க்கையை நடத்த பொருளாதார ரீதியாக சிரமப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் இசையை ஒரு கலையாக முன்னெடுக்க நினைக்கிறேன். எனக்கு வருமானம் நான் பார்க்கும் வேலையிலிருந்து கிடைக்கிறது. எனது குடும்பத்தில் பாடுபவர்கள் இல்லை. நான் பள்ளிக் காலத்திலிருந்து பாடி வருகிறேன். எனக்கு பாடுவதில் விருப்பம் திறமை உள்ளதை அறிந்து கொண்ட ஆசிரியர்கள் பெற்றோரிடம் இசைப் பயிற்சிக்கு அனுப்பும்படி சொன்னார்கள். அப்படித்தான் கர்நாடக சங்கீத பயிற்சி வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தேன். கல்லூரி நாட்களில் மேற்கத்திய பாடல்களில் கவனம் சென்றது. கர்நாடக சங்கீதம், மேற்கத்தியப் பாடல்களை இணைத்துப் பாட ஆரம்பித்தேன். தொடக்கத்தில் கர்நாடக சங்கீதத்திலிருந்து மேற்கத்தியப் பாடலுக்கு தாவும் போது குரலை உயர்த்திப் பாடுவது சிரமமாக இருந்தது. பயிற்சியில் அதை சகஜமாக்க கொஞ்சக் காலம் பிடித்தது'' என்கிறார் ஆர்யா தயாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com