வயிறு நிரம்பினால் மட்டும் போதுமா?
உணவின் தோற்றம், மணம், சமையல் முறைகளின் போது ஏற்படும் சத்தம், நினைப்புப் போன்றவைகள் கூட, அவ்வுணவை சாப்பிட்டுவிட வேண்டும் என்ற உணர்வில் பசியைத் தூண்டுவதும் இயல்பான ஒன்று.


உணவின் தோற்றம், மணம், சமையல் முறைகளின் போது ஏற்படும் சத்தம், நினைப்புப் போன்றவைகள் கூட, அவ்வுணவை சாப்பிட்டுவிட வேண்டும் என்ற உணர்வில் பசியைத் தூண்டுவதும் இயல்பான ஒன்று. இந்த உணர்வானது, நரம்புத் தூண்டல்கள், சமிக்ஞைகள், ஹார்மோன்கள் ஆகியவற்றின் கூட்டுச் செயல்பாடாகும்.
மனித செரிமான மண்டலத்தில் ஏறக்குறைய 30 வகைகளுக்கும் மேற்பட்ட செரித்தல் ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன. இதனாலேயே, செரிமான மண்டலமானது மிகப்பெரிய நாளமுள்ள சுரப்பியாகக் கருதப்படுகிறது. பசியெடுத்தல், வயிறு நிரம்புதல், வயிற்றில் ஏதும் இல்லாமல் இருக்கிறது என்ற எண்ணம் ஏற்படும் வண்ணம் உணவை இரைப்பையிலிருந்து குடலுக்கு நகர்த்துதல், செரிமான உறுப்புகளின் நோய் எதிர்ப்புத் திறனைப் பாதுகாத்தல், அவற்றிற்கான இரத்த ஓட்டம், அந்த உறுப்புகளின் நிகழும் புதிய செல்களின் உருவாக்கம், புதுப்பித்தல் போன்ற பல்வேறு முக்கியமான பணிகளையும் இந்தச் செரிமான மண்டல ஹார்மோன்களே செய்கின்றன.
கண்ணால் பார்த்தவுடன், கையில் எடுத்து, வாயில் போட்டு ருசித்து விடுவது மட்டுமே நமக்குத் தெரிந்த விஷயம். ஆனால், அதனைத் தாண்டி, ஓராயிரம் வேதிவினைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருப்பதை நாம் உணர்வதற்கு வாய்ப்பு இல்லைதான். கிரலின் என்னும் இரைப்பையில் சுரக்கும் ஹார்மோன், பசியெடுப்பது போல் உணரும் சமிக்ஞையை நரம்புத் தூண்டல்கள் மூலம் மூளைக்கு அனுப்புகிறது. அதேபோல், செரிமான மண்டலத்தில் உற்பத்தியாகும் ஹார்மோன் உணவு உண்டபின்பு, பசி குறைந்துவிட்டதைத் தெரியப்படுத்துகிறது. இவற்றுடன் சேர்ந்து, கோலிசிஸ்டோகைனின், கேஸ்ட்ரிக் இன்ஹிபிட்டரி பாலிபெப்டைட் இ குளுகான்-லைக் பாலிபெப்டைட்-1 இ பான்கிரியாடிக் பாலிபெப்டைட், கேஸ்ட்ரின் பாலிபெப்டைட் போன்ற ஹார்மோன்களும் ஒன்றிணைந்து, பசியை நிவர்த்திச் செய்து, வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கின்றன.
காலையோ, மதியமோ அல்லது இரவோ, எந்நேரமாயினும், உண்ட உணவானது, செரிமான மண்டலத்திலுள்ள வாய் முதல் துவங்கி, செரிமானத்திற்காக உற்பத்தி செய்யப்படும் நொதிகளின் உதவியுடன், பல உயிர்வேதி வினைகளுக்கு உள்ளாகி, கூழாக்கப்பட்டு, சிறுகுடல், பெருங்குடல் பிறகு மலக்குடல் என்று தள்ளப்படுகிறது. இந்த நகருதல் இயக்கத்தில், சில பிரத்யேகமான சுருங்கங்களும், அழுத்தங்களும் ஏறக்குறைய 130 நிமிடங்களுக்கு, அதாவது, 2 மணி நேரங்களுக்கு நடைபெறுகின்றன. இந்த இயக்கத்தின் இறுதி நிலையானது, மோட்டிலின் என்ற ஹார்மோனின் மூலமாகக் கட்டுப்படுத்தப்பட்டு, பின்பு பசியெடுக்கும் ஒரு நிலையைக் கொண்டு வருகிறது.
இதில் மிக நன்றாக ஆராய்ந்து பார்க்கும்போது, நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னவென்றால், அனைத்து ஹார்மோன்களுமே, புரதச் சத்தினை அடிப்படையாகக் கொண்டவையே. புரதச்சத்து குறைபாடோ அல்லது, புரதமும், ஆற்றலும் சேர்ந்து குறைபாட்டை உருவாக்கும் தொடர் ஊட்டச்சத்து குறைபாடோ குழந்தைகளுக்கு ஏற்படும் நிலையில், அவர்களின் பசியெடுத்தல் திறனின் அளவு குறைவதற்கு, இந்த ஹார்மோன்களின் குறைபாடும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நோயாளிகளுக்கு உடல் தசைகள் கரைந்து, உடல் மெலியும் நிலையில், புரதக் குறைபாடு ஏற்படுவதால், நோயாளிகளுக்கும் பசியெடுத்தலின் அளவும் நேரமும் குறைகிறது. இதுபோன்ற சில தருணங்களில், பசியெடுப்பதற்கும், உணவு உண்டபின் செரித்தல் கோளாறுகள் ஏற்படாமல் இருப்பதற்கும், அதற்கான மருந்துகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.
பசியெடுத்து, உணவு உண்டு வயிறு நிரம்பினால் மட்டும் போதுமா? அந்த உணவை குடலுக்குள் தள்ளி, இரைப்பை வெற்றிடமான பின்பு அடுத்த உணவு உண்பதற்குப் பசி என்ற உணர்வு வேண்டுமல்லவா? அந்தப் பணியை, மோட்டிலின் என்ற ஹார்மோன் செய்கிறது. இந்த ஹார்மோன், செரித்தல் பணியுடன் சேர்ந்து, சில வளர்சிதை மாற்ற நிகழ்வுகளுக்குத் தேவையான வேலைகளையும் செய்கிறது. பி-1 ஹார்மோன்கள், பசியெடுத்தல், வயிறு நிரம்புதல் உள்ளிட்ட சமிக்ஞைகளைத் தருவதுடன், இன்சுலின் அளவை அதிகப்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும் உதவிசெய்கின்றன. ஆகவே, நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பசி, வயிறு நிரம்புதல், இரைப்பை காலியாகுதல், உணவு உண்டபின்பு ஏற்படும் திருப்தி போன்றவைகளுக்கும் இந்த ஹார்மோன்களே காரணமாக அமைகின்றன. இவற்றில் ஏற்படும் சமநிலை மாறுபாடு, உணவிற்கு முன்னும், பின்னும் நிகழும் நரம்புத் தூண்டுதல்களிலும் மாறுபாட்டை ஏற்படுத்தி, பசியெடுத்தல் மற்றும் வயிறு நிரம்புதல் போன்றவற்றிலும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.
சிந்தனைகளும், எண்ணங்களும், உணர்ச்சிகளும் கூட பசியெடுத்தலின் அளவுகளில் வேறுபாட்டைக் கொடுத்துவிடுவது, மனித உடலியங்கியலில் ஒரு பெரும் அதிசயமான செயல்பாடுதான்.
ஒருவருடைய கோபம், பயம்,அதிர்ச்சி, ஏக்கம், கவலை, நாள்பட்ட துன்பம் போன்ற எதிர்மறை உணர்வுகள், மூளையின் ஹைபோதலாமஸ் பகுதியைத் தூண்டுவதால், தன்னியக்க நரம்பு மண்டலம் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, செரித்தலுக்கான ஹார்மோன்களின் அளவு குறைகிறது.
இதன் காரணமாக, குடல் தசை இயக்கம் தடைபடுவதுடன், இறுக்குத் தசை செயல்பாடுகள் அதிகரித்து, உணவு நகருதலுக்கான உந்துவிசையும் குறைந்து, பசியின்மையும், அதையும் கடந்து, உணவு உண்ணும்போது, செரித்தல் கோளாறுகளும் ஏற்படுகின்றன.
இதனாலேயே, சாதாரண நிலையிலிருந்து, துயரநிலைக்கு மனம் மாறும் நிலையில், பசி, உணவை எதிர்பார்த்தல் போன்றவைகளுக்கு உடலும் மனமும் ஒத்துப்போவதில்லை.
பசிக்கும், ஹார்மோன்களுக்கும் உள்ள தொடர்பு போலவே, இயற்கை உணவு, பாதியளவு சமைத்த உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் பசிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சில வகையான உணவுத் தயாரிக்கும் முறைகள் கூட செரித்தல் ஹார்மோன்களின் அளவுகளில் மாற்றம் செய்கின்றன.
அதிக வெப்பத்தில் உருவாக்கப்படும் உணவுகள் , செரிமான சுரப்பு நீரைக் குறைத்துவிடுகிறது. இதற்கு, வெப்பப்படுத்தலின்போது உருவாகும் அக்ரோலின் என்னும் பொருளும் ஒரு காரணம்.
இவ்வாறு, அதிக வெப்பத்தைக் கொடுத்துத் தயாரிக்கப்படும் துரித உணவுகள் மற்றும் அதிகக் கலோரியும், கொழுப்பும், உப்பும் நிறைந்தப் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தொடர்ச்சியாகக் குழந்தைகளும், கல்லூரி மாணவர்களும் உண்ணும் நிலையில், இவர்களின் பசியும் குறைவாகத்தான் இருக்கும்.
அதனாலேயே, அவர்கள் அடுத்த வேளையுணவை சரியாக எடுத்துக்கொள்ள இயலாமல், ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உள்ளாகி, குறைவான நோய் எதிர்ப்புத்திறனையும் கொண்டுள்ளனர் என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். பசி, விரதம், உடல் எடை , இவற்றிற்குள்ள தொடர்புகள் குறித்து அடுத்த வாரம் பேசுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...