25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

தன்னந்தனியே 42 நாடுகள்!

"நான் பள்ளியில் படிக்கும்போது, எங்கள் வீட்டில் பிக்னிக் போகக் கூட அனுமதிக்க மாட்டார்கள்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:58 pm

ஸ்ரீதேவி குமரேசன

"நான் பள்ளியில் படிக்கும்போது, எங்கள் வீட்டில் பிக்னிக் போகக் கூட அனுமதிக்க மாட்டார்கள். அதனால் சிறு வயதிலிருந்தே எனக்கு டூர் போக வேண்டும். பல ஊர்களைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் இருந்து கொண்டே இருந்தது. படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்ததும் என் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை சேமித்து வைக்கத் தொடங்கினேன். ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும், வீட்டில் என் ஆர்வத்தை சொல்லி அனுமதி வாங்கினேன். 2012-இல் முதன்முதலாக இலங்கை சென்று வந்தேன். இரண்டாவதாக மாலத்தீவு சென்றேன். அதன்பிறகு மீண்டும், மீண்டும் சேமிப்பும், என் பயணமும் தொடர ஆரம்பித்தது' என்கிறார் தமிழ் பெண்ணான பாத்திமா மேரி. 8 ஆண்டுகளில் 42 வெளிநாடுகளை தன்னந்தனியாக சுற்றி வந்திருக்கும் இவர் தனது பயண அனுபவங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""ஆசிய நாடுகளில் மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளும், ஐரோப்பிய நாடுகளில் ஐஸ்லாந்து, நார்வே, சுலேனியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து, நெதர்லாந்து, குரேஷியா போன்ற பெரும்பாலான நாடுகளைக் கண்டு வந்துள்ளேன்.

பொதுவாக நான் எந்த நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ, அங்கு தங்குவது முதல் சுற்றிப் பார்க்கும் இடங்கள், போக்குவரத்து போன்றவற்றை முதலிலேயே தீர்மானித்துவிடுவேன். அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை முழுமையாக கணக்கிட்டு சேமிக்கத் தொடங்குவேன். சொத்துகள் வாங்குவது, தங்க நகைகள் வாங்கிச் சேர்த்து கொள்வது, ஆடம்பர செலவுகள் செய்வது போன்றவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு என் பயணத்துக்காக மட்டுமே சேர்த்து வைப்பேன். தொகை சேர்ந்ததும் கிளம்பி விடுவேன். இதனால், எனக்கு துணையோடு சென்று பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இப்படித்தான் தற்போது 42 நாடுகளுக்கு பயணம் சென்று வந்துள்ளேன்.

என்னுடைய பயணங்கள் எல்லாம் பட்ஜெட் பயணங்கள்தான். செல்லும் நாடுகளிலும் அதிக செலவோ, வீண் செலவோ எதுவும் செய்ய மாட்டேன். எந்த நாட்டிற்குச் சென்றாலும், முடிந்தவரை போக்குவரத்து செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு மேப் துணையுடன் நானே காரை ஓட்டிச் செல்வேன். இதற்காகவே, இன்டர்நேஷனல் ஓட்டுநர் உரிமம் வாங்கி வைத்துள்ளேன். சில சமயம் செல்லும் இடத்தில் தங்குவதற்கு ஹோட்டல் அறை கிடைக்கவில்லை என்றால், காரிலேயே இரவில் தங்கிவிடுவேன். பார்த்து பார்த்து செலவு செய்ததால்தான், இவ்வளவு குறுகிய ஆண்டுகளில் இத்தனை நாடுகளை என்னால் காண முடிந்தது.

வெளி நாடுகளுக்குச் செல்லும்போது உணவும், மொழியும் பிரச்னையாக இருக்கும். மொழிப் பிரச்னையை சைகை மொழியில் சமாளித்து விடுவேன். உணவை பொருத்தவரை, ஒவ்வொரு நாட்டிலும் உணவுமுறை வித்தியாசமாக இருக்கும். பெரும்பாலான நாடுகளில் நமது இந்திய உணவுகள் கிடைக்கும். ஆனால், இங்கே உள்ள சுவை அங்கே கிடைப்பதில்லை.

எந்த சுற்றுலா தளத்திற்கு சென்றாலும், நான் தனியாக சுற்றி வருவதும், நின்று செல்பி எடுத்துக் கொள்வதுமாக அனைத்தையும் ரசித்துக் கொண்டிருப்பேன். அருகில் இருப்பவர்கள் என்னை கவனிக்கிறார்களா என்பது பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன்.

சுவிட்சர்லாந்து செல்லும்போது, ஸ்கை டைவிங் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை செய்தும் பார்த்து விட்டேன். சில நாடுகளில் வானத்தில் பறக்கும் சாகசமும், சில நாடுகளில் காட்டுப்பகுதிகளில் மலையேற்றம் (டிரக்கிங்) போன்றவையும் என்னுடைய பயணத்தில் மறக்க முடியாதவை.

சில நாடுகளுக்குச் செல்லும்போது இடையூறுகள் இருக்கத்தான் செய்தன. ஒருமுறை ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுவிட்டு, காரில் பிரான்ஸ் செல்லும்போது என்னை யாரோ பின் தொடர்வது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தால் சுங்கத்துறை அதிகாரிகள். என்னை புலன் விசாரணை நடத்தி, கடைசியில் நான் ஒரு டிராவலர் என்று தெரிந்தபின், ஸ்பெயினில் இருந்து பிரான்ஸ் போய் சேரும் வரை எனக்குப் பாதுகாப்பு அளித்து வந்தது என்னால் மறக்க முடியாத ஒரு புதிய அனுபவமாகும்.

நான் பயணம் செய்த பெரும்பாலான நாடுகளில் பார்த்து அதிசயித்த விஷயம், அந்நாட்டவர்கள், இந்திய நாட்டை பற்றியும், நமது தமிழ் கலாசாரங்களைப் பற்றியும் அறிந்து வைத்திருந்தனர். ஒரு தமிழ் பெண் தனியாக சுற்றுலா வந்திருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு சிலர் என்னிடம் வந்து பேசுவார்கள்.

நமது இந்திய கலாசாரங்களைப் பற்றியெல்லாம் விசாரிப்பார்கள். அவர்களில் சிலர் நண்பர்களாகி தங்களது சொந்த உறவுப் பெண்ணைப் பார்ப்பது போன்று அவரது வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்று உபசரித்து அனுப்பியதும் மறக்க முடியாத அனுபவங்களாகும்.

இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று வந்த அனுபவத்தில், "ஹே' எனும் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளேன். இதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்ல விரும்பும் நமது இந்தியர்களை பாதுகாப்பாக அனுப்பி திரும்ப பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளேன்.

அதுபோன்று இந்தியாவை சுற்றிப் பார்க்க விரும்பும் வெளிநாட்டவரையும் அழைத்து வந்து பத்திரமாக திரும்பி அனுப்பி வைத்தேன். தற்போது கரோனாவினால் டூர் பயணங்களை நிறுத்தி வைத்துள்ளோம்.

தென்னிந்திய பாரம்பரிய கலைகளான பரதம், குச்சிப்புடி, ஒயிலாட்டம், மயிலாட்டம், கேரளாவின் கதக்களி, போன்றவற்றை கண்டு ரசிப்பதற்கு வெளிநாட்டவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

எனவே, தமிழக அரசு நமது சுற்றுலா தளங்களையும், புராதன சின்னங்களையும், நாட்டுப்புற கலைகளையும் பாதுகாத்தால் அரசுக்கு சுற்றுலா மூலம் நல்ல வருவாய் ஏற்படும். அதுபோன்று, பள்ளி பருவத்திலேயே குழந்தைகளின் பாடத் திட்டத்தில் சுற்றுலா பற்றியும், அழிந்து வரும் நமது நாட்டுப்புற கலைகள் பற்றியும் பாடத்திட்டம் அமைத்து அவர்கள் நமது கலைகள் குறித்து அறிந்து கொள்ள செய்ய வேண்டும் என்பது எனது ஆசை'' என்கிறார் பாத்திமா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.