மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கற்றதும் - பெற்றதும்! - பிரியங்கா சோப்ரா

2000 -ஆம் ஆண்டு 18 வயதில் "மிஸ் இந்தியா'வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியங்கா சோப்ரா, பின்னர் அதே ஆண்டில் உலக அழகியாகவும் முடி சூட்டப்பட்டார்.

News image
Updated On :3 ஜூன் 2020, 2:27 pm

பூா்ணிமா

2000 -ஆம் ஆண்டு 18 வயதில் "மிஸ் இந்தியா'வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியங்கா சோப்ரா, பின்னர் அதே ஆண்டில் உலக அழகியாகவும் முடி சூட்டப்பட்டார். மாடலிங் செய்து வந்தவர், திரைப்பட நடிகையானார். பேஷன் (2008) படத்திற்காக சிறந்த நடிகையாக தேசிய விருது பெற்றார். கடந்த பத்தாண்டுகளில் தொழில் ரீதியாக படிப்படியாக உயர்ந்து அனைவரையும் வியக்க வைத்து, பத்திரிகைகளில் எழுதுவது, தொழில் முனைவோராக மாறியது, அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்தது, திரைப்படத் தயாரிப்பாளரானது, அமெரிக்க பாடகரான நிக்ஜோனûஸ மணந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 20 ஆண்டு கால அனுபவத்தை இங்கு கூறுகிறார் பிரியங்கா சோப்ரா.

""17 வயதில் என்னுடைய வாழ்க்கையை துவங்கியபோது நடிப்பு, பொழுதுபோக்கு, கூட்டத்தில் பேசுவது என எதிலும் அனுபவமில்லை. ஏனெனில் வெளியே செல்ல வாய்ப்பு கிடைத்ததில்லை. வெளி உலகத்திற்கு வந்தபிறகே மற்றவர்களு டன் பழகி ஒவ்வொன்றையும் உணர்ந்து அனுபவங்கள் மூலம் படிப்படியாக கற்க முடிந்தது. நான் பகிர்ந்து கொள்ள அற்பமான பல விஷயங்கள் உள்ளன. ஆனால் அதன் மறுபக்கத்தில் உள்ள என்னுடைய முயற்சிகள், சோதனைகள், விவாதங்கள் போன்றவை என்னையே பாதிக்குமென கருதுவதால் அவைகளை கூறி அனுதாபத்தை பெற விரும்பவில்லை. வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்தது. ஒவ்வொருவருக்கும் பிரச்னைகள் இருக்கும். வெற்றி பெறுவதுதான் வாழ்க்கை. என்னைப் பொருத்தவரை ஆசீர்வதிக்கப்பட்டவளாக கருதுவதால் எதையும் சுலபமாக எடுத்துக் கொள்கிறேன்.

திரையுலக வாழ்க்கை:

2003- ஆம் ஆண்டு முதன்முதலாக நான் நடிக்க வந்தபோது நடிப்பைப் பற்றி ஒன்றுமே தெரியாது. விதவிதமா உடைகளை அணிந்து அழகாகவும், கவர்ச்சியாகவும் தோன்றினால் போதுமென்று நினைத்திருந்தேன். அடுத்த சில ஆண்டுகளுக்குப் பிறகே இந்தத் தொழிலில் "ஆக்ஷன்' மற்றும் "கட்' என்று இயக்குநர் சொல்லும் இடைவெளிக்குள் நம்முடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்த வேண்டுமென்பதை உணர்ந்தேன். ஒரு கேரக்டரில் நடிக்கும் போது அந்த கேரக்டராகவே மாறி நடிக்க வேண்டுமென்பதை உணரும்போது, சலிப்பாக இருந்தாலும், உடன் நடிப்பவர்களை பார்க்கும்போதுதான் நடிப்பு என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டேன். அதன்பின்னரே, கேரக்டரின் தன்மையை உணர்ந்து நடிக்கத் தொடங்கினேன்.

தன்னம்பிக்கை தந்த தந்தை:

இதுவரை நான் நடித்த படங்களிலேயே பிடித்தது "தி ஸ்கை இஸ் பிங்க்' படத்தில் வரும் கேரக்டர்தான். இந்தப் படத்தில் உணர்ச்சி வசப்பட்டு நடித்ததற்கு என்னுடைய தந்தையின் மரணமே காரணமாகும். அவரது மறைவு நீண்ட காலம் என் நினைவிலிருந்து மறையவில்லை. அவர் எனக்கு தந்தையாக மட்டுமன்றி நண்பராகவும் பழகி வந்தார். தினமும் ஒருவருக் கொருவர் கருத்துகளை பரிமாறிக் கொள்ள தவறியதே இல்லை. இதனால் அவரது மறைவை என்னால் ஏற்கமுடியாமல், அதையே அந்த படத்தின் கேரக்டராக பிரதிபலித்தேன். அது என் இதயத்தில் இருந்த வேதனைகளின் வெளிப்பாடு, மூன்றாம் வகுப்பில் படிக்கும்போதே, என்னுடைய பெற்றோர் என்னை போர்டிங் பள்ளியில் சேர்த்தபோது அந்த சுற்றுச்சூழல் எனக்கு வித்தியாசமாக இருந்தது. என்னுடைய தந்தை அருகில் அமர்ந்து, "அந்தப் புதிய இடத்தின் அழகைப் புரிந்து கொண்டால், உனக்குள் தானாகவே தன்னம்பிக்கை வளரும்' என்று சொன்னது நினைவில் இருக்கிறது. இதுவே எனக்கு புதிய அனுபவத்தை கற்று தந்தது என்று கூறலாம்.

ஊதிய பாகுபாடு:

சில ஆண்டுகளுக்கு முன் என்னுடன் நடிக்கும் நடிகரைவிட இரண்டு சதவீதம் அதிகம் என்னுடைய ஊதியத்தில் கொடுக்கும்படி கேட்டதற்காக, தயாரிப்பாளர் என்னை நீக்கிவிட்டு வேறொரு நடிகையை ஒப்பந்தம் செய்ததும் உண்டு. என்றாவது ஒருநாள் அவரே என்னிடம் வந்து நீங்கள்தான் என்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்கும் காலம் வரும் என்று என் மனதில் நினைத்தது நடந்ததும் உண்டு. ஒரு நடிகை தன்னுடன் நடிப்பவரை விட கடுமையாக உழைத்து நடிக்கும்போது கூடுதல் ஊதியம் கேட்பதில் என்னதவறு? இந்த வேறுபாடு திரையுலகில் மட்டுமல்ல, சமூகத்தில் பல்வேறு துறைகளிலும் பெண்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும்.

திட்டமிட்டுள்ள வாழ்க்கை:

என்னுடைய கணவர் நிக் ஜோனûஸ நான் முதன்முதலாக சந்தித்தபோது, அவரது சகோதரர்களை பற்றியோ, அவர்களது இசைக்குழுவைப் பற்றியோ எதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் நடித்த படங்கள் பற்றி அவரும், அவர் இசையமைத்த ஆல்பங்கள் பற்றி நானும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வோம். இப்போதும் நாங்கள் அவரவர் தொழிலில் கவனம் செலுத்துகிறோமே தவிர, மற்றவர் விஷயங்களில் தலையிடுவதில்லை. எனக்கு ஏற்கெனவே நியூயார்க்கில் ஒரு அபார்ட்மெண்ட் இருக்கிறது. தற்போது நாங்களிருவருமாக சேர்ந்து லாஸ் ஏஞ்சலில் ஒரு வீட்டை கட்ட திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகே வாழ்க்கையை துவங்குவது, குழந்தை பெற்றுக்கொள்வது என தீர்மானித்துள்ளோம். இதற்கிடையில் என்னுடைய கடந்த 20 ஆண்டுகால அனுபவங்களை "அன்பினிஷ்ட்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வருகிறேன். தலைப்பை போலவே புத்தகம் இன்னும் முடியவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் எழுதி முடித்துவிட வேண்டும் என நினைத்துள்ளேன்'' என்றார் பிரியங்கா சோப்ரா ஜோனஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.