தனிமைத் தாயாக இருப்பதில் சிரமமில்லை!
திருவனந்தபுரத்தில் நடந்த கைத்தறி ஃபேஷன் ஷோவில் நடிகையும், நடன கலைஞருமான இஷாஷர்வானி, தன்னுடைய நான்கு வயது மகன் லூகாவுடன், ஒய்யார நடை போட்டு பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.


திருவனந்தபுரத்தில் நடந்த கைத்தறி ஃபேஷன் ஷோவில் நடிகையும், நடன கலைஞருமான இஷாஷர்வானி, தன்னுடைய நான்கு வயது மகன் லூகாவுடன், ஒய்யார நடை போட்டு பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சிறுவயது முதலே நடனத்தில் ஆர்வம் கொண்ட இஷா, "மாற்றான்', "டேவிட்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். நல்ல பாத்திரங்கள் கிடைக்காததால் நடிப்புத் துறையிலிருந்து ஒதுங்கியிருந்தாலும், பல நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் மேடை ஏற்றிய "சேலை' என்ற நாட்டிய நாடகம் பற்றியும், தனிமைத் தாயாக வாழ்வதில் சிரமம் இல்லை என்றும் தன்னுடைய கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார்:
""என்னுடைய "சேலை' என்ற நாட்டிய நாடகம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சேலை எப்படி நெய்யப்படுகிறது என்பதுதான் இதன் கரு. இந்த நாட்டிய நாடகத்தை வடிவமைத்ததுக் கொடுத்தவர் என்னுடைய அம்மா தக்ஷா சேத். இசை மற்றும் இயக்கம் என்னுடைய அப்பா டேவிஸ்ஸரோ. என்னுடன் என் சகோதரன் டோ இஷ்ஸரோ உள்பட பல கலைஞர்கள் நடிக்கின்றனர்.
சேலை நெய்யப்படுவதே ஒரு தனி கலை. இதன் ஓசை சாதாரணமானது என்றாலும், நடனத்தின் மூலம் வெளிப்படுத்தும் போது பருத்தி மற்றும் கைத்தறி எப்படி பல வகையில் நூலாக மாறி சேலையாகவும், ஆடைகளாகவும் உருவாகிறது என்பதையே என்னுடைய நாடகம் உணர்த்துகிறது. மேலும் நெசவாளிகளின் கை வண்ணத்தையும், உழைப்பையும் பாராட்டி கௌரவிக்க வேண்டுமென்பதற்காகவே இந்தக் கருத்தை தேர்வு செய்ததோடு, கைத்தறி ஃபேஷன் ஷோவிலும் என்னுடைய மகனுடன் கலந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் தான் என்னுடைய மகன் லூகாவை முதன்முறையாக அறிமுகப்படுத்தினேன். அவனுக்கும் என்னைப் போலவே நடனம் என்றால் மிகவும் பிடிக்கும்.
சிறு வயது முதலே திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். இரண்டு வயதிலிருந்து பயிலத் தொடங்கிய நடனம் இன்று என்னுடைய 35-ஆவது வயதிலும் தொடர்கிறது. என்னைப் பொருத்தவரை நடனம் ஒரு தெரபி. சோர்வடையும்போது தனிமையில் ஒரு மணி நேரமாவது நடனமாடுவேன். பின்னர் புத்துணர்ச்சியுடனும் புன்னகையுடனும் வெளியே வருவேன். இந்த உலகம் எனக்குக் கொடுத்த வரப்பிரசாதம் தான் நடனம் என்று நம்புகிறேன்.
இதேபோல், லூகா எனக்கு மகனாக கிடைத்ததும் என்னுடைய அதிர்ஷடம்தான். அவனுக்கு நான் அம்மாவாக இருப்பதில் பெருமைபடுகிறேன். நான் கற்றுக் கொடுப்பதற்கு முன்பே, எங்களுடைய நடனத்தை கூர்ந்து கவனித்து, அவன் தனியாகவே அவனுடைய பாணியில் நடனமாடுவது என்னை விட என் அம்மாவுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. முதன்முறையாக என்னுடன் மேடையேறியது அவனுக்கு புது அனுபவமாக இருந்தது.
என்னைப் பொருத்தவரை நான் எதற்காகவும் கவலைப்படமாட்டேன். பொருளாதார ரீதியிலும் பிரச்னை ஏதும் இல்லாததால், தினசரி பணிகளுக்கிடையே லூகாவை என் விருப்பப்படி வளர்க்க தீர்மானித்தேன். தனிமைத் தாயாக இருப்பதில் எனக்கு எந்தவித சிரமமும் இல்லை.
நீங்கள் தனியாக அல்லது குடும்பத் தலைவியாக இருந்தாலும் சரி. குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அழகான அனுபவமாகும். இந்த உலகில் பிறக்கும் குழந்தைகள் இயற்கையிலேயே அழகானவை. கள்ளம் கபடமற்றவை. பெற்றோர் என்ற முறையில் குழந்தைகள் மீது அன்பு செலுத்துவதோடு, பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் குழந்தைகளிடமிருந்து நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
பெண் என்பவள் அவளுக்குள்ளேயே மகிழ்ச்சியைக் காணமுடியுமென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. எனக்குப் பிடித்தது அமைதி மற்றும் பொறுமை. நாம் சந்தோஷமாக இருந்தால் மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தமுடியும். பெண்ணுக்கு போராடும் வலிமை இருந்தால் அவளது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்.
திரைப்பட வாய்ப்புகளை நான் ஒரு போதும் மறுத்ததில்லை. நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் நடிக்கத் தயார். பிடித்தமான பாத்திரங்கள் கிடைக்காததால்தான் இந்த இடைவெளி. அண்மையில் வந்த வாய்ப்பில் கூட எதிர்மறையான பெண் பாத்திரமாக இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டேன். இதற்காக படம் முழுக்க என்னை முன்னிலைபடுத்தும் பாத்திரமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உண்மையில் நானும் பெண்ணியவாதிதான். வயதுக்கேற்ப என்னுடைய கொள்கைகள் மாறலாம். திரைப்படத் துறையில் உள்ள திறமையான நடிகர்கள், தொழில் கலைஞர்களுடன் பழகுவதால் அத்துறையைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். என்னைப் பொருத்தவரை நகைச்சுவை மிகவும் பிடிக்கும். வாய்ப்பு கிடைத்தால் நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.
அடுத்து இந்திய - ஸ்பானிஷ் கூட்டமைப்பில் ஒரு திட்டம் மற்றும் இந்திய -ஆஸ்திரேலியா கூட்டமைப்பில் ஒரு திட்டம் என இரு திட்டங்களை இந்த ஆண்டில் செயல்படுத்தவுள்ளேன். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடல் ரீதியாக நடனம் மூலம் குணப்படுத்த முடியுமென்பதுதான் இத்திட்டங்களின் முக்கிய குறிக்கோள்'' என்கிறார் இஷா ஷர்வானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...