தேர்வு நேரங்களில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறைகள்!
தேர்வுகள் நெருங்குகின்றன என்றாலே, தொலைக்காட்சி இணைப்பை துண்டித்துவிடுவது, பிள்ளைக்கு பரீட்சை நடக்கிறது..


தேர்வுகள் நெருங்குகின்றன என்றாலே, தொலைக்காட்சி இணைப்பை துண்டித்துவிடுவது, பிள்ளைக்கு பரீட்சை நடக்கிறது.. அதனால் உறவினர் யாரும் இப்போது வரவேண்டாம்.. அப்பா ஒரு நாள்.. அம்மா ஒரு நாள் என அலுவலக விடுப்பு எடுத்துக்கொண்டு பிள்ளைகளை கவனிப்பது, எப்படியாவது தங்கள் பிள்ளைகள் மனப்பாடம் செய்து படித்து, தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்றுவிட வேண்டும் என்ற ஆர்வம் போன்ற பல சிக்கலான விஷயங்களைக் கண்கூடாக காண்பது இன்றையக் காலம்.
தேர்வு எழுதும் மாணவர்களைச் சுற்றியுள்ள அனைத்தும் சரியாகவும் அவனுக்கு உதவுவதாகவும் இருப்பினும், அவர்களது உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் நன்றாக இருந்தால்தான் அவர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்று நினைத்ததை சாதிக்க முடியும். ஆகவே, மாணவர்களுக்கு, பாடத்தின் மீதுள்ள தெளிவு, எளிதில் மனதில் பதியவைத்தல், கூர்மையான நினைவாற்றல், விரைவாக சிந்தித்தல், தீர்க்கமாக முடிவெடுத்தல், ஒப்பிட்டு பார்த்தல் ஆகிய அனைத்தும் சிறப்பாக இருக்கவேண்டுமானால், தேர்வு நேரங்களில் மாணவர்கள் எந்த வகையான உணவுகள் உண்ண வேண்டும், என்னென்ன சத்துகள் அவர்களுக்குத் தேவை, அவை எந்தவகையில் அவர்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன என்பது பற்றி மாணவர்களும் அவர்களது பெற்றோரும் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
மூளையின் செயல்திறன்
நாம் உண்ணும் உணவானது உடலுக்கு மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தாமல், மனதளவிலும் மிகப்பெரிய மாற்றத்ததை ஏற்படுத்துகிறது. மொத்த உடல் எடையில் வெறும் 2 சதவிகிதமே எடையுள்ள மனத மூளையானது, உண்மையில் 20 சதவிகித கலோரியை எடுத்துக் கொள்கிறது. இந்த ஆற்றலானது, நியூரான்கள் மூலமாக மூளை செயல்படுத்தும் உயிர் மின் சக்திக்கு (Bio electrical) மிக முக்கியமானதாகும். மற்ற உறுப்புகளைப்போல்; எந்த சத்துகளையும் தன்னிடம் சேர்த்து வைத்துக் கொள்ளாத மூளை செல்கள் தமக்கு தேவையான சத்துகளை, தேவைப்படும் நேரத்தில் மட்டுமே எடுத்துக் கொள்கின்றன. அவற்றின் ஆற்றல் குறையும்போது, சோர்வடைவதன் வெளிப்பாடே நினைவு குறைதல், தூக்கம், சோம்பல், படிப்பதில் வெறுப்பு, கவனமின்மை, ஆர்வமின்மை, விருப்பமில்லாமல் படித்தல் போன்றவைகளாகும்.
கண்விழித்து படிக்க வேண்டும் என்று தூக்கத்தை குறைத்து இரவு முழுவதும் மனப்பாடம் செய்வதால் 50 சதவிகிதம் பதியும் கருத்தானது, சரியான அளவில் தூக்கத்தை கடைபிடித்தபின் படிப்பதால் 70 சதவிகிதம் ஆழமான மற்றும் சரியான கருத்தாக மனதில் பதிகின்றது. தேர்வுக்கு படிப்பதற்கு மூளை எந்த நேரத்தில் தன்னை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறது அல்லது நினைவாற்றல் எப்போது முழுவதும் வேலை செய்கிறது என்று பல்வேறு விதமான ஆய்வுகள் செய்ததில், ஆராய்ச்சி, சரிபார்த்தல், நுண்கலை, செயல்முறை போன்ற படிக்கும் வேலைகளுக்கு காலை நேரம் உகந்தது என்றும், படித்தவற்றை மீள்பார்வை செய்தல், திட்டமிடுதல், ஆய்வுகளின் நுணுக்கங்களை பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு இரவு நேரம் உகந்ததென்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலை உணவின் முக்கியத்துவம்
பெரியவர்களைவிட, பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு மிக முக்கியமாகும். காலை சிற்றுண்டியை தவிர்க்கும் பள்ளி மாணவர்களின் கவனிக்கும் திறன், புத்திக்கூர்மை, தெளிவு ஆகியவை குறைந்தே காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, தேர்வு நேரங்களில், இரவில் கண்விழித்துப் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும், அதிகாலையில் எழுந்து படிக்கும் மாணவர்களாக இருந்தாலும், காலை 6 மணியளவில் அவர்கள் உண்பதற்கு டீ அல்லது காபி தருவதற்கு பதில், நீர்க்க காய்ச்சி, வெல்லம் மற்றும் பால் சேர்த்த கேழ்வரகு கஞ்சி, சத்து மாவு கஞ்சி, பலதானிய கஞ்சி, சோளம் அல்லது வரகு, சாமை, திணை போன்ற ஏதாவது ஒரு சிறுதானிய கஞ்சி போன்றவற்றை தரவேண்டும்.
ஏனெனில், "கார்போஹைடிரேட்' என்ற மாவுச்சத்துதான் காலை நேரத்தில் எளிதில் செரிமானம் அடைந்து, இரவில் படிப்பதால் சோர்வடைந்த மூளை செல்களுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கவல்லது. அதனைத் தொடர்ந்து காலை 8.00 மணிமுதல் 8.30 மணிக்குள் தானியம் அல்லது தானியம் மற்றும் பருப்புவகைகள் கலந்த உணவுகளான இட்லி, தோசை, புட்டு, பொங்கல், இடியாப்பம் போன்ற அவித்த அல்லது வேகவைத்த உணவுகளை நெய், டால்டா, அதிக எண்ணெய் சேர்க்காமல் கொடுக்கலாம்.
காலை உணவை தவிர்த்த குழந்தைகளின் தேர்ச்சி விகிதமானது, சரியான அளவில் சரியான நேரத்தில் காலை உணவை எடுத்துக் கொண்ட குழந்தைகளைவிட குறைவாக இருப்பது ஆய்வுகளின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நினைவாற்றலை அதிகரிக்க உதவும் சத்துகளும் உணவுகளும் நுண்சத்துகள் என்று கூறப்படும் வைட்டமின்களும் தாது உப்புக்களும் ரத்தத்தின் பிளாஸ்மா சத்துகளை அதிகரிப்பதால், நினைவுத்திறன், வாய்விட்டு படிக்கும் திறன், செயல்முறை வகுப்பில் ஆர்வம், ஆகியவை அதிகரிப்பதாக பள்ளிக் குழந்தைகளை வைத்து நடத்திய ஆய்வறிக்கை முடிவை ஆஸ்திரேலிய கல்வியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
போலிக் அமிலம் மற்றும் போரான் சத்துகள் கவனம் மற்றும் விரைவாக சிந்திக்கும் திறனை அதிகப்படுத்துகின்றன. இவை ஆட்டு ஈரலுக்கு அடுத்தபடியாக கடலை, காராமணி, உளுந்து, மொச்சை போன்ற பருப்பு வகைகளிலும், வெண்டைக்காய், கொத்தவரங்காய் மற்றும் அரைக்கீரை போன்ற காய் வகைகளிலும் அதிகமாகக் கிடைக்கின்றன. எனவேதான், வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு நன்றாக வளரும் என்று வாய்மொழியாக சொல்வதுண்டு.
மனித மூளையானது 60 சதவிகிதம் கொழுப்பினால் உருவாக்கப்பட்டுள்ளதால், ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள் மூளைக்கு நன்மை செய்கின்றன. இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு, பிற நாட்களில் தாவர வகை கொழுப்புப் பொருட்களான பாதாம் பருப்பு, வால்நட், எள் சேர்த்த உணவுகளைக் கொடுக்கலாம்.
மிகவும் அற்புதமான சக்தியாகக் கருதப்படும் "பி' வைட்டமின்களான தயாமின், நயாசின், ரிபோபிளேவின், பைரிடாக்ஸின், சயனோகோபாலமின் ஆகியவையும் செல்களுக்கான ஆற்றலை உடனடியாக அளிக்கும் திறன்கொண்டவை. ரிபோபிளேவின் மற்றும் நியாசின் ஆகியவை ஆற்றலைத் தரும் வேதிவினையில் முக்கிய நிகழ்வாக இருக்கும் குளுக்கோஸை ATPயாக (Adenosin tryphosphate) மாற்றும் வேலையைச் செய்கின்றன. அதனால், காலை முதல் மாலை வரை மனித மூளையையும் உடல் உறுப்புகளையும் புத்துணர்வுடன் வைத்துக் கொள்கின்றன. இச்சத்துகள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கள் பயன்படுத்தி தயாரித்த ஜுஸ், மில்க்ஷேக், சூப், சாலட் ஆகியவற்றை வீட்டிலிருக்கும் வேளைகளில் காலை 11.00 மணியளவிலும் தேர்வு நேரங்களில் மாலையிலும் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்குக் கொடுப்பதால், அப்பொழுது ஏற்படும் சோர்வு நீங்குவதுடன், மறுநாள் தேர்வுக்குப் படிப்பதற்கு தங்களை சுறுசுறுப் புடன் தயார்படுத்திக் கொள்ளவும் உதவி செய்கிறது.
மக்னீஸியம் சத்தானது ஆயிரத்திற்கும் அதிகமான வேதிவினை நிகழ்வுகளில் பங்கேற்பதால், சோர்வான நேரத்திலும், உடல் தளர்வான நேரத்திலும் உணவின் மூலமாகக் கிடைக்கும் இந்த சத்தினை, விரைவான ஆற்றலைப் பெறுவதற்காக உடலும் மூளையும் உபயோகப்படுத்திக் கொள்கின்றன. "பி' வைட்டமின்களால் உருவாக்கப்பட்டது மக்னீஸியம் சத்தினால் மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கப்படுகிறது. மக்னீஸியம் அதிகமுள்ள உணவுப்பொருட்களான மாங்காய், முள்ளங்கி, காராமணி, சோளம், அரைக்கீரை, பருப்புக்கீரை, பாதாம், வெங்காயத்தாள் ஆகியவற்றை தேர்வு நேரங்களில் உணவில் சேர்ப்பதனால் உடலும் மூளையும் சுறுசுறுப்படைந்து மாணவர்களின் நினைவாற்றல் மேம்படுவதுடன் கூர்மையான சிந்தனையையும் அளிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...