

குழந்தை வளர்ப்பு: அறிந்து கொள்ளுங்கள்!
குழந்தை பிறந்த 6-8 வாரங்களில் சிரிக்க வேண்டும்.
8 வாரத்தில் கண்களின் பார்வையை இருபக்கமும் நகர்த்த வேண்டும்.
10-12 வாரங்களில் தலை நிற்க வேண்டும்.
12-16 வாரங்களில் தலையை திருப்ப முடியும்.
6-ஆவது மாதம் பிடித்த படி உட்கார வேண்டும்.
7-ஆம் மாதம் பிடிக்காமல் உட்காரும். காலை உதைத்தபடி சக்கரம் சுற்றத் தொடங்கும். பல் முளைக்கவும் தொடங்கும்.
8-9 -ஆம் மாதம் தவழ ஆரம்பிக்கும். கடித்து சாப்பிடவும் பழகுகிறது.
9-ஆம் மாதம் பிடித்துக் கொண்டு நிற்கும்.
10-11 மாதத்தில் பிடிக்காமல் நிற்கும்.
12- ஆவது மாதத்தில் எதையாவது பிடித்தபடி நடக்கத் தொடங்கும்.
13-ஆவது மாதம் பிடிக்காமல் நடக்கத் தொடங்கும்.
லேசாக வார்த்தைகள் 12-ஆம் மாதமே வர தொடங்கலாம்.
இவை குழந்தைக்கு குழந்தை மாறுபடும். அதனால் செயல்பாடுகள் முன்னே பின்னே .. நடக்கலாம். கவலைப் படத் தேவையில்லை.
பொதுவாக குழந்தை 14-20 மணி நேரம் தூங்கும்.
3-ஆவது மாதத்தில் 15 மணிநேரம் தூங்கும்.
ஒரு வயதில் 13-14 மணி நேரம் தூங்கும். அதில் ஒரே சமயத்தில் குழந்தை தொடர்ந்து 3-4 மணி நேரம் கூடத் தூங்கும்.
தொடர்ந்து 4-5 மணி நேரமாக சாப்பிட ஏதாவது கொடுக்கவில்லை என்றால், அழுது இரவில் விழித்துக் கொள்ளும்.
3-ஆவது வயதில் குழந்தை தொடர்ந்து 6-8 மணி நேரம் தூங்கும்.
எடை அதிகமாகி, ஆரோக்கியமாய் இருக்கிறதா குழந்தை. அதே சமயம் குறைவாக தூங்குகிறதா கவலையே வேண்டாம். சில குழந்தைகள் தூங்கும்போது, குறட்டை போன்று அல்லது மூக்கு அடைத்தது போன்ற சப்தம், வரலாம். அதன் குட்டி மூக்கு துவாரத்தால் மூச்சுவிடுவதால் இந்தப் பிரச்னை எழலாம். இதனை சமாளிக்க ஆறவைத்த வெந்நீரில் நனைத்த பஞ்சால் மூக்கு துவாரங்களை துடைத்து விட்டால்.. தடைபடாமல் மூச்சு வரும்.
ஜீரண சக்தி ஏற்பட கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சாப்பிடும். அதனால் சில மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிட கொடுக்க வேண்டும்.
- ராஜேஸ்வரி, பெங்களூரு.
தாரா அலி பெய்க்
1916 -இல் இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காகத் தீவிரமாக உழைத்த பெண்மணிகளில் நினைவு கூரத்தக்கவர் தாரா அம்மையார். சிறந்த எழுத்தாளருமான இவர், உலக அரங்கில் நடந்த பல மாநாடுகளில் இந்தியா சார்பில் பங்கு பெற்று பல ஆக்கபூர்வமான பணிகளை செய்தார்.
இரண்டாம் உலகப்போரின் போது ரத்த சேமிப்பு வங்கிகளை அமைத்துப் பணியாற்றினார். இந்தோனேசியாவில் அகில உலகப் பெண்கள் சங்கத்தை நிறுவி அந்த நாட்டின் பெண்கள் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டவர் தாரா அலிபெய்க்.
(கிளமெண்ட் ஈசுவர் எழுதிய "முதன்மைப் பெண்டிர்' நூலிலிருந்து )
- ரிஷி
சிறந்த திரைப்பட பெண் விமர்சகர்!
2019 -இல் வெளியான சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த திரைப்பட விமர்சகர் என்ற விருதை சோஹினி சட்டோபாத்யாய் என்ற பெண் விமர்சகர் பெற்றுள்ளார். இவர் பல ஆங்கில பத்திரிகைகளில் திரைப்பட விமர்சனங்களையும் ஆய்வுகளையும் எழுதியுள்ளார். குறிப்பாக பெண்கள் சம்பந்தமான பல திரைப்பட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
கிரணின் அருங்காட்சியகம்!
கிரண் நாடார், ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ்நாடார் மனைவி. இவருக்கு கலைப் பொருள்களின் மீது ஆர்வம் உண்டு. எங்கு நல்ல பொருள்களைப் பார்த்தாலும் வாங்கி விடுவார். வீடு முழுவதும் கலைப்பொருளாகச் சேர்ந்து விட்டதால் இந்தப் பொருள்களை வைத்து அருங்காட்சியகம் ஒன்றை அமைத்தார்.
மேலைநாடுகளைப் போன்று இந்த அருங்காட்சியகத்துக்கு பார்வையாளர்கள் வருகை அதிகம் இல்லை. எனவே, மிகப்பெரிய மால் ஒன்றில் அந்த அருங்காட்சியகத்தை மாற்றினார். கூட்டம் இப்போது பெருமளவில் வருகிறது.
19-ஆம் நூற்றாண்டின் கலைப்பொருள்கள், 20 -ஆம் நூற்றாண்டின் கலைப்பொருள்கள். தவிர, தற்போதைய பாரம்பரிய கலைகள் மட்டுமின்றி நவீன வகையிலான கலைப்பொருள்கள், ஓவியங்கள் இவரது காட்சியகத்தில் உள்ளன.
உதாரணமாக, கிரிஸ்டி ஏலத்தில் 16.42 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த சையத் ஹைதர் ராசாவின், ஆரம்ப கால ஒவியப் படைப்பான சவுராஷ்டிரா இங்கு உள்ளது. எப்.என். சூசாவின் படைப்பான "பர்த்' ஓவியம் 26.41கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதும், இங்கு உள்ளது. கிரண் நாடார் அடுத்து டிஜிடல் ஆர்ட் சார்ந்தவற்றில் அதிக அக்கறையை காட்டத் துவங்கியுள்ளார்.
- ராஜிராதா
எகிப்தின் முதல் பெண் கப்பல் கேப்டன்!
சமீபத்தில் உலகின் முக்கியக் கப்பல் வழித்தடமான சூயஸ் கால்வாயில் "எவர் கிரீன்' என்ற ராட்சசக் கப்பல் சிக்கிக் கொண்டு சர்வதேசப் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்த கப்பலால் பல கப்பல்கள் தேங்கி நின்று "ட்ராஃபிக் ஜாம்' ஆனதோடு மட்டுமல்லாமல் சரக்குகளும் சிக்கிக் கொண்டன. பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட கப்பல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்துக்குக் காரணம் ஒரு பெண் எனத் தவறான செய்தி வைரல் ஆகி வருகிறது.
யார் அந்தப் பெண்?
அவர் பெயர் மார்வா எல்ஸ்லேடார். அவர்தான் எகிப்தின் முதல் பெண் கப்பல் கேப்டன். கப்பல் துறையின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கான அரபு அகாதெமியில் பயில ஆண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கிக் கொண்டிருந்த நிலையில், பெரிய சட்டப்போராட்டத்துக்கு பின், அப்போதைய எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் உதவியால் மார்வாவுக்கு அனுமதி கிடைத்தது.
தனது பட்டப்படிப்பை முடித்தவுடன் மார்வா, "ஃபர்ஸ்ட் மேட்' பொறுப்புக்கு உயர்ந்தார். அஐஈஅ ஐய என்ற கப்பலுக்கு கேப்டனாகவும் பொறுப்பேற்றார்.
அந்தக் கப்பல்தான் 2015-ஆம் ஆண்டு சூயஸ் கால்வாயை விரிவுப்படுத்திய பின் சென்ற முதல் கப்பல். இதன்மூலம், கால்வாயைக் கடந்த முதல் இளம் மற்றும் பெண் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் மார்வா .
மார்வா கூறுகையில், "" அந்தக் கப்பல் எகிப்தின் கடற்போக்குவரத்து பாதுகாப்பு அமைப்புக்குச் சொந்தமானது. சரக்குகளைக் கொண்டு செல்லும் கப்பல் அது. சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கிக் கொண்ட போது, நான் பல மைல்களுக்கு அப்பால் மத்திய தரைக்கடலின் துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியாவில் அஐஈஅ ஐய என்ற கப்பலில் கேப்டனுக்கு அடுத்தபடியான "ஃபர்ஸ்ட் மேட் இன் கமாண்ட்' பொறுப்பில் பணியாற்றி வந்தேன்.
என்னைக் குறித்து யார் இந்த பொய்ச் செய்தியை பரப்புகிறார்கள், ஏன் பரப்புகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், செய்தியைக் கேட்ட போது, நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த செய்திக்கு எதிர்மறையான கமெண்ட்டுகள் வந்திருந்தாலும், பல நேர்மறையான மற்றும் எனக்கு ஆதரவான கருத்துகளும் வந்திருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது'' என்கிறார் மார்வா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.