கதை சொல்லும் குறள் - 25: உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவோம்!
எங்குப் பார்த்தாலும் மரண ஓலங்கள். கண்களில் தூக்கத்தையும், துக்கத்தையும் ஏந்தி உயிர் பிழைத்த மனிதர்கள் தங்களின் சொந்தப் பந்தங்களைத் தேடி அலையும் அவலங்கள்.


எங்குப் பார்த்தாலும் மரண ஓலங்கள். கண்களில் தூக்கத்தையும், துக்கத்தையும் ஏந்தி உயிர் பிழைத்த மனிதர்கள் தங்களின் சொந்தப் பந்தங்களைத் தேடி அலையும் அவலங்கள். அடையாளம் தெரியாமல் தரைமட்டமாகிப் போயிருந்த தங்கள் வீடுகளில், மிச்சம் மீதி ஏதாவது தேறுமா என்று கிளறிப் பார்ப்பவர்கள் என்று அகமதாபாத்தின் குடிமக்கள், சூறாவளியில் அகப்பட்டச் சருகுகளாய் ஓடிக் கொண்டிருந்தனர்.
முந்திய நாள் அதிகாலை நான்கு மணி வரை கோடீஸ்வரர்களாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர்கள் எல்லாம், இன்று நடுவீதியில் அடுத்த வேளைச் சோற்றுக்குக் கையேந்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தனர். சேர்த்து வைத்திருந்த பணங்கள், நகைகள், பண்டங்கள் என்று எல்லாவற்றையும் பூமித்தாய் விழுங்கிவிட்டாள். கான்க்ரீட் கட்டடங்களுக்கே இந்தக் கதி என்றால், மண் குடிசைகளுக்கு நேர்ந்திருக்கும் அழிவைச் சொல்லவும் வேண்டுமா!
ஏன் இந்த நிலை? அப்படி என்ன அகமதாபாத்தில் நடந்துவிட்டது? புனித காந்தி
யடிகளின் காலடிகளைச் சுமந்த மண்ணிற்கு இப்படிப்பட்டச் சேதமா? நிலநடுக்கம் குஜராத்தின் பல பகுதிகளையும் குறிப்பாக அகமதாபாத்தையும் தாக்கி இருக்கிறது. மிகக் கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேலில் 7.7 என்று 2001- இல் தாக்கியதில், 20,000 மக்கள் மாய்ந்துப் போயினர், பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்கு இடையே மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராடினர்.
வானமே கூரையாகிப்போனது. கண்ணீரின் உப்புச் சுவையே அறுசுவை உணவானது. குடிக்கத் தண்ணீர்கூட கிடைக்காத அவலம்.
சுப்பராயனுக்குத் திருமணம் முடிந்து நான்கு நாள்களே ஆகியிருந்தது. புது மாப்பிள்ளைக்கு மாமியார் வீட்டில் மறுவீட்டு விருந்து மூன்று நாட்களாகத் தடபுடலாக நடந்து முடிந்திருந்தது. அன்று மாலை திருச்சியிலிருந்து தன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்குத் தன் புது மனைவி புவனாவுடன் கிளம்பிச் செல்ல இருந்தான்.
இந்திய ராணுவத்தில் சார்ஜன்டாக இருக்கும் சுப்பராயன் ஒரு மாத விடுப்பில் தன் கல்யாணத்திற்காக தமிழகம் வந்திருந்தான். அன்று காலை மனைவி சுடச்சுட கொடுத்த ரவை தோசையைச் சாப்பிட்டுக் கொண்டே தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்தான். முக்கியச் செய்தியாக வந்ததைப் பார்த்த அவன் திடுக்கிட்டான். என்னது அகமதாபாத்திலும் குஜராத்தின் கிராமப்புறங்களிலும் மோசமான நிலநடுக்கமா! ஐயோ, 20,000 பேர் உயிரை இழந்துவிட்டார்களா!
உடனே சுப்பராயனின் உடலில் பரபரப்புப் பற்றிக் கொண்டது. ஐயோ என் தேசத்து மக்களுக்கு இப்படிப்பட்ட அவலம் நேர்ந்துவிட்டதா? நான் அங்கே செல்லவேண்டும், என்னால் முடிந்ததைத் செய்யவேண்டும் என்று முடிவு எடுத்தான்.
கணவனின் பயணத்தைப் பற்றிக் கேட்டதுமே புவனா நிலைகுலைந்துப் போனாள்.
""என்னங்க, இப்படி திடீர்னு சொல்லறீங்க. இன்னும் ஒரு மாசம் லீவு இருக்கே, பிறகுதானே நம்ப இரண்டு பேரும் சேர்ந்து டெல்லிக்குப் போறதா இருந்தோம்''.
""ஆமாம் புவனா, ஆனா நான் ஏழு மாசம் டிரெய்னிங் முடிச்சு சார்ஜன்ட் ஆகியிருக்கேன். எனக்குக் கீழே ஏழு சிப்பாய்கள் இருக்காங்க. அவங்களை இப்பொழுது நான் நன்றாக உருவாக்க வேண்டும். இதற்கு இடையிலே எனக்கு கல்யாணத்திற்காக விடுப்பு கொடுத்தாங்க. ஆனா நான் எடுத்த முடிவு இது. குஜராத்துக்குப் போறேன், என்னால் ஆன உதவிகளை அங்கே கஷ்டப்படும் மக்களுக்குச் செய்யப்போறேன்''.
""என்னைப் பத்தி நினைக்கலையா நீங்க?''
""முதலில் நாடு, அப்புறம்தான் நீ'' என்று யார் தடுத்தும் கேளாமல் சுப்பராயன் குஜராத்துக்குக் கிளம்பிச் சென்றான். கிராமப் புறங்களில் அவ்வளவாக உயிர்ச்சேதம் இல்லை. ஆனால் வானுயர்ந்த கட்டடங்களைக் கொண்ட அகமதாபாத்தில் ஏகப்பட்டவர்கள் மாண்டிருந்தனர். கணக்கில் அடங்கா மக்கள் இடிபாடுகளுக்கு இடையே மாட்டிக்கொண்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
முதலில் சுப்பராயனுக்கு அகமதாபாத்தை அடையவே ஒரு நாளாகிப் போனது. ரயில்கள் ஊரின் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. நடந்து சென்றான், கிடைத்த வாகனங்களில் ஏறி எப்படியோ, இடிந்து கிடந்த கட்டடங்களை அடைந்தான்.
தான் ஒரு சார்ஜன்ட் என்கின்ற அடையாள சீட்டைக் காவல்துறையினரிடமும், மீட்புப் பணியாளர்களிடமும் காட்டி விட்டு, மளமளவென காரியத்தில் இறங்கினான். போரின்பொழுது, பாதுகாப்புக் குழிகளில் தவழ்ந்து செல்வதற்கும், காயம்பட்ட வீரர்களைச் சுமந்து பாதுகாப்பான இடங்களில் சேர்ப்பது எப்படி என்று பயிற்சி கொடுத்திருந்தார்கள். சுப்பராயனுக்கு அந்தப் பயிற்சிகள் இப்பொழுது கைகொடுத்தன.
இடிபாடுகளிடையே புகுந்து, குரல் கேட்கும் இடங்களில் எல்லாம் ஊர்ந்து சென்று, பலபேரை மீட்டு எடுத்தான். காயம்பட்டவர்களைத் தோளில் சுமந்து ஆம்புலன்ஸ்களில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தான். ரத்ததானம் செய்தான். உணவுப் பொட்டலங்களையும், தண்ணீர் பாட்டில்களையும் சுமந்து சென்று விநியோகம் செய்தான். இப்படி ஆடி, ஓடி வேலை பார்த்ததில் மூன்று நாள்கள் ஓடிப்போனதே தெரியவில்லை.
இனி இடிபாடுகளுக்கு இடையே உயிர் பிழைத்தோர் இருக்க வாய்ப்பில்லை என்ற நிலை வந்தபொழுது, மீட்புப் பணிகள் சிறிது மந்தப்பட்ட நேரம் அது. தன் புது மனைவிக்கும், பெற்றோருக்கும் போனில் அழைக்கவும் அவகாசம் இருக்கவில்லை. தற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, காயம்பட்டவர்களுக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த இடத்தைச் சுப்பராயன் அடைந்தான், அங்கே இருந்த தொலைபேசியில் தன் மனைவியுடன் பேச அவன் எத்தனித்த சமயத்தில், அங்கே பரபரப்பாக ஓடி வந்தான் அபிஷேக்.
""பையா சுப்பா, உடனே என்னோடு வாங்க''” என்று அவசரப்பட்டான்.
அபிஷேக், மீட்புப் பணியில் சுப்பராயனோடு மூன்று நாள்களாக பணியாற்றியவன்.
""என்ன அபிஷேக்?''
""பையா, பக்கத்தில் ஒரு கட்டடத்தின் இடிபாடுகளுக்கு இடையே ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறதாம். இனி இங்கே யாரையும் உயிருடன் மீட்கும் வாய்ப்புகள் அதிகம் இல்லை என்று மீட்புக் குழுவினர் வேறு இடத்திற்குச் சென்று விட்டனர். அதனால் இப்போதைக்கு நீயும் நானும்தான் இருக்கிறோம், சீக்கிரம் வா'' என்றான்.
இருள் கவியத் தொடங்கியிருந்த நேரம். சுப்பராயன், அபிஷேக்குடன் வளைந்து, நெளிந்து இடிபாடுகளுக்கு இடையே சென்று கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் ஒரு குழந்தையின் தீனக் குரல் விட்டு விட்டுக் கேட்கத் தொடங்கியது. சத்தம் வரும் இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் இடையிலிருந்த பெரிய கான்க்ரீட் கல்லைப் புரட்டிப் போட வேண்டும். அதற்குக் கல்லை உடைத்து எடுக்கும் மிஷினைக் கொண்டு வரவேண்டும். அது மறுநாள்தான் முடியும். அதுவரை குழந்தையின் உயிர் அதன் உடம்பில் தங்குமா?
சுப்பராயனின் உடல் நடுங்கி அடங்கியது. கையில் பிடித்திருந்த டார்ச்சை அடித்துப் பார்த்தான், பிஞ்சு முகம் ஒன்று தெரிந்தது. அவ்வளவுதான் குறுகிய அந்த இடைவெளியில் ஊர்ந்து சென்றான். சில விநாடிகள் போராட்டத்திற்குப் பின் உள்ளே சென்று அந்தப் பெண் குழந்தையை வாரி எடுத்து அணைத்துக் கொண்டான்.
குழந்தையைப் பத்திரமாக அவன் கைகள் அபிஷேக்கிடம் ஒப்படைத்தது. நிம்மதிப் பெருமூச்சை வெளியிட்ட அவன் மறுமூச்சை இழுக்கும் முன், எங்கோ எதுவோ சரிந்து, சுப்பராயனுக்கும் வெளிவுலகத்திற்கும் இருந்த தொடர்பைத் துண்டித்தது.
புவனாவின் தாலி பாக்கியமா அல்லது தன் உயிரைத் துச்சமாக மதித்துப் பிற உயிர்களைக் காத்த புண்ணியமா, சுப்பராயன் பிழைத்துக் கொண்டான். குற்றுயிராக, வலதுகால் சிதைந்த நிலையில் அவன் வெளியே எடுக்கப்பட்டான்.
வலதுகாலைக் காப்பாற்ற முடியவில்லை. செயற்கைக் காலோடு, குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவரிடம், வீரப் பதக்கத்தை வாங்க சுப்பராயன் சென்று கொண்டிருக்கிறான்.
சுப்பராயனைப் போலத் தன்னலமற்றச் சேவையில் தங்கள் உயிரைப் பனையம் வைக்கத் தயங்காதவர்கள் இப்புவியில் வாழும்வரை, அது சுழன்று கொண்டுதான் இருக்கும்.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கில்என்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
(குறள் எண்: 244)
பொருள் : எல்லா உயிர்களிடத்தும் கருணைகொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...