கதை சொல்லும் குறள் - 57: அரசின் கடமை!
அரச சபை கூடியிருந்தது. ரத்தினக் கற்கள் பதித்த தங்கச் சிம்மாசனத்தின் இருபுறங்களிலும் சேடிப் பெண்கள் சாமரம் வீசக் கம்பீரமாக அதில் அமர்ந்திருந்தான் அரசன் கஜேந்திர பாண்டியன்.


அரச சபை கூடியிருந்தது. ரத்தினக் கற்கள் பதித்த தங்கச் சிம்மாசனத்தின் இருபுறங்களிலும் சேடிப் பெண்கள் சாமரம் வீசக் கம்பீரமாக அதில் அமர்ந்திருந்தான் அரசன் கஜேந்திர பாண்டியன்.
நேற்றுதான் பட்டாபிஷேகம் நடந்து முடிந்திருந்தது. இருபதே வயதான கஜேந்திர பாண்டியன் இவ்வளவு அவசரமாக முடிசூட்டிக் கொண்டதன் காரணம் அவனின் தந்தை பூபதி பாண்டியன் ஆறுமாத காலமாக நோயுற்றுக் கிடப்பதினால் தான். நாட்டையும், குடிமக்களையும் வழிநடத்திச் செல்லும் அரசன் செயல் அற்றுப் போனதினால், அவன் மகனுக்கு முடிசூட்டி விட்டனர்.
""வந்தனம் அரசே!'' என்று தலைவணங்கி நின்றார் அமைச்சர் ஆலவாயன். வயதில் மூத்தவர், அறுபது வயதைக் கடந்தவர், கஜேந்திரன் முன் அடக்கமாக நின்றார். அவர் நிற்பது நாட்டை ஆளும் அரசன் முன் அல்லவா?
""சொல்லுங்கள் அமைச்சரே'' என்றான் கஜேந்திர பாண்டியன்.
""மன்னா, மக்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள். காலம் தவறாமல் பருவமழை பெய்ததால் நாட்டில் பசி, பட்டினி இல்லை. ஆனால்...''
""ஆனால் என்ன? விளக்கமாகச் சொல்லுங்கள்''.
""நம் கஜானா காலியாகக் கிடக்கிறது. சாலைகள் செப்பனிடப் படாமல் இருக்கின்றன. ஏரிகள், குளங்கள், விவசாயக் கிணறுகளில் தூர் வாரப்படவில்லை. வைத்தியச் சாலைகள் பல மூடப்பட்டுவிட்டன. தர்மகாரியங்கள் நிறுத்தப்பட்டு விட்டன.
""ஏன் இந்த அவலநிலை? விளக்கமாகச் சொல்லுங்கள்''.
""மன்னா, மக்கள் முறையாக வரி செலுத்தாததினால், வந்தக் குழப்பங்கள் இவை. தங்கள் தந்தை நோயுற்றதற்கு முன்பு இருந்தே இந்த நிலை இருந்து வந்தது''.
""தந்தையார் நடவடிக்கை எடுக்கவில்லையா?''
""கொஞ்சம் இளகிய மனதாக இருந்துவிட்டார்''.
""சரி, ஒரு வாரம் கழித்து என்ன செய்வது என்று முடிவு எடுக்கிறேன்''.
""அப்படியே ஆகட்டும்'' மன்னா என்றார் ஆலவாயன்.
நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தன. வயதில் இளையவன் என்ன முடிவு செய்யப் போகிறான்? குட்டையைக் குழப்பாமல் இருந்தால் சரி என்று ஆலவாயன் மட்டும் அல்ல, பிற உயர் அதிகாரிகளும் எண்ணினர்.
பக்கத்து தேசத்து மன்னர்கள் எல்லாம் மன்னர் பூபதியின் தலை எப்பொழுது சாயும், படையெடுத்துச் சென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றத் திட்டமிடத் தொடங்கி விட்டனர். போதிய போர்க்கருவிகளும், படைவீரர்களும் இல்லாமல் பாண்டிய நாடு விழி பிதுங்கித் தவித்துக் கொண்டிருந்தது.
ஒரு வாரம் மின்னலாக ஓடி மறைந்தது. அன்று கஜேந்திர பாண்டியன் அரச சபையைக் கூட்டியிருந்தான். குறுநில மன்னர்கள், பிரபுக்கள், மிராசுதாரர்கள், மத குருக்கள், மந்திரி குழுமம், தளபதி, நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் என்று அவை நிறைந்து இருந்தது.
""ராஜ ராஜ மார்த்தாண்ட கஜேந்திர பாண்டியன் வருகிறார்; பராக் பராக்!'' என்ற கோஷம் வானுயர எழுந்தது. கஜேந்திர பாண்டியன் அரச சபையை வந்தடைந்து தனக்குரிய இருக்கையில் அமர்ந்தார்.
எழுந்த அவை, மன்னர் அமர்ந்த பின் அமர்ந்தது. கஜேந்திர பாண்டிய மன்னர் என்ன சொல்லப் போகிறாரோ என்று அனைவரும் ஆவலோடு அமர்ந்திருந்தனர்.
அறிவொளி வீசும் கண்கள், கூர்மையான மூக்கு, பரந்த நெற்றி, சாந்தமான முகம், விரிந்த தோள்கள், குறுகிய இடுப்பு, யானையின் தும்பிக்கையைப் போன்ற உறுதியான கால்களைக் கொண்டு பார்ப்போர் சிந்தையைக் கவரும் தோற்றத்துடன் அந்த இந்திரனே, வானுலகத்தை விட்டுப் பூலோகம் வந்து இங்கே அமர்ந்திருப்பதுபோல கஜேந்திர பாண்டியன் அமர்ந்திருந்தான்.
மெல்ல எழுந்தான், குறுநடை இட்டுப் பேசத் தொடங்கினான்.
""அவையோர்களே, கூடியிருக்கும் குடிமக்களின் பிரதிநிதிகளே, அனைவருக்கும் வணக்கம். இன்றைக்கு இந்தச் சபையில் நான் எடுத்துக் கொண்டிருக்கும் வழக்கு, வரி ஏய்ப்பதைப் பற்றியது. என் தந்தையின் இளகிய மனதைச் சாதமாகக் கொண்டு மக்கள் வரி செலுத்துவது இல்லை என்று அமைச்சர் ஆலவாயன் சொன்னார், நடந்தது போகட்டும். இனி நடப்பதைப் பார்ப்போம்.
வரிகளை விதிப்பது என்பது மனு மற்றும் அர்த்தசாஸ்திரக் காலத்திலிருந்தே நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. சமுதாயத்தின் நலனைக் கருத்தில் கொண்டுதான் வரி விதிக்கப்படுகிறது.
பூமியில் இருக்கும் தண்ணீரைச் சூரியன் உறிஞ்சி எடுப்பது, மீண்டும் பூமிக்கே ஆயிரம் மடங்காகத் தண்ணீரை வழங்கத்தான் என்பது எல்லோரும் அறிந்ததுதானே.
நான் இள வயதுக்காரன், என்னை வரி கட்டாமல் ஏய்த்துவிடலாம் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். எனக்கு என் தந்தையைப் போல இளகிய மனமும் உண்டு, ஆனால் நாட்டின் நன்மை என்று வரும்பொழுது அந்த இளகிய மனது, பாறையைப் போல இறுகிவிடும்.
கஜானா காலியாகிவிட்டது பக்கத்து தேசத்து மன்னர்கள் நம் மீது போர் தொடுக்கத் தக்க சமயத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். கஜானா நிறைந்திருந்தால்தானே ஆக்கப்பூர்வமானப் பணிகளை நிறைவேற்ற முடியும்.
மயிலே மயிலே இறகைப் போடு என்றால் போடாது என்பது வரி விஷயத்தில் உண்மையாக இருக்கிறது.
அடுத்த மாதம் முடிவுக்குள் இதுவரை வரி செலுத்தாதவர்கள் எல்லோரும் செலுத்திவிட வேண்டும்.
களும், கைவினைஞர்களும் 1/5, விவசாயிகள் 1/6, 1/8, 1/10 என்ற வகையில் அவரவர் விளைச்சலுக்கு ஏற்ப தங்கள் லாபத்தில் வரி செலுத்த வேண்டும்.
குறுநில மன்னர்களும், பிரபுக்களும் 1/4 என்ற ரீதியில் வரியைச் செலுத்திவிட வேண்டும்.
நான் கொடுத்திருக்கும் கால அவகாசத்திற்குள் வரியைச் செலுத்த வில்லை என்றால் செலுத்த வேண்டிய வரியைப் போல இரண்டு மடங்கு அபராதமாகக் கொடுக்க வேண்டும். இதைத் தவிர ஒரு வருட சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டும், இது என் ஆணை.
இந்த முறையில்தான் நாட்டின் புல்லுருவிகள் எல்லாத் துறைகளிலும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர். கஜேந்திர பாண்டியனின் ஆட்சியில் முறைகேட்டிற்கும், ஒழுங்கீனத்திற்கும் இடம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதன்படி நடந்து கொள்ளுங்கள், நான் வழங்கும் நல்லாட்சி என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது'' என்று தன் உரையைக் கஜேந்திர பாண்டியன் முடித்துக் கொண்டான்.
புது அரசனின் பேச்சில் இருந்த உறுதியும், சொல்வதைச் செயலாற்றிக் காட்டுவான் என்பதையும் புரிந்துக் கொண்ட குடிமக்கள் வரிப்பணத்தை ஒழுங்காகக் கட்டத் தொடங்கினர்.
ஏய்க்கலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களுடைய சொத்துக்கள் முடக்கப்பட்டன, சிறையில் தள்ளப்பட்டனர்.
பொதுஜனம் விழித்துக் கொண்டது. கஜானா நிரம்பத் தொடங்கியது. புதுச் சாலைகள் போடப்பட்டன, ஏரி, குளங்கள் நிரம்பி வழிந்தன. கொல்லன் பட்டறையில் உருவான தற்காப்பு ஆயுதங்கள் கோபுரமாகக் குவியத் தொடங்கின. கோட்டைகள் உயர்ந்தன, அகழிகள் சூழ்ந்தன, கோட்டம்தோறும் மருத்துவமனைகள் எழுந்தன. கால்நடைக்கும் மருத்துவமனை, சத்திரங்கள், சாவடிகள் என்று கஜேந்திர பாண்டியனின் நல்லாட்சி, சரித்திர ஏடுகளில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்டன.
குற்றங்களை ஆராய்ந்து, மீண்டும் அவை நிகழாவண்ணம், அக்குற்றங்களுக்கு ஏற்ற தண்டனையைக் கிடைக்கச் செய்ததே கஜேந்திர பாண்டியனின் வெற்றியின் ரகசியம்.
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து.
(குறள் எண்: 561)
பொருள் :
நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழாவண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே, அரசின் கடமையாகும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...