கதை சொல்லும் குறள்- 13:  த‌ப்​பி‌த்து வ‌ந்​த​வ‌ள்!

காலை மணி ஏழு. சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருந்த “கஸ்தூரிபாய் பெண்கள் விடுதி” சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
கதை சொல்லும் குறள்- 13:  த‌ப்​பி‌த்து வ‌ந்​த​வ‌ள்!
Updated on
3 min read


காலை மணி ஏழு. சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருந்த “கஸ்தூரிபாய் பெண்கள் விடுதி” சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், வடநாட்டின் சில ஊர்களிலிருந்தும் இங்கே படிப்பதற்காகவும்,  வேலை பார்ப்பதற்காகவும் வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் தங்கியிருந்தனர்.

“""ஏய், ஷீலா, எழுந்திரு, இன்னும் அரைமணி நேரத்திலே  காலை உணவிற்காக அழைப்பு மணி அடித்துவிடும். நீ இன்னும் நித்திரை தேவியின் பிடியிலிருந்து விடுபடாமல் இருக்கிறே''. தன் தோழியைத் தட்டி எழுப்பினாள் சுமதி.

""போடி, எனக்கு காலை உணவு வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேன்''.

""ஊம், உனக்கு என்னடியம்மா ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி. கையிலே சில்லறை ஏகமாப் புரளுது. உயர்தர ஹோட்டலிலே மூணு வேளையும் சாப்பிடுவே. நான் அப்படியா? சம்பாதிக்கறதை கொஞ்சம் என் செலவுக்குன்னு எடுத்துக்கிட்டு, மீதியை அப்படியே ஊருக்கு அனுப்பனும். என்னை நம்பி ஐந்து ஜீவன்கள் இருக்கு''. சொல்லி முடிக்கும் பொழுதே சுமதியின் கண்கள் கலங்கி விட்டது. 

பாரிச வாய்வு தாக்கி, கை கால் முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தந்தை கைலாசம், அடுப்படியைத் தவிர வேறு உலகம் அறியாத தாய் மாலதி, கல்லூரியில் படிக்கும் இரண்டு தங்கைகள், பத்தாவது படிக்கும் தம்பி இவர்களின் வாழ்வாதாரமே சுமதிதான்.

சென்னையில் தரமணி அருகே ஒரு ஐ.டி. கம்பெனியில் சுமதிக்கு வேலை கிடைத்தபொழுது, கைலாசத்திற்கு அவளை வேலைக்கு அனுப்பவே மனமில்லை. தன் மனைவி மாலதியிடம் தனிமையில் அழுது புலம்பிவிட்டார். 

அரைமனதாக கைலாசம், சுமதி வேலைக்குப் போக சம்மதித்தார். அவள் கிளம்பும் நாளும் வந்தது. மகளைத் தன் அருகே அழைத்தார், ""அம்மா சுமதி, நம்ம ஊர் வேலம்பட்டியிலே இருந்து, திருச்சிக்குப் போய் படிச்சிட்டு வந்த அனுபவம் உனக்கு இருக்கு. ஆனாலும் சென்னை, மிகப்பெரிய மாநகரம், அங்கே தனியாக வாழவேண்டும், பலதரப்பட்ட மனிதர்களோடு பழகவேண்டி வரும். எந்த நிலையிலும் மனதையும், மனத் தைரியத்தையும் தவறவிடாதே. நம் குடும்பத்தின் கண்ணியத்தைக் காக்கவேண்டியது உன் கடமை. என் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால், இப்படி உன் சம்பாத்தியத்தில் எங்கள் வயிற்றைக் கழுவவேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்காது''. கலங்கி அழுத தந்தையைப் பாய்ந்து சென்று சுமதி கட்டிக் கொண்டாள்.

""அப்பா, வீணாக மனதை அலட்டிக் கொள்ளாதீர்கள், நான் என்றென்றும் உங்கள் பெண்ணாகவே திரும்புவேன்'' என்றாள்.

தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை சுமதியால் கடைப்பிடிக்க முடியவில்லை. சென்னையின் நாகரிகம் அவளை மாற்றத்தான் செய்தது. அதிலும் அறையில் ஒன்றாக அவளுடன் தங்கியிருந்த ஷீலாவின் நடை,  உடை, பாவனைகள் மெதுவாக அவளையும் தொற்றிக்கொண்டது.

ஷீலா அவளுடைய ரூம்மேட் மட்டுமல்ல, அலுவலகத்திலும் அவளோடு ஒன்றாகப் பணிபுரிபவள். அவள் பிழைப்புக்காக வேலைக்கு வரவில்லை, பொழுதுபோக்குக்காக வந்தவள். கோயம்புத்தூரில் அவளின் அப்பா ஒரு பெரிய தொழிலதிபர், ஆனாலும் சிறிது காலம் என் இஷ்டப்படி வாழ்வேன், படிப்புக்கு ஏற்ற வேலை செய்வேன், பிறகுதான் கல்யாணம் என்று படியிறங்கியவள்.

சொளையாக எழுபத்து ஐந்தாயிரம் ரூபாய்கள் சம்பளம். அதில் பாதிக்குமேல் பியூட்டி பார்லர்கள், உடைகள், சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்கள் என்று கரைந்துவிடும். மீதியை என்ன செய்கிறாள் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.

ஷீலா, சுமதியைவிட சீனியர், அவளுடைய சம்பளம் இவளுக்குக் கிடையாது. முப்பதாயிரம் ரூபாயில் சுமதி, இருபதாயிரத்தை குடும்பத்திற்கு என்று அனுப்பிவிடுவாள். மீதி பத்தாயிரத்தில் ஹாஸ்டலுக்கே எட்டாயிரம் ரூபாய்கள் கட்டவேண்டும். மீதி இரண்டாயிரத்தில் போக்குவரத்து செலவு, கைச்செலவு எல்லாம் அடங்க வேண்டும். ஆகையினால், ஹாஸ்டலில் தரப்படும் காலை உணவு, பகல் மற்றும் இரவு உணவே அவளுக்குப் பிரதானம்.

பெரிய பெரிய உணவகங்களில் பல சமயங்களில் ஷீலா, சுமதிக்கு அவள் இதுவரை சுவைக்காத உணவுகளை  வாங்கித் தருவாள்.

""ஏண்டி, இப்படி நாட்டுப்புறம் போல எண்ணெய்யைத் தடவி தலையைப்படிய வாரிக்கிட்டு வர, இன்னைக்கு என்னோட பியூட்டி பார்லருக்கு வா, உன் ஹேர்ஸ்டைலை மாத்தறேன். புருவங்களைத் திருத்திக்கோ, இந்தா, இந்த லிப்ஸ்டிக்கைப் போட்டுக்கோ என்று பலவாறு கூறி சுமதி சென்னை வந்த ஆறுமாதங்களில் அவளின் உருவத்தையே மாற்றிவிட்டாள்.

உருவத்தை மட்டுமா, மனதையும்தான். ஷீலாவுக்கு பல பாய்பிரண்ட்ஸின் நட்பு உண்டு. அவர்களோடு, அவள் சினிமா, கேளிக்கை அரங்குகள், நைட் கிளப்புகளுக்குச் சென்றுவிட்டு இரவு லேட்டாக வந்தாலும் விடுதியின் வார்டனை சமாளிக்கும் விதம் அவளுக்குக் கைவந்த கலையாக இருந்தது.

ஷீலாவின் பாய்பிரண்டுகளில் ஒருவனான நிஷாந்த், சுமதியிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்தான். அவனுடைய அழகு சுமதியை வெகுவாகக் கவர்ந்தது. மெல்ல மெல்ல அவளும் அவனோடு நெருங்கிப் பழக ஆரம்பித்தாள்.

ஷீலா, தன் நண்பர்கள் படைசூழ பல சமயங்களில், நைட் கிளப்புகளுக்கும் போகத் தொடங்கினாள். சனி, ஞாயிறுகளில் தன் கார்டியன் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, இவ்விதம் இரவுப் பொழுதை வெளியே கழித்துவிட்டு வருவதை சுமதியால் ஜீரணிக்க முடியவில்லை.

""ஷீலா, நீ செய்வது நன்றாக இல்லை. உன் வீட்டிற்குத் தெரிந்தால் எவ்வளவு வேதனைப்படுவார்கள்'' என்றாள்.

""சீ, சரியான மண்டு. இதெல்லாம் இப்பொழுது சகஜம். நீ உன் வேலையைப் பார்'' என்றாள்.

இதற்கிடையில், சுமதி, நிஷாந்த்தின் காதல் தீவிரமடைந்தது. பொங்கல் பண்டிகை நெருங்கி வந்தது. சுமதி, தன் சொந்த ஊருக்குச் செல்ல அலுவலகத்தில், பத்து நாட்கள் விடுமுறை எடுத்திருந்தாள். 

""சுமதி'',

""என்ன ஷீலா?''

""நீயும், நானும் நாளைய மறுதினம் ஊருக்குப் போகப் போகிறோம். அந்த பத்து நாட்களில்  முதல் இரண்டு நாட்களை மகாபலிபுரத்தில் ஜாலியாகக் கழித்துவிட்டுப் பிறகு ஊருக்குப் போகலாம்'' என்றாள்.

""நீயும், நானும் மட்டுமா' என்று சுமதி வெள்ளந்தியாகக் கேட்டாள்.

""சீ, சுத்த போர், என்னுடைய பாய்பிரண்ட்ஸ் வராங்க, அதில் உன் நிஷாந்த்தும் அடக்கம்'' என்றாள்.

நிஷாந்த்தும் வற்புறுத்தவே அவர்களோடு மகாபலிபுரம் புறப்பட்டுச் சென்றாள்.

சுமதியின் மனம் ஏனோ நெருப்பில் விழுந்த புழுவாகத் துடித்தது. தான் செய்வது சரியா என்று அவளுள் எழுந்த கேள்விக்கு, அவளின் மனசாட்சி இல்லை என்று குமுறியது.

இரவு ஒன்பது மணி ஆகும்பொழுதே, ஷீலாவும் அவளுடைய நண்பர்களும் குடிக்கத் தொடங்கிவிட்டனர். வெலவெலத்துப் போனாள் சுமதி.

நிஷாந்த், சுமதியைக் கட்டி அணைத்தான், ""இன்று இரவு உன்னோடுதான் ஒரே அறையில்'' என்றான்.

சுமதியின் கண்முன்னே, படுக்கையில் கிடக்கும் தந்தையும், தன்மானத்துடன் வாழும் தாயாரும் தோன்றினர். உங்கள் மகளாகவே திரும்பி வருவேன் என்றேனே, இன்று இரவு இங்கு தங்கினால் கரைபட்ட உடலோடுதான் ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்பது அவளுக்குப் புரிந்துபோனது.

தன் பையை எடுத்துக்கொண்டாள், யாருக்கும் தெரியாமல் நழுவி மகாபலிபுரத்தின் பேருந்து நிலையத்தை அடைந்தாள். சென்னைக்குச் செல்லும் கடைசிப் பேருந்து புறப்படச் சில நிமிடங்களே இருந்தது. சடக்கென்று அதனுள் ஏறி அமர்ந்தாள்.

சுமதியின் உள்ளம் படபடத்தது. தன் ஆசைகளை, கனவுகளை, காதலை ஆமையைப்போல்  தன் உள்ளே புதைத்துக் கொண்டாள். கற்பைக் காத்து, காதலைத் தொலைத்து, புனிதவதியாகத் தன் பிறப்பிடம் நோக்கிப் பயணப்பட்டாள்.

மறுநாள் பத்துமணி அளவில் தன் வீட்டை அடைந்தாள் சுமதி. பெற்றோர் அகமகிழ்ந்தனர். அங்கே பண்டிகையின் மகிழ்ச்சியோடு, மகளின் வரவு தந்த ஆனந்தமும் கைகோர்த்துக் கொண்டது.

குளித்து முடித்து வெளியே வந்த சுமதியின் கண்களில், தொலைக்காட்சிப் பெட்டியில் ஓடிய செய்தி இடியாய்த் தலையில் இறங்கியது.

மகாபலிபுரத்தில் நடந்த கொடூரம். குடித்துவிட்டு அதிகாலையில் காரை ஓட்டி வந்த இளைஞனின் கார், மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார். அந்த இளைஞனின் பெயர் நிஷாந்த். அவனோடு வந்த அவன் நண்பர்களும் குடிபோதையில் இருந்தனர். இதில் ஷீலா என்கின்ற பெண் நண்பரும் குடிபோதையில் இருந்திருக்கிறார். அவருக்கு தலையில் பலத்த அடி. ஷீலாவின் புகைப்படமும், அவளின் மற்ற நண்பர்களின் படங்களும் தொலைக்காட்சியில் காட்டப்பட்டன.

சுமதி, தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டு கதறி அழுதாள்.
எதற்கு? தன் காதலனின் மறைவுக்கா? அல்லது கற்பும், எதிர்கால வாழ்வும், தன் குடும்பத்திற்கு வர இருந்த அவப்பெயரும் தன்னுடைய ஐம்புலன்களை அடக்கியதால் காப்பற்றப்பட்டதே என்றா?

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

( குறள் எண்: 126)

பொருள் :

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொண்டு  விடும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக இருக்கும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com