ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கதை சொல்லும் குறள் - 30: கானல் நீர்!

கண்ணாடியின் முன் நின்று, தன் தலைமுடியைப் பல்வேறு கோணங்களில் வாரிப் பார்த்துக் கொண்டிருந்த தங்கராசு, எரிச்சலுடன் கத்தினான்.

News image
Updated On :2 ஜூன் 2021, 12:30 am

கணேஷ் சுந்தரமூர்த்தி

""டேய், தங்கராசு.''
கண்ணாடியின் முன் நின்று, தன் தலைமுடியைப் பல்வேறு கோணங்களில் வாரிப் பார்த்துக் கொண்டிருந்த தங்கராசு, எரிச்சலுடன் கத்தினான்.
""இப்ப என்ன குடிமுழுகிப் போச்சு''ன்னு இப்படிக் கத்தற?”
""வா ராஜா, இப்பத்தான் புட்டைச் சுடச்சுட அவிச்சி எடுத்தேன். கடலைக் குழம்பும் வச்சிருக்கேன். வந்து சாப்பிடு''.
""ஆமாம், என்னமோ கோழிக் குழம்பு ஆக்கிட்டாப்போல அலட்டிக்கிற, எனக்குப் புட்டும் வேணாம், ஒண்ணும் வேணாம், நான் என் பிரண்ட்ஸ்கூட வெளியிலே சாப்பிட்டுக்கிறேன்''.
""டேய், இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை, அப்பாவோட கடையிலே போய் அவருக்குக் கூடமாட உதவியா இருக்கலாமில்ல''.
""ஐயோ, உன் புராணத்தை ஆரம்பிச்சுடாதே. இன்னைக்கு என் தலைவன் படம் ரிலீஸாகுது. மணி இப்பவே பத்தாயிடுச்சு, பகல் இரண்டு மணிக்குள்ளே செய்ய வேண்டிய காரியம் நிறைய இருக்கு. வசீகரன் ரசிகர் மன்றம் தலைவன் என்றால் சும்மாவா''.
""டேய், வசீகரன் நடிகன், அவன் பொழப்பை அவன் பார்க்கறான். கோடி கோடியாய் சம்பாதிக்கிறான், அவன் குடும்பத்தை ஓகோன்னு வெச்சிருக்கிறான். நீ என்னாத்துக்கு அவனுக்காக லோல்படறே. அவன் போஸ்டர ஒட்டறது, அவன் கட்டவுட்டுக்குப் பால் அபிஷேகம் பண்ணறது, தியேட்டருக்கு வெளியிலே தோரணம் கட்டறதுன்னு கண்டபடி சுத்தறே. ஒத்த ஆளா அப்பா பெட்டிக்கடையிலே கஷ்டப்படறாரே, அவருக்கு...''
""சரிம்மா நிறுத்து, நான் போறேன். அப்பாவோட பெட்டிக்கடையை நடத்தப் பொறந்தவனில்லை நான், எனக்குன்னு பெரிய கனவு இருக்கு. ஒரு பெரிய நடிகனா ஆகி, கோடிகளிலே புரளப் பிறந்தவன் நான். உனக்குச் சொன்னாப் புரியாது'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் விடுவிடுவென்று சென்றுவிட, அவன் தாய் வள்ளி திகைத்து நின்றாள்.
இன்னும் பிளஸ் டூ படிப்பைக் கூடத் தங்கராசு முழுசா முடிக்கலை. திரும்பத் திரும்ப நாலு முறை பரீட்சை எழுதியும் பாஸ் பண்ணலை. முடிவா சொல்லிவிட்டான், இனிப் பரீட்சை எழுதப் போகமாட்டேன்னு. இப்ப சினிமாக் கனவோட காலிப் பசங்களோட சகவாசம், அவர்கள் ஏத்திவிட்ட சொற்களை நம்பி, சினிமாவில் சாதிக்கலாம் என்கிற வெறி.
சினிமாத் தொழில் என்பது ஒரு புதைகுழி. அதில் விழுந்து எழுந்து வெற்றிகரமாக வாழ்பவர்கள் ஒரு சிலரே என்பதை அவன் எப்பொழுது புரிந்துக் கொள்வான்? இப்பொழுதே வயது இருபத்து ஆறு ஆகிறது, இப்படித் தறுதலையாச் சுத்திக்கிட்டு இருந்தா எவன் பொண்ணைத் தருவான்?
பகல் மூன்று மணிக்கு வேர்க்க விறுவிறுக்க, தங்கராசுவின் தந்தை சிவலிங்கம் வீட்டுக்குள் நுழைந்தார்.
""வள்ளி இந்தப் பையை வாங்கி வை. நான் போய் கை கால்களைக் கழுவிக் கொண்டு வரேன்''.
""இவ்வளவு நேரமாகியும் நீங்க சாப்பிட வரலையேன்னு கவலைப்பட்டேன்''.
""இல்ல வள்ளி, ஞாயிற்றுக்கிழமை ஆச்சே, உன் மவனுக்குக் கவுச்சியில்லாம சோறு இறங்காதேன்னு, முனியாண்டி விலாஸிலே போய் அவனுக்கு புடுச்சிதை வாங்கியாந்தேன்''.
""ஆமாம், துரை இதைச் சாப்பிடத்தான காத்திருக்காரு''.
""அவன் காலையிலேயே புறப்பட்டு வசீகரனுடைய புதுப்பட ரிலீஸூக்கு, பேனர்கட்டப் போயிட்டான். பாவிப்புள்ள, தெய்வம் எப்ப அவனுக்கு நல்ல புத்தி கொடுக்குமோ தெரியலை?''
ஒருநாள் பெற்றோரிடம் சொல்லாமல், தன்னுடைய தந்தை சிவலிங்கத்தின் பெட்டியிலிருந்து இரண்டாயிரம் ரூபாய்களைத் திருடிக் கொண்டுத் தங்கராசு சென்னைக்குச் செல்லும் பேருந்தில் பயணப்பட்டுவிட்டான்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாரல் என்கின்ற கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தங்கராசுவுக்கு, சென்னை நகரத்தின் பிரம்மாண்டம் பிரமிக்க வைத்தது. குறுக்கும் நெடுக்குமாக ஓடும் வாகனங்கள், திருவிழாக் கூட்டம் போலக் கூடியிருக்கும் ஜனங்கள், அவர்களில் பலர் பேசும் மெட்ராஸ் பாஷை அவனுக்குப் புதியதோர் உலகத்தில் நுழைந்த அனுபவத்தைத் தந்தது.
வசீகரன் ரசிகர் மன்றத்தில் அவனுடைய நண்பனான மகேஷ், தன் பெரியப்பா பிள்ளை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் வாட்ச்மேனாக வேலை பார்ப்பதாகவும், அவரைப் போய்ப் பார்த்தால், சினிமாவில் நடிக்கச் சான்ஸ் கிடைக்கும் என்று சொன்னான். மகேஷின் பேச்சை நம்பித் தங்கராசு சென்னைக்கு வந்திருந்தான்.
ஆட்டோ ஒன்றைப் பிடித்து, கோடம்பாக்கத்தில் இருந்த ஸ்டூடியோவை வந்து அடைந்தான். வாயிலின் அருகே இரண்டு வாட்சுமேன்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஆவலோடு அவர்களை நோக்கித் தங்கராசு சென்றான்.
""அய்யா, தணிகாசலம் என்பது உங்களில் யார்?'' என்றான்.
""அப்பா, நீ தேடி வந்த தணிகாசலம் நான்கு நாட்களுக்கு முன்னர்தான் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்குப் போய்விட்டார்''.
தலையில் இடி விழுந்தாற்போலக் கலங்கி நின்றான் தங்கராசு. ""ஐயோ, அவரை நம்பித்தான் ஊரை விட்டு வந்தேன்''.
""நைட் டியூட்டி அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை, அதனால் போய்விட்டார். என்ன சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்தாயா?'' என்றார்கள்.
""ஆமாம்.''
""ஏம்பா, இம்மாம் பெரிய ஊரிலே உனக்கு யாரும் இல்லையா? இவரை நம்பி மட்டுமா வந்தே. புரியாத புள்ளையப்பா நீ. உடனே திரும்பி ஊருக்குப் போ. ஏதாவது தொழில் செஞ்சி உருப்படற வழியைப் பாரு''.
""ஐயா, அப்படிச் சொல்லாதீங்க. எதையாவது சாதிக்காமல் நான் ஊருக்குத் திரும்ப மாட்டேன். எனக்கு உள்ளே போக மட்டும் அனுமதி தாங்க. அங்கே டைரக்டருங்க இருந்தா அவங்க கால் விழுந்தாச்சும் ஏதாவது ரோலை, அது சின்னதாக இருந்தாலும் வாங்கிடுவேன்''.
வாட்ச்மேன்களில் ஒருவர் கடகடவென்று சிரித்தார், ""உலகம் தெரியாத புள்ளப்பா நீ, போயிட்டு ரெண்டு நாள் கழிச்சு வா. இப்ப ஒரு முக்கியமான ஷூட்டிங் நடக்குது. இந்தச் சமயத்திலே உன்ன உள்ளே விட்டா என் வேலைக்கு ஆப்பு வந்திடும்'' என்றார்.
தங்கராசுக்கு மூன்று நாட்களாக பிளாட்பாரமே வீடாகிப் போனது. தெருவில் பையைத் தலைக்கு வைத்துப் படுத்திருந்தபோது, அவன் பாக்கெட்டில் வைத்திருந்த பர்ûஸ எவனோ களவாடி விட்டான். முதல் நாள் இரவு விஜயா ஸ்டூடியோவின் அருகில் இருந்த ஒரு பரோட்டா கடையில் மூன்று பரோட்டாவும் சால்னாவும் சாப்பிட்டதோடு சரி, கடந்த இரண்டு நாளாகப் பச்சைத் தண்ணீர்தான் தங்கராசுவுக்கு உணவாகிப் போனது.
மூன்று நாட்களாகத் தினம் சென்று விஜயா ஸ்டூடியோவுக்குள் நுழைய முயல்வதும் அங்கே இருக்கும் வாட்ச்மேன் விரட்டி விடுவதும் வாடிக்கையாகிப் போனது.
இன்று முயற்சித்துப் பார்ப்பது இல்லையெனில், உயிரை விடுவது என்று தங்கராசு முடிவு எடுத்துவிட்டான்.
விஜயா ஸ்டூடியோவின் வாசலை அடைந்தான். அங்கே பெரும் கூட்டம் கூடி இருந்தது. என்னவென்று விசாரித்ததில் வசீகரன் என்கின்ற தங்கராசுவின் மனதைக் கொள்ளைக் கொண்ட, சினிமா மீது அவனுக்கு ஆசையை மூட்டின டாப் ஸ்டாரின் ஷூட்டிங் அன்றைக்கு இருப்பதாகத் தெரிந்தது.
பசி காதுகளை அடைத்தபொழுதும், கண்கள் மங்கலாகிக் கீழே விழுந்துவிடுவேனோ என்று தங்கராசுவின் மனம் பேதலித்த பொழுதும் வசீகரனின் கார் விருட்டென்று ஸ்டூடியோவின் வாசலைக் கடந்தபொழுது, தங்கராசு ஓங்கிக் குரல் கொடுத்தான், "வசீகரன் வாழ்க' என்றான்.
கூட்டம் கலையத் தொடங்கியது. மீண்டும் தங்கராசு வாட்ச்மேன்கள் இருக்கும் இடத்தை அடைந்தான். அட! அங்கே ஒரு வாட்ச்மேன் மட்டும்தான் இருந்தான்.
""ஐயா'' என்றான்.
""ஏம்பா, உனக்குச் சொன்னாப் புத்தி வராதா. சரி உள்ளே போ, கரெக்டா ஒரு மணி நேரத்தில் வந்திடணும். எனக்கு டியூட்டி முடியப்போகுது''.
""ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ் அண்ணே''ன்னு சொல்லிட்டுத் தங்கராசு உள்ளே ஓடினான்.
சற்றுத் தூரம் போனதும், அங்கே அவன் கண்ட காட்சி அவன் பசியை மேலும் தூண்டியது. பெரிய பெரிய டிபன் பாக்ஸ்களில், இட்லி, தோசை, வடை, பொங்கல் என்று வைக்கப்பட்டு, அங்கே ஷூட்டிங் ஸ்பாட்டிலே வேலை செய்பவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.
தங்கராசு, வசீகரனை மறந்தான், நடிக்கும் ஆசையையும் துறந்தான், பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே அப்படிப்பட்ட நிலையை அடைந்தான், அவனும் ஒரு காகிதத் தட்டை எடுத்துக் கொண்டு அந்தக் கியூவில் நின்று கொண்டான்.
ஆவலோடு, தட்டில் இருந்த இட்லியைப் பிட்டு வாயில் வைக்கும் சமயத்தில் அவன் பிடரியில் ஓங்கி ஒரு அடி விழுந்தது.
""யாருடா நீ திருட்டுப் பயலே, இங்க என்ன அன்னதானமா நடக்குது? ஓசியிலே திங்க வெட்கமா இல்லை'' கர்ஜித்துக் கொண்டு நின்றான் ஒரு நடன இயக்குநர்.
""அண்ணே, அண்ணே, அவனை அடிக்காதீங்க அவன் என் தம்பிதான், ஷூட்டிங் பார்க்க வந்தான், பசியிலே வாங்கிச் சாப்பிட்டுட்டான், மன்னிச்சிடுங்க'' என்று சமயத்தில் வந்து அவனை உள்ளே அனுப்பின வாட்ச்மேன், தங்கராசுவை அவமானத்திலிருந்தும், தர்ம அடியிலிருந்தும் காப்பாற்றினான்.
சமயத்தில் அந்த வாட்ச்மேன் சொன்ன பொய் தங்கராசுவை அன்று காப்பாற்றியது. இன்று பெண்டாட்டி பிள்ளைகளோடு, அப்பாவின் பெட்டிக் கடையோடு, ஜூஸ் கடை, சாப்பாட்டுக் கடை என்று வியாபாரத்தில் செழிக்க வைத்திருக்கிறது.
அப்பொழுது அவனுடைய சினிமா ஆசை! அது ஒரு கானல் நீர். அதை நோக்கி ஓடுவதை விடுத்து, இருப்பதை வைத்துப் பிழைக்கக் கற்றுக் கொடுத்து இருக்கிறது.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
(குறள் எண்: 292)
பொருள் :
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும் கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.
(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.