ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கதை சொல்லும் குறள் - 20: பயனில்லா சொற்கள் சிறப்பளிக்காது!

""ஐயா வாங்க, உங்க கையாலே தாலியை எடுத்துக் கொடுங்க'' என்று பெண்ணின் தகப்பனார், பவ்யமாக அழைக்க, மிடுக்குடன் எழுந்தார் கங்காதரன்.

News image
Updated On :6 ஏப்ரல் 2021, 3:16 pm

கணேஷ் சுந்தரமூர்த்தி


""ஐயா வாங்க, உங்க கையாலே தாலியை எடுத்துக் கொடுங்க'' என்று பெண்ணின் தகப்பனார், பவ்யமாக அழைக்க, மிடுக்குடன் எழுந்தார் கங்காதரன்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கவுண்டம்பாளையம் கிராமத்தில் வாழும் மக்களிடம் கங்காதரன் என்ற பெயரைச் சொன்னாலே போதும், ஹாயாக வேப்பமரத்துக்குக் கீழே கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கும் கிழம் கூட எழுந்து உட்கார்ந்து பார்வையில் மரியாதையைத் தேக்கிக் கொள்ளும். ஐந்து வயது சிறுவன் கூட அவர் வீட்டை அடையாளம் காட்டுவான்.

கிராமத்தில் ஏதாவது சண்டை சச்சரவு, குடும்பத் தகராறு, சொத்தைப் பிரிப்பதில் குழப்பம் என்றால் மாரியம்மன் கோயிலுக்கு முன்னால் கிளை விரித்திருக்கும் ஆலமரத்தின் கீழே உள்ள சிமெண்ட் மேடையில் கங்காதரன் ஆஜராகிவிடுவார். இரண்டு பக்கமும் உள்ள நியாயங்களைக் கேட்டுச் சீர்த்தூக்கி ஆராய்ந்து அவர் அளிக்கும் தீர்ப்புக்கு இரு தரப்பினரும் கட்டுப்படுவார்கள்.

அது மட்டுமா, கவுண்டம்பாளையத்தில் நடக்கும் காது குத்தல், மஞ்சள் நீராட்டு விழா, திருமணம் என்று எல்லா விசேஷங்களுக்கும் முதல் மரியாதையும் கங்காதரனுக்குத்தான், முன் வரிசையில் இருக்கையும் அவருக்குத்தான்!

இப்படி அந்த கிராமமே கொண்டாட, அவர் அப்படி என்னத்தைச் சாதித்துவிட்டார் என்று கேட்கத் தோன்றுகிறது தானே? கங்காதரன் என்றாலே வாக்கில் சுத்தம், நடத்தையில் நேர்மை, தோற்றத்தில் கண்ணியம், ஈகையில் கர்ணன், குணத்தில் மாசுமறுவற்ற தங்கம் என்பது வெறும் வாய் வார்த்தைகள் மட்டும் அல்ல, அப்படி அவர் வாழ்ந்து கொண்டிருந்தார்.

""அம்மா, அம்மா''

""ஏன்டா இப்படிக் கத்தறே, இப்ப என்ன குடி முழுகிப் போச்சு''.

""ரெண்டாயிரம் ரூபாய் பணம் வேணும்''.

""என்னது ரெண்டாயிரம் ரூபாயா, இவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவேன்?''

""அதான் உன் உத்தம புருஷன் கட்டுக்கட்டா கஜானாவிலே பணத்தை நிரப்பி வெச்சிருக்காரே, அதுலே இருந்து ஒரு ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை உருவிக் கொடுத்தா என்ன நஷ்டமா உனக்கு வந்துடும்?''

""உன்னப் பெத்தெடுத்ததே நஷ்டம்தான். இதுலே புதுசா என்ன நஷ்டம் வந்துடப்போகுது. புள்ள வரம் வேண்டிக் கோயில் கோயிலா ஏறி இறங்கினோம். ஆனா இப்படிப்பட்ட புள்ளையைத் தெய்வம் கொடுக்கும்னு கனவிலும் நினைக்கல''. 

""என்ன இப்படிப் பேசற? கொஞ்சமா குடிக்கிறேன், நண்பர்களோட சுத்தறேன், இது பெரிய குத்தமா?''

""உன்ன நம்பி வந்த பொண்டாட்டி, போதாதக் குறைக்கு ஒரு பொண்ணை வேறு பெத்து வெச்சிருக்க, ஒத்தக் காசைச் சுயமா சம்பாதிச்சு அவங்களுக்குன்னு செலவு செய்திருக்கியா?''

""உக்கும், நான் ஏன் சம்பாதிக்கனும். என்னுடைய பிளஸ் டூ படிப்புக்கு எவன் வேலையைக் கொடுப்பான். அது சரி, நூறு காணி நிலத்துக்கு நான் சொந்தக்காரன் எனக்கு என்ன குறைவு?''
""அந்த நூறு காணி நிலமும் உன் அப்பா சம்பாதிச்சது. உங்க பாட்டனார் வெறும் பத்து காணி நிலத்தை வெச்சுட்டுப் போனார், அப்பாதான் மாடா உழைச்சு அதைப் பெருக்கினார்''.
""அவரு ஏழை விவசாயினுடைய புள்ள, நான் பெரிய ஜமீன்தாரின் புள்ள, என்னப் போய் வேலைக்குப் போகச் சொல்லலாமா?''
""உன்னோடு பேசி ஜெயிக்க முடியாது. அந்த மாரியம்மாதான் உனக்கு நல்ல புத்தியைக் கொடுக்கணும்''.
""சரி சரி, அவ கொடுக்கறபோது கொடுக்கட்டும், இப்ப நீ பணத்தைக் வெட்டு''.
""தெய்வநாயகி...''
""இதோ வந்துட்டேனுங்க''.
""நேத்து நெல்லு வாங்கறதுக்குன்னு நான் வெச்சிருந்த பணத்திலே ரெண்டாயிரம் ரூபாய் குறையுதே''.
""இல்லங்க... வந்து...''
""என்ன வந்து போயி, உன் அருமைப் புள்ளை கேட்டான்னு எடுத்துக் கொடுத்துட்டே, அப்படித்தானே''.
தெய்வநாயகி பதில் சொல்லமுடியாமல் விழிக்க,
""உன்னாலேதான் அவன் இப்படிச் சீரழிகிறான். அவனுக்குக் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன். கல்யாணம் ஆனா திருந்திடுவான்னு சொன்னே. இப்ப பொண்டாட்டி, புள்ள வந்த பிறகும் ஊரைச் சுத்தறான், கெட்டப் பழக்கங்கள் வேறே. ஊரிலே எனக்கு எவ்வளவு நல்ல பேரு. அதைக் கெடுக்கறதுக்குன்னே வந்து பொறந்து இருக்கான். குணசீலன்னு பேரு வெச்சேன்,  குணத்தைக் காணோம், சீரழிஞ்சு நிக்குது''.
ஈரோட்டின் மையப்பகுதியில் "வெஸ்டன்' என்கின்ற நாமகரணத்தைச் சூடிக் கொண்டு நிற்கிறது அந்தப் புகழ்பெற்ற ஹோட்டல். தன் நண்பர்கள் புடைசூழ அங்கே உள்ள பாரில் குணசீலன் மதுவை அருந்திக் கொண்டிருந்தான்.
""டேய் குணசீலா, ஏண்டா இன்னைக்குச் சோகமா இருக்கே?'' என்றான் கபாலி.
""பெரிய இடத்துப் புள்ள அவனுக்கு ஏதுடா சோகம்?'' என்று மாதவன் கலாய்க்க,
""அடச்சீ, சும்மா இருங்கடா, நானே வெறுப்பேறி கிடக்கிறேன். ஆயிரத்துக்கும், ரெண்டாயிரத்துக்கும் அம்மாவிடம் கையேந்தி நிக்கிறேன். பொண்டாட்டி என்ன செல்லாக் காசாக மதிக்கிறாள். அப்பாக்கிட்ட நெருங்கக் கூட முடியலை. தண்டச்சோறாட்டம் உலாத்தறேன். ஏதாவது செய்யனும்டா, சாதிக்கணும்டா''.
""குணசீலா, நா ஒன்றைச் சொன்னா கேட்பியா?'' என்றான் சுரேஷ்.
""சொல்லுடா''.
""நம்ம கவுண்டம்பாளையத்திலே பஞ்சாயத்துப் பிரசிடெண்ட் போஸ்ட்டுக்குத் தேர்தல் வருது. அதில ஏன் நீ போட்டியிடக் கூடாது?''
""டேய் டேய், குடி தலைக்கு மேலே போயிடுச்சா, ஐடியா சொல்றான் பாரு. எனக்கு எவன்டா ஓட்டுப் போடுவான்? பிளஸ்டூ விலே ஃபெயில் ஆனவன் நான். ஏதோ கங்காதரன் புள்ள என்கிற பேருலே பவுசு காட்டறேன்''.
""இப்ப சொன்னியே, கங்காதரன் புள்ளன்னு அது ஒன்னு போதும்டா நீ ஜெயிக்கறதுக்கு. உங்க அப்பா உனக்காகத்  தேர்தல் பிரசாரத்திலே பேசினாப் போதும், அவர் ஆதரவு உனக்கு இருந்தா, மொத்தக் கிராமத்து ஓட்டும் உனக்குத்தான். அப்புறம் கவுண்டம்பாளையப் பஞ்சாயத்துப் பிரசிடெண்ட்டா தலைநிமிர்ந்து நடக்கலாம். பணத்துக்காக யார் காலிலேயும் விழவேண்டாம், ரோடு கான்டிராக்ட் தொடங்கி எல்லாம் உன் கையில்தான். பிறகு ஜாலியோ, ஜாலிதான்''. 
அன்று பஞ்சாயத்துப் பிரசிடெண்ட் பதவிக்கு மனுதாக்கல் செய்யும் நாளாக இருந்தது. நண்பர்கள் உசுப்பேற்றி விட்ட  தைரியத்தில் குணசீலன், அவர்கள் சூழ மனுதாக்கல் செய்யக் கிளம்பினான், பிறகு அதைச் செய்தும் முடித்தான்.
அவ்வளவுதான் செய்தி காட்டுத் தீயைப்போலப் பரவியது.
""செய்தி தெரியுமா, நம்ம கங்காதரன் அய்யா பையன் அதான் குணசீலன் அவன் பஞ்சாயத்துத் தேர்தலிலே நிக்கப் போறானாம்''.
""என்னது அந்தத் தறுதலையா!''
""ஆமாய்யா ஆமாம். எல்லாம் அவன் அப்பா கொடுத்த தைரியமாத்தான் இருக்கும். ஊரிலே தமக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி மவனைத் தூக்கிவிடப் பார்க்கறாரு''.

""அப்படியே இருக்கட்டும். ஐயா மட்டும் தம் மவனுக்கு ஓட்டுப் போடுங்கன்னு கேட்டா, மாட்டோம்ன்னு சொல்ல முடியுமா. போடுவோம், ஐயா எல்லாத்தையும் பார்த்துப்பாரு''. இப்படியே முழு கிராமத்து மக்களும் முடிவு எடுத்தனர்.

""டேய் குணசீலா''.

வீடே இடிந்து விழறாப்போலக் குரல் கொடுத்தார் கங்காதரன்.

தன் அறையில், குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்த குணசீலன், திடுக்கிட்டு எழுந்தான், மெதுவாக வெளியே வந்தான்.

மகனின் முகத்தைப் பார்த்ததும் எரிமலை எனப் பொங்கிவிட்டார், கங்காதரன்.
""யாரைக் கேட்டுப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தே?''
""யாரைக் கேட்கணும், நானும் இந்த நாட்டுப் பிரஜை எனக்கு எல்லா உரிமையும் இருக்கு''.

""உனக்கு எவன் ஓட்டுப் போடுவான்?''
""ஏன்? நீங்க சொன்னா போடுவான்.''

""நான் சொல்வேனா, நல்லாக் கனாக் காணு. இவ்வளவு வருஷமா நான் கட்டிக் காத்த பெருமையும், புகழும் என் மேல் நம் கிராமத்து ஜனங்க வெச்சிருக்கிற மரியாதையும், நம்பிக்கையும் வீண்போக விடுவேனா''.

""அப்பா, ஒரு சான்ஸ் கொடுங்க. என்னை வீட்டிலேயும் மதிக்க மாட்டேங்கறீங்க, வெளியிலேயும் உங்க புகழே ஓங்கி நிக்குது. இந்த முறை நான் பஞ்சாயத்துத் தலைவராகி ஜெயிச்சுக் காட்டறேன்''.

""மாமா, நீங்க கொஞ்சம் பெரிய மனசு வையுங்க. இவரு நிச்சயம் திருந்துவாரு''.
""நீ சும்மா இரும்மா. உனக்கு மூணு வருஷமா தான் இவனைத் தெரியும். எனக்கு முப்பது வருஷமா இவனுடைய ஒவ்வொரு அசைவும் அத்துப்படி. முதலில் உன் புருஷனைக் கெட்ட சகவாசத்தையும், பழக்கத்தையும் விடச்சொல்லு. சுயமா உழைச்சு இரண்டு காசு சம்பாதிக்கச் சொல்லு. நல்லவன்னு பேரு எடுக்கச் சொல்லு. எல்லாத்துக்கும் மேலே இந்தக் கிராமத்து மக்களுக்கு இவன் இப்ப நல்லது செய்யணும்னா, தாக்கல் செய்த மனுவைத் திருப்பி வாங்கச் சொல்லு, இதைப் பண்ணிட்டு வந்தாதான் இவனுக்கு இந்த வீட்டிலே இடம். இல்லை வெளியிலே போகச் சொல்லு''.

கங்காதரன் நல்ல பண்புள்ளவர். பயனில்லாத சொற்களைப் பேசுவாரா? அப்படி மகனுக்குத் துணைநின்று அவனுக்காக ஓட்டுக் கேட்டால், அவருடைய பெருமையும், புகழும் அப்படியே நீங்கிவிடும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன?

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின்.

(குறள் எண்: 195)

பொருள்:  நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.
(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.