ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கதை சொல்லும் குறள் - 43: ஆராய்ந்து  தெளிவது!

""சகுந்தலா'' என்று தேன் ஒழுகக் கூப்பிட்டுக் கொண்டு வந்தாள் அம்பிகா.ரசத்தைத் தாளித்துக் கொண்டிருந்த சகுந்தலா, கைவேலையை அப்படியே போட்டுவிட்டுச் சமையல் அறையை விட்டு அவசரமாக வெளியே வந்தாள்.

News image
Updated On :1 செப்டம்பர் 2021, 12:30 am

கணேஷ் சுந்தரமூர்த்தி

""சகுந்தலா'' என்று தேன் ஒழுகக் கூப்பிட்டுக் கொண்டு வந்தாள் அம்பிகா.
ரசத்தைத் தாளித்துக் கொண்டிருந்த சகுந்தலா, கைவேலையை அப்படியே போட்டுவிட்டுச் சமையல் அறையை விட்டு அவசரமாக வெளியே வந்தாள்.
""வாடி அம்பிகா'', என்று தன் தோழியைச் சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.
""ஏண்டி வாசற்கதவைத் தாளிடாமல் திறந்து வெச்சிருக்கே?''
""வேலைக்காரி அஞ்சலை வீட்டுக் குப்பையை, தெருவுலே இருக்கிற குப்பைத் தொட்டியிலே கொட்டிட்டு வரேன்னு போனா, அவதான் கதவைத் திறந்து வெச்சுட்டுப் போயி இருக்கணும்''.
""அஞ்சலை வெளியிலே போனால் கதவைத் தாளிடு, அவ வந்து பெல்லை அடிச்ச பிறகு கதவைத் திற. வீட்டிலே தனியா இருக்கே, யாருக்கும் சடக்குன்னு கதவைத் திறந்திடாதே''.
""தாயே, அட்வைஸ் போதும்மா. இனிமே கவனமாக இருக்கேன். சரி வா உட்காரு''.
""ரசம் கொதிக்கிற வாசனை வருது. ரசத்தை அதிகமாக் கொதிக்க விட்டா கஷாயம் போல ஆயிடும்''.
""ஆமாண்டி அம்பிகா, உன்னப் பார்த்த சந்தோஷத்திலே, ரசத்தை மறந்துட்டேன், இதோ வரேன்'' என்று சகுந்தலா சமையல் அறைக்குள்ளே ஓடினாள்.
குளிர் பானம் கொண்டு வந்தவள், "இந்த வேகாத வெயிலிலே, திருவான்மியூர்லேயிருந்து ராயப்பேட்டைக்கு, ஒரு போன்கூடச் செய்யாமல் ஏன் வந்தே?'' என்றாள்.
""சகுந்தலா, ஊர்லே இருந்து எங்கம்மா மாங்காய்களைக் கொடுத்து அனுப்பினாங்க. எங்கத் தோட்டத்திலே விளைஞ்சது. மாங்காய்த் தொக்கு செய்தேன். உனக்குக் கொஞ்சம் எடுத்துக்கிட்டு வந்தேன். கூடவே இன்னைக்கு வெஜிடபுள் பிரியாணி செஞ்சேன்; சாப்பாடு கொண்டு போறவன்கிட்டே, அவருக்கு ஆபீஸூக்குச் சாப்பாடு கட்டிக் கொடுத்து அனுப்பிட்டு, உடனே உனக்கும் பிரியாணியை எடுத்துக்கிட்டுக் கிளம்பிட்டேன். உன்னைப் பார்த்து விளையாட்டு போல இரண்டு மாசம் ஆயிடுச்சு''.
""சேகர் நல்லாயிருக்காரா அம்பிகா?'' 
""அவருக்கு என்ன, படுஜோராய் இருக்கார். அதுசரி, பானுக்குட்டி எப்போ ஸ்கூலிலேயிருந்து வருவா?''
""யு.கே.ஜி தானே படிக்கிறா, அரைநாள் தான் பள்ளிக்கூடம்''.
""பன்னிரெண்டு மணிக்கு நான்தான் போய் கூட்டியாரனும். 
அம்பிகா வந்து போய் வாரங்கள் இரண்டு ஓடிவிட்டன.
சகுந்தலாவின் பிளாட்டின் எதிரே உள்ள பிளாட்டில் வசிக்கிறாள் பானுமதி. நடுத்தர வயதைக் கடந்தவள், விதவை. அவளுடைய இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் வாழ்கிறார்கள் என்பாள், ஆனால் இதுவரை அவர்களை யாரும் கண்களால் பார்த்தது இல்லை. 
தனிமையான வாழ்க்கையை உபயோகமாகக் கழிக்கிறேன் பேர்வழி என்று அவ்வப்போது எதையாவது புதிதாக செய்துக் கொண்டிருப்பாள். வீட்டிலேயே சமையல் வகுப்பு எடுப்பாள். பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து, அக்கம் பக்கத்தினரிடம் விற்பாள், பல சமயங்களில் புடவை விற்பனையில் கூட இறங்கி விடுவாள்.
அன்று சகுந்தலா, சோபாவில் சாய்ந்துக் கொண்டு, வாரஇதழ் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தாள். காலிங்பெல் அடிக்கவே, எழுந்துச் சென்று கதவைத் திறக்க, அங்கே பானுமதி வேர்க்க விறுவிறுக்கத் தோளில் ஒரு தோல்பையை மாட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.

""உள்ளே வாங்க ஆன்ட்டி'' என்றாள் சகுந்தலா. அவள் மனம் ஐயோ, இன்றைக்கு என்ன விற்க வந்திருக்கிறாளோ? என்று எரிச்சல் பட்டது.

""சகுந்தலா, பயப்படாதே நான் எதையும் விற்க வரவில்லை'' என்று சொல்லிக் கொண்டே, சோபாவில் வந்து அமர்ந்தாள் பானுமதி.

சகுந்தலாவின் உள்ளம் அப்பாடா என்று நிம்மதியுற்றது.

""சகுந்தலா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லப் போறேன்'' என்று பானுமதி சொல்லத் தொடங்கினாள்.

""மதுசூதனன் சிட்பண்டு'ன்னு ஒரு சீட்டுக் கம்பெனி, மந்தவெளியிலே இயங்குது. அதைப் பற்றி என் தோழி ஜோதி சொல்லித்தான் எனக்கே தெரிஞ்சுது. அவ அந்த சிட்பண்டுக்கு ஏஜென்ட்டா இருக்கா''.

""இருக்கட்டும், எனக்கு..'' என்று சொல்ல வந்த சகுந்தலாவை, பானுமதி முடிக்க விடவில்லை. சொல்லறதைக் கேள் சகுந்தலா. பேங்குலே வட்டி ரொம்ப கம்மி இல்லையா, இங்கே பேங்கைவிட நாலு வட்டி அதிகமாத் தராங்களாம். அதுமட்டும் இல்ல நீ அந்த சிட்பண்டுலே, ஏஜென்ட் ஆகிறேன்னு வெச்சுக்கோ, நீ போடற பணத்துக்கு அதிக வட்டி மட்டும் இல்ல, நீ யாரையெல்லாம் உறுப்பினர்களாகச் சேக்கறியோ, அவங்க முதல் மாசம் தவணையாப் போடற பணம் அப்படியே உன் கைக்கு வந்துடும்''.

""என்னது?'' குழப்பமாகக் கேட்டாள் சகுந்தலா.

""புரியலையா, முதலில் எனக்கும் குழப்பமாகத்தான் இருந்தது. இப்பப் பார் என் கையிலே பத்தாயிரம் ரூபாய்'' என்று தன் கைப்பயைத் திறந்து ரூபாய்க் கட்டு ஒன்றை எடுத்து பானுமதி காட்டினாள்.

அதைச் சகுந்தலா அதிசயமாக விழித்துப் பார்த்தாள்.

""பானுமதி தொடர்ந்தாள், மாசம் இரண்டாயிரம் ரூபாய் என்ற அளவில்தான் சீட்டுக் கட்ட ஒத்துக் கொண்டேன். முதல் மாசம் அந்தத் தொகையைக் கட்டியும் விட்டேன். பிறகு எனக்கு அறிந்தவர்கள், நண்பர்கள், சொந்தம் என்று பேசி அவர்களில் ஐந்து பேரை இந்த சிட்பண்ட் கம்பெனியில் பணம் கட்டச் சேர்த்து விட்டேன். என்னைப் போலவே மாசம் இரண்டாயிரம் ரூபாய்க்கான சீட்டு. முதல் மாதம் அவர்கள் பணம் கட்ட எனக்குப் பத்தாயிரம் ரூபாய் வந்துவிட்டது''.

""என்ன ஆன்ட்டி உண்மையாகவா சொல்லுகிறீர்கள்? என்று சகுந்தலா வாயைப் பிளந்தாள்''.

""உன்கிட்டப் பொய் சொல்வேனா? நீயும் ஏன் இந்த மதுசூதனன் சிட்பண்ட்டில் பணம் போடக் கூடாது. உனக்குத் தெரிந்தவர்களைச் சேர்த்துவிடு, கைநிறையப் பணத்தை வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்'' என்றாள்.

""சரி ஆன்ட்டி, யோசித்துத் சொல்கிறேன்'' என்றாள் சகுந்தலா.

அன்று இரவு முழுவதும் சகுந்தலாவுக்குச் சரியானத் தூக்கம் இல்லை. நாமும் ஏன் இரண்டாயிரம் ரூபாய் சீட்டில் சேரக்கூடாது. ஒரு பத்துப் பேரைச் சீட்டுக் கட்டச் சம்மதிக்க வைத்தால் கையில் சுளையாக இருபதாயிரம் ரூபாய். இப்படியே நிறைய ஆட்களைச் சேர்த்தால், சகுந்தலா நெடுநாளாக வாங்க ஆசைப்பட்ட மாங்காய் மாலை அவள் கண்முன்னே ஊஞ்சலாடியது. பிற்காலத்தில் பானுக்குட்டிக்கும் உதவும், இதை ரவியிடம் சொல்லக்கூடாது. மொத்தமாகக் கையில் பணம் சேர்ந்ததும் சொல்லி அவனை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாள்.

மதுசூதனன் சிட்பண்டில் உறுப்பினர் ஆனாள் சகுந்தலா. அங்கே நேரில் சென்றபொழுது, ஒரு வீட்டின் முன் பக்கத்தில் இரண்டே இரண்டு ஆட்களைக் கொண்டு அது இயங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு சற்றே சந்தேகம் எழுந்தாலும் பானுமதி சொன்னதை முழுமையாக நம்பி இரண்டாயிரம் ரூபாய் பணத்தைக் கட்டினாள்.

சகுந்தலா தனக்குத் தெரிந்த மூன்று பேரைப் பேசி, பணிய வைத்து அந்த சிட்பண்டில் பணம் கட்ட வைத்தாள். என்ன ஆச்சரியம்! இரண்டாம் மாதமே, சகுந்தலாவின் கையில் சுளையாக ஆறாயிரம் ரூபாய் வந்தது. மகிழ்ச்சியின் உச்சத்தை சகுந்தலா அடைந்தாள்.

தன் உயிர்த்தோழி அம்பிகாவிடம் இந்த விஷயத்தை எல்லாம் சொல்லி அவளையும் இந்தக் கம்பெனியில் சீட்டு கட்டச் சொன்னாள்.

""கொஞ்சம் டைம் கொடு'' என்று சொல்லி அம்பிகா, இரண்டாவது நாளே சகுந்தலாவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினாள்.

""சகுந்தலா, இது ஒரு ஃபிராட் கம்பெனி என்று எனக்குத் தோன்றுகிறது. நெட்டில் தேடித் தேடிப் பார்த்தேன். இப்படிப்பட்ட கம்பெனியின் பேரே இல்லை. தமிழ்நாட்டின் நம்பகமான சிட்பண்டு கம்பெனிகளின் பெயர் வரிசையில் இந்த மதுசூதனன் சிட்பண்ட் கம்பெனியின் பெயரே இல்லை. உன்னை நன்றாக யாரோ ஏமாற்றி இருக்கிறார்கள். விழித்துக் கொள். பணம் கட்டுவதை நிறுத்தி விடு'' என்றாள்.

ஆமாம், அம்பிகாவுக்கு எதிலும் சந்தேகம், உஷார் பேர்வழி  என்று நல்லதைக் கூடச் சந்தேகக் கண்கொண்டுப் பார்ப்பாள். வட்டி ஒழுங்காக வருகிறது. நான் சேர்க்கும் உறுப்பினர்கள் கட்டும் முதல் மாதப் பணமும் அப்படியே கைக்கு வருது. பிறகு என்ன? என்று அம்பிகாவின் அறிவுரையை ஒதுக்கித் தள்ளினாள்.

வருடம் ஒன்று ஓடி மறைந்தது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுச் சகுந்தலா, ஐயாயிரம் ரூபாய் சீட்டை எடுத்துப் பணம் கட்டிக் கொண்டிருந்தாள். அப்படி இப்படி என்று கணக்குப் பார்த்ததில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மதுசூதனன் சிட்பண்டில் கட்டியிருந்தாள்.

சகுந்தலா அன்று காலை வழக்கம் போல் எழுந்து காலை ஆகாரத்தை தயாரித்துக் கொண்டிருந்தாள். கணவன் ரவி வாக்கிங் சென்றிருந்தான். காலிங்பெல் அடித்தது, குய்யோ, முறையோ என்று கத்திக் கொண்டு பானுமதி உள்ளே நுழைந்தாள்.

""மோசம் போயிட்டோம் சகுந்தலா, மதுசூதனன் சிட்பண்ட் கம்பெனி திவாலாயிடுச்சாம். ஆபீûஸ மூடிட்டு, பணத்தைச் சுருட்டிக்கிட்டுப் படுபாவிங்க ஓடிப் போயிட்டாங்களாம்'' என்றாள் பானுமதி.

""பானுமதியின் வாயை அடைத்து, போய்விடுங்கள், என் கணவருக்குத் தெரிந்தால் இங்கே ஒரு கொலையே நடந்துவிடும்'' என்று சமாதானம் சொல்லி அனுப்பினாள் சகுந்தலா.

ரவியை ஆபீஸூக்கு அனுப்பிவிட்டு, கதவைத் தாளிட்டுக் கொண்டு, கதறி அழுதுக் கொண்டிருக்கிறாள் சகுந்தலா. மதுசூதனன் சிட்பண்ட் கம்பெனியைப் பற்றி நன்றாக ஆராய்ந்து சொன்ன அம்பிகாவின் அறிவுரைகளைப் புறம் தள்ளி இன்று பணத்தை இழந்து தவிக்கிறாள். இனிவரும் காலங்களில் இது ஒரு பாடமாக அமைந்து யார் சொல்வதையும் அப்படியே ஏற்று, ஏமாறாமல் செய்தால் சரி!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

(குறள் எண்: 423)

பொருள் :
எந்த ஒரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.