பார்வை குறைபாட்டை மீறிய சக்தி!
பெங்களூருவை சேர்ந்த வித்யா, இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலிஜியில் (ஐஐஐடிபி) டிஜிட்டல் சொசைடியில் எம்.எஸ்.ஸி படித்து முடித்தவுடன் வேலை தேடியபோது, அவருக்கு வேலை கொடுக்க எந்த


பெங்களூருவை சேர்ந்த வித்யா, இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலிஜியில் (ஐஐஐடிபி) டிஜிட்டல் சொசைடியில் எம்.எஸ்.ஸி படித்து முடித்தவுடன் வேலை தேடியபோது, அவருக்கு வேலை கொடுக்க எந்த நிறுவனமும் முன் வரவில்லை, ஏன்?
வித்யா பார்வை குறைபாடு உள்ளவர். ஒவ்வொரு நேர்முக சந்திப்பின் போதும், இவருடைய பார்வை குறைபாட்டை தெரிந்து கொண்டதும், உங்களால் எப்படி வேலை செய்ய முடியும்? கம்ப்யூட்டரை எப்படி இயக்குவீர்கள் என்று கேட்டார்களே தவிர வேலை கொடுக்க ஒருவரும் முன்வரவில்லை.
மேலும் இவர் படித்து பட்டம் பெற்ற துறை தொடர்பான கேள்விகளையும் கேட்பதில்லை. இவருடன் படித்தவர்கள் எல்லாம் வேலையில் அமர்ந்துவிட்டனர். இரண்டு பட்டங்கள், ஒரு தங்கப்பதக்கம் பெற்றும் ஒரு நிறுவனமும் இவருக்கு வேலை தரவில்லை. நாமே சுயமாக ஒரு நிறுவனத்தை துவங்கி, தன்னைப் போலவே பார்வை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சேவை செய்ய
நினைத்தார்.
அப்படி வித்யா உருவாக்கிய "விஷன் எம்பவர்' மூலம் இன்று 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர். எப்படி?
பிறந்தது முதலே பார்வை குறைபாடு காரணமாக வித்யா, பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும்போது, பல சவால்களை சந்தித்தார். தன்னுடைய வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தன்னைப் போல் உள்ளவர்களுக்கு குழந்தை பருவத்திலேயே ஐஐஐடிபியில் பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் நடத்துவது போல் தானும் "விஷன் எம்பவர்' மூலம் பாடம் கற்றுத்தர தீர்மானித்தார்,
இவருக்கு ஐஐஐடிபி டிஜிடல் சொசைட்டி திட்டத்தில் துணை இயக்குநராகவும், பேராசியராகவும் உள்ள அமித் பிரகாஷ் உதவ முன்வந்ததோடு, கல்வித் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சுப்ரியாடே என்பவரை துணைக்கு அறிமுகபடுத்தி வைத்தார்.
2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விஷன் எம்பவர் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் சில மாதங்கள் வரை பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் உணர்வுகளை அறிந்து எப்படி கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை நடத்துவது என்பது பற்றி ஆசிரியர்களிடம் கேட்டறிவதிலும், ஆய்வு செய்வதிலும் ஈடுபட்டிருந்த வித்யா, தான் படிக்கும்போது இருந்த பயிற்சி முறையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை தெரிந்து கொண்டார்.
இந்தப் பாடங்களை சுலபமாக கற்பதற்கு குழந்தைகளுக்குத் தேவையான சாதனங்களோ, புத்தகங்களோ இல்லை என்பது தெரிந்தது. மேலும் பார்வை குறைபாடு உள்ள மாணவர்களில் பலர் அறிவியல் பாடம் கற்பதில் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அதற்கு தேவையான உபகரணங்களோ, தொழில் நுட்பங்களோ இல்லை என்பதால் மாற்றுத் திறனாளிகளுக்கு பாடம் கற்பிக்கும் முறையை இவர்களுக்கும் பின்பற்ற வேண்டியதாயிற்று.
இந்த குறைகளை உணர்ந்த வித்யாவும், சுப்ரியாவும் குழந்தைகளுக்கும் தேவையான புத்தகங்களையும், உபகரணங்களையும் பெறுவதற்காகவும், ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கவும் மென்பொருள் நிறுவனங்களை அணுகினர். முக்கியமாக வரிவடிவங்கள். படங்கள், வரைபடங்கள், கிராப்ஸ் போன்றவைகளை பெறும் முயற்சியில் இறங்கினர். நேரடி வகுப்புகள் நடத்தும்போது சுலபமாக விளக்க வேண்டிய பாடங்கள் பொது முடக்கத்தின் போது தடைப்பட்டது.
பின்னர் இந்த பாடங்களை வீடியோவில் பதிவிட்டு தேவையான விளக்கங்களுடன் மாணவர்கள் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்தனர். வித்யாவின் "விஷன் எம்பவர்' நிறுவனத்திற்குத் தேவையான கணிதம் மற்றும் அறிவியல் தொடர்பான பிரெய்லி புத்தகங்களை "மாத்ருசாயா' என்ற தொண்டு நிறுவனம் கொடுத்துதவ முன் வந்தது. இந்தப் புத்தகங்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் பாடம் நடத்த பேருதவியாக இருந்தது.
பின்னர், இந்தப் பாடங்களுடன் மாணவர்களுக்கு கணிதத்தில் அடிப்படையான கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் போன்றவை கற்றுக் கொள்வதோடு ஆசிரியர்களும் டிஜிட்டல் முறையில் பாடங்களை கற்றுக் கொள்ள பயிற்சி முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வித்யா விடியோவில் பதிவு செய்தவைகளை யூடியூப் பில் பதிவிறக்கம் செய்தார்.
பார்வை குறைபாடு உள்ளவர்கள் பாடங்களை கேட்டறிவதற்கு வசதியாக கூகுள் மூலமாகவும் கேட்டறிய முடியும். இது தொடர்பாக ஐஸ் (கண்கள்) என்று விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ஆஃப் ஒன்றையும் அறிமுகப்படுத்தினார். பார்வை குறைபாடு உள்ளவர்களுக்குத் தெரிவிக்கலாம். இவைகளை எப்படி பயன்படுத்துவது என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
""இதுவரை "விஷன் எம்பவர்' மூலம் கர்நாடகா, தமிழ்நாடு, திரிபுரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வை குறைபாடு உள்ள மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்த அமைப்பில் பல்வேறு பள்ளிகளில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்து பயிற்சியளிக்கின்றனர்.
வேலை கிடைக்கவில்லையே என்று நான் மனமுடைந்து விடாமல் விஷன் எம்பவர் என்ற அமைப்பை துவங்கியதன் மூலம், பார்வை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கல்வி பயிற்சியளிப்பது மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளித்து வருகிறது'' என்கிறார் வித்யா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...