பிரெஞ்சுப் பெண்மணியின் சாதனை!

பாண்டிச்சேரியில் பிரெஞ்சு  அரசின்கீழ் இயங்கும் இரண்டு ஆய்வு நிறுவனங்கள் உள்ளன. ஒன்று பாண்டிச்சேரி பிரஞ்சு ஆய்வு நிறுவனம் மற்றொன்று கீழ்த்திசை நாடுகளுக்கான பிரஞ்சு ஆய்வு நிறுவனம்.
பிரெஞ்சுப் பெண்மணியின் சாதனை!


பாண்டிச்சேரியில் பிரெஞ்சு அரசின்கீழ் இயங்கும் இரண்டு ஆய்வு நிறுவனங்கள் உள்ளன. ஒன்று பாண்டிச்சேரி பிரஞ்சு ஆய்வு நிறுவனம் மற்றொன்று கீழ்த்திசை நாடுகளுக்கான பிரஞ்சு ஆய்வு நிறுவனம். இந்த இரு நிறுவனங்களிலும் இந்தியவியல் துறை செயல்பட்டுவருகிறது.

கி.பி. 1761- இல் கர்னல் மோந்தவெ என்பவர் திருக்குறளைப் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்து காரைக்காலில் அச்சிட்டார்.

கிபி. 1783-இல் பாரிஸ் நகரில் வெளியான நூல் ஒன்றில் "திருக்குறள்', "நாலடியார்', "நீதிவெண்பா' ஆகியவற்றிலிருந்து சில பகுதிகள் அறிஞர்கள் சிலரால் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. இதேபோன்று "மூதுரை', "நல்வழி', "அறநெறிச் சாரம்', பழமொழி நானூறு ஆகியவைகளும் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

1880- இல் நீதிபதியாக இருந்த ஜே.பி.ஆடம் என்பவர் "ஆத்திசூடி', "கொன்றை வேந்தன்', "வெற்றி வேற்கை', "மூதுரை', "நல்வழி', "நன்னெறி', "நீதி நெறி விளக்கம்' ஆகியவற்றிலிருந்தும் சில பாடல்களை மொழிபெயர்த்து ஒரு சிறு நூலை 61 பக்கங்களில் வெளியிட்டார்.

காரைக்காலில் பிரெஞ்சு நிர்வாகியாக இருந்த லெம்பெலாட் என்பவர் காரைக்காலம்மையார் பற்றிய ஓர் அரிய நூலை பிரெஞ்சு மொழியில் வெளியிட்டார். 1956- இல் லியோன் சேன் ழான் என்னும் பிரெஞ்சு அறிஞர் காரவேலன் என்ற புனைபெயரில் காரைக்காலம்மையார் பிரபந்தங்களை, பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் மூலமாக வெளியிட்டார்.

"மெஞாளெ டியாகெள' என்னும் பிரெஞ்சு நீதிபதி திருக்குறள், கம்பராமாயணத்தில் ஒரு காண்டம் ஆகிவற்றையும் பல சிறு நூல்களையும் பிரெஞ்சு மொழியில் வெளியிட்டார்.

இப்படி பல பிரெஞ்சு அறிஞர்கள் இந்திய இயல்பால் கொண்ட வேட்கையும் உழைப்பு மே 1954-இல் பாண்டிச்சேரியில் பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் உருப்பெறக் காரணமாயின.

தமிழ் இலக்கியம் மற்றும் கலாசார வரலாற்று ஆய்வு என்பது இந்நிறுவனத்தின் பல பணிகளில் ஒன்று.

பன்னாட்டு அரங்கில் தமிழின் மாண்பினை வெளிப்படுத்த இதன் பணிகள் பேரூதவி புரிகின்றன.

தமிழறிஞர் பண்டிதமணி நீ. கந்தசாமிப் பிள்ளை, தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதய்யரின் சீடரான வித்வான் வி.எம். சுப்ரமண்ய ஐயர், திருவையாறு பேராசிரியர் டி.வி. கோபாலையர் அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையுடன் இணைந்து இத்துறையில் பல நூல்களை வெளியிட்டிருக்கிறது இந்த நிறுவனம்.
ஆழ்வார் பாடல்கள், தேவாரப் பாடல்கள், முருகன் தலங்கள் என்று தமிழ்க் கலாசாரத்தில் ஒவ்வொரு கூறு பற்றியும் இந்த நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

"தமிழகத்தில் சுப்பிரமணியர் சிற்ப இயல்' என்ற அருமையான ஆராய்ச்சி நூலை 1978-இல் இந்நிறுவனம் வெளியிட்டது.

பிரான்சுவாஸ் லெர்னோ அம்மையார் என்பவரால் எழுதப்பட்ட ஒப்பற்ற பிரெஞ்சு நூல் இது. 260 பக்கங்களுடன் 246 புகைப்படங்களும் 10 வரை படங்களும் இந்த நூலில் இருக்கின்றன. இந்த ஒரு நூலே பாண்டிச்சேரி பிரஞ்சு ஆய்வு நிறுவனம் புகைப்படக் கருவூலத்தின் மதிப்பைப் புரிய வைக்கும்.

இந்த நூலில் சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர் திருவுருவங்களைச் சிற்ப இயல் வழியில் தொன்று தொட்டுப் பல்லவர், சோழர், பாண்டியர் காலம் வரையிலும் விவரிக்கிறார் லெர்னோ அம்மையார். இந்த நூல் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்த போதிலும் இதன் ஆங்கிலச் சுருக்கம் ஒன்று பின்னிணைப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது . இதனால் இதன் சாரத்தை அறியமுடிகிறது.

முதல் அத்தியாயம் இலக்கியத்தில் சுப்பிரமணியரைக் காட்டுகிறது. சுப்பிரமணியர் மேற்கொண்ட போர்களும் அவரது பிரம்மச்சாரி வடிவங்களும் பேசப்படுகின்றன.

இரண்டாவது பகுதியில் தமிழகத்துக்கு வெளியே மற்ற இடங்களில் உள்ள சுப்பிரமணியர் சிற்ப இயலைக் காட்டுகிறார் அம்மையார்.

மூன்றாவது பகுதியில் முருகப் பெருமானை மகனாக, குமரனாக காட்டும்போது சோமாஸ்கந்த வடிவங்களையும் எழுந்தருளும் திருவுருங்களையும் விவரித்துக் காட்டுகிறார்.

நான்காவது பகுதியில் அறிவின் கடவுளாக திருமுருகப் பெருமானை காட்டும்போது பல்லவர் காலம், பல்லவர்களுக்குப் பின் வந்த அரசர்கள் காலங்களைச் சார்ந்தவடிவங்களை ஆய்வு செய்கிறார். முருகன் பிரம்மாவாக, ஆசானாக, ஆண்டியாக, மணமகனாகிய இல்லறத்தானாக இப்படி பல கோலங்களில் விளங்கும் மாண்புகளை அம்மையார் விளக்குகிறார்.

ஐந்தாவது பகுதியில் சேனாபதியாக முருகனைக் காட்டும்போது, தாராசுரத்தில் உள்ள பழம்பெருமை வாய்ந்த ஓர் அற்புத சிற்பத்தை எடுத்துக் காட்டுகிறார். ஆண்டிக்கோலம் கொண்ட ஞான வீரனாம் முருகப் பெருமானை காட்ட முற்படும் ஆசிரியர், வேல், வாகை , வஜ்ரம் முதலிய அவரது படைக்கலங்கள், வாகனங்களில் உள்ள சிற்ப இயற் கூறுகளையும் விரிவாகச் சித்தரித்துக் காட்டுகிறார்.

வீரனாக முருகன் விளங்கும்போது வில் ஏந்தியவனாகவும், எண்ணற்ற படைக்கலங்கள் உடையவனாகவும் விளங்கும் அருட்கோலங்களை எடுத்துக்காட்டுகிறார். அரசனாக அவன் திருக்கோலம் கொண்டுள்ளதைப் பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, மூலவர்கள் கொள்ளும் அலங்காரங்களை காட்டி நிறுவுகிறார்.

ஆறாவது பகுதியில் முருகனுக்குரிய இடத்தை விளக்குகிறார்.

ஆறுபடை வீடுகளையும் பண்டைய கோயில்களையும் , நவீன கோயில்களையும், இணை தெய்வமாக விளங்கும் ஆலயங்களையும், பரிவார தெய்வமாக விளங்கும் பல்லவர், பாண்டியர், சோழர் கோயில்களையும் எடுத்து விவரிக்கின்றார். இறுதியாக முருகன் கோயில்களையும் எடுத்து விவரிக்கின்றார். இறுதியாக முருகன் கோயிலில் விளங்கும் அஸ்திரதேவர், ஆயுத புருஷர்களையும் விளக்குகிறார் அம்மையார்.

இந்நூலில் 246 நிழற்படங்களும், பல்லவர்காலக் கோயில்களான காஞ்சி கைலாயநாதர் கோயில், திருப்பரங்குன்றம், திருச்சிராப்பள்ளி, மத்கேஸ்வரம் (காஞ்சி) முக்தேஸ்வரம் ( காஞ்சி) மலையடிப்பட்டி, ஆனைமலை, திருக்கட்டளைக் கோயில்களின் வரை படங்களும், தமிழகத்தில் முருகன் திருவுருவங்கள் செறிந்துள்ள இடங்களைக் குறிக்கும் நாலு படங்களும் இந்நூலுக்குச் சிறப்பாக இருக்கின்றன.

லெர்னோ அம்மையாரின் இந்நூல் எப்படி ஆய்வுநூல் அமைய வேண்டும் என்பதற்கு சிறந்ததோர் எடுத்துக் காட்டாக உள்ளது.

இந்நூலை இயற்றிய லெர்னோ அம்மையாரின் அயராத உழைப்பும், ஆர்வமும், புலமையும் இந்நூலின் ஒவ்வொரு பகுதியிலும் மிளிர்வதைக் காணலாம். இந்நூலில் உள்ள மேற்கோள் நூல்களின் பட்டியல், பொருள் அகரவரிசை முதலியன இந்நூலைக் கையாளுவதற்குப் பேருதவி புரிகின்றன. இந்த அரிய பெரிய நூலை பாண்டிச்சேரி அரவிந்தாச்ரம அச்சகத்தார் அழகாக அச்சிட்டிருக்கிறார்கள்.

வேதபுரியாகப் போற்றப்படும் பாண்டிச்சேரியில் இந்த நிறுவனம் வெளியிட்ட லெர்னோ அம்மையாரின் "தமிழகத்தில் சுப்பிரமணியர் சிற்ப இயல்' என்ற அரியநூல், நம் கலாசார மாண்பினை குன்றின் மேலிட்ட விளக்காக ஏற்றி வைத்திருக்கிறது. லெர்னோ அம்மையார் 2000- ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.
படம் உதவி: ரமேஷ்குமார், ஐ.எஃப்.பி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com