எழுத்தில் ஆண் - பெண்  பார்ப்பதில்லை!  

அம்பை - பள்ளிப்படிப்பின்  போதே  எழுத  ஆரம்பித்துவிட்டார்.  அவரின்  எழுத்துகள்  வர்த்தக  ரீதியான  இதழ்களில்  வெளிவந்தது கிடையாது .
எழுத்தில் ஆண் - பெண்  பார்ப்பதில்லை!  

அம்பை - பள்ளிப்படிப்பின் போதே எழுத ஆரம்பித்துவிட்டார். அவரின் எழுத்துகள் வர்த்தக ரீதியான இதழ்களில் வெளிவந்தது கிடையாது  "கணையாழி' ( சிறகுகள் முறியும்), "பிரக்ஞை' ஆகிய இலக்கிய இதழ்களிலேயே அவரது பெரும்பாலான சிறுகதைகள் வெளிவந்தன. தனக்குகந்த கருத்துகளின்படியே அவர் வாழ்ந்தார்; எழுதினார். அவரின் சிறுகதைகள் பெண்களின் மன உணர்வுகளையே வெளிப்படுத்தின.

மழுப்பலற்ற, தெளிவான, எளிமையான சொற்களால் காட்சிப்படுத்தப்படுபவை அம்பையின் கதைகள். அந்த நேரடிச் சொற்கள் எவற்றைக் காட்சிப்படுத்துகின்றன எனும் போதுதான் அதன் கனமும் உறுதியும் நமக்குப் புரிய வரும். சொற்களை சிக்கனமாக பிரயோகிப்பார்.

இந்த நேர்காணலின்போது அம்பை சொன்ன ஒரு வரி மனதில் அப்படியே ஆழப்படிந்துவிட்டது. "அனுபவமும் வயதும்தான் எழுத்தின் மொழிநடையில் மாற்றத்தை உருவாக்கும் என நான் எண்ணியிருந்தேன். ஆனால், வாழ்விடங்களும் மொழிநடையை மாற்றுகின்றன, நாம் அறியாமலேயே' என்கிறார். அம்பையின் கதைகளில் ஆண் எதிர்ப்பு இருக்கிறது என சொல்வது சரியல்ல அது ஆண் எதிர்ப்பு அல்ல, பெண்ணுக்கான சம இடம் என்பதுதான்சரி. சமீபத்தில் சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர் அம்பையிடம் மேற்கொண்ட உரையாடலிலிருந்து சில பகுதிகள் :

நீங்கள் எழுத வந்த சூழல் எது? பெண் நிலை சார்ந்த எழுத்து இதுவரை தொடர காரணம் என்ன? அவசியம் என்ன?

நான் 16 வயதில் "கண்ணன்" பத்திரிகையில் எழுதியபோது விகடன், கலைமகள், கல்கி போன்ற பத்திரிகைகளில் பெண்கள் ஆண்கள் என்று பலர் மிகவும் அருமையான கதைகளை எழுதிக்கொண்டிருந்தார்கள். எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிய சூழல் அதுதான் . ஆண்டு முழுவதும் காசு சேர்த்து தீபாவளி மலர்களை வாங்கும் ஆர்வம் வீட்டில் எங்களுக்கு இருந்தது. அம்மாவும் தொடர்கதைகளைச் சேர்த்து பைண்டு செய்து வைப்பாள்.
பெண் நிலை சார்ந்த எழுத்து என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் வாழ்க்கையைச் சார்ந்து எழுதுகிறேன். பெண்களும் ஆண்களும் வாழ்க்கையை எதிர் கொள்வது பற்றி எழுதுகிறேன் என்றுதான் நினைக்கிறேன்.

உங்கள் எழுத்திற்கு உங்களது உறவுகள் சாதகமாக இருக்கின்றனரா?

எழுதுவதற்கு யாரும் எப்போதும் தடையாக இருக்கவில்லை. எழுத ஆரம்பித்த சில காலத்திலேயே நான் கல்விக்காக வீட்டை விட்டுப் போய்விட்டதால் குடும்பத்திலிருந்து தடையேதும் இருக்கவில்லை. ஆரம்பத்தில் அதை அவ்வளவு பெரிய விஷயமாகவும் எடுத்துக்கொள்ளவில்லை.

குடும்பத்தின் வெளியே இருந்து நான் எழுதியதை எல்லாம் அவர்கள் படித்தார்களா என்று தெரியவில்லை. அம்மாவுக்கு அநுத்தமா, ஆர். சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், சரோஜா ராமமூர்த்தி, கல்கி, ரஸவாதி, சங்கர்ராம், மாயாவி, வண்ணதாசன், வண்ண நிலவன் இவர்களைப் பிடிக்கும். வண்ண நிலவன் எங்கள் வீட்டுக்குக் கூட வந்திருக்கிறார்.

அம்மாவுக்கு என் எழுத்தைவிட வண்ணதாசன், வண்ணநிலவன் எழுத்தைப் பிடிக்கும். அம்மா கோவில்பட்டியில் வளர்ந்தாள். அதனால் திருநெல்வேலி, கோவில்பட்டிக்காரர்களைப் பிடிக்கும். இப்போதுள்ள குடும்பத்தில் என் கணவர் விஷ்ணுவுக்குத் தமிழ் தெரியாததால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடாவிட்டாலும் தடைகள் ஏதும் விதித்தது இல்லை. அப்படித் தடை போடும் உறவும் இல்லை எங்களுடையது.

"அம்மா ஒரு கொலை செய்தாள்', "காட்டில் ஒரு மான்', "வீட்டின் மூலையில் ஒரு சமையலறை',"சிறகுகள் முறியும்' இந்நான்கு கதைகளின் படைப்பு அனுபவத்தைச் சொல்ல முடியுமா?

"சிறகுகள் முறியும்" கதை ஓரிரு ஆண்டுகள் எழுதாமல் இருந்து பின் வாழ்க்கையில் வேறு பல அனுபவங்கள் வந்தபின் எழுதிய கதை. என் தோழி ஒருத்தியின் வாழ்க்கையை ஒட்டி எழுதிய கதை. அந்தக் கதையை 1967-இல் சென்னையில் எழுதினேன்.

நான் டெல்லியில் இருந்தபோது, ஐந்தாண்டுகளுக்குப் பின் "கணையாழி"யில் வெளியானது. என் மொழி வெகுவாக மாறிவிட்டிருந்ததை நான் உணரவில்லை. நம் உடல் பல வெளிகளில் அலையும்போது நம் மொழியும் அதற்கேற்ப மாறுகிறது. கதை என் தோழிக்குப் பிடித்திருந்தது. "எப்படி இந்தக் கதைக்கரு தோன்றியது?" என்று கேட்டாள். வாழ்க்கையை வாழ்வதற்கும் அதை உணர்வதற்குமான இடைவெளி எனக்குப் புரிந்தது.

"அம்மா ஒரு கொலை செய்தாள்" பெண்கள் வயதுக்கு வருவது பற்றி, உடல் பற்றி, நிறம் பற்றி யோசித்தபோது மனதில் வந்த கதை. என் சுய அனுபவத்தை ஒட்டிய கதை. சிறிது கற்பனையும் கலந்தது.

"வீட்டின் மூலையில் சமையலறை" ராஜஸ்தானில் பல பெரிய குடும்பங்களில் உள்ள நடைமுறை வாழ்க்கையை ஒட்டிய கதை. விஷ்ணு ராஜஸ்தானத்தைச் சேர்ந்தவர் என்பதால் பல குடும்பங்களுடன் பழக நேரிட்டது. அதிலிருந்து பிறந்த கதை.

"காட்டில் ஒரு மான்" நான் சிகாகோவில் இருந்தபோது ஏ.கே.ராமானுஜமும் இன்னும் சிலரும் வாரம் ஒரு முறை சந்திக்கும் கூட்டத்தில் அவரவர் கதைகளைப் படிக்கும்போது தாய்மை, பெண்ணுடல் பற்றிய விவாதங்களின் ஒரு கட்டத்தில் எழுதியது. முற்றிலும் கற்பனையான கதை.

பெண்கள் தொடர்ந்து தனக்கு விருப்பமான துறைகளில் ஈடுபட என்ன செய்யலாம்?

பெண்கள் அவர்களுக்கான துறைகளில் ஈடுபட வெளிப்படையான தடைகள் ஏதும் இல்லாவிட்டாலும் மனத்தளவில் தடைகள் உள்ளன. ஆனால் அந்தத் தடைகளை மீறுவதற்கான வழிமுறைகளும் உள்ளன என்பதுதான் ஆசுவாசம் தரும் ஒன்று.

குடும்பம், உறவுகள் போன்றவற்றை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

குடும்பம் என்பதன் பொருள் மாறிக்கொண்டே வருகிறது இல்லையா? கூட்டுக் குடும்பம், அதில் இருந்த பொறுப்புகள், பாதுகாப்பு, பாகுபாடுகள், அடக்குமுறைகள் இவற்றிலிருந்து வெளிவந்த மனைவி-கணவன் குழந்தைகள் என்று மையப்படுத்தப்பட்ட குடும்பம், தனியொருத்தி அமைத்துக்கொள்ளும் குடும்பம், திருநங்கைகள் அமைத்துக்கொள்ளும் குடும்பம், ஓரினச் சேர்க்கையாளர்கள் அமைக்கும் குடும்பம் என்று பல வகைகளாக உள்ளது
குடும்பம்.

தற்சமயம் குடும்பம் என்பது உறவினர்கள் மட்டுமல்லாமல் நண்பர்களையும் உள்ளடக்கிய ஒன்றாகவே இருக்கிறது. பல நண்பர்கள் குடும்பங்களில் நான் பாட்டி, அத்தை, பெரியம்மா என்று பல உறவுகளில் இருக்கிறேன். என்னை அம்மா என்று அழைக்கும் பலர் மகள்களாகவும் மகன்களாகவும் உரிமையோடு செல்லமும் கொண்டாடி சண்டையும் போடுகிறார்கள்! பெயரை வேறு அம்ப்ஸூ, லக்ஸ், லக்கு, அம்மு, என்று மாற்றிவிட்டார்கள்! அதனால் இப்படி விரியும் ஒன்றாகவே குடும்பத்தைப் பார்க்கிறேன்.

திருமணத்தைப் பொறுத்தவரை அது அவசியம் செய்துகொள்ள வேண்டிய ஒன்று என்று நினைக்கவில்லை. திருமணம் செய்துகொள்ளாமல் உறவில் இருப்பதைத் தவறு என்றும் நினைக்கவில்லை.

குழந்தைகள் பெற்றுக்கொண்டால் தான் ஒரு பெண் பூரணமடைகிறாள் என்றும் நினைக்கவில்லை. ஒரு பெண்ணைத் தாயாக்கினால்தான் ஒருவனின் ஆண்மை நிரூபணமாகிறது என்றும் நினைக்கவில்லை. விளக்கங்களால் குறுக்கப்படாத மனிதர்களும் உறவுகளும்தான் வாழ்க்கையை வளமாக்குகின்றன என்று உறுதியாக நம்புகிறேன்.

நீங்கள் ஏன் தொடர்ந்து நாடகங்கள் எழுதவில்லை?

நாடக வடிவை நான் முயன்று பார்த்தேன். அதில் நான் செய்த வேலை எனக்குத் திருப்தியாக இருக்கவில்லை. அந்த வடிவத்தை என்னால் சரியாகக் கையாள முடியவில்லை. அவை அரங்கேறியதை நான் பார்க்கவில்லை. ஒரு முறை "பயங்கள்" நாடகத்தை சென்னையில் பரீக்ஷா போட்டபோது பார்த்ததாக ஞாபகம். பிறகு ஹிந்தியில் "ஆற்றைக் கடத்தல்"நாடகத்தை சமீபத்தில் ஹிந்தியில் கே.எஸ். ராஜேந்திரன் குழு போட்டபோது பார்த்தேன்.

"ஆற்றைக்கடத்தல்"நாடகத்தின் முடிவில் "இன்னொரு ராச்சியம் அமைக்க" என்று வரும். வெளி ரங்கராஜன் அதை "வெளி" பத்திரிகையில் வெளியிட்டபோது "இன்னொரு ராம ராச்சியம் அமைக்க" என்று போட்டுவிட்டார்! பிறகு பல ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் அவரே என்னிடம் வந்து, "ராம ராச்சியம்" என்பதை மாற்றிவிடுங்கள்' என்றார்.

"அதை அப்படிப் போட்டதே நீங்கள்தானே ஐயா' என்றேன்!

"வெளி" பத்திரிகையில் வந்தபோதும், "காலச்சுவடு' என்னுடைய முதல் கதைகள் மற்றும் நாடகங்களைக் கொண்டுவந்த போதும் நான் அதைப் பார்த்திருக்கவில்லை. பிறகு ஒரு முறை அதை மேடையில் பார்த்தபோதுதான் திருத்தினேன். ஹிந்தியில் போட்டபோது திருத்தினேன்.

மொத்தத்தில் நாடக வடிவம் என் வெளிப்பாட்டு வடிவமாகப் படவில்லை. வெளி ரங்கராஜன், ஞானி, முத்துசாமி, பிரசன்னா ராமசாமி போன்றவர்களுக்கு நாடகத்தின் வடிவத்தைப் பற்றிய புரிதலும், முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி போன்ற நாடகாசிரியர்களுக்கு நாடகம் எழுதுவதில் இருந்த திறமையும் தேர்ச்சியும் எனக்கு இல்லை என்றே தோன்றியது. அதனால்தான் மேலும் நாடகம் எழுதும் ஆர்வம் வரவில்லை.

சாகித்ய அகாதெமி விருது பெண்களுக்கு பெரும் இடைவெளிக்குப் பின்னரே கிடைக்கிறதே...

எழுத்தில் பெண் ஆண் என்று நான் பார்ப்பதில்லை. வேலை வாய்ப்பு, குடும்பச் சூழல், இலக்கியம் போன்ற பொது வெளி இவற்றிலும் அவர்களின் செயல்பாடுகள் அவற்றின் தன்மைக்கேற்ப, சமமான நிலையில் பார்க்கப்பட வேண்டும் என்பது என் கருத்து. விருதுகள் என்பவை பல வகையான விருப்பு வெறுப்பு, அரசியல் இவற்றைச் சார்ந்து தரப்படுகின்றன. தரப்பட வேண்டிய பலருக்கு சாகித்திய அகாதெமி விருது தரப்படவில்லை என்பதுதான் உண்மை. அதில் தவிர்க்கப்பட்ட பலரில் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் எழுத்து பெண் எழுத்து என்று வகைமைப்படுத்தப்பட்டுவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com