அவரைக்காயின் மருத்துவப் பயன்கள்:
அவரைக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதால், இதனை ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால், இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துகொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை சரியாகும்.
சாம்பல் பூசணியின் மருத்துவப் பயன்கள்:
உடலைப் பலப்படுத்தும் தன்மை கொண்டவை. நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல், பித்த நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை சாம்பல் பூணிக்கு உண்டு. உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது.
திடீரென்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்கிவிடுகிறது. உடலின் வெப்பம் தணியவும் சாம்பல் பூசணி பயன்படுகிறது.
எந்தப் பருவத்துக்கு எந்தக் கீரை கூடாது..?
கோடைக்காலத்தில் (சித்திரை, வைகாசி மாதங்களில்) அரைக் கீரை, புளிச்ச கீரைகளைத் தவிர்க்கலாம்.
காற்று அதிகமுள்ள காலங்களில் (ஆனி, ஆடி) அரைக்கீரை, கீரைத் தண்டு, சிறுகீரை, பருப்புக் கீரை, முள்ளங்கிக் கீரைகளைத் தவிர்க்கலாம்.
முன்மழை காலங்கலில் (ஆவணி, புரட்டாசி) சிறுகீரை, பருப்புக் கீரை, வெந்தயக் கீரை, முள்ளங்கிக் கீரை, பாலைக்கீரை ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.
பின்மழைக் காலங்களில் (ஐப்பசி, கார்த்திகை) அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, கீரைத்தண்டு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
முன்பனிக் காலங்களில் (மார்கழி, தை) அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக் கீரை, முள்ளங்கி கீரைகளைத் தவிர்க்கலாம்.
பின்பனிக் காலங்களில் (மாசி, பங்குனி) சிறுகீரை, பசலைக்கீரை, பருப்புக் கீரைகளைத் தவிர்க்கவும்.
பொன்னாங்கண்ணி, கொத்தமல்லிக் கீரை, புதினா, பருப்புக்கீரை, மணத்தக்காளிக் கீரை, கரிசலாகண்ணிக் கீரை, கறிவேப்பிலை போன்றவற்றை அனைத்துப் பருவங்களிலும் சாப்பிடலாம்.
-த.நாகராஜன், சிவகாசி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.