உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

தென்னை இளம் கீற்றினிலே...

இன்றைய நாள்களில் பேசுபொருளாக இருப்பது தென்னை ஓலை. விழாக்கால அலங்கரிப்புகளில் அண்மையில் டிரெண்டாக மாறியிருப்பது தென்னை ஓலைதான்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:43 pm IST

இன்றைய நாள்களில் பேசுபொருளாக இருப்பது தென்னை ஓலை. விழாக்கால அலங்கரிப்புகளில் அண்மையில் டிரெண்டாக மாறியிருப்பது தென்னை ஓலைதான். கைவினைப் பொருள்கள் தயாரித்து, நல்லதொரு வருமானம் தரும் தொழிலாக மாற்றியிருக்கும் முதுகலைப் பட்டதாரியும், திருப்பூரைச் சார்ந்த கைவினைக் கலைஞருமான சன்மதி கூறியது:

'திருமணம் முடித்து திருப்பூரில் வசிக்கும் சாதாரண ஓர் இல்லத்தரசியாகத்தான் என் வாழ்க்கை துவங்கியது. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு எனது திருமண விழாவில் தென்னை ஓலைகளைப் பயன்படுத்தி, நான் தயாரித்த தட்டுகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அதன் பிறகு உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடைபெறும் விழாக்களில் என்னுடைய தென்னை ஓலை சீர் தட்டுகள் தவறாது இடம் பிடிக்கத் துவங்கின.

பாரம்பரிய விழாக்களில் பெண்கள் எடுத்து வரும் சீர்தட்டுகளில் இடம்பெறும் தேங்காய், பழவகைகள், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு எனச் சகலமும் மங்களத் தன்மை நிறைந்து இருப்பதற்கான குறியீடுகள். அதேபோல, தென்னை ஓலையும் நல்லதொரு மங்களக் குறியீடு. எனவே சீர்பொருள்களை வைப்பதற்கான தட்டுகள் பசுமையாக இருக்கும்போது அந்த உணர்வு கூடுதலாகிறது.

இந்த அடிப்படையில் சீருக்கான தட்டுகளை தென்னை ஓலையில் வைப்பதை தற்பொழுது பலரும் விரும்புகிறார்கள். பலநாள்கள் இந்தப் பச்சைத் தன்மை மங்காமல் இருக்கிறது. விசேஷம் முடிந்த பிறகும் இந்த தட்டுகளைப் பலவிதங்களில் மீண்டும் உபயோகப்படுத்தலாம். சற்று நிறம் மங்கி காய்ந்தபிறகு பழுப்பு நிறமாகி விடுமே தவிர உறுதியாகவே இருக்கும். இவற்றைத் தொடர்ந்து சிலவருடங்கள் உபயோகப்படுத்தலாம். தண்ணீர் பட்டாலும் காயவைத்து விடமுடியும்.

Story image

முன்பெல்லாம் வெயிலில் வற்றல் முதலான பொருள்களைக் காயவைப்பதற்கு தென்னை ஓலை தடுக்குகளைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த வழக்கம் அழிந்து தற்போது பிளாஸ்டிக் விரிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். இது எவ்வளவு கெடுதலை உண்டாக்குகிறது என்பதில் பலரும் அலட்சியமாக இருப்பது எனக்கு கவலையை ஏற்படுத்தியது. இதனால் என்னால் இயன்ற அளவு ஒரு மாற்றத்தைக் கொண்டு வர எண்ணினேன். அதன் முதற்படிதான் இந்த தென்னை ஓலைத் தட்டுகள்.

இந்தத் தட்டுகளிலேயே பூக்கள், இலைகள் முதலியவற்றைப் பயன்படுத்தி அலங்காரப்படுத்தியதிலும் நிறைய வித்தியாசமாக முயற்சித்தேன். நாளடைவில் விதவிதமான மணவறை அலங்காரங்கள் வரை விரிவாகியது. என்னுடைய அலங்காரப்பொருள்களைப் பார்த்து வியந்த பலர் என்னிடம் வந்து அவர்களுக்கும் கற்றுத் தருமாறு கேட்டனர். அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதோடு வாடிக்கையாளர்களுக்கும் 'சீர் ஓவியம்' என்கிற பெயரில் செய்து தரவும் தொடங்கினேன். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஓய்வு நேரத்தை உபயோகமாக ஆக்கிக் கொள்வதற்கான வழி இது. பெரிய முதலீடு என்று எதுவும் இல்லை. முகூர்த்த நாள்கள், கோயில் விசேஷ நாள்கள் போன்ற சமயங்களில் கூடுதல் நேரம் தேவைப்படும். அவ்வளவுதான். அருகில் இருக்கும் தென்னந்தோப்புகளில் தேவையான மட்டைகளை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். ஒரு மட்டை இருநூறு ரூபாய் வரை ஆகிறது. அதைக் கொண்டு வந்து சீராக்கி ஓலைகளைக் கிழித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேவைப்படும் அலங்கார வேலைகளைச் செய்யத் துவங்கிட வேண்டியதுதான். கொஞ்சம் க்ரியேட்டிவிட்டி இருந்தால் போதும்.

விதவிதமான மிருகங்கள், பறவைகள், பூக்கள், பொம்மைகள் எனப் பல விஷயங்களை உருவாக்குவது மிக எளிது. இப்படி உருவாக்கிடும் உருவங்களைத் தட்டுகளில் பொருத்தினால் போதும். வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ப தேவையான சீர் பொருள்களை நிரப்பி விட வேண்டியதுதான். தற்பொழுது மேடை அலங்காரத்துக்கான தென்னை ஓலை அலங்கார உருவங்களைப் பயன்படுத்தும் வழக்கம் மேலைநாடுகளிலும் பரவி வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தன்மையே இதற்கு மிக முக்கியமான காரணம் ஆகும். இவ்வித தயாரிப்புகளை வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் விரும்பி வாங்கத் துவங்கியுள்ளது நல்ல ஆரோக்கியமான விஷயம். இன்று பல இல்லத்தரசிகள் என்னிடம் பயிற்சிபெற்று தங்கள் ஓய்வு நேரத்தைப் பலனுள்ளதாக மாற்றி இருக்கிறார்கள்.

Story image

இதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இப்பெண்களில் பலர் என்னுடன் இணைந்தும் பணி செய்கிறார்கள். தட்டுகள், கூடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வடிவத்தினைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டியிருக்கும்.

பலர் பொக்கே போன்ற பூங்கொத்துகள் மற்றும் மலர் வளையங்கள், பலகாரம் மற்றும் கட்டுசாதக் கூடைகள் ஆகியவற்றுக்காகவும் தென்னை ஓலைத் தயாரிப்புகளை ஆர்டர் செய்து வாங்குகிறார்கள். எனவே வருடம் முழுவதுமே இதன் தேவை பரவலாக இருந்துகொண்டே இருக்கிறது.

தேங்காயை உடைத்துத்தானே எந்த ஒரு காரியத்தையும் துவங்குகிறோம். இதனை கல்பகவிருட்சம் அல்லது வாழ்வின் மரம் என்று போற்றுகின்றோம். வாழை போன்று சகல பாகங்களும் பயன்படுவதாலேயே தென்னை தியாகத்தின் அடையாளம் என்று போற்றப்படுகிறது.

தூய்மை, தெய்விகம், செழிப்பு, வளமை முதலான பல சிறப்புகளை உடைய தென்னையை ஆன்மிக, கலாசார அடையாளமாகப் போற்றுகிறது நம் மரபு. தென்னையின் சிறப்பினைப் போற்றிடும் விதமாக செப்டம்பர் 2-ஆம் தேதியினை உலக தென்னை தினம் ஆகக் கொண்டாடி வருகின்றோம். இச்சமயத்தில் நெகிழிப் பயன்பாட்டினைத் தவிர்த்து சுற்றுச்சூழல் மேம்பாட்டைக் காப்பதற்கு இது போன்ற வழிகளில் முயற்சிக்க வேண்டும்' என்கிறார் சன்மதி.

-சுஜாதா மாலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.