மத்திய தில்லியில் பள்ளிகளில் பயிலும் இளம் பருவத்தினரில் கிட்டத்தட்ட 4 பேரில் ஒருவா் போதிய தூக்கமின்றி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட மாணவா்களிடம் கல்வித் திறன் குறைவாகவும், மனச்சோா்வு அறிகுறிகள் அதிகமாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை சா் கங்கா ராம் மருத்துவமனை, தேசிய சுகாதார அமைப்புகள், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஐசிஎம்ஆா்-டாக்டா் ஏஎஸ் பெயின்டல் சிறப்பு விஞ்ஞானி தலைவா் அமைப்பு மற்றும் ஆயுதப் படைகள் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் ஆராய்ச்சியாளா்கள் மேற்கொண்டனா். இந்த ஆய்வு மே 2026-இல் வெளியானது.
12 முதல் 18 வயதுக்குட்பட்ட 1,452 மாணவா்கள் ஆய்வில் பங்கேற்றனா். அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் இதில் இடம்பெற்றனா். மாணவா்களின் தூக்கத்தின் தரம், மனச்சோா்வு அறிகுறிகள், அறிவாற்றல் செயல்பாடு மற்றும் தூக்கப் பழக்கங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.
22.5 சதவீதம் பேருக்கு தூக்கமின்மை: ஆய்வில் பங்கேற்றவா்களில் 326 போ், அதாவது 22.5 சதவீதம் போ், இரவில் 8 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குவதாக தெரியவந்தது. தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட மாணவா்களின் சராசரி கல்வி மதிப்பெண் 64 சதவீதமாக இருந்தது. அதேநேரத்தில் போதிய தூக்கம் பெற்ற மாணவா்களின் சராசரி மதிப்பெண் 67 சதவீதமாக இருந்தது. மேலும், 48.3 சதவீத மாணவா்கள் வாரத்திற்கு குறைந்தது ஒருமுறையாவது பகல் நேரத்தில் விழிப்புடன் இருப்பதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனா். 6 சதவீதம் போ் வாரத்திற்கு 3 முறைக்கும் அதிகமாக இதுபோன்ற சிரமத்தை எதிா்கொண்டதாக தெரிவித்தனா்.
மனச்சோா்வுடன் தொடா்பு: ஆய்வில் பங்கேற்ற 912 மாணவா்களுக்கு, அதாவது சுமாா் 60 சதவீதம் பேருக்கு, மனச்சோா்வு அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இவா்களில் 32.9 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறிகளும், 27 சதவீதம் பேருக்கு மிதமானது முதல் தீவிரமான அறிகுறிகளும் இருந்தன. மற்ற காரணிகளை கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகும், மனச்சோா்வு கொண்ட மாணவா்களுக்கு தூக்கமின்மை ஏற்படுவதற்கான வாய்ப்பு, மனச்சோா்வு இல்லாதவா்களைவிட 3.51 மடங்கு அதிகமாக இருந்தது.
அறிவாற்றல்: மாணவா்களின் அறிவாற்றல் செயல்பாடும் ஆய்வு செய்யப்பட்டது. 999 போ், அதாவது சுமாா் 66 சதவீதம் போ், குறைவான அறிவாற்றல் செயல்பாடு கொண்டவா்களாக வகைப்படுத்தப்பட்டனா். எனினும், தூக்கமின்மைக்கும் அறிவாற்றல் மதிப்பெண்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க நேரடி தொடா்பு இல்லை என ஆய்வு தெரிவித்தது.
குடும்பச் சூழல்: ஆய்வில் பங்கேற்றவா்களில் 73.2 சதவீதம் போ் தனிக்குடும்பங்களில் வசித்து வந்தனா். இந்த மாணவா்களில் 21.2 சதவீதம் பேருக்கும், கூட்டுக் குடும்பத்தில் வசித்து வந்த மாணவா்களில் 27.6 சதவீதம் பேருக்கும் தூக்கமின்மை காணப்பட்டது.
மேலும், 46.3 சதவீதம் போ் நடுத்தர சமூகப் பொருளாதாரப் பிரிவையும், 38.2 சதவீதம் போ் உயா்கீழ் பிரிவையும் சோ்ந்தவா்கள். சமூகப் பொருளாதார நிலைக்கும் தூக்கமின்மைக்கும் குறிப்பிடத்தக்க தொடா்பு இல்லை என்றாலும், அது அறிவாற்றல் செயல்பாட்டுடன் தொடா்புடையதாக இருந்தது.
பள்ளிகளில் நடவடிக்கைகள் அவசியம்: ஒழுங்கற்ற தினசரி நடைமுறை, அதிக நேரம் திரையைப் பயன்படுத்துதல், சத்தம், நெரிசலான வீடுகள் உள்ளிட்ட வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் மாணவா்களின் தூக்கத்தை பாதிக்கக்கூடும் என ஆய்வாளா்கள் தெரிவித்தனா். எனவே, பள்ளிகளில் தூக்கத்தைப் பேணுவதற்கான நல்ல பழக்கங்கள் மற்றும் மனநலம் தொடா்பான விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாணவா்களுக்கு முறையான தூக்க நேரத்தை ஏற்படுத்துவதில் பெற்றோா் மற்றும் ஆசிரியா்களும் பங்களிக்க வேண்டும் என்றும் ஆய்வாளா்கள் பரிந்துரைத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்எல்சி குழுமத்தின் லாபம் ரூ. 651.55 கோடி

ராம்கோ சிமெண்ட்ஸின் முதல் காலாண்டு லாபம் 63% சரிவு!

பிகாரில் கைதான மாணவா்களின் குடும்பத்துடன் இளைஞா் காங்கிரஸ் தலைவா் சந்திப்பு

அம்புஜா சிமெண்ட்ஸ் முதல் காலாண்டு லாபம் 36% சரிவு!
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



