நகராட்சி: நம்மைச் சுற்றி நடப்பது என்ன?

கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி என்று உள்ளாட்சி அமைப்பின் பல அடுக்குகளைப் பற்றி நாம் வரிசையாக அறிந்துகொண்டு வருகிறோம் அல்லவா? அந்த வகையில் நாம் இனி நகராட்சி அமைப்பைப் பற்றி
நகராட்சி: நம்மைச் சுற்றி நடப்பது என்ன?
Updated on
2 min read

கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி என்று உள்ளாட்சி அமைப்பின் பல அடுக்குகளைப் பற்றி நாம் வரிசையாக அறிந்துகொண்டு வருகிறோம் அல்லவா? அந்த வகையில் நாம் இனி நகராட்சி அமைப்பைப் பற்றி அறிவோம்.

ஒரு நகரம் எப்படி உருவாகியிருக்கும்?

முதலில் அது ஒரு சந்தைபோல இருந்திருக்கும். மக்கள் கூட்டமாகப் பொருட்களை விற்கவும் வாங்கவும் வந்திருப்பார்கள். பொருட்களை விற்கும் வியாபாரிகள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கத் தொடங்கியிருப்பார்கள். அதனால் அந்த இடம் பெரிதாக வளர்ந்திருக்கும். பிறகு அங்கேயே கோயில்கள், குடியிருப்புகள், சாலைகள் முதலியவை தோன்றியிருக்கும்.

அதன் பிறகு இன்னும் பெரிதாக அந்தச் சந்தை வளர்ந்திருக்கும். அந்தச் சந்தையைச் சுற்றிலும் பல கிராமங்கள் இருக்கும் அல்லவா? அந்தக் கிராம மக்களும் சந்தை இருக்கும் இடத்திற்கு வந்து குடியிருக்கத் தொடங்கியிருப்பார்கள். இதனால், சந்தை இருக்கும் அந்த ஊர் மேலும் பெரிதாகியிருக்கும்.

இப்படித்தான் ஒரு நகரம் உருவாகியிருக்கும்.

பழந்தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினம் மிகச் சிறந்த அழகான நகரமாக இருந்திருக்கிறது. சோழர் காலத்தில் தஞ்சாவூர், உறையூர் முதலிய நகரங்கள் அமைக்கப்பட்டிருந்திருக்கின்றன. அந்த நகரங்களில் அழகான மாளிகைகள் நிறைந்த வீதிகள் உருவாக்கப்பட்டிருந்திருக்கின்றன. அதுமட்டும் அல்ல, அத்தகைய நகரங்களின் பிரதிநிதிகளை மக்களே ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். சோழர் காலத்தில் நடைபெற்ற அந்தத் தேர்தல் முறைக்கு குடவோலை முறை என்று பெயர்.

அப்போதே மக்கள் ஆட்சி துளிர்க்கத் தொடங்கிவிட்டது. சோழர் காலத்தின் அந்தத் தேர்தல் முறை பற்றியும், அந்தக் காலத்தின் நகர அமைப்பு பற்றியும் உத்திரமேரூர் கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன.

பிறகு வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில், ரிப்பன் பிரபு நகராட்சி முறையில் சில நிர்வாக ஒழுங்கமைப்புகளை உருவாக்கினார். நகராட்சி அமைப்பு எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து பல சீர்திருத்தங்களை அவர் ஏற்படுத்தினார். ஏறத்தாழ அதே முறையில்தான் நமது இன்றைய நகராட்சி அமைப்பு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ரிப்பன் பிரபு காலத்திற்கு முன்பே 1687 - ஆம் ஆண்டில் சென்னை, நகராட்சி அமைப்பாகச் செயல்பட்டிருக்கிறது.

இந்தியா விடுதலை அடைந்தது. சட்ட மன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், இத்தகைய பிரதிநிதிகளால் மட்டும் மக்களின் தேவைகளைக் கண்டறிந்து, அவர்களது குறைகளைப் போக்கிவிட முடியாது என ஆட்சியியல் வல்லுனர்கள் உணர்ந்தார்கள். அதனால் நகராட்சி அமைப்பு முறை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது. அதற்காகத் தனித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தனியாகத் தேர்தல் நடத்தப்பட்டு உருவாக்கப்படும் இதுபோன்ற உள்ளாட்சி அமைப்புகளால் என்ன நன்மை?

இந்திய அரசும், மாநில அரசும் கொண்டுவரும் திட்டங்களை நேரடியாகவும், உடனடியாகவும் மக்களிடம் கொண்டு வந்து சேர்ப்பவை இத்தகைய "நகராட்சி' போன்ற அமைப்புகள்தான்.

தமிழ்நாட்டில் 1994 - ஆம் ஆண்டு புதிய நகராட்சிச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள் சிலவற்றை மட்டும் இங்கே நாம் பார்ப்போம்.

1. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லாமல் உள்ளாட்சி நிர்வாகத்தை நடத்தக் கூடாது. அதாவது, அரசாங்க அதிகாரிகளே உள்ளாட்சி நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்த முடியாது.

2. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அவசியம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும்.

3. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தலைவர்களாகப் போட்டியிடுவதற்கு இட ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும்.

4. பெண்களும் தலைவர்களாக ஆவதற்கு ஒதுக்கீடு நிர்ணயிக்கப்படவேண்டும்.

நகராட்சித் தலைவர் மற்றும் நகராட்சி செயல்பாடுகள் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com