டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

அழ.வள்ளியப்பா

குழந்தைகளுக்காகத் தொண்டு செய்வதைக் குறிக்கோளாகக் கொண்ட வாழ்ந்தவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா. அவர் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி இது- அவர் எந்த இடத்துக்குச் சென்றாலும் அவரைச் சுற்றி ஒரு மழலைப்

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:36 am

குழந்தைகளுக்காகத் தொண்டு செய்வதைக் குறிக்கோளாகக் கொண்ட வாழ்ந்தவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா. அவர் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி இது-

அவர் எந்த இடத்துக்குச் சென்றாலும் அவரைச் சுற்றி ஒரு மழலைப் பட்டாளம் கூடிவிடும். சிலர் குழந்தைகளுக்குக் கதை சொல்லுவார்கள்; சிலர் பாட்டுப் பாடிக் காட்டுவார்கள்.

ஆனால் குழந்தைகளின் பேச்சையும் கருத்தையும் கேட்க மாட்டார்கள். ஆனால் அழ.வள்ளியப்பா, குழந்தைகளோடு குழந்தையாகவே மாறி பேசிப் பாடி மகிழ்வார்.

குழந்தைகளுக்கு எழுத வேண்டுமானால் குழந்தைகளோடு கலந்து பழக வேண்டும் என்பார். ஞாயிற்றுக் கிழமை மாலை நேரத்தில் கதை கேட்பதற்கு அவருடைய வீட்டுக்கு நிறையக் குழந்தைகள் வருவார்கள். அப்படி வந்த குழந்தைகளில் ஒரு சிறுவனுக்கு அன்று பிறந்த நாள். அவன் புதிய உடையணிந்து வந்திருந்தான். அவனைச் சுற்றியிருந்த குழந்தைகள் தேதி, நட்சத்திரம் போன்றவற்றைப் பற்றி அறியாதவர்கள்.

குழந்தைகளுக்கே உரிய குணத்தோடு, ""நீ ஞாயிற்றுக் கிழமை பிறந்தாயா? நான் வெள்ளிக்கிழமை பிறந்தேன்'' என்றாள் ஒரு சிறுமி.

உடனே ஒரு சிறுவன் நான்,""புதன்கிழமை பிறந்தேன்'' என்றான். இப்படிக் குழந்தைகள் பேசிக் கொண்டிருப்பதை வைத்தே அவர் ஒரு பாடல் எழுதினார்-



ஞாயிற்றுக்கிழமை பிறந்த பிள்ளை

நன்றாய்ப் பாடம் படித்திடுமாம்

திங்கட்கிழமை பிறந்த பிள்ளை

தினமும் உண்மை பேசிடுமாம்

செவ்வாய்க்கிழமை பிறந்த பிள்ளை

செய்வதை ஒழுங்காய்ச் செய்திடுமாம்

புதன்கிழமை பிறந்த பிள்ளை

பெற்றோர் சொல்படி நடந்திடுமாம்

வியாழக்கிழமை பிறந்த பிள்ளை

மிகவும் பொறுமை காட்டிடுமாம்

வெள்ளிக்கிழமை பிறந்த பிள்ளை

வேண்டும் உதவிகள் செய்திடுமாம்

சனிக்கிழமை பிறந்த பிள்ளை

சாந்தமாக இருந்திடுமாம்

இந்தக் கிழமை ஏழுக்குள்

எந்தக் கிழமை நீ பிறந்தாய்?

என்று குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பாடலை முடித்திருப்பார்.

இப்பாடலைக் கதை கேட்க வந்த குழந்தைகளும் அவருடைய குழந்தைகளும் பாடி மகிழ்ந்தனர்.

சிறிது நாட்கள் கழித்து, ஒருநாள் அவருடைய மகன், பள்ளியில் ஏதோ ஒரு விழாவுக்காகப் பணம் கேட்டபோது, தன் அப்பாவிடம் வந்து பணம் கேட்டார்.

அவர் ஏதோ ஞாபகத்தில் உண்மையாகவா? என்று கேட்டுவிட்டார்.

உடனே, அவர் மகன் ""திங்கட்கிழமை நான் பிறந்தேன். தினமும் உண்மை பேசிடுவேன்'' என்றார்.

இப்படி அவருடைய பாடல்கள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாது குழந்தைகளை நல்வழியில் அழைத்துச் செல்வதாகவும் நல்ல பல செய்திகளை விளையாட்டுப் போக்கில் கற்றுக் கொடுப்பதாகவும் இருக்கும்.

இன்று அவர் இல்லாவிட்டாலும் அவருடைய வழியில் நடப்போம்.

-தந்தை வள்ளியப்பா வாழ்வில் நடந்த சுவையான

நிகழ்ச்சிகளை அவரது மகள் தேவி நாச்சியப்பன்

நினைவு கூர்ந்ததைக் கேட்டு எழுதியவர்

எம்.ஜி.விஜயலட்சுமி கங்காதரன்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.