/

touch ஸ்க்ரீன்

உலகிலேயே மிகப் பழையவை எவை என்று கேட்டால் அதிகம் யோசிக்காமல் சொல்ல வேண்டிய ஒரு பதில் - பாறைகள்.

News image
Updated On :26 ஏப்ரல் 2013, 7:42 am

டி.எஸ்.​ஆர். வெங்​கட்​ர​ம​ணா​​

கூல் நியூஸ்...
உலகிலேயே மிகப் பழையவை எவை என்று கேட்டால் அதிகம் யோசிக்காமல் சொல்ல வேண்டிய ஒரு பதில் - பாறைகள். பூமியின் வயது, பூமியில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் போன்ற தகவல்கள் பாறைகளில் படிந்திருக்கின்றன.
அதே போல, வட, தென் துருவங்களில் உள்ள பனியிலும் பூமியின் ரகசியங்கள் புதைந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
அதையும் ஆராய்ந்து பார்த்துவிடுவோம் என்று நான்ஸி பேர்ட்லர் முடிவு செய்தார். இவர் ஜெர்மனியில் படித்துவிட்டு நியூசிலாந்துக்கு ஆராய்ச்சி செய்ய வந்தவர்.
அவரும் அவருடன் ஒரு விஞ்ஞானிகள் குழுவும் அண்டார்டிகாவுக்கு சென்றது.
அங்கு ரூஸ்வெல்ட் தீவில் உள்ள பனியின் பருமன் ஏறத்தாழ ஆயிரம் மீட்டர். அண்டார்டிகாவின் ஆழங்களில் புதைந்திருக்கும் பனியின் மையப்பகுதி கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வருஷங்கள் பழசு என்று சொல்லலாம். அந்த மையப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சாம்பிள்களை தோண்டி எடுத்துக் கொண்டு நான்ஸி பேர்ட்லரும் அவருடைய விஞ்ஞானிகள் குழுவும் நியூசிலாந்தின் வெலிங்டன் நகர் அருகில் உள்ள ஆராய்ச்சிக் கூடத்துக்கு எடுத்து வந்திருக்கின்றனர். ஒவ்வொரு சாம்பிளும் ஒரு கிரிக்கெட் மட்டையின் நீளம், அகலம் கொண்டது.
இந்த தொன்மையான பனிக்கட்டி ஒன்றில் கடல் உயிரினத்தின் அடையாளம் உறைந்திருக்கிறது என்று நம்புகிறார்கள். ஆனால் இதை உறுதி செய்ய மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கிறது.
இந்த ஆராய்ச்சியின் ஒரு முக்கிய நோக்கம் - உலக வெப்பமயமாதல் குறித்து அண்டார்டிகாவின் பனிக்கூறுகள் நமக்கு என்ன சொல்லித் தர முடியும் என்று தெரிந்துகொள்வது.
இப்போது உலகின் ஒட்டுமொத்த வானிலையில் ஏற்பட்டு வரும் மாறுதலின் முதல் தாக்கம் பற்றி வட, தென் துருவங்களில் இருக்கும் பனிப்படலங்கள் உருகுவதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
அண்டார்டிகாவில் உள்ள மிகப் பெரிய பனிப்படலம் ஒன்றின் பெயர் - ராஸ் பனிப்படலம். இதன் பரப்பு சுமார் 4,87,000 சதுர கிலோமீட்டர்.
வெப்பம் அதிகரித்து வருவதைக் கொண்டு பார்க்கும்போது, தற்போது உலகம் வெப்பம் அடைந்துவரும் வேகத்தில் இது உருகுவது நிச்சயம். ஆனால் இந்த ராஸ் படலம் உருகுவதற்கு ஐம்பது வருஷங்கள் ஆகுமா அல்லது ஐந்நூறு வருஷங்கள் ஆகுமா தெரியாது. இது போன்ற கேள்விக்ளுக்கு விடைகள் கிடைக்க நான்ஸி பேர்ட்லரின் ஆராய்ச்சி உதவும்.
 

ஹை-டெக் சட்டை

இது ஒரு நவீன ஃபேஷன் சட்டை என்பது தெரிகிறது. ஆனால் எல்லா நவீன சட்டை போல இதைச் சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது.
இதன் ஒரு பகுதியில் தட்டினால், இசைப்பதற்கான ஒரு தாளத்தை தொடங்கலாம். சட்டையின் வேறு பகுதியைத் தேய்த்தால் தாளத்தையே மாற்றலாம். கையைத் தூக்கினால் தாளத்தின் வேகத்தைக் கூட்டலாம்.
நம் உடலைக் கொண்டு இசையை உருவாக்கலாம், கட்டுப்படுத்தலாம். இந்த உடைக்கு "மெஷீனா' என்று பெயர். இதனை மெக்சிகோ சிட்டியைச் சேர்ர்ந்த ஒரு டிசைனர் குழு உருவாக்கியிருக்கிறது.
அணிந்துகொள்ள முடிகிற, நிஜமான நேரடிப் பயன்பாடு உள்ள தொழில்நுட்பத்தை உருவாக்க முடியுமா என்று இதன் பிரதம வடிவமைப்பாளர் அன்டோனியோ மஷினா தன்னையே கேட்டுக் கொண்ட கேள்வியின் விளைவாக இதை உருவாக்கியிருக்கிறார்.
இது அணிந்துகொள்ளக் கூடிய ஒரு இயந்திரம். இதில் பொருத்தப்பட்டுள்ள சென்சர்கள், ஜாய்ஸ்டிக் ஆகியவற்றை இசையை உருவாக்குவதற்குப் பதில் வேறு ஏதாவது பயன்பாட்டுக்கும் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த இயந்திரச் சட்டையை அணிந்துகொண்டிருப்பவருக்கு மின்காந்த பாதிப்புகள் நேராமல் இருக்க விசேஷ தொப்பி ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
இலவச மென்பொருள், கம்ப்யூட்டரின் மூல மென்பொருள்களில் வெளிப்படைத்தன்மை, உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றத்தில் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றில் மிகத் தீவிர பற்றுக் கொண்டு செயல்படுபவர்களில் அன்டோனியோ மெஷினாவும் ஒருவர். இவர் நம்ம ஆளு.

நல்லா கேளுங்க

• மனித உடலில் காணப்படும் முடியும் மிருகங்களின் உடலில் உள்ள முடியும் ஒன்றே. கெரடின் என்கிற புரதத்தினால் உருவானதுதான் இரண்டுமே.
 
• எல்லா பாலூட்டி உயிரினங்களுக்குமே அவற்றின் ஆயுளில் ஏதாவது ஒரு கட்டத்தில் உடலில் முடி இருந்துள்ளது. திமிங்கலங்கள் பிறக்கும்போது அவற்றின் உடலில் முடி இருக்கும். முள்ளம்பன்றிக்கும் பிறக்கும்போது உடல் முழுவதும் ஒரு வித முடி உள்ளது.
 
• வேட்டையாடும் ஒரு வித எட்டுகால் பூச்சியின் காலில் உள்ள ரோமங்கள்தான் அவற்றுக்குக் காதுகளாகப் பயன்படுகின்றன. சிள்வண்டு இனத்தைச் சேர்ந்த ஒரு பூச்சிக்கும் காலில் உள்ள ரோமங்களே காதாகச் செயல்படுகின்றன. ஓர் ஒலி ஏற்படுத்தும் காற்று அதிர்வுகள், காலில் உள்ள ரோமங்களில் உண்டாக்கும் அசைவுகளைக் கொண்டு அவை அந்த ஒலிகளைக் கேட்கின்றன. தேனீ போன்ற மற்றொரு சிறு பூச்சி உண்டாக்கும் சப்தமானாலும் ஒரு கார் ஹாரன் ஆனாலும் இந்தக் காதுகள் மூலமாகவே கேட்கின்றன.
 
• நாம் எப்போது விழித்திருக்கிறோம், எப்போது தூங்குகிறோம் என்பதெல்லாம் நமது முடிக்கு நன்றாகத் தெரியும். நமது உடலின் வழக்கம் தவறாத சுழற்சியான செயல்பாடுகளைப் பற்றி முடியின் அடியிலுள்ள திசுப்பைகளை ஆராய்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
 
• ஒரு முடியை தலையிலிருந்து பிய்த்து எடுத்தால் அதன் அடியில் ஒரு திசுப்பை இருக்கும். ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் ஒரு மனிதனின் தலையிலிருந்து பிய்த்து எடுக்கப்பட்ட முடிகளின் அடியில் உள்ள திசுப்பையில் இருக்கும் மரபணுக்கள் மூலம் அந்த மனிதனின் விழிப்பு-உறக்கம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
 
• நீங்கள் காவேரித் தண்ணீரைக் குடித்தாலும் சரி, கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் கலர் சோடா குடித்தாலும் சரி, உங்கள் முடி அதை ஞாபகம் வைத்திருக்கும். நீங்கள் பொய் சொன்னாலும் உங்கள் முடி உங்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.