குட்டி மொழிபெயர்ப்பாளர்!
தமிழ்ல நாம் நிறையக் கதைகள் படிக்கிறோம். ஆனால் படிச்ச கதைகளை எப்பவாவது ஆங்கிலத்தில் எழுதிப் பார்த்திருக்கிறோமா? உங்கள் வயதில் இருக்கிற ஒரு சிறுமி தமிழில் இருக்கிற கதைகளை ஆங்கிலத்தில் எழுதிப் பார்த்தது.


தமிழ்ல நாம் நிறையக் கதைகள் படிக்கிறோம். ஆனால் படிச்ச கதைகளை எப்பவாவது ஆங்கிலத்தில் எழுதிப் பார்த்திருக்கிறோமா? உங்கள் வயதில் இருக்கிற ஒரு சிறுமி தமிழில் இருக்கிற கதைகளை ஆங்கிலத்தில் எழுதிப் பார்த்தது. என்ன ஆச்சரியம்! அப்படி எழுதிப் பார்த்த கதைகள் புத்தகமாகவும் வெளிவந்துருச்சு. இப்ப என்னடான்னா நல்ல குழந்தை இலக்கிய மொழிபெயர்ப்புன்னு அந்தப் புத்தகத்தைப் பாராட்டி நல்லி - திசை எட்டும் மொழியாக்க விருது கொடுத்திருக்காங்க. எங்கே? யாருன்னு தெரிஞ்சுக்க ஆவலாக இருக்கா? சொல்றேன்...
சென்னையில் தியாகராயநகர்ன்னு ஓர் இடம் இருக்கு. அங்க இருக்கிற "வித்யோதயா மெட்ரிக்குலேஷன் ஹையர் செகண்டரி பள்ளி'யில் நாலாம் வகுப்பு படிக்கிறவர்தான் வி.சைதன்யா. இவரோட அப்பா பேர் கே.பி.வினோத், அம்மா எஸ்.எஸ்.விஜி. சைதன்யாதான் தமிழ்ல இருக்கிற கதைகளை ஆங்கிலத்தில் எழுதி பரிசு வாங்கினவர். பரிசு வாங்கின கதையை அவர்ட்டயே கேட்போமே?
"எனக்கு கதைகள்ன்னா ரொம்ப பிடிக்கும். குட்டிப் பாப்பாவா இருக்கிறப்பவே எங்கம்மா நெறைய கதைகள் சொல்வாங்க. கதை கேட்டுக்கிட்டே அப்படியே தூங்கிடுவேன். அப்புறம் என்னை ஸ்கூல்ல சேர்த்தாங்க. நாங்க எங்க வீட்டில மலையாளத்திலதான் பேசுவோம். ஆனால் நான் நல்லா தமிழ் படிக்கணும்ன்னு அம்மா நினைச்சாங்க. அதுக்காக நான் ஸ்கூல்ல சேர்ந்தவுடனேயே தமிழ் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சாங்க. முதல்ல ரெண்டு எழுத்து வார்த்தை. அப்புறம் மூன்று எழுத்து வார்த்தைன்னு கொஞ்சம் கொஞ்சமா தமிழ் கத்துக்க ஆரம்பிச்சேன். ரொம்ப இன்ட்ரஸ்ட் ஆயிடுச்சு. அப்புறம் எங்க அப்பா எனக்கு நிறைய காமிக்ஸ் புக்ஸ், ஸ்டோரி புக்ஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. அதனாலே கதைகள்ன்னா எனக்கு உயிர்.
போன வருஷம் நான் பஞ்சதந்திரக் கதைகள்ன்னு ஒரு தமிழ் புத்தகம் படிச்சேன். அதுல ஒரு கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அதை அப்படியே இங்கிலீஷ்ல எழுதிப் பார்த்தேன். அப்பாகிட்ட காட்டினேன். அவர் அதைப் படிச்சுப் பார்த்துட்டு, ""ரொம்ப நல்லா எழுதியிருக்கேன்னு பாராட்டினார்''. எனக்கு ஐஸ் க்ரீம் சாப்பிட்டது மாதிரி சந்தோஷமா இருந்துச்சு.
அதுக்குப் பின்னால "கால்முளைத்த கதைகள்'ங்கிற சின்னப் பசங்க கதைப் புத்தகத்தை எனக்கு வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அந்தப் புத்தகத்தில் இருந்த கதைகள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுப் போச்சு. உடனே ஒவ்வொரு கதையா இங்கிலீஷ்ல எழுதிப் பார்த்தேன். தெரியாத வார்த்தைகளை டிக்ஷனரியில் பார்ப்பேன். அம்மா, அப்பா கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குவேன். போன வருஷம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் லீவு விட்டாங்களா? அப்ப லீவை வேஸ்ட் பண்ணாம அந்தப் புத்தகத்தில் இருந்த எண்பது கதைகளையும் இங்கிலீஷ்ல எழுதி எங்க அப்பாகிட்ட கொடுத்தேன்.
எங்க அப்பா படிச்சுப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார். அப்போது ஜெயமோகன் அங்கிள் - எங்க அப்பாவுக்கு ஃபிரண்ட் - எங்க வீட்டுக்கு வந்தார். அவர் பெரிய ரைட்டர்ன்னு அப்பா சொல்வாங்க. அவர் நான் எழுதினதைப் படிச்சுப் பார்த்துட்டு ""ரொம்ப ரொம்ப நல்லாருக்கு. இதை தமிழ்ல எழுதின எஸ்.ராமகிருஷ்ணனைப் பார்த்துக் காட்டுங்க''ன்னு சொன்னார்.
அவர் சொன்னபடி நாங்க எஸ்.ராமகிருஷ்ணன் அங்கிளைப் போய்ப் பார்த்தோம். அவருக்கு சந்தோஷம் தாங்க முடியலை. அவர்தான் பப்ளிஷர்ஸிடம் சொல்லி புத்தகமாகக் கொண்டு வர ஹெல்ப் பண்ணினார். இந்த வருஷம் மார்ச் மாதம் சர்ற்ட்ண்ய்ஞ் க்ஷன்ற் ரஹற்ங்ழ் என்ற பெயரில் புத்தகமா வெளி வந்துச்சு. உடனே எல்லாரும் வாங்கிட்டாங்க.
நான் இப்பிடி தமிழ்க் கதைகளை இங்கிலீஷ்ல எழுதுறதைத் தெரிஞ்சிக்கிட்ட எங்க ஸ்கூல் பிரின்ஸிபால், உடனே ஆடிட்டோரியத்தில் எல்லா ஸ்டூடன்ட்ஸýக்கும் சொன்னாங்க. ஸ்கூல்ல நான் ஃபேமஸ் ஆயிட்டேன்.
இப்ப இந்தப் புத்தகத்துக்கு விருது கொடுத்துட்டாங்களா? ரொம்ப ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டேன். என் கூடப் படிக்கிற பக்கத்து கிளாஸ்ல படிக்கிற } எல்லாரும் என்கிட்ட கன்கிராஜுலேஷன் சொன்னாங்க. என்னோட ஒரு ஃபிரண்ட் மட்டும் என்கிட்ட வந்து ""சர்ற் ஹ ச்ழ்ண்ங்ய்க்''ன்னு சொன்னா. பொறாமை.
இப்ப ஸ்கூல்ல ஒரு மேகஸின் கொண்டு வரப் போறாங்க. அந்த மேகஸினுக்கு எடிட்டரா என்னைப் போட்டிருக்காங்க. என் ஃபிரண்ட்ஸ் இரண்டு பேரை ஃபர்ஸ்ட் எடிட்டராவும், செகண்ட் எடிட்டராகவும் போட்டிருக்காங்க. ஸ்கூல்ல படிக்கிறவங்க எழுதற கதைகள், போயம்ஸ் எல்லாவற்றையும் படிச்சுப் பார்த்து செலக்ட் பண்ணிக் கொடுக்கணுமாம்'' மகிழ்ச்சியாகச் சொல்கிறார் சைதன்யா.
சைதன்யாவை வெறும் புத்தகப் புழு... பூச்சி... எறும்புன்னு நினைச்சிடாதீங்க. அவர் கராத்தேவில் ப்ரெüவ்ன் பெல்ட் வாங்கியிருக்கிறார். கர்நாடக சங்கீதத்தில் பாட்டு கிளாஸýக்குப் போயிருக்கார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி என ஐந்து மொழிகள் தெரியும். அது மட்டுமா? ஒரு சினிமாவிலும் கூட நடித்திருக்கிறார். மிஷ்கின் என்ற டைரக்டர் எடுத்த "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'ங்கிற படத்தில் கண் தெரியாத பாப்பாவாக நடிச்சிருக்கிறாராம். இதுக்கெல்லாம் எப்படி நேரம் இருக்குதுன்னு கேட்குறீங்களா?
சைதன்யாவே சொல்கிறார்:
""நான் ஸ்கூல்லயே ஹோம் ஒர்க் முடிச்சிடுவேன். வீட்டுக்கு வந்து மேத்ஸ் மட்டும் போட்டுப் பார்ப்பேன். பாட்டு கிளாஸ் போயிட்டு வருவேன். மிச்ச நேரம் எல்லாம் புக்ஸ் படிப்பேன். எங்க வீட்டில் யாரும் டி.வி. பார்க்க மாட்டாங்க. கம்ப்யூட்டர் கேம்ஸ், வீடியோ கேம்ஸ் எல்லாம் கிடையவே கிடையாது. எங்க அப்பாவுக்கு லிட்டரேச்சர்ல ரொம்ப இன்ட்ரஸ்ட். அவர் கூட தமிழ்ல ஒரு புக் டிரான்ஸ்லேட் பண்ணியிருக்கிறார். புக் பேரு... பேரு... "இந்துமதம் விவேகிக்கான வழிகாட்டி'ங்கிற புக்.''
சைதன்யாவைப் பார்த்துவிட்டு அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும்போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. உங்களுக்கும்தானே?
அட்டை வண்ணப்படம் மற்றும் படங்கள் : யோகா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...