முத்துக் கதை

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை தொடங்கியதும், கார்முகிலன் தன் நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாட எண்ணினான்.
Published on
Updated on
1 min read

நவீன தேவதை

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை தொடங்கியதும், கார்முகிலன் தன் நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாட எண்ணினான். ஸ்டெம்புகளுக்காக மூன்று மரக்குச்சிகளைத் தேடியலைந்த அவன், ஆற்றங்கரையில் வரிசையாக வளர்ந்திருந்த மரங்களிலிருந்து வெட்டிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான்.
 மரத்தின் மீது ஏறி ஒரு கிளையை வெட்டிக் கொண்டிருந்தபோது, கைதவறி அவன் வெட்டிக் கொண்டிருந்த கத்தி ஆற்றினுள் விழுந்தது.
 ""ஐயையோ! புதுக் கத்தியாயிற்றே! அம்மாவுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான்...'' என்று வருத்தப்பட்ட அவனுக்கு சின்ன வயதில் படித்த மரம்வெட்டியும் கோடரியும் கதை நினைவுக்கு வந்தது. அந்தக் கதையில் வந்தது போலத் திடீரென ஒரு தேவதை வந்து நின்றால் எப்படியிருக்கும் என்று கார்முகிலன் நினைத்துப் பார்த்தான்.
 அடுத்த நொடி, அந்த ஆற்றுக்குள்ளிருந்து ஒரு தேவதை கிளம்பி வெளியே வந்தது.
 கார்முகிலனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ""தேவதை.... தேவதை....'' என்று ஆனந்தக் கூச்சலிட்டான்.
 ""அடுத்து என்ன நடக்குப்போகுதுன்னு எனக்குத் தெரியும். தேவதை தங்கக் கத்தியை எடுத்து உன்னுடையதா என்று கேட்கும்.... நான் இல்லை என்பேன்.... பின்பு வெள்ளிக் கத்தியை எடுத்து உன்னுடையதான்னு கேட்கும். நான் மறுப்பேன். கடைசியாக எனது கத்தியை எடுத்துக் கேட்கும்போது ஆமாம் என்பேன். உடனே எனது நேர்மையைப் பாராட்டி மூன்றையும் எனக்கே கொடுத்துவிட்டுப் போய்விடும்...'' என்று கார்முகிலன் கற்பனை செய்து முடிப்பதற்கும், அந்த தேவதை "தோழா...' என்று குரல் கொடுப்பதற்குச் சரியாக இருந்தது.
 தேவதையைப் பார்த்த முகிலனுக்குப் பேரதிர்ச்சி! தேவதையின் கையில் ஒன்றுமில்லை.
 தேவதை பேச ஆரம்பித்தது - ""தோழா, பள்ளி மாணவனாக இருந்துகொண்டு அதுவும் பசுமைப்படை போன்ற அமைப்புகளில் இருந்துகொண்டு மரங்களை நீயே வெட்டலாமா? ஒரு மரத்தை நீ வெட்டினால் அதைச் சுற்றியுள்ள தாவரங்களும் அதைச் சார்ந்துள்ள உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகும். மழையின்போது, மண்ணரிப்பு ஏற்பட்டு நிலவளம் பாதிக்கப்படும். விளையாடுவதற்கு. இயற்கையாக கீழே விழுந்துகிடக்கும் சிறு குச்சிகளை நீ பயன்படுத்திக் கொள்ளலாம். தழைத்து, செழித்து வளர்ந்திருக்கும் பச்சை மரக்கிளைகளை நீ வெட்டுவது பாவச்செயல்'' என்றது.
 தனது தவறை உணர்ந்த கார்முகிலன், ""மன்னிச்சுக்கோங்க... நான் இனிமே மரங்களை வெட்ட மாட்டேன்'' என்றான்.
 தேவதை சிரித்துக்கொண்டே, ஆற்றில் விழுந்த அவனுடைய கத்தியையும் அத்தோடு ஒரு மரக்கன்றையும் கொடுத்து, ""இந்த ஆற்றின் கரையோரம் இந்த மரக்கன்றை நட்டுவிட்டுப் போ...'' என்று கூறி மறைந்தது.
 -புதுவைப் பிரபா, புதுச்சேரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com