touch ஸ்க்ரீன்
அமெரிக்க கடற்படையின் போர்க் கப்பல் ஒவ்வொன்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டெனாக்கள் விண்ணில் எப்போதும் சிக்னல்களை தேடிக் கொண்டிருக்கின்றன.


டி.எஸ்.ஆர். வெங்கட்ரமணா
நீரைக் கொண்டு ஒரு ஆண்டெனா
அமெரிக்க கடற்படையின் போர்க் கப்பல் ஒவ்வொன்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டெனாக்கள் விண்ணில் எப்போதும் சிக்னல்களை தேடிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் பிரதான வேலை போர்க் கப்பல்களில் உள்ள அதிநவீன ஆயுதங்களுக்கான சிக்னலை அனுப்புவதும் பெறுவதும்தான். அத்துடன் அடிப்படை தகவல் தொடர்பும் இவற்றின் முக்கிய பணிகளாக இருக்கின்றது.
இந்த ஆண்டெனா ஒவ்வொன்றும் இருபது மீட்டர் அல்லது அதற்கும் அதிகமான உயரமுள்ளவை. எத்தனை ஆண்டெனாக்கள் இருந்தால் என்ன? இவை அத்தனையும்கூட அமெரிக்க கடற்படைக்குப் போதாது! இன்னும் வேண்டும்... நிறைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் சரிதான். இந்த ஆண்டெனாக்களையெல்லாம் எங்கே வைப்பது? கப்பலில் எவ்வளவுதான் வைக்க முடியும்? ஆண்டெனாக்களை ஒன்றின் அருகே மற்றொன்று என்று அடுக்கிவிட முடியாது. அவ்வாறு அமைக்கப்படுமானால் சிக்னல் இடையூறு ஏற்படும். அதிலும் கடற்படையின் போர் விமானக் கப்பலில் கூடுதல் ஆண்டெனாக்கள் என்றால் அந்தக் கப்பல்களிலிருந்து விமானங்கள் புறப்படவும், இறங்கவும் தடை ஏற்படும்.
அதிக ஆண்டெனாக்களையும் அமைக்க முடியாது, அதன் தேவையையும் குறைக்க முடியாது என்கிற சங்கடத்திலிருந்து மீள்வதற்கு என்ன வழி என்று அமெரிக்க விண்வெளி மற்றும் கடற்படை தளவாடங்கள் கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்த முப்பது விஞ்ஞானிகள் பல்வேறு மாற்று வழிகளைப் பற்றி ஆராயத் தொடங்கினார்கள்.
அந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் ஒரு நாள் குளித்துக் கொண்டிருக்கும்போது பள்ளிக்கூடத்தில் படித்த ஒரு பழைய பாடம் அவருடைய நினைவுக்கு வந்தது:
உப்பு கலந்த நீரில் சோடியம் மற்றும் குளோரைடு சேரும்போது அது மின்கடத்தியாக செயல்படுகிறது என்பது ஒரு சோதனைக் கூட உண்மை. இதே கோட்பாட்டை ஆண்டெனாவில் பொருத்திப் பார்க்கலாமே? கடல் நீர் உப்பு கலந்ததுதானே என்று அவர் யோசித்தார்.
கிணற்றடியில் உபயோகப்படுத்தப்படும் சிறு பம்ப், ஒரு ரப்பர் குழாய் ஆகியவற்றை வைத்துக் கொண்டு நான்கு மீட்டர் உயரத்துக்கு உப்பு கலந்த நீரைப் பீய்ச்சி அவர் ஒரு சோதனை நடத்தினார்.
அதில் உருவான நீர் ஊற்றில் மின்னோட்டம் தரும் மின்சுருள் ஒன்றையும் சிக்னலை அனுப்ப ஒரு ரேடியோ ஆண்டெனாவையும் இணைத்தார். மின்சுருள் நடுவே நீரைப் பீய்ச்சும்போது, இந்த நீர் வழியே மின் காந்தத் தூண்டுதல் முறையில் மின்சாரம் கடத்தப்படுகிறது. இதன் மூலம் சிக்னல் அனுப்ப முடியும் என்பது தெரிய வந்தது.
ஆனால் இது நான்கு மீட்டர் உயரமே உள்ள நீர் ஊற்று என்பதால் பலகீனமான ரேடியோ சிக்னலை வெளிப்படுத்தியது.
"குட்டி நீர் ஆண்டெனா' உருவாகிவிட்டது! நீர் ஊற்றின் உயரத்தைக் கூட்டிக் குறைப்பதன் மூலம் இந்த ஆண்டெனாவின் திறனை வேண்டிய அளவுக்கு மாற்றிக் கொள்ள முடியும் என்பது புரிந்தது.
இந்த குட்டி நீர் ஆண்டெனாவைத் தொடர்ந்து சரி செய்ததில் ஐம்பது கி.மீ. தொலைவுக்கு சிக்னல் அனுப்ப முடிந்தது. 24 மீட்டர் உயர நீர் ஊற்று மூலம் சிற்றலை வரிசை ரேடியோ சிக்னல்கள் அனுப்ப முடிந்தது.
ஒரு உப்பு நீர் ஊற்று ஆண்டெனா மூலம் தற்போது உபயோகத்தில் இருக்கும் எட்டு தாமிர ஆண்டெனாக்களின் வேலையைச் செய்ய முடியும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இந்த நீர் ஆண்டெனாவை எதிரி ஆண்டெனா கண்டுபிடிக்க முடியாது என்பது மற்றொரு சாதகமான விஷயம்.
எல்லாம் சரிதான். இதெல்லாம் ஆய்வுக்கூட சமாசாரங்கள். நடுக்கடலில் அத்தனை உயரத்துக்கு நீரைப் பீய்ச்சும்போது அது நிமிர்ந்து நேராக நின்று சிக்னல் அனுப்புமா? காற்றில் அது கலைந்துவிடாதா? என்ற கேள்வி எழும்.
தெளிவான நீண்ட பிளாஸ்டிக் குழாய்க்குள் பீய்ச்சப்படும் நீர் மூலமாகவும் இது போல ரேடியோ சிக்னல் அனுப்பலாம் என்று தெரிய வந்தது. அப்படியென்றால் கடலில் மட்டும் அல்லாமல் நிலத்திலும் இதுபோன்ற ஆண்டெனாக்களைப் பயன்படுத்தலாம்.
கடலில் உப்பு நீருக்குப் பஞ்சம் இல்லை. நிலத்தில் சாதாரண நீரில் சிறிது உப்பு கலந்தாலே போதும், ஆண்டெனாவுக்குத் தேவையான நீர் கிடைத்துவிடுகிறது என்றும் சொல்கிறார்கள்.
மிக நீ...ண்ட நாவல், நீ...ண்ட ஆடியோ சிடி
உலகின் மிக நீண்ட நாவல் "ரிமம்பரன்ஸ் ஆஃப் திங்ஸ் பாஸ்ட்'. உலகின் மிகச் சிறந்த நாவலும் இதுதான் என்று பலர் சொல்கிறார்கள். மூவாயிரம் பக்கங்கள் கொண்ட இந்த பிரெஞ்சு நாவலை எழுதியவர் மார்செல் ப்ரூஸ்ட்.
1870-1871 கால கட்டத்தில் நடந்த பிரான்ஸ்-ஜெர்மன் யுத்த சமயத்தில் தொடங்கி, முதல் உலகப் போர் வரையிலான கால கட்டம் வரை நடக்கும் கதையை ஏழு பாகங்களில் எழுதினார் ப்ரூஸ்ட். 1909-ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி 1922-ஆம் ஆண்டு இதனை எழுதி முடித்தார். 1913-ஆம் ஆண்டிலிருந்து புத்தகமாக வெளிவரத் தொடங்கிய இந்த நாவலின் இறுதிப் பகுதி 1927-இல் வெளியாகியது.
இந்த மிக நீ...ண்ட நாவலின் ஆங்கில மொழியாக்கம்தான் இப்போது மிகவும் நீ...ண்ட ஆடியோ சிடியாக வெளிவந்துள்ளது. 120 சிடிக்களில் இந்த முழு நாவலும் ஒலிப்பதிவு செய்து வெளியிடப்பட்டிருக்கிறது. 153 மணி நேரம் ஒலிக்கக்கூடிய இதுவே உலகின் மிக நீண்ட ஆடியோ சிடி.
இந்த சிடிக்காக நாவலை வாசித்திருப்பவர் நெவில் ஜேசன் என்கிற பிரபல பிரிட்டிஷ் நாடக நடிகர். சிறந்த ஆங்கில உச்சரிப்புக்காக பல விருதுகளை இந்த 78 வயதுக்காரர் வென்றுள்ளார். மேடை நாடகங்கள் தவிர பிபிசி ரேடியோ நாடகங்கள் பலவற்றின் மூலம் பிரபலமானவர் இவர். பிளேட்டோ, சாக்ரடீஸ் போன்ற கிரேக்க தத்துவ
ஞானிகளின் நூல்களயும் தாமஸ் ஹார்டி போன்ற தலைசிறந்த ஆங்கில நாவலாசிரியர்களின் நாவல்களையும் ஆடியோ சிடிக்களுக்காக வாசித்திருக்கிறார்.
"ரிமம்பரன்ஸ் ஆஃப் திங்ஸ் பாஸ்ட்' முழுப் புத்தகத்தையும் ஜேசனின் குரலில் ஒலிப்பதிவு செய்ய 45 நாட்கள் ஆயிற்று. சி.கே. ஸ்காட் மான்கிரீஃப் என்பவர் இதனை ஆங்கிலத்தில் மொழிமாற்றினார். அவருடைய ஆங்கில மொழியாக்கம் முழுமையானதல்ல. நாவலின் ஏழாம் பாகத்தை அவர் மொழிபெயர்க்கவில்லை. ஏழாம் பாகத்தை நெவில் ஜேசனே மொழிபெயர்த்து வாசித்தார் என்பது இதில் குறிப்பிடத்தக்க முக்கியமான அம்சம்.
இந்த நாவலின் மற்றொரு சிறப்பு - ப்ரூஸ்டின் எழுத்து நடை. உரையாடல் அல்லாத ஒரு முழு பக்க அளவு விவரங்களை கேட்பவருக்கு நெருடல் இல்லாமல் வாசித்துள்ளார் ஜேசன்.
ஒரு பக்க அளவுக்கு மிக நீண்ட வரிகளை வாசிக்கும்போது, தொடக்கமும் முடிவும் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை நிச்சயம் செய்து கொண்டாராம். நடுவில் ஏற்ற இறக்கங்களை இசைபோல நினைத்து வாசித்தாராம். இதுவும் அவருக்கு சுலபமாக இருந்ததற்கு காரணம், அவர் முறையாக இசை பயின்றவர்.
நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள், ஃபிரான்ஸின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், சமூகத்தில் பல்வேறு நிலையில் இருப்பவர்கள் என்பதால் பல விதமான உச்சரிப்புகள் உள்ளவர்கள் நாவலில் இருந்தனர். இவற்றையெல்லாம் வாசிப்பது பெரும் சவாலாக இருந்தது.
நாவலின் ஓர் இடத்தில் சமூகத்தின் உயர் நிலையிலிருக்கும் பல பெண்கள் கூடிப் பேசும் நிகழ்வு ஒன்று உள்ளது. இந்தப் பெண்களின் குரல்களை இயன்றவரை வித்தியாசப்படுத்திப் பேசியிருக்கிறார் என்று விஷயம் தெரிந்தவர்கள் ஜேசனைப் பாராட்டுகிறார்கள்.
இந்த நாவலின் சுருக்கிய வடிவை வெறும் 36 சிடிக்களில் இதற்கு முன்பு இவரே ஒலிப்பதிவு செய்துள்ளார். அதன் கடைசி சிடி 2001-இல் வெளியாகியது.
இந்த நாவல் முழுவதையும் ஆடியோவாக ரெக்கார்டு செய்ய வேண்டுமென்று சொன்னதும் முதலில் யோசித்தார் ஜேசன். அவரை உற்சாகப்படுத்த, மற்றொரு பெரிய நாவலான லியோ டால்ஸ்டாயின் "வார் அண்ட் பீஸ்' படிக்க வைத்து ஒலிப்பதிவு செய்து விட்டார் இதன் தயாரிப்பாளர். ரிமம்பரன்ஸில்... பன்னிரண்டரை லட்சம் வார்த்தைகள். வார் அண்ட பீஸில் 5 லட்சம் வார்த்தைகள்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...