கரடியுடன் விளையாடும் குழந்தைகள்

குழந்தைகள் பொம்மைகளுக்குப் பொட்டு வைத்து அழகு பார்ப்பதைப் பார்த்திருக்கிறோம். இன்னும் சில மழலைகள் பூனை, கிளிகளோடு செல்லமாய் கொஞ்சுவதையும் ரசித்திருக்கிறோம்.
Updated on
1 min read

குழந்தைகள் பொம்மைகளுக்குப் பொட்டு வைத்து அழகு பார்ப்பதைப் பார்த்திருக்கிறோம். இன்னும் சில மழலைகள் பூனை, கிளிகளோடு செல்லமாய் கொஞ்சுவதையும் ரசித்திருக்கிறோம்.
 கொஞ்சம் வித்தியாசமாக கரடியோடும்,குரங்குகளோடும் மழலைச் செல்வங்கள் ஓடியாடி விளையாடும் கொண்டாட்ட நிகழ்ச்சி குழந்தைகள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டில் அரங்கேறியது.
 சென்னை கரடி பாத் எஜுகேஷன் அமைப்பால் நடத்தப்பட்ட இந்தக் கொண்டாட்டத்தில் தர்ஷனா ராஜேந்திரன், கிரண், வெங்கடேஷ், விகாஷ் ஆகியோர் வன விலங்குகள் வேடமிட்டு அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த 400-க்கும் மேற்பட்ட மழலைச் செல்வங்களைக் குஷிப்படுத்தினர். ஒரே இடத்தில் வன விலங்குகள் செய்த சேட்டைகளைக் கண்டு குழந்தைகளின் பெற்றோரும் கைதட்டி ஆர்ப்பரித்ததில் சின்மயா அரங்கமே சிரிப்பலையால் நிரம்பியது.
 புலிகளைத் துரத்தும் மான்கள், மனிதர்களோடு பேசும் கரடிகள், மரங்களின் அற்புத நடனம், காமெடி செய்யும் முதலை என நிமிடத்துக்கு நிமிடம் வேறெங்கும் பார்க்க முடியாத அளவுக்கு வித்தியாசமான நிகழ்ச்சிகள் அரங்கேறின.
 இவற்றை மிகவும் ரசித்த குழந்தைகள் ஒரு கட்டத்தில் பெற்றோரின் மடியை விட்டுக் கீழே குதித்தன. இதனால் உற்சாகமான நாடகக் கலைஞர்கள் மேடையை விட்டுக் கீழே இறங்கி வந்து குழந்தைகளைப் பக்குவமாக அள்ளித் தூக்கி நடனமாடினர்.
 பிஞ்சுமலர்களைக் கவர்ந்த ஒன்ஸ் அபான் எ டைம் பக் பக் ட்ரீ என்ற கரடி நாடகத்தைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆரவாரம் செய்தனர். அதில் மழலைகளின் கற்பனையில் நீங்காத இடம் பிடித்த கதைகள், பாடல்கள் இடையிடையே பின்னணி இசையோடு இடம்பெற்றது.
 பிரபல பாடகி உஷாஉதுப் அடிக்கடி மேடையில் தோன்றி கரடி பாடல்களை வித்தியாசமான குரல்களில் பாடியதோடு குழந்தைகளின் கைதட்டல்களில் உள்ளம் மகிழ்ந்தார். விலங்குகள் தொடர்பாக அவர் கேட்ட விடுகதை மற்றும் கேள்விகளுக்கு சட்டென்று பதிலளித்த குழந்தைகளுக்கு தான் அணிந்திருந்த வளையல்களைப் பரிசாக வழங்கி, பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
 குழந்தைகள் பாடும் நர்சரி பாடல்களுக்கு மிகச்சிறப்பான முறையில் பின்னணி இசையமைக்கப்பட்டது.
 இந்திய கலாசார பின்னணியில் அமைந்த கதைகள், பாட்டு மற்றும் ஒலி வடிவப் புத்தகங்கள் மழலைகளுக்குப் பரிசாக வழங்கப்பட்டன.
 ஷோபா விஸ்வநாத், பார்கவ் ராமகிருஷ்ணன் ஆகியோரின் எளிமையான பாடல் வரிகளும் வசனங்களும் பெரியவர்களையும் குழந்தைகளாக மாற்றியது.
 250 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளின் நாவில் தவழும் பாபா பிளாக் ஷீப் என்ற புகழ்பெற்ற பாடலோடு கொண்டாட்டம் நிறைவுற்றது. பலூன்களை ஏந்தியபடி மழலைகள் புன்னகை மாறாமல் விடைபெற்றார்கள்.
 கரடி பாத் எஜுகேசன் நிறுவனம், நகர்ப்புற மற்றும் கிராமப்புறக் குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் தாய்மொழியில் கற்பதைப்போல் ஆங்கிலத்தையும் கற்பிக்கும் முறையில் நடத்தி வருகிறது.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com