சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தூண்டுகோல்!

பாக்கியம் அக்கம் பக்கத்திலுள்ளவர்களின் வீடுகளில் வேலை செய்து பிழைத்து வந்தாள்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2015, 11:59 am

பாக்கியம் அக்கம் பக்கத்திலுள்ளவர்களின் வீடுகளில் வேலை செய்து பிழைத்து வந்தாள். அவரது கணவர் முனுசாமி ஆட்டோ ஓட்டுநராக இருந்து, ஏழு வருடங்களுக்கு முன் சாலை விபத்து ஒன்றில் காலமானார். குடும்பப் பொறுப்பு முழுவதும் பாக்கியம் தலையில் விழுந்தது. பாக்கியத்துக்கு ஆனந்தி என்ற மகளும்,பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கண்ணன் என்ற மகனும் இருந்தான். அவனுக்கு ஆகும் மருத்துவ செலவுகளுக்கு அவள் சேமிக்க வேண்டியிருந்தது!

ஆனந்தி, மிகவும் நன்றாகப் படிப்பாள். வகுப்பில் முதல் மாணவி. பாக்கியத்துக்கு மிகவும் சந்தோஷம். பாக்யம் வேலைக்குப் போய் விட்டால், ஆனந்தி, தன் தம்பியையும் கவனித்துக் கொண்டு, அக்கறையாகப் படிக்கவும் செய்வாள்.

பாக்கியம், ""ஆனந்தி நல்லா படிக்கறா..., சந்தோஷமா இருக்கு! ஆனா, அவளை நான் எப்படி மேலே படிக்க வைக்க போறேனோ தெரியலையே'' என நினைத்து வருந்துவாள்.

ஒரு நாள் காலையில் தான் வீட்டு வேலை செய்யும் இடத்திற்கே ஆனந்தி ஓடோடி வருவதைக் கண்ட பாக்கியம் பயந்துப் போனாள். ""ஆனந்தி, என்னம்மா இப்படி ஓடி வரே, தம்பி கீழே ஏதும் விழுந்துட்டானா...,சொல்லும்மா'' முகத்தில் பதற்றம் தெரிய கேட்டாள் பாக்கியம். ""அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா, தம்பிக்கு இப்ப தான் சாக்லேட் கொடுத்துட்டு வரேன்..., நான் ப்ளஸ் டூ தேர்வில் பாஸ் பண்ணிட்டேன் மா! நீ தான் நான் நல்லா படிச்சு பெரிய ஆபிஸரா வரனும்ன்னு அடிக்கடி சொல்லுவியே, அதனால், உன் கிட்ட முதல்ல சொல்லணுன்னு ஓடி வந்தேன் மா'' என்றாள் ஆனந்தி முகத்தில் மகிழ்ச்சியுடன். ""ஆனந்தி, ரொம்ப சந்தோஷம்மா!'' என்றாள் பாக்கியம்.

அம்மா, இப்போவே நான் என் தோழி லட்சுமி வீட்டுக்குப் போய் இணையம் மூலம் கல்லூரிகளில் விண்ணப்பிக்க போறேன்மா'' என்றாள். பாக்கியம் கவலையுடன்,""அம்மாவுக்கு இந்த வீட்ல இன்னும் வேலை இருக்கு, நீ போம்மா, தம்பி தனியா இருப்பான். இந்தா, இந்த மருத்தை அவனுக்கு கொடுத்துடும்மா'' என்றாள்.

அன்று வீட்டுக்கு வந்த பாக்கியத்துக்கு இரவு தூக்கமே வரவில்லை....."ஆனந்தி பாவம், மேலே படிக்கணும்னு ஆசைப்படறா, ஆனால், என் கிட்ட அவளை கல்லூரியில் சேர்க்க பணமில்லையே என்ன பண்றது?...,கண்ணன் வைத்திய செலவுக்குச் சேமித்த பணம்தான் இருக்கு..., இவ படிப்புச் செலவுக்கு கடன்தான் வாங்கணும்...யார் கொடுப்பாங்க...,கொடுத்தாலும் அதை எப்படி அடைப்பது?'' என வருந்தினாள்.

இரண்டு நாள் கழித்து மதியம், ""அம்மா, இங்க பாரும்மா...,எனக்கு அரசுக் கல்லூரியில் சேர அழைப்புக் கடிதம் வந்திருக்கு, என்ன? உனக்கு சந்தோஷம் தானே?'' என அப்பாவியாக கேட்டாள் ஆனந்தி. பாக்கியம் தயக்கத்துடன், ""சந்தோஷம்தான் ஆனந்தி! ஆனா... நீ படிக்கணுமாம்மா...? அப்பா, நம்மள விட்டு போன பிறவு நான் அங்க இங்க ஓடியாடி வீட்டு வேலை செஞ்சு உன்னை ப்ளஸ் டூ வரைக்கும் படிக்க வெச்சுட்டேன்மா, உன்னை மேல படிக்க வைக்க அம்மா கிட்ட வசதி இல்லையேம்மா, உன் தம்பி கண்ணன் வைத்திய செலவுக்குன்னு கொஞ்சம் சேத்துவச்சிருக்கேன்...,அதை உன் படிப்புக்கு கொடுத்துட்டா அவனுக்கு மருந்து செலவுக்கு என்ன் பண்றது? அதனால் என் ராஜாத்தி இல்லே..., நீ இனி மேல் எங்காச்சும் வேலைக்கு போம்மா. அப்பதான் நம்ம வாழ்க்கைச் சக்கரம் ஓடும்...'' என்றாள். அம்மா செல்வதைக் கேட்ட ஆனந்திக்கு நடுக்கம் பரவியது.

""அம்மா! என்னம்மா சொல்றே நீ...? என்று கண்களில் நீர் வழிய கேட்டாள் ஆனந்தி.

""நீ நம்ம குடும்ப நிலையை உணர்ந்து படிச்சே, உனக்கு அது வேணும். இது வேணும்னு கேட்டதே இல்லை, பழைய புஸ்தகத்தைத் தான் வாங்கி படிப்பே, என்னம்மா பண்றது...? கல்லூரியிலே சேரணும்னா நிறைய பணம் செலவாகுமே...!'' என்று தழுதழுத்த குரலில் சொல்லி விட்டு அழுதுக் கொண்டே முந்தானையால் வாயை மூடிக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டாள் பாக்கியம்.

அன்று காலை எழுந்தவுடன், ""அம்மா, அம்மா..., இன்னைக்கு கல்லூரியில் இன்டர்வியூக்கு போகணும், போகலாமாம்மா, நான் நல்ல படிப்பேன்..., ஆபிஸரா ஆவேன், அம்மாவையும், தம்பியையும் காப்பாத்துவேன்..'' என்று சந்தோஷமாக அம்மாவிடம் சொன்னாள் ஆனந்தி.

""சரிம்மா, உன் இஷ்டம்..., நான் கல்லூரி வாசல கூட மிதிச்சதில்லை. உன்னால அந்தக் கல்லூரியை கண்ணாலேயேயாவது பாத்துட்டு வருவோம் வா'' என்று சொல்லி, இருவரும் கல்லூரிக்குச் சென்றனர். அந்தக் கல்லூரியின் முதல்வர் பாலாம்பிகை மிகவும் நல்லவர். மாணவிகளுக்கு எப்போதும் தன்னம்பிக்கையை ஊட்டுபவர்.

""அழைப்புக் கடிதம் வந்தவங்க எல்லாம் இங்க வரிசையாக உட்காருங்க, முதல்வர் அம்மா கூப்பிடுவாங்க'' என்றார் அலுவலக உதவியாளர். எவ்வளவு பீஸ் கட்டணுமோ, என்ன ஆகுமோ என்று பயந்தப்படியே அமர்ந்திருந்தாள் பாக்கியம். தான் இந்தக் கல்லூரியில் படிக்க ஆரம்பித்து விட்டது போல், அங்கிருந்த பழைய மாணவிகளிடம் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள் ஆனந்தி. ஒவ்வொருவராக முதல்வர் அறைக்குச் சென்று முகமலர்ச்சியுடன் வெளியே வந்தனர்.

""யாரும்மா ஆனந்தி? உள்ளே போம்மா, முதல்வர் அம்மா கூப்பிடறாங்க. என்றார் அலுவலக உதவியாளர். தயங்கியப்படியே உள்ளே சென்றனர் பாக்கியமும், ஆனந்தியும்.

""வா ஆனந்தி, வெரி குட், நல்ல மார்க் எடுத்திருக்கிறே, நீ கேட்ட சப்ஜெக்டே நான் உனக்கு தரேன். இந்தா அட்மிஷன் கார்டு உடனே போய் பீஸ் கட்டிடு'' என்றார். பாக்கியமும், ஆனந்தியும் தயங்கினர்.

""அம்மா, ரொம்ப நன்றிம்மா, இவ இந்தக் கல்லூரி வாசலையாவது மிதிக்கட்டுமேன்னுதான் இங்க கூட்டிட்டு வந்தேமா. இவ்வளவு பீஸ் கட்டி இவள இந்த கல்லூரியில் சேர்க்க முடியாதும்மா'' என்று அழுதப்படியே சொன்னாள் பாக்யம்.

""என்னமா சொல்ற நீ...? ஆனந்தி கேட்ட சப்ஜெக்ட், இந்த கல்லூரியில கிடைக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா அவ நல்ல மார்க் எடுத்ததால் தான் இங்கே சீட் கிடைச்சிருக்கு!'' என்றார் கல்லூரி முதல்வர்.

""அம்மா, இவ தம்பி பக்கவாதத்தால் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறான் மா, இவளை இப்போ படிக்க வைக்காம வேலைக்கு அனுப்பலாம்னு இருக்கேன்மா'' என்றாள் பாக்யம் கண்களைத் துடைத்தப்படியே.

""அந்தத் தப்பு பண்ணிடாதேம்மா, ஒரு நல்ல தாய் நூறு ஆசிரியர்களுக்கு சமம். ஆனந்தியை நல்லா படிக்க வச்சிருக்கிறே..., அவ கிட்ட தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் எல்லாம் இருக்கு. அவ நல்லா படிச்சு நாளைக்கே பெரிய வேலைக்குப் போய் உன்னையும், அவ தம்பியையும் காப்பாத்துவாம்மா, ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே கல்விக் கற்றது போலில்லையா? தன்னம்பிக்கைதான் சாதனை செய்ய முக்கியத் தேவை! படிப்புக்கு உதவி செய்யற சில தொண்டு நிறுவனங்கள் எனக்குத் தெரியும்...,அவதான் நல்ல மார்க் வாங்கியிருக்காளே..., நான் முயற்சி செய்யறேன்... நீங்க இப்ப பணத்தைக் கட்டிடுங்க...தயங்காதீங்க '' என்றார் கல்லூரி முதல்வர் சற்று உருக்கமாக.

முதல்வரின் அன்பு மொழிகளைக் கேட்ட பாக்யத்தின் மனம் மாறியது. ""நம்பிக்கையே நமது வெற்றிக்குரிய மந்திரக்கோல் என்பதை நீங்க சொல்லாமல் சொல்லீட்டிங்கமா, உங்க உறுதியான பேச்சு என் மனசை மாத்திடுச்சி, நன்றிம்மா'' என்று சொல்லி விட்டு. தான் தன் மகனை வைத்தியச் செலவுக்கு சேமித்து வைத்திருந்த பணத்திலிருந்து கல்லூரியில் பீஸ் கட்டினாள் பாக்யம். சில மாதங்கள் கழித்து ஆனந்திக்கு பண உதவியும் கிடைத்தது!

முதல்வர் பாலாம்பிகைக்கு பாக்கியமும் ஆனந்தியும் நன்றி தெரிவித்தனர்!

வருடங்கள் உருண்டோடின. ஆனந்தி இன்று ஒரு அரசு உயர் அதிகாரி!

அதோ பாருங்கள்! அவள் தன் தாயுடன், தம்பியையும் அழைத்துக்கொண்டு புதியதாக வாங்கிய காரில் விரைகிறாள்!

அவனும் "காலிப்பர்' உதவியுடன் இப்போது பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறான்! இதற்கெல்லாம் தூண்டுகோலாய் இருந்தத முதல்வர் பாலாம்பிகையை இப்போதும் பாக்யமும், ஆனந்தியும் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றனர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.