

காட்சி-1
இடம்-பாற்கடல்
கதாபாத்திரங்கள்- பரந்தாமன் விஷ்ணு,
திருமகள், சங்கு, சக்கரம், பாதுகை.
(பாற்கடலில் பரந்தாமன் விஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கிறார். அவரது காலடியில் திருமகள் அமர்ந்து கொண்டு மெல்ல விஷ்ணுவின் பாதங்களை வருடிக் கொண்டிருக்கிறார். கண்களை மூடிக் கொண்டிருக்கும் விஷ்ணு மெல்லச் சிரிக்கிறார்)
திருமகள்: தங்கள் புன்னகைக்குக் காரணம் என்ன சுவாமி?
விஷ்ணு: தேவி, அமைதியாக இவர்கள் பேசுவதைக் கவனி.
(பெருமாளின் கரங்களில் இருக்கும் சங்கு, சக்கரம் இரண்டும் சேர்ந்து பெருமாளின் பாதங்களை அலங்கரிக்கும் பாதுகையைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தன.)
பாதுகை: ஏன் என்னைப் பார்த்து இப்படி ஒரு சிரிப்பு?
சங்கு: சிரிக்காமல் என்ன செய்ய? பாஞ்சஜன்யம் எனப் பெயர் பெற்ற நான் பெருமாளின் இடது கையை அலங்கரிக்கிறேன்...,என்னை எடுத்து ஊதும்போது பெருமாளின் உதடுகள் என் மீது படும்! அது என்ன சுகமாகவும் பேரின்பமாகவும் இருக்கிறது தெரியுமா?
சக்கரம்: நான் மட்டும் என்ன குறைந்தவனா? பெருமாளின் வலது கையில் அலங்காரமாகச் சுழன்று கொண்டிருக்கிறேன். பகைவர்களை அழிக்க அவர் என்னையே பயன்படுத்துவார். பெருமாளுக்கு என்னை அளித்தவரே பரமேஸ்வரன்தான். எப்படிப் பார்த்தாலும் நம் மூவரில் நானே உயர்ந்தவன்!
பாதுகை: நானும் உங்களைப் போல உயர்ந்தவன்தான். பெருமாளின் பூப்போன்ற பாதங்களைத் தழுவிக் கொண்டிருக்கிறேனே...,இந்தப் பெரும் பேறு யாருக்குக் கிடைக்கும்?
(பாதுகையின் பேச்சைக் கேட்டு சங்கு, சக்கரம் இரண்டும் சேர்ந்து பெரிதாகச் சிரித்தன.)
சங்கு: வாமன அவதாரத்தில் மட்டும்தான் பெருமாள் உன்னைப் பயன்படுத்திக் கொண்டார். மற்ற சமயங்களில் உன்னால் என்ன பிரயோசனம்?
பாதுகை: ஏன்? பரசுராமன் அவதாரத்திலும் அவர் பாதங்களில் அணிகலனாக நான்தானே இருந்தேன்?
சக்கரம்: எங்களுடன் போட்டி போடாதே. நாங்கள் இருவரும்தான் உயர்ந்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்! ஆதிசேஷன் எங்களுக்கு இணையானவர்! நின்றால் குடையாகவும், கிடந்தால் பாம்பணையாகவும் இருப்பவர்! பரமசிவனுக்கு மழுவும் சூலமும் போல பெருமாளுக்கு சங்கு, சக்கரங்கள்தான் அணிகலன்கள். எனவே எங்களை மிஞ்சி யாரும் இல்லை என்பதைப் புரிந்துகொள்!
(பாதுகை வேதனையுடன் புலம்பியது)
விஷ்ணு: (பாதுகையைப் பார்த்து) அகம்பாவத்தால் கர்வம் கொண்டிருக்கும் அவர்கள் இருவரும் உன்னைப் பணியும்படியான நிலைமை ஒரு நாள் வரும்...., பொறுமையாக இரு.
பாதுகை: தங்கள் சித்தம்! என் பாக்கியம்! சுவாமி!
காட்சி-2
இடம்-கானகம்
கதாபாத்திரங்கள்- இராமன், பரதன்,
சீதாதேவி.
(விஷ்ணு இராவணனைக் கொல்வதற்காக இராமனாக அவதாரம் எடுக்கிறார். ஆதிசேஷன் இலக்குவனாகவும், சங்கு பரதனாகவும், சக்கரம் சத்ருக்னனாகவும் அவதரிக்கின்றனர். தாயின் சொல்படி கானகம் செல்லும் இராமனோடு இலக்குவனும் சீதாதேவியும் செல்கின்றனர். இச்செய்தியைக் கேள்வியுற்ற பரதன் விரைந்து தண்டகாரண்யத்தை அடைகிறார்)
பரதன்: (கண்ணீருடன்) தாங்கள் இல்லாது உயிரில்லாத உடலாய் என்னால் வாழ முடியாது. அண்ணா! என் தாயை மன்னித்து அயோத்திக்கு வாருங்கள்! தாங்கள்தான் அரசராக முடி சூட்டிக்கொள்ள வேண்டும்.
இராமன்: பரதா! நீ என்னைவிட உயர்ந்தவன்...,தாயின் ஆணைப்படி நீயே முடி சூட்டிக் கொள். அயோத்தி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது நிச்சயம்! பதினான்கு ஆண்டுகள் கழித்து நான் வருவேன். அப்போது உன்னிடமிருந்து அரசாட்சியைப் பெற்றுக் கொள்கிறேன்...,நீ அமைதியாக அயோத்தி திரும்பு!
பரதன்: தாங்கள் இல்லாது அயோத்தி திரும்ப மாட்டேன் என்று உறுதி பூண்டு இங்கு வந்திருக்கிறேன். தங்கள் பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளையாவது எனக்குக் கொடுங்கள்! நான் நந்திகிராமத்தில் தங்கள் பாதுகைகளை வைத்துப் பூஜித்து வருவேன். தங்களுக்கு பதிலாக அரியணையில் தங்கள் பாதுகைகளே வீற்றிருக்கும்! அதன் கீழ் நான் அரசாட்சி செய்வேன். பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் தாங்கள் வந்துவிட வேண்டும்! நான் ஒரு நாள் கூடப் பொறுத்திருக்க மாட்டேன். தங்களைக் காணாவிட்டால் தீயை மூட்டி என் உயிரை மாய்த்துக் கொள்வேன்!
இராமன்: பரதா!...., அந்நிலை ஏற்படாது...,நீ விரும்பியபடி எனது பாதுகைகளை எடுத்துச் செல்.
(பரதன் பாதுகைகளைக் கையில் எடுத்து, கண்களில் ஒற்றிக் கொண்டு மார்புடன் அணைத்துக் கொள்கிறான். பின் இராமனின் பாதங்களில் விழுந்து வணங்குகிறான். பிறகு தன் தலையில் பாதுகைகளை வைத்துக் கொண்டு, நந்திக் கிராமத்தை நோக்கிச் செல்கிறான். இராமனின் பாதுகைகளை அரியணையில் வைத்து அலங்கரித்து தினமும் பாதுகைகளுக்குப் பூஜை செய்து பதினான்கு ஆண்டுகள் அண்ணனின் வாக்குப்படி பரதன் நாட்டை ஆள்கிறான்.)
காட்சி-3
இடம்-நந்தி கிராமம்
கதாபாத்திரங்கள்: பரதன், சத்ருக்னன்.
(ஆட்சி பீடத்தில் இராமனின் பாதுகைகள். பரதனும் சத்ருக்னனும் பாதுகைகளை அபிஷேகம் செய்து அந்நீரை பக்தியுடன் பருகுகிறார்கள்...,தலையில் தெளித்துக் கொள்கிறார்கள். பிறகு பீடத்தில் வைத்து மலர்களால் அலங்கரித்து பூஜை செய்கிறார்கள்....இராமனாக அவதரித்த பெருமாள் பாதுகைகளைப் பார்த்துச் சிரித்தபடி சொல்வது பாதுகைகளுக்குக் கேட்கிறது)
இராமன்: நீ ஒரு சமயம் வருத்தப்பட்டபோது சங்கும் சக்கரமும் உன்னைப் பணியும்படியான நிலைமை ஒரு நாள் வரும் எனக் கூறியது நினைவுள்ளதா?...,இப்பொழுது யார் உயர்ந்தவர் என்று தெரிகிறதா? சங்கு சக்கரம் பரதனாகவும், சத்ருக்னனாகவும் அவதரித்து உனக்குச் சேவை செய்யும் பாக்கியம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. அல்லவா?...."பொறுத்தார் பூமி ஆள்வார் என்று தெரிகிறதா?
பாதுகை: எல்லாம் தங்களின் திருவடிகளை அலங்கரித்ததால் கிடைத்த பெருமை சுவாமி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.