டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிரார்த்தனையும் நம்பிக்கையும்

ஊரெங்கும் பலத்த மழை! பாலு திடீரென்று சுமாமி அறையிலிருந்து வந்து, ""அப்பா, பிரார்த்தனைக்கும் நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்?''என்றான்.

News image
Updated On :4 ஜூலை 2015, 5:03 am

சரஸ்வதி பஞ்சு

ஊரெங்கும் பலத்த மழை! பாலு திடீரென்று சுமாமி அறையிலிருந்து வந்து, ""அப்பா, பிரார்த்தனைக்கும் நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்?''என்றான்.

""நாளைக்கு சொல்றேன்''

""சரிப்பா''

மறுநாளும் நல்ல மழை! வெள்ளக்காடாய் அந்த கிராமம் காட்சியளித்தது. இரண்டு கிராமங்களையும் இணைக்கும் பாலத்தை மூழ்கச் செய்யும் அளவுக்கு மழை நீர் ஒடிற்று. ஊரெங்கும் இதைப் பற்றியே பேச்சு!

""அப்பா! ஆற்றைப் பார்க்க ஆசையாய் இருக்குப்பா. வெறும் மணல் மேடாய் இருந்த ஆறு, வெள்ளத்தில் எப்படி இருக்குன்னு பார்க்கணும்ப்பா...,வாங்கப்பா''என்றான் பாலு.

அப்பாவோ, ""வேண்டாம்ப்பா..., நீ வெள்ளத்தைப் பார்த்தா பயப்படுவே''

""என் கூடத்தான் நீங்க வர்றீங்களே..., நான் உங்க கையை கெட்டியா பிடிச்சுப்பேன்''

""சரி வா''

நல்ல மழைதான்! பாலத்தை மூழ்கச் செய்யும் அளவுக்கு தண்ணீர் ஒடிக் கொண்டிருந்தது! வெள்ளம் எப்படி ஓடுகிறது என்று பார்க்க ஆசைப்பட்ட பாலு, ""அப்பா.., அப்பா, அந்த பாலத்தை கடந்து போக ஆசையாக இருக்கிறது. உங்க கையை வேணுமானால் இன்னும் அழுத்தமாகப் பிடிச்சுக்கறேன்''என்றான்.

அவனுடைய ஆசையைக் கெடுக்க விரும்பாத அப்பா கூட்டிக்கொண்டு சென்றார். ஆனால் நான்கடிதான் பாலத்தின் மேல் அவன் தன் கால்களை வைத்திருப்பான். மனதிற்குள் திடீரென பயம் தோன்றவே, அப்பாவின் கையை பட்டென்று விட்டுவிட்டு,""நீங்க என் கையைப் பிடிச்சுக்கோங்க''என்றான்.

அப்பா அவனிடம், ""நீ என் கையைப் பிடிச்சதுக்கும் நான் உன் கையைப் பிடிச்சதுக்கும் என்ன வித்தியாசம்?''என்று கேட்டார்.

அதற்கு பாலு, ""என் கால் தவறினால் பதற்றத்தில் உங்கள் கையை நான் விட்டுவிடுவேன்.

ஆனால் நீங்கள் என் கையைப் பற்றி இருந்தால் என்ன ஆனாலும் விடமாட்டீர்கள்! எனவே பத்திரமாக இருப்பேன்!''என்றான்.

இருவரும் பாலத்தை பத்திரமாகக் கடந்தார்கள்.

அப்பா அவனிடம், ""நேற்று நீ கேட்ட கேள்விக்கு இப்போ நான் பதில் சொல்கிறேன். கடவுளை நாம் பற்றிக் கொள்வது பிரார்த்தனை. கடவுள் நம் கைகளைப் பிடித்திருக்கிறார் என நினைப்பதுதான் நம்பிக்கை! பிரார்த்தனை பலம் கொடுக்கும்! நம்பிக்கை நலம் கொடுக்கும்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.