மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அரங்கம்: பேராசை!

பாட்டி! எனக்கு காதுல போட்டுக்க ஒரு ஸ்டார் மாதிரி ஏதாவது வாங்கிக் குடுங்க. வெள்ளி, செம்பு எதுவாயிருந்தாலும் சரி பாட்டி! எல்லாரும் என்னை மூளிக்காதுன்னு கேலி பண்றாங்க.

News image
Updated On :17 ஜூலை 2015, 4:02 pm

மயிலை மாதவன்

மயிலை மாதவன்

காட்சி - 1

இடம் - ஒரு குடிசையின் வெளிப்புறம்.

மாந்தர் - ஓர் ஏழைக் கிழவி,

அவள் பேத்தியான ஒரு சிறுமி. சொக்கன்.

பேத்தி: பாட்டி! எனக்கு காதுல போட்டுக்க ஒரு ஸ்டார் மாதிரி ஏதாவது வாங்கிக் குடுங்க. வெள்ளி, செம்பு எதுவாயிருந்தாலும் சரி பாட்டி! எல்லாரும் என்னை மூளிக்காதுன்னு கேலி பண்றாங்க.

பாட்டி: எனக்கு மட்டும் ஆசையில்லையா? வசதி இல்லையே..., என்ன செய்யறது? வயிற்றுப் பாட்டைக் கழுவறதே பெரும்பாடா இருக்குது.

பேத்தி: சரி பாட்டி! இனிமே தொந்தரவு செய்யமாட்டேன். கேலி செஞ்சா செஞ்சுட்டுப் போகட்டும். சாப்பாடு கிடைச்சா போதும். காதுக்கு தோடு, தொங்கட்டான் இல்லைன்னா ஒண்ணும் குறைஞ்சு போயிடாது.

பாட்டி: நீ புத்தியாலியாத்தான் பேசறே...,அதிர்ஷ்டம்தான் இல்லே. காலம் இப்படியே போயிடாது. நமக்கும் நல்ல காலம் பொறக்கும்! அப்ப நீ விதவிதமா நகைநட்டெல்லாம் போட்டுக்கத்தான் போறே. அது நிச்சயம் ஒரு நாள் நடக்கும்!

பேத்தி: நான் வேலைக்குப் போறேன் பாட்டி! தாமதமானா அந்த வீட்டம்மா கோவிச்சுக்கும். நீங்களும்தான் வேலைக்குப் போகணுமே...,புறப்படுங்க..., மற்றதை அப்புறம் பேசிக்கலாம்.

(அப்போது வாசலில், ""ஓட்டை உடைசல் சாமான் வாங்கறது...''என்று குரல் கேட்கிறது.)

பேத்தி: பாட்டி! வாசலில் ஓட்டை உடைசல் சாமான் வாங்கிறவர் போகிறார் பாருங்க.

பாட்டி: போனா போகட்டுமே...,அது அவன் தொழில்.

பேத்தி: அதுக்கில்ல பாட்டி! நம்ம வீட்டுல கறுப்பா ஒரு உலோகத் தட்டு இருக்கே...,அதை அவன் கிட்டே போட்டால் ஏதாவது காசு தருவான். அந்தக் காசுக்கு ஏதாவது வாங்கலாமேன்னு கேட்டேன்.

பாட்டி: அது ரொம்பப் பழசு! கறுப்பேறிக்கிடக்கு..., எதையாவது மூடி வைக்கக் கூட லாயக்கில்லே...,அதுக்கெல்லாம் என்ன கிடைக்கப்போகுது?

பேத்தி: உபயோகமில்லாம இருக்கேன்னு கேட்டேன். உனக்கு இஷ்டமில்லேன்னா வேண்டாம்.

பாட்டி: உன் ஆசையைக் கெடுப்பானேன்...,அந்த ஆளைக் கூப்பிடு.

(பேத்தி அவனை வீட்டிற்கு அழைத்து அந்த பழைய தட்டைக் எடுத்து வருகிறாள்)

பாட்டி: உன் பேர் என்னப்பா....,

சொக்கன்: சொக்கன் பாட்டி.

பாட்டி: சரி...,சரி இந்தத் தட்டை எடுத்திக்கிட்டு எதாவது காசு குடு.

(சொக்கன் தட்டை வாங்கிப் பார்க்கிறான். தட்டை ஒரு ஊசியால் கீறிப்பார்க்கிறான். அது பொன்னாலானது என்று அறிகிறான். ஏமாற்ற நினைக்கிறான்)

சொக்கன்: இது என்ன தட்டு? அரைக்காசு கூட பெறாது.

பாட்டி: என்னப்பா..., ஒண்ணும் தேறாதா? சரி...,போனாப்போகுது நீ கிளம்பு.

("திரும்ப வரலாம்..., அதற்குள் இவர்களுக்கு எங்கே தட்டின் அருமை தெரிந்து விடப்போகிறது...,அரைக்காசோ, ஒரு காசோ கொடுத்து தட்டை வாங்கிவிடலாம்' என்று நினைத்துக்கொண்டு சொக்கன் போய்விடுகிறான்)

பாட்டி: சரி..., இப்ப கிளம்பு, நான் வேலைக்குப் போகணும்.

பேத்தி: தட்டை உள்ள வச்சுடறேன் பாட்டி.

பாட்டி: சரி வச்சுட்டு வா...,வேலைக்கு கிளம்பலாம்.

காட்சி - 2

இடம்: குடிசை வாசல்

மாந்தர்: பாட்டி, பேத்தி,

பாண்டியன்(பழைய சாமான்கள் சேகரிக்கும் மற்றொரு வியாபாரி), சொக்கன்.

(வேலைக்குச் சென்றுவிட்டு பாட்டியும் பேத்தியும் மதியம் திரும்பி வருகிறார்கள். மறுபடியும் வேறோர் ஆள், ""ஓட்டை உடைசல் சாமான் வாங்கறது'' என்ற குரலுடன்)

பேத்தி: பாட்டி! வேற ஒரு ஆள் போறாரு...,அவரைக் கூப்பிட்டு அந்தத் தட்டைக் காமிக்கலாமா?

பாட்டி: காட்டேன்..., யார் வேணான்னது...,அதுதான் உபயோகமில்லேன்னு தெரிஞ்சிடுச்சில்ல...,காட்டிட்டு திரும்பவும் உள்ள கொண்டுபோய் வைக்கப்போறே. நடக்கிறது நடக்கட்டும் காமி.

(பேத்தி தட்டை கொண்டு வந்து புதிய ஆளிடம்(பாண்டியன்) காண்பிக்கிறாள்.)

பாண்டியன்: (தூசி துடைத்துவிட்டுப் பார்க்கிறான். ஆணியால் கீறிப் பார்க்கிறான். தங்கத்தட்டு என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டு) பாட்டியம்மா! இது தங்கத் தட்டு பாட்டியம்மா! எந்த ராஜா காலத்துதோ? ஆயிரம் காசு பெறும்! ஆனா இப்ப எங்கிட்ட அவ்வளவு காசு இல்லே. ஐநூறு காசுதான் இருக்கு!

பாட்டி: முன்னால வந்த ஆள் இது அரைக்காசு பெறாதுன்னு சொன்னான். நீ இதை இப்ப தங்கத்தட்டு என்கிறாய்! உன்னைப் போல நல்லவன் கை பட்டுத்தானோ என்னவோ இது தங்கமா மாறிடுச்சு! உங்கிட்டே இருக்கிறத கொடு அதுவே எனக்குப் போதும்.

பாண்டியன்: உரிய விலையைக் கொடுக்காம இதை எடுத்துப் போகமாட்டேன்...அது தர்மம் இல்லே. இந்தாங்க ஐநூறு காசு! இத்தோட என்னோட தராசு, படிக்கல், மற்ற தட்டு முட்டு சாமான்கள் எல்லாத்தையும் வச்சுட்டுப் போறேன். வீட்டிற்குப் போய் பணம் எடுத்துட்டு வந்து வாங்கிக்கிறேன்.

(பாண்டியன் சென்று விடுகிறான்....பிறகு பழைய வியாபாரி சொக்கன் திரும்பவும் பாட்டியின் வீட்டிற்கு வருகிறான்)

சொக்கன்: பாப்பா! அந்தத் தட்டை எடுத்துட்டு வா. போனாப்போவது...,உனக்காக அரைக்காசுக்கு பதிலா ஒரு காசு தரேன். போதுமா?

பாட்டி: உன்னை மாதிரி ஒரு அயோக்கியனை நான் இதுவரை பார்த்ததில்லை. நீ முதலில் அந்த தட்டைப் பார்த்துட்டு அரைக்காசு பெறாதுன்னு சொல்லிட்டுப் போனே. நீ போன கொஞ்ச நேரத்தில வேறு ஒரு ஆள் வந்தான்....

சொக்கன்: என்ன ஆச்சு?

பாட்டி: பேசாதே! புது ஆள் அந்த தட்டைப் பார்த்துட்டு "இது தங்கத் தட்டு! ஆயிரம் காசு பெறும்! இப்ப எங்கிட்ட ஐநூறு காசுதான் இருக்குன்னு எங்கிட்டே கொடுத்திட்டு பாக்கி ஐநூறு காசை எடுத்துக்கிட்டு வரேன்'னு சொல்லிட்டு போயிருக்கான்! நீயும் இருக்கியே? போ...போ... இந்த இடத்திலேயே நிக்காதே

(சொக்கன்,""போச்சு...,போச்சு.., எல்லாம் போச்சு! நல்ல வாய்ப்பை கை நழுவிப் போயிடுச்சு!''

என்று புலம்பிக்கொண்டே போகிறான்)

பாட்டி: ராஜாத்தி! நீ கேட்டபடியே உனக்குத் தங்கத் தோடு வாங்கிப்போடறேண்டி...,என் செல்லம்..

பேத்தி: எல்லாம் உன் ஆசீர்வாதமும் கடவுள் அருளும்தான் பாட்டி! காலையிலே சொன்னியே...,நல்ல காலம் பொறக்கும்னு...அது பலிச்சிடுச்சி பாத்தியா பாட்டி!

(பேத்தியைக் கட்டித் தழுவிக் கொள்கிறாள்! கண்களில் ஆனந்தக் கண்ணீர்!)

திரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.