கருவூலம்
இந்தியாவின் மிக நீளமான நதி! இந்தியாவின் எல்லா நதிகளுக்கும் கங்கா, நர்மதா, சிந்து, காவேரி எனப் பெண்கள் பெயர்களாலேயே அழைக்கப்பட இந்த ஒரு நதி மட்டும் ஆண் பெயரால் அழைக்கப்படுகிறது!


இந்தியாவின் மிக நீளமான நதி! இந்தியாவின் எல்லா நதிகளுக்கும் கங்கா, நர்மதா, சிந்து, காவேரி எனப் பெண்கள் பெயர்களாலேயே அழைக்கப்பட இந்த ஒரு நதி மட்டும் ஆண் பெயரால் அழைக்கப்படுகிறது!
இந்நதி மூன்று நாடுகள் வழியாகப் பாய்கிறது. திபெத்தில் அங்சி பனிமலையில் (ANGSI GLACIER) உற்பத்தியாகும் இந்நதி இந்தியாவில் நுழைந்து வங்கதேசத்தின் வழியாகப் பாய்ந்து இறுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது! "பிரம்ம புத்திரா' என்றால் பிரம்மனின் மகன் என்று அர்த்தம்!
இந்து புராணங்களின்படி "சாந்தனு' என்றொரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் மனைவிக்கு பிரம்மதேவரிடமிருந்து ஒரு ஆண் குழந்தை கிடைத்தது! ஆனால் அது என்ன காரணத்தாலோ மனித வடிவை இழந்து தண்ணீர் வடிவம் கொண்டது. எனவே சாந்தனு முனிவர் அந்தத் தண்ணீரைக் கைலாசம், கந்த மாதனம், ஜாருதி, சம்ப்வார்த்தகா என்ற நான்கு மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்கில் ஊற்றினார். அது பின்னாளில் "பிரம்ம குண்டம்' என்ற ஏரியாக உருமாறியது.
பகவான் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரான பரசுராமரிடம் சில முனிவர்கள் புனிதத் தலங்களை தரிசிக்குமாறு பரசுராமரிடம் அறிவுறுத்தினர். அவர் பிரம்ம குண்டம் ஏரி இருக்கும் இடத்திற்கு வந்தார். பள்ளத்தாக்கில் இருக்கும் ஏரி பிற பகுதிகளுக்கும் பயன்படட்டும் என்ற நோக்கில் சூழ்ந்திருந்த மலைகளைத் தன் கையில் இருந்த கோடாரியால் வெட்டினார்! இதனால் நீர் பாய்ந்தோடி வந்தது! மக்கள் பலரும் பயன் பெற்றனர்! தன் தவ வலிமையினால் அந்த ஏரி பிரம்மதேவனின் மகன் என்பதை அறிந்துகொண்ட பரசுராமர், பாய்ந்தோடி வந்த நீரை நோக்கி, "பிரம்ம புத்திரா' என்று அழைத்தார்! இதுவே "பிரம்ம குண்டம்' என்ற ஏரி "பிரம்ம புத்திரா' என்ற ஆறாக மாறிய இந்து புராணக் கதையாகும்
திபெத்தியர்கள் புத்தமதத் துறவி ஒருவரால் இம்மலை உடைக்கப்பட்டு ஏரி நீரானது ஆறாக உருமாறியதாக நம்புகின்றனர். எனவே அவர்கள் "மிகப் புனிதமானது' என்று பொருள்படும் வகையில் "சாங்போ' (TSANGPO) என்று இந்நதியை அழைக்கின்றனர்! திபெத்தியப் பகுதியில் இந்நதிபாயும் இடங்கள் யாவும் மிகப் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் காணப்படும் குறுஞ்செடிகள், மரங்கள், மலர்கள், கனிகள் ஆகியவை யாவும் மருத்துவ குணம் நிரம்பிய மூலிகைகள் என்றும் அவை மனிதர்களின் நோய், முதுமை ஆகியவற்றைப் போக்கவல்லவை என்றும் நம்புகிறார்கள்! ஆகவே எல்லா மக்களும் அவ்விடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை! புத்த மதத் துறவிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்! "ஷாங்ரிலா' (SHANGRILA) என்ற இடத்தில் இருக்கும் இந்நதியின் அருவியானது உலகின் மிக ஆழமான பள்ளத்தில் உள்ள நீர் வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் இந்நதி அருணாச்சலப்பிரதேசத்தில் முதலில் நுழைந்து பின்னர் அஸ்ஸாம் மாநிலத்திற்கு வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் இந்நதி "டிஹாங்' (DIHANG) என்றும், "சியாங்' என்றும் அழைக்கப்படுகிறது! பின்னர் தென்மேற்கில் பாய்ந்து அஸ்ஸாம் மாநிலத்தை அடைகிறது. அங்கு இந்நதியை "ஜொமுனா' (JOMUNA) என்று அழைக்கிறார்கள். அங்கு "பத்மா' மற்றும் "மேக்னா' என்ற இரு கிளை நதிகளையும் இணைத்துக் கொண்டு இறுதியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
இந்நதியின் நீளம் 2900 கி.மீ ஆகும். இது சில இடங்களில் 124 அடிகள் ஆழமும், சில இடங்களில் 380 அடி ஆழமும் கொண்டுள்ளது! எனவே இந்நதி பெரும்பாலும் படகுப் போக்குவரத்துக்கும் நீர்ப்பாசன வசதிக்கும் பயன்படுகிறது. பனி உருகும் காலங்களில் இந்நதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து விடுகிறது!
அஸ்ஸாம் மாநிலத்தில் நுழையும் இந்நதி சில இடங்களில் 8 கி.மீ அகலம் கொள்கிறது. இதன் மூலம் இந்தியாவின் மிக அகலமான நதி என்ற பெருமையையும் பெறுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள "திப்ரூகர்' (DIBRUGARH) மற்றும் "லாகிம்பூர்' (LAKHIMPUR) மாவட்டங்களில் இந்நதி இரு கிளைகளாகப் பிரிகிறது. 100கி.மீ சென்ற பிறகு இவ்விரு கிளைகளும் மீண்டும் ஒன்று சேர்கின்றன. அந்த இடைப்பட்ட பகுதி "மஜூலி தீவு' (MAJULI ISLAND)என்று அழைக்கப்படுகிறது. உலகிலேயே நதிகளுக்கிடையே உள்ள தீவுகளில் இதுவே மிகப் பெரியதாகும்! இது தவிர "உமானந்தா' என்ற மிகச் சிறிய தீவு ஒன்றும் இந்நதியின் கிளை நதிகளுக்கிடையே உள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
பெரிய கப்பல்களும் செல்லும் வகையில் இந்நதி போக்குவரத்திற்குப் பயன்படுகின்றது. இதன் மூலம் நீர்வழிப் போக்குவரத்து இப்பகுதியின் முக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்கு வகிக்கிறது!
அஸ்ஸாம் மாநிலத்தில் 8கி.மீ வரை அகலம் கொள்ளும் இந்நதி வங்க தேசத்தில் நுழையும்பொழுது 1கி.மீ அகலம் அளவிற்குக் குறுகி விடுகிறது.
இந்தியாவில் பிற நதிகளை ஒப்பிடுகையில் பிரம்மபுத்திரா நதியில் மாசுபாடு குறைவு. ஆனால் அதுவும் தற்பொழுது இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வரும் கழிவுகளால் சிறிது சிறிதாக இந்நதியும் மாசடைந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது!
பிரம்மோஸ் ஏவுகணை-- இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டுத் தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணைக்கு இந்தியாவின் "பிரம்மபுத்திரா' மற்றும் ரஷ்யாவின் "மாஸ்க்வா'(MOSKVA) என்ற இரு நதிகளின் முதல் மூன்று எழுத்துக்களை இணைத்து பெயரிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...