தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இருப்பிடம்

எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது ஒரு நல்ல பழக்கம். இதை நீங்கள் டூ விலர் மெக்கானிக் ஷாப்பில் நன்றாகப் பார்க்கலாம். சிறிய கடையாக இருந்தாலும்

News image
Updated On :7 மார்ச் 2015, 7:40 am

என்.எஸ்.வி.குருமூர்த்தி

எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது ஒரு நல்ல பழக்கம். இதை நீங்கள் டூ விலர் மெக்கானிக் ஷாப்பில் நன்றாகப் பார்க்கலாம். சிறிய கடையாக இருந்தாலும் சுவரில் ஒரு பலகையில் பலவித ஸ்பானர்கள், கட்டிங் பிளேயர்கள், ரிங் ஸ்பானர்கள் வரிசையாக மாட்டி இருக்கும். அங்கே ஒரு சிறு உதவியாளன் பொடியன் இருப்பான்.

 அழுக்கு டிரவுசர் கிரீஸ் படிந்த சட்டை, வாராத தலை. ""டேய் பத்து பன்னெண்டு ஸ்பானரை எடு.. போய் ..டீ வாங்கிட்டு வா.. தெருவில் நிக்கிற ஸ்கூட்டி வீலை கழற்று'' பெரிய மெக்கானிக் உத்தரவுக்கு உடனே கீழ்படிவான்.

 இவரும் ஒருகாலத்தில் தொழில் கற்றுக்கொள்ள அப்படி இருந்தவர்தான். டூல்களை உபயோகித்ததும் இருந்த இடத்தில் வைக்காவிட்டால் குரு மெக்கானிக்குக் கெட்ட கோபம் வரும்.

 ஸ்பானரை, கையில் இருப்பதை அவன் மேல் வீசுவார். முதலில் "அரி ஓம்' எனக் கற்றுக்கொள்ள வேண்டியது "எடுத்ததை எடுத்த இடத்தில் வை'.
 அந்தக் காலத்தில் ரயில் பாதைகளில் ஒரு தண்டவாளத்தில் இருந்து ரயில் வேறு தண்டவாளத்துக்குப் போக பாயிண்ட்டுகளை இயக்க பாயிண்ட்ஸ் மேன்கள் தனியே உயரமான ஒரு கட்டடத்தில் லீவர்கள் மூலம் ஏற்றி இறக்குவார்கள்.

 அதற்கு ஒரு சாவி போட வேண்டும். அந்தச் சாவி ஸ்டேஷன் மாஸ்டர் ரூமில் ஒரு கண்ணாடிப் பெட்டியில் தொங்கவிடப்பட்டு ஒரு சிறிய போர்டும் இருக்கும். டூட்டியில் இல்லாதவர்கள் சாவியை எடுத்தால் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள். தற்போது கணினிகள் இயக்குகின்றன.
 வீடுகளில் இல்லத்தரசி எப்போதாவது வெளியூர் போயிருக்கும்போது கணவர் டீ போட முயற்சிப்பார்.

 மனைவி வந்து பார்த்தால் டீ பாத்திரம் விளக்காமல் டீத்தூளுடன் ஸிங்க்கில் இருக்கும். பார்த்தால் டீத்தூள், சர்க்கரை பாட்டில்கள் இடம் மாறி இருக்கும்.
 மனைவி திட்டுவார்.. எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்கத் துப்பில்லை. அவருக்கு எதுவும் எடுத்ததை எடுத்த இடத்தில் வைத்தாக வேண்டும். சிலசமயம் திடீரென கரெண்ட் போய்விட்டால் கை நிதானமாக ஸ்டோர் ரூம் போய் எந்தப் பாத்திரத்தில் அரிசி, பருப்பு, மிளகாய் உள்ளது எனக் கண்டுபிடித்துவிடுவார்.

 இந்த முறையால் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் கூட வீடுகளில் பல வேலைகளைச் செய்வார்கள், சமைப்பார்கள். ஆனால் எல்லாம் உள்ளது உள்ள இடத்தில் இருக்க வேண்டும்.

 பல வீடுகளில் காலை நேரம். எட்டுமணி வாக்கில் திமிலோகப்படும்.. குழந்தைகள் அவசரமாக ஆட்டோ வாசலில் வந்த பின் ஜியோமிதி பெட்டியைத் தேடும்.

 இவர் டூவீலர் சாவியைத் தேடுவார்.

 முக்கிய சாவிகளை ஒரு இடத்தில் வழக்கமாக மாட்டி வைப்பது பல வீடுகளில் உள்ள நடைமுறை.

 அது கடிகாரம் காலண்டர் அருகில் இருக்கும்.

 பீரோ சாவியைக்கூட அப்படி மாட்டி வைப்பது ஆபத்து. திருடர்களுக்கு காரியம் சுலபமாகிவிடும்.

 ப்ளாட்டுகளில் வசிக்கும் பல ஒண்டிக்கட்டைகள் (தனிமகளிரும் கூட) காலையில் பணிக்கு அவசரமாகக் கிளம்பும்போது தேடித் தேடி எடுக்கும்போது முக்கியமான நேரம் காலாவதி ஆகிக் கொண்டிருக்கும்.
 மின்சார ரயிலைப் பிடிக்க முடியாது. கம்பெனி பஸ் சில வினாடிகள் காத்திருந்து போய்விடும். பின் ஆட்டோ, டாக்ஸி பிடிக்க வேண்டும்.
 முக்கியமானவைற்றைத் தேடாமல் எடுத்ததை எடுத்த இடத்தில் வைப்பதைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.

 பில்கள், ரசீதுகள் இவற்றை முறையாக ஃபைல் செய்ய நேரம் இல்லாவிட்டாலும் ஒரு கம்பியில் குத்தி வைத்தால் அவசரத்துக்கு அதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

 இந்தக் கம்பியில் நிறைய சேர்ந்து விட்டால் புடவை வாங்கும் அட்டைப் பெட்டிகள் நாலைந்தில் பெயர் எழுதி ஒட்டி உள்ளே வகைப்படுத்தி ரசீதுகள் முக்கிய பேப்பர்களைப் போட்டு வைத்தால் தேடுவது சுலபம்.
 அவற்றை பீரோ மேல் அடுக்கி வைத்தால் எடுக்க சுலபம். தேவையில்லாதவற்றைப் பின்னர் பிரித்து குப்பையில் போட்டுவிடலாம்.

 இந்த தேடும் முறையைத்தான் கணினிகளும் செய்கின்றன. கோடிக்கணக்கான பலவிதத் தகவல்களை நொடியில் தேடும் தேடு பொறிகள் முதல் எழுத்து, இரண்டாம் எழுத்து, சொல், வாக்கியம், எண், சம்பந்தப்பட்ட துறை என வகைப்படுத்தி சேமித்து வைக்கிறது தன் நினைவகத்தில்.

 நண்பர் ஒருத்தர் மென்பொருள் பொறியாளரான தனிக்கட்டை தன் அடுக்குமாடி குடியிருப்பில் இதேபோல எது எது எங்கே உள்ளது என லிஸ்ட் எழுதி வீட்டில் நாலைந்து இடங்களில் போட்டு வச்சிருந்தார்.

 பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் ஒரிஜினல், கார், டூவீலர் இன்ஸ்யூரன்ஸ் இருக்குமிடம் பீரோ மேல் தட்டில்...

 வீட்டு வரி ரசீது, டெலிபோன் பில், செல்போன் பில் ரசீது இரண்டாம் தட்டில்.

 பாங்க் பாஸ்புக், காஸ் புத்தகம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், படித்த சர்டிபிகேட் மார்க் ஷீட், ஜாதகம், போட்டோக்கள் நாலாம் தட்டில், எல்லா டூப்ளிகேட் சாவிகளும் இடது இழுப்பறை, மாத்திரைகள், பர்ஸ், கிரெடிட் கார்டு வலது இழுப்பறை இப்படி என்று..

 அப்படியும் ஒருநாள் எதையோ ரொம்ப நாழி தேடிக் கொண்டிருந்தார்... ""என்ன தேடறீங்க...'' என அவர் நண்பர் கேட்டார்.

 சட்டை பொத்தான் ஒன்று அறுந்து தொங்குது. ஒரு தையல் போடலாம்னு ஊசி நூலைத் தேடறேன்னார். லிஸ்ட்டில் அவர் அது எங்கே இருக்குன்னு எழுத மறந்திட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.