புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரங்கம்: முக்கனியில் எக்கனி?

முக்கனிமரங்ககளின் சிறப்பைப் பற்றி முதலில் மா வைப் பற்றி மாணவி ஸ்பூர்த்தி பேசுவார்.

News image
Updated On :31 அக்டோபர் 2015, 10:29 am

என்.எஸ்.வி.குருமூர்த்தி

பள்ளியில் ஆண்டு விழா..

முக்கனி மரங்களில் சிறந்தது எது என விவாதமேடை. 

பங்கு பெற்றோர் மாணவ மாணவிகள் ஸ்பூர்த்தி, அனுஷா, ஆகாஷ்

புலவர் தமிழறிஞர் - லியோ பாப்பையா தான் நடுவர்.

அறிவிப்பாளர் ராஜா:  முக்கனிமரங்ககளின் சிறப்பைப் பற்றி முதலில் மா வைப் பற்றி மாணவி ஸ்பூர்த்தி பேசுவார்.

ஸ்பூர்த்தி:  எல்லோருக்கும் வணக்கம்..கைலாசத்தில் விநாயகருக்கும் முருகனுக்கும் ஒரு கலகத்தை நாரதர் ஏற்படுத்திய கனி மாம்பழம்.   காரைக்கால் அம்மையார் துறவு பூண வைத்தது மாம்பழம்..பிஞ்சில் அதற்கு வடு, முற்றியதும் மாங்காய்.. பழுத்தால் பழம் என  மூன்று நிலைகளிலும் அதற்குப் பயன் உண்டு.  மாவிலை மங்கல தோரணம்.. பூரண கும்பத்தில் தேங்காயைச் சுற்றி வைப்பது மாவிலைகளே..புண்ணிய தீர்த்தத்தை சாஸ்திரிகள் தெளிக்க மாவிலையே பயன் படும். மாமரப் பலகைகள் சேதமின்றி கிடைக்கும் மர வேலைகளுக்கு..வெளிநாட்டு செலாவணி ஈட்டித் தரும் ஒரே பழம் .. விமானத்தில் பறக்கிறது கோவாவின்அல்போன்ஸா பழங்கள்.  உலக உற்பத்தியில் நம் நாடு முதலிடம் வகிக்கிறது.. 15 மில்லியன் மெட்ரிக் டன்கள் நம் நாட்டில் விளைகின்றன உலக மொத்த உற்பத்தியான 42 மில்லியன் மெட்ரிக் டன்னில்....மாம்பழத்தில் 13 வைட்டமின் கள் உள்ளன. கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், மங்கனீசு, துத்த நாகம்,சோடியம், பாஸ்பரஸ்,மெக்னீஷியம் என எட்டுஉலோக  மூலகங்களின் சத்துக்கள் உள்ளன.

பாப்பையா:  இத்தனை சத்து இருக்கா..

ஸ்பூர்த்தி: அது மட்டுமா  மாங்கிஃபெரின் என்ற ஸாந்தனாய்டு சத்து உள்ள ஒரே பழம் மாம்பழம் தான். மாமன்னர் அக்பர் ஒரு லட்சம் மாங்கன்றுகளைதர்பங்காவில் நட்டதாகச் சரித்திரம் சொல்கிறது.. இன்றும் டிவிக்களில் மாம்பழ ரசங்களுக்கு மட்டுமே விளம்பரம் செய்யப்படுகிறது.

பாப்பையா:  வருஷம் முழுக்க கிடைக்குமாமே அந்த மாம்பழ பானம்!

ஸ்பூர்த்தி:  ரவிந்திரநாத் தாகூர் மாம்பழ ரசிகர். ஆமெர் மொஞ்சாரி என கவிதைகள் படைத்துள்ளார்.  மகாகவி காளிதாசரும் மாம்பழங்களைப் பாடியுள்ளார்.

பாப்பையா: நம்ம ஊர்ல மாம்பழக் கவிராயரும் இருக்காரே..

ஸ்பூர்த்தி:  இமாம் பசந்த் மாம்பழம் தான் பழங்களின் அரசன் எனக் கொண்டாடப் படுகிறது.. அதன் சுவைக்கும் மணத்துக்கும் ஈடு இணை ஏது..மா வத்தல் மருந்து. அதன் கொட்டையில் உள்ள பருப்பும் மருந்து. ஆகையால் முக்கனிகளில் சிறந்தது "மா' வே..!

பாப்பையா:  எனக்கு வாயில் எச்சில் ஊற வைச்சிட்டார் மாணவி ஸ்பூர்த்தி.. திருவரங்கம் தாத்தாச்சாரியார் தோட்டத்து இமாம் பசந்த் பழம் கிட்டே நிக்க முடியுமான்னு கேட்டு முடிச்சிருக்கார்.. பார்ப்போம்.. அடுத்து வர்றவங்க என்ன பண்ணுறாங்கன்னு..

ஆசிரியர் ராஜா-  இப்போது மாணவி அனுஷா பலாதான் உயர்ந்தது என பேச வருகிறார்.

அனுஷா:  அனைவருக்கும் வணக்கம்... பண்ருட்டி போய் யாராவது பலாப் பழம் வாங்கி இருக்கீங்களா..

பாப்பையா:  அடடா ரயிலில் வரும் போது விழுப்புரம் தாண்டினா சுளை வருமே  ஆஹா..

அனுஷா:  அதன் வண்ணம் என்ன மணம் என்ன.. ஒரு பலாப் பழம் இருந்தால் அந்த இடமே மணக்கும்..கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலான்னு பாடினார் பாரதிதாசனார்.. பலா தானே ருசி மிக்கது. பழங்களில் பெரியது இது தான்

பாப்பையா! ஆமாம் பெரிய பானை பெரிசுகூட இருக்கும்.. வேரில் ஓடிக் கிடக்கும்..என்ன எடை..40 கிலோவரை பார்த்திருக்கேன்

அனுஷா: போர்ச்சுக்கீசியர்கள் கேரள நாட்டில் இந்தப் பழத்தின் சுவையை அறிந்து வியந்தனர்.  பலா மரங்களை 6000 ஆண்டுகளாக இந்தியாவில் பயிரிட்டதற்கான சரித்திரச் சான்றுகள் உள்ளன

பாப்பையா:   எதுக்கும் சரித்திரச் சான்று வேணுமய்யா.. இதோ சொல்லிட்டாங்க பாருங்க..

அனுஷா:  கேரளத்தில் பலாச்சுளைகளை வெல்லத்துடன் சேர்த்துப் பதப்படுத்தி பல மாதங்கள் சாப்பிட பாடம் பண்ணி வைப்பார்கள். தாய்லாந்து வியட்னாம் நாடுகளில் பயிரிடப்படும் பலா பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது பதப் படுத்தப் பட்டு. வியட்நாமில் பலாப் பழ சூப் மிகவும் பிரசித்தம். அந்த மூசு பிஞ்சில் மசாலா சேர்த்து கோலா வருவல், மற்றும் குழம்பு வைத்தால் சுவைக்கும்.

பாப்பையா: ஆஹா அற்புதம்..சைவ உணவின் ருசி உச்சமய்யா அது...

அனுஷா: பலா மூசு சமையல் நார்ச்சத்து மிக்கதால் ஆரோக்கியத்துக்கு உகந்தது. பலாச் சுளையில் 11 வைட்டமின்களும் எட்டு உலோகச் சத்துக்களும் உள்ளன..100 கிராம் சுளையில் இரண்டு கிராம் புரோட்டின் உள்ள ஒரே பழம் பலா

பாப்பையா: கேட்டுக்குங்க.. அசைவ உணவில் உள்ள சத்தும் சுவையும் பலாவில் இருக்கப்பா.. இதைவிட உசத்தி என்னான்னு கேட்கறாங்க

அனுஷா:  மஞ்சள் நிற பலாமரத்தின் கட்டை பலகை மகிமை சொல்லி மாளாது.. உறுதி மிக்கது.. வீணை மிருதங்கம் கஞ்சிரா செய்ய பலா மரம் தான் வேண்டும்

பாப்பையா:  கேட்டீங்களா.. நாமகள் சரஸ்வதி கை வீணையும் நந்தி தேவர் மிருதங்கமும் மங்கள நிற மஞ்சள் பலா மரத்தில் செஞ்சதப்பா.. அது இசை சம்பந்தப்பட்ட மரமப்பா

அனுஷா:  கேரளத்தில் ஹோமங்கள் செய்ய சாஸ்திரிகள் பலாப் பலகையில் தான் அமர்வார்கள்.. வியட்நாமில் புத்த விகாரங்களில் பலா மரமே பயன் படுத்துவார்கள்

பாப்பையா:  புண்ணிய மரமப்பா அது

அனுஷா:  பழுத்துக் கொட்டிய இலைகளையும் ஆடுகள் விரும்பி உண்ணும்..பலாக் கொட்டைகள் சமையலில் ருசி தரும்..எல்லா குழம்புகளிலும் போடலாம், சுட்டும் தின்னலாம் பலா ஒரு நிலா எனச் சொல்லி முடிக்கிறேன் வணக்கம்

பாப்பையா:  நம் நாடு மட்டுமல்ல.. தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் வியட்நாம் எல்லாம் பலா மகிமை பிரசித்தம் எனச் சொல்லிட்டாங்க அனுஷா.. என்னா தகவல்கள்.. திக்குமுக்காட வச்சிட்டாங்க.. பலா பெருமையை... வீணை தொனியில்...  மிருதங்க ஜதியில்! 

ஆசிரியர் ராஜா:  அடுத்து மாணவர் ராஜா வாழை பற்றி பேசுவார்.

ஆகாஷ்:  அவையோருக்கு வணக்கம். (தன் பையில் இருந்து ஒரு வாழைப் பழத்தை எடுத்து நடுவரிடம் நீட்டி) ஐயா இதை சாப்பிட உங்களுக்கு எத்தனை நாழி பிடிக்கும்

பாப்பையா:  நாழியா?  இதோ உரிச்சேன் சாப்பிட்டேன்.. முடிஞ்சுது கதை!

ஆகாஷ்: மற்ற பழங்களை அப்படி எளிதில் சாப்பிட முடியுமா?.. எல்லா சுப காரியங்களிலும் தலைமை வகிப்பது வாழைப் பழ சீப்பு தானே.. வசதி இல்லாத ஏழைகளும் இரண்டு வாழைப் பழங்களை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து விடுவார்கள்.  எளியவர்களின் பழம் வாழை!

பாப்பையா:  இறைவன் எளியவர்களுக்கு எளியவன்.. பக்தி செலுத்த இரண்டு வாழைப் பழம் போதுமப்பா.. சாப்பிட எளிது.. கஷ்டமில்லாததப்பா  சுலபமானது ..அடடா!

ஆகாஷ்: அழுகிற குழந்தை கை வாழைப் பழம் என்பார்கள்.. குழந்தையின் சிறந்த உணவு அது. 107 நாடுகளில் வாழை பயிராகிறது.  வாழைப் பழத்தில் 75 சதவீதம் தண்ணீர் தான்.. நீர்ச் சத்து மிக்க பழம்  தாகத்துக்கு உகந்தது..

பாப்பையா:  வெயில் நேரத்தில் ஜூஸ் வேண்டாங்க.. ரெண்டை உரிச்சுத் தள்ளுங்க.. தாகம் அடங்கிடும்ன்னு சொல்றார்.. காசு செலவில்லீங்க..சிக்கனமானதுங்க..

ஆகாஷ்: வாழைமரம் மங்கல நிகழ்வுக்கு வாசற்படி! குலைதள்ளிய வாழை நல் நிமித்தம்! கண்ணுக்கு அழகு..வாழைப் பூ! உள் மொட்டு குடல் அழற்சிக்கு மருந்து! வாழை நார் பூ தொடுக்க உதவும்.. வாழைப் பட்டையில் மூடிவைத்த வெற்றிலை ஒரு வாரம் வாடாது.....,பூமாலைகள் காயாது! வாழைத்தண்டு சிறுநீரகக் கற்களுக்கு மருந்து!

பாப்பையா:  லட்சக் கணக்கில் செலவு வேண்டாம்  பத்து ரூபாயில் ஒரு தண்டு வாங்குங்க போதும் பொரியல் செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க.நீர்க்கடுப்பு போயிடுமுங்க.

ஆகாஷ்: நுனி வாழை இலை விருந்துக்கு அழகு!

பாப்பையா:  சூடா பாயசத்தை இலையில் விட்டு அப்பளத்தை நொறுக்கி உள்ளங்கையில் வழிச்சு ஒரு உறி உறிஞ்சு பாருங்க.. அந்த வாழை இலை வெந்த மணத்தோட  ஆஹா என்னா ருசி.. வருமா.. கிடைக்குமா.. வேறே எதிலும்?

ஆகாஷ்:  கி.மு 8000 ஆண்டுக்கு முன்னர் வாழை பயிரிடப்பட்டதாய் சரித்திர வல்லுநர்கள் கருதுகிறார்கள்! கி.மு முதலாம் நூற்றாண்டிலேயே மடகாஸ்கரில் வாழை இருந்ததற்கான சான்றை சரித்திர ஆசிரியர்கள் உறுதிப் படுத்தி இருக்கிறார்கள். எகிப்தில் பத்தாம் நூற்றாண்டு இலக்கியங்களில் வாழைப்பழக் குறிப்பு உள்ளது.வாழைப் பழ ஏற்றுமதியில் ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் அனுப்பி நம் நாடு முதனிலை வகிக்கிறது.,

பாப்பையா: நாம சாப்பிட்டது போகவா?

ஆகாஷ்: எட்டு வைட்டமின்களும் ஏழு உலோகச் சத்துக்களும் வாழைப் பழத்தில் உள்ளன. பல்லை உறுதி ஆக்கும் ஃபுளோரைடு சத்தும் உள்ளது. 100 கிராம் பழத்தில்  358 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ள ஒரே பழம் வாழை. ஜப்பானில் வாழை நாரில் இருந்து ஒருவித மெல்லிய துணி தயாரிக்கிறார்கள். அது அவர்கள் பாரம்பரிய கிமானோ, கமுஷிமோ உடையில் பயன்படுகிறது.

பாப்பையா: இந்த தீபாவளிக்கு அந்தத் துணியிலதான் சட்டை தெச்சுக்கணும்!

ஆகாஷ்: நேபாளத்தில் வாழை நாரில் விரிப்புகள் நெய்கிறார்கள்.. வாழை நாரில் பேப்பர் செய்கிறார்கள். பஞ்சாமிர்தம் செய்ய வாழைப் பழமே முதன்மை. ஒரு வாழை போதும்!  வாழை யடி வாழையாகத் தழைத்துவிடும்! செலவு குறைவு!  பயன் அதிகம்! காட்சிக்கு இனிமை! பயன்களோ இலைமுதல் அடிவரை!ஈடு இணை உண்டோ இதற்கு. வணக்கம்

பாப்பையா முடிவுரை:  அருமையா பேசினாங்க.. வாசனைக்கு, அன்னியச் செலாவணிக்கு மாம்பழம்! ருசிக்கு பலா! எளிமை மிகுந்த வாழைன்னு! ஆனால் ஏழை முதல் பணக்காரர் வரை எளிதில்  அணுக முடிந்தவரே சிறந்த தலைவர்! இல்லையா? அதை வைத்துப் பார்க்கையில் வாழைப் பழத்துக்கு நிகர் உண்டா..ஓட வேண்டாம் தேட வேண்டாம்,.. மிக அருகில் கைக்கெட்டிய தூரத்தில் கிடைக்கும் ஒரே பழம்..வாங்க எளிது,சாப்பிட எளிது,... எனவே வாழையே தலைசிறந்தது என தீர்ப்பளிக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.