ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கருவூலம்

மனித வரலாற்றில் பேரரசர்களும், மாவீரர்களும் மட்டும் கதாநாயகர்கள் அல்ல! சாமானிய மக்களின் துயர் துடைக்கும் யாவரும் கதாநாயகர்களே! மாமனிதர்களே!

News image
Updated On :19 செப்டம்பர் 2015, 10:51 am

என். பாலசுப்ரமணியன்

டாக்டர் டேவிட் லிவிங்ஸ்டன்!

மனித வரலாற்றில் பேரரசர்களும், மாவீரர்களும் மட்டும் கதாநாயகர்கள் அல்ல! சாமானிய மக்களின் துயர் துடைக்கும் யாவரும் கதாநாயகர்களே! மாமனிதர்களே!

 அத்தகைய மாமனிதர்களுள் ஒருவரே "டாக்டர் டேவிட் லிவிங்ஸ்டன்' ஆவார்! ஒரு ஏழை ஸ்காட்டிஷ் குடும்பத்தைச் சேர்ந்த இவர் மருத்துவராகி ஏழைகளுக்கு சேவை செய்ய நினைத்தார். 19ஆம் நூற்றாண்டு வரை அங்கு இலவசக் கல்வி இல்லை! ஆகவே 10 வயதிலிருந்தே ஒரு காட்டன் மில்லில் கூலித் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்து தினமும் 14மணி நேரம் வரை உழைத்துப் பொருளீட்டினார். வேலை நேரம் போக மீதி நேரங்களில் கல்வி கற்றார். தனது 27ஆவது வயதில் மருத்துவர் பட்டம் பெற்றார்.

Story image

 கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரியும் ஆர்வலர்களை "மிஷனரிகள்' என்று அழைப்பர். மக்களுக்குக் கல்வியறிவு புகட்டுவதிலும் மருத்துவ சேவை புரிவதிலும் இந்த மிஷினரிகள் ஆற்றிய பங்கு அளவிடற்கரியது. டாக்டர் லிவிங்ஸ்டன் தானும் ஒரு மிஷினரியாக சேவை செய்ய வரும்பினார்.

 தென்னாப்பிரிக்காவில் "குருமான்' என்ற இடத்தில் மிஷனரியாகப் பணிபுரிந்த டாக்டர் மொஃபாட் என்பவர் லிவிங்ஸ்டனை ஆப்பிரிக்காவில் உள்ள மிகவும் பின் தங்கிய பகுதியில் உள்ள மக்களுக்குச் சேவை செய்ய வருமாறு அழைத்தார். அங்கிருந்த வெள்ளையர்கள் கறுப்பின மக்களை அடிமைகள் போல நடத்தினர். அங்கு சென்ற லிவிங்ஸ்டன் அடிமை வணிகத்தை கடுமையாக எதிர்த்தார். தன் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என உறுதி பூண்டார்.

 மக்களிடம் தன் கருத்துகளைக் கூற மொழி அவசியம். ஆகவே வெகுவிரைவில் ஆப்பிரிக்காவில் பேசப்படும் பல வட்டார மொழிகளைக் கற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி, ஆப்பிரிக்காவில் தான் இருந்த நாட்களை ஒரு புத்தகத்தில் பதிவு செய்தார். டாக்டர் மொஃபாட்டின் மகள் மேரியை 1844ஆம் ஆண்டு மணந்தார்.

 மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள பழங்குடி இனமக்களுக்கு சேவை செய்ய விரும்பினார். எனவே தன் மனைவியையும், குழந்தைகளையும் ஆப்பிரிக்க பழங்குடி இன மக்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
 

Story image

 1849ஆம் ஆண்டு "கலஹாரி' பாலைவனத்தைக் கடந்து மேலும் பல புதிய இடங்களுக்குச் செல்ல விரும்பினார். அவர் சென்ற வழி மிகவும் ஆபத்தானதாகும். பாலைவனத்தை ஒட்டி முட்

புதர்க் காடுகளும், முதலைகள் நிரம்பிய ஏரிகளும், சேறு நிறைந்த ஈர மணற் பகுதிகளையும் தாண்டிச் செல்ல வேண்டி இருந்தது. இரண்டு ஆண்டுகள் பயணத்தின் முடிவில் அவர் "ஜாம்பஜி' ஆற்றை அடைந்தார். இதன் மூலம் மத்திய ஆப்பிரிக்காவை அடைந்த முதல் மிஷனரி என்ற பெருமையை அடைந்தார். சரியான சாலை வசதி இல்லாமல் மக்கள் படும் துன்பத்தைக் கண்ட அவர் ஜாம்பஜி நதியைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என நினைத்தார்.

 ஆனால் அது சில இடங்களில் ஆழம் நிறைந்தும், சில இடங்களில் ஆழம் குறைந்தும், சில இடங்களில் அருவி போன்றும் இருந்தது. இதனால் அது போக்குவரத்துக்குப் பயன்படவில்லை. தன்னுடன் சில ஆப்பிரிக்கப் பழங்குடி இனமக்களை அழைத்துக்கொண்டு மேலும் அந்த ஆற்றை ஒட்டி மேற்கு நோக்கிப் பயணித்தார். ஆறு மாதப் பயணத்தின் முடிவில் மத்திய ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதியை அடைந்தனர்.

 டாக்டர் லிவிங்ஸ்டன் தனக்குப் பின்னால் வரும் பயணிகள் பயன்படும் வகையில் பயணம் செய்த வரைபடம், கண்ட தாவரங்கள், பூச்சி இனங்கள், ஆகியவை குறித்து தமது பதிவேட்டில் குறித்துக் கொண்டார்.

Story image

 மேலும் ஜாம்பஜி நதியில் கிழக்கு நோக்கிப் பயணம் செய்தார். பத்து நாட்கள் பயணத்தின் முடிவில் விக்டோரியா அருவியை அடைந்தார். இது வரலாற்றில் மிகப் பெரிய நிகழ்வாகும்.  ஏனெனில் ஆப்பிரிக்காவில் தனி ஒரு மனிதராகப் போக்குவரத்து வசதிகள் ஏதுமற்ற அந்த காலகட்டத்தில் வெற்றிகரமாகப் பயணம் செய்தவர் டாக்டர் லிவிங்ஸ்டன் மட்டுமே! தாம் பயணம் செய்த ஒவ்வொரு பகுதியிலும் ஏழை எளிய மக்களின் இல்லத்திற்கே சென்று மருத்துவ சேவை செய்தார்.

 அங்குள்ள மக்களின் நிலை உயர கல்வி அவசியம் என்பதை உணர்ந்தார். மேலும் பல மிஷனரிகள் அங்கு வர வேண்டும் என விரும்பினார். எனவேதான் இத்தகைய கடும் பயணங்களை மேற்கொண்டார். இடைவிடாத பயணங்களும், ஆப்பிரிக்காவின் கடும் வெப்பமும் அவர் உடலை வாட்டின. எனவே தன்  மனைவி குழந்தைகளுடன் இங்கிலாந்திற்கே திரும்பிச் சென்றார். அங்கு விக்டோரியா மகாராணியால் கெளரவிக்கப்பட்டார். "மிஷனரி ட்ராவல்ஸ்' என்ற புத்தகத்தை எழுதினார். அவர் இங்கிலாந்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டது.

 ஆயினும் அவர் எண்ணம் யாவும் ஆப்பிரிக்க மக்களைச் சுற்றியே இருந்தது.  குழந்தைகளை இங்கிலாந்திலேயே விட்டுவிட்டு மீண்டும் தன் மனைவியுடன் ஆப்பிரிக்காவிற்கு திரும்பினார். இச்சமயத்தில் ஆப்பிரிக்காவின் வடகோடிப் பகுதியில் உள்ள நாடுகளுக்குச் செல்ல விரும்பினார். ஆனால் 1865ஆம் ஆண்டு அவர் மனைவி மரணம் அடைந்தார்.

Story image

 அதன் பிறகு 5 வருடங்கள் டாக்டர் லிவிங்ஸ்டன் பற்றி எந்தத் தகவலும் இல்லை. எனவே "நியூயார்க் ஹெரால்ட்' என்ற அமெரிக்க நாளிதழ் "ஸ்டான்லி' என்ற பத்திரிகையாளரை  அனுப்பி டாக்டர் லிவிங்ஸ்டன் பற்றிக் கண்டறிந்து வர அனுப்பியது. பல போராட்டங்களுக்குப் பின் 1871ஆம் ஆண்டு ஸ்டான்லி, டாக்டர் லிவிங்ஸ்டனைக் கண்டறிந்தார்! ஆப்பிரிக்க தட்பவெப்பத்தால் அவர் அடையாளம் தெரியாத அளவு கறுத்தும் உடல் மெலிந்தும், உருக்குலைந்தும் காணப்பட்டார்!

 அந்நிலையிலும் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை புரிவதை அவர் கைவிடவில்லை. அப்பகுதி மக்கள் அவர் மீது பேரன்பு வைத்திருந்தனர். நாட்கள் கடந்தன. ஸ்டான்லி இங்கிலாந்து திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடன் வருமாறு டாக்டர் லிவிங்ஸ்டனை அழைத்தார் ஸ்டான்லி. ஆனால் அவர் மறுத்து விட்டார். மே மாதம் 1ஆம் தேதி 1873ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் மரணமடைந்தார்.
 

Story image

 ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து டாக்டர் லிவிங்ஸ்டன் மரணமடைந்த தகவல் இங்கிலாந்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அவர் மேல் பேரன்பு கொண்ட ஆப்பிரிக்கப் பழங்குடி இன மக்கள் அவர் உடலைக் கெட்டுப் போகாமல் பதப்படுத்திக் கப்பல் மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தனர்.

 ஏழை, அடிமை மக்களுக்கு உண்மைத் தொண்டு செய்த இப்பெருமானாரின் உடல் புகழ்பெற்ற ஆங்கிலேயர்களை நல்லடக்கம் செய்யும் "வெஸ்ட் மினிஸ்டர் அபே' யில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அடக்கமும் எளிமையும் நிரம்பிய இம்மாமனிதர் ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களின் இதயங்களில் இன்றும் வாழ்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.