அரங்கம்: உயிர்களிடம் அன்பு!
வினோத், மிதி வண்டியை நிறுத்திவிட்டு வா! அவசரம்...,இந்த மயிலை உடனே கால்நடை மருத்துவ மனைக்கு கொண்டு போக வேண்டும்.


காட்சி - 1
இடம் - தெரு
மாந்தர் - மணிமாறன், வினோத்.
(தெரு. ஊரின் பக்கத்து வனப்பகுதியில் இருந்த ஒரு மயில் வழி தவறி அந்தத் தெருவில் நடமாடுகிறது. தெரு நாய்கள் அதை விரட்டுகின்றன. ஒரு நாய் அதன் கழுத்துப் பகுதியைக் கடிக்கிறது. பள்ளிக்கு அந்த வழியாக மிதிவண்டியில் வந்த மணிமாறன் ஒரு குச்சியைக் கையிலெடுத்து அந்த நாய்களை விரட்டுகிறான். மயில் காயத்தோடு கீழே கிடக்கிறது. அப்போது அவனுடன் படிக்கும் வினோத் வருகிறான்)
மணிமாறன்: வினோத், மிதி வண்டியை நிறுத்திவிட்டு வா! அவசரம்...,இந்த மயிலை உடனே கால்நடை மருத்துவ மனைக்கு கொண்டு போக வேண்டும்.
வினோத்: அப்படி என்ன அவசரம்?
(மணிமாறன் விஷயத்தைக் கூறுதல்)
வினோத்: நான் பள்ளிக்குப் போக வேண்டும். காலைப் பேரவை முடிந்ததும் "உயிர்களிடம் அன்பு' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அது முடிந்ததும் பேச்சுப் போட்டி! தாமதமாகப் போனால் சேர்க்க மாட்டார்கள்.
மணிமாறன்: இந்த உ.யிரின் நிலையைப் பார்த்த பின்பும் நீ இப்படிப் பேசுவது வேதனையாக உள்ளது. நீ மருத்துவமனையை நோக்கி மிதிவண்டியை மிதித்தால் நான் கேரியரில் இந்த மயிலோடு அமர்ந்து கொள்வேன். தாமதம் செய்தால் இதன் உயிருக்கு ஆபத்து!
வினோத்: எங்கள் வீட்டில் வழியில் தேவையில்லாமல் எங்கும் நிற்கக்
கூடாது...,வேடிக்கை பார்க்கக்கூடாது...,வீண் வேலையில் ஈடுபடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
மணிமாறன்: ஓர் உயிரைக் காப்பாற்ற முயற்சி எடுப்பது வீண்வேலையா?
(வினோத் போகிறான். மணிமாறன் கண் கலங்கி நிற்கிறான். மயிலைத் தனியாக விட்டுவிட்டு உதவிக்கு ஆளைத் தேடவும் தயங்குகிறான். அப்போது அவனுடைய பக்கத்து வீட்டில் வேலை பார்க்கும் பொன்னி என்ற சிறுமி வருகிறாள்)
பொன்னி: அண்ணா, என்ன விஷயம்?.....(விஷயத்தைச் சொல்கிறான்)......தாமதிக்காதீர்கள்! மயிலை என்னிடம் கொடுங்கள் கவனமாக வைத்துக் கொள்கிறேன். நீங்கள் மிதிவண்டியை எடுங்கள்!
(மிதி வண்டியின் பின் பகுதியில் அவள் மயிலோடு அமர்கிறாள். அவன் மருத்துவமனையை நோக்கி மிதிவண்டியை ஓட்டுகிறான்.)
காட்சி - 2
இடம் - கால்நடை மருத்துவமனை.
மாந்தர் - மணிமாறன், பொன்னி, மருத்துவர், வனத்துறை அலுவலர்.
(மருத்துவர் மயிலின் கழுத்திலிருந்த இரத்தத்தைத் துடைத்து மருந்து போடுகிறார். நாய் கடித்ததால் பாதுகாப்புக்கு ஒரு ஊசியும் போடுகிறார். சற்றுத் தூரத்தில் வனத்துறை இருந்தது. அங்கே சென்று விஷயத்தைச் சொல்லி மயிலை ஒப்படைக்கின்றனர்)
வனத்துறை அலுவலர்: தம்பி, நீ தக்க நேரத்தில் அந்த நாய்களை விரட்டி இந்த மயிலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதால் பிழைத்தது. உயிர்கள் மீது உண்மையான அன்பு காட்டிய உனக்கும் இந்தப் பெண்ணுக்கும் என் நன்றி! பாராட்டுகள்! நீங்களும் உங்கள் நண்பர்களும் விரும்பும்போது இங்கே வரலாம். இங்கே நாங்கள் பாதுகாத்து வரும் விலங்குகளையும் பறவைகளையும் பார்க்கலாம்!
மணிமாறன்: உங்கள் அன்புக்கு நன்றி ஐயா!
(அவனிடமும் பொன்னியிடமும் அவர் சில தகவல்களைக் கேட்டுக் குறித்துக் கொள்கிறார்...அவனும் பொன்னியும் வெளியே வருகிறார்கள்)
மணிமாறன்: பொன்னி, வீட்டுவேலை செய்யும் ஏழைச் சிறுமியான உன்னிடம் இருக்கும் பரிவும், அக்கறையும் அன்பும் கண்டு நான் வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறேன்....,மயிலை அந்த நிலையில் விட்டு விட்டு நான் வேறு எங்கும் உதவி தேடிப் போகமுடியாத சூழ்நிலை. நல்ல வேளை. நீ வந்தாய்! உன் உதவிக்கு நன்றி.
பொன்னி: எனக்கு எதற்கு நன்றி? அந்த மயிலைக் காப்பாற்றி விட்டோம். அதற்காகக் கடவுளுக்கு நன்றி!
மணிமாறன்: நானும் என் பெற்றோரும் எப்போதும் உனக்கு உதவியாக இருப்போம். இப்போது நீ எங்கே செல்ல வேண்டும் சொல். நான் கொண்டு விடுகிறேன்.
பொன்னி: வேண்டாம் அண்ணா! நீங்கள் பள்ளிக்குச் செல்லுங்கள். நேரமாகிவிட்டது. எனக்கு நடை பழகிவிட்டது. நான் காய்கறி வாங்க வந்தேன். வாங்கிக் கொண்டு நான் போகிறேன்.
காட்சி - 3
இடம் - பள்ளியின் காலைப் பேரவை.
மாந்தர் - தலைமையாசிரியர் மணியன், மணிமாறன், பொன்னி.
(மேடையில் மணியனுக்கு அருகில் நிற்கும் மணிமாறனையும் பொன்னியையும் வியப்போடு பார்க்கிறான் வினோத்)
மணியன்: (மாணவர்களை நோக்கி) என் அருகில் நிற்கும் மணிமாறன் ஒன்பதாம் வகுப்பு மாணவன். "உயிர்களிடம் அன்பு' என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டிக்கும், பேச்சுப் போட்டிக்கும் அவன் பெயர் கொடுத்திருக்கிறான். அனால் அவனால் இந்தப் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை......
....அதற்குக் காரணம் என்ன தெரியுமா? காட்டிலிருந்து வழி தவறி ஊருக்குள் வந்த ஒரு மயிலை நாய்கள் துரத்திக் காயம் ஏற்படுத்த...,அதைத் தக்க நேரத்தில் காப்பாற்றியிருக்கிறான். அதற்குச் சிகிச்சை அளித்து வன்த்துறையில் சேர்த்துவிட்டு வந்திருக்கிறான். இது எவ்வளவு பெரிய அரிய செயல்! "எழுத்தையும் பேச்சையும்விட உயர்ந்தது செயல்' என்பதில் தெளிவாக இருக்கும் மணிமாறனை நான் பாராட்டுகிறேன்!.......
.......நம் பள்ளி சார்பாக "இயற்கையின் நண்பன்' என்ற பட்டத்தை வழங்கி, இந்தப் பதக்கத்தையும் அணிவிக்கிறேன்..........
.....மணிமாறனின் செயலுக்கு தக்க நேரத்தில் உதவியாக இருந்த பொன்னி என்ற இந்தச் சிறுமியையும் பாராட்டி, இந்தப் பரிசை வழங்குகிறேன். விரைவில் இந்தப் பெண்ணுக்கு நம் பள்ளியில் படிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்துவோம்! வறுமையால் இடையில் நின்று போன படிப்பு மீண்டும் அவளுக்குக் கிடைக்கட்டும்!
(ஆசிரியர்களும் மாணவர்களும் கர ஒலி எழுப்புகிறார்கள்)
காட்சி - 4
இடம் - பள்ளித்திடல்
மாந்தர் - மணிமாறன், வினோத்.
(மாணவர்கள் மணிமாறனைப் பாராட்டுகிறார்கள். வினோத் அவனை நோக்கி வருகிறான்)
வினோத்: மணி, என்னை மன்னித்துவிடு! கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, இவற்றில் மணி மணியாக எழுதியும் பேசியும் வெல்வதுதான் பெருமை என்று இருந்தேன். இந்தப் பரிசுகளைப் பெறாவிட்டாலும், உயர்ந்த கருத்துகளை, வாழ்வில்....,செயலில் காட்டுவதில்தான் மேன்மை இருக்கிறது என்று புரிந்துகொண்டேன். இனி நானும் உன் செயல்களுக்கு உதவிக்கரம் நீட்டுவேன்!
மணிமாறன்: உன்னிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
வினோத்: நீ காப்பாற்றிய அந்த மயில் தொடர்பான நிகழ்ச்சி, நான் திருந்துவதற்கு ஒரு காரணமாகிவிட்டது. அந்த மயிலை நான் பார்க்க விரும்புகிறேன். ஒரு நாள் என்னை அங்கே அழைத்துச் செல்.
(மணிமாறன் அவனை அன்போடு அணைத்துக் கொள்கிறான்)
திரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...