அரங்கம் - மருந்து
அஞ்சலை: அம்மா.. பாத்திரம் துலக்கிட்டேன்.. வீடு பெருக்கிட்டேன்.. துணி மட்டும் போட்டு வைங்க.. நாளைக்கி சேர்த்து துவைக்கறேன்..


காட்சி -1
இடம்: ராஜா வீட்டு சமையல் அறை
கதை மாந்தர் - அப்பா-ராஜா, தாய்-லெட்சுமி, வேலைக்காரி - அஞ்சலை,
அஞ்சலை: அம்மா.. பாத்திரம் துலக்கிட்டேன்.. வீடு பெருக்கிட்டேன்.. துணி மட்டும் போட்டு வைங்க.. நாளைக்கி சேர்த்து துவைக்கறேன்..
லெட்சுமி: ஏன் என்னவோ மாதிரி இருக்கே..உடம்பு சரியில்லையா..
அஞ்சலை: ஆமாம்மா..லேசா காய்ச்சலா இருக்கு ரெண்டு நாளா..
லெட்சுமி: ஏதாச்சும் மாத்திரை தரட்டுமா..
அஞ்சலை: இருந்தா கொடுங்க.. போட்டுக்கறேன்..
(லெட்சுமி ஒரு ஜுர மாத்திரை எடுத்துத் தர அப்போது அங்கே வரும் அப்பா ராஜா...)
ராஜா: லெட்சுமி.. யாருக்கு இந்த மாத்திரை..
லெட்சுமி: அஞ்சலைக்குத் தாங்க.. ஜுரம் போல இருக்காம்.. போன மாசம் எனக்கு ஜுரம் வந்தப்போ டாக்டர் தந்த மாத்திரைகள் மிச்சம் நாலு இருக்கு அதைத் தான் தர்றேன்..
ராஜா: நீ செய்வது மாபெரும் தவறு.. அஞ்சலைக்கு இரண்டு நாளா காய்ச்சல்ன்னு சொல்லும்போது அது என்ன வகை ஜுரம்ன்னு தெரிஞ்சு, அதுக்குத் தக்க மாத்திரை மருந்துகளை டாக்டர் தருவதைத்தான் சாப்பிடணும்..அவருக்குத்தான் எத்தனை வலிமையுள்ள மருந்து, எத்தனை வேளை எனத் தெரியும். சில விஷ ஜுரங்களை நாட்பட விட்டுவிட்டால் படுத்த படுக்கையாக கிடக்க நேரும் சில வாரங்கள்.. அஞ்சலை முதலில் டாக்டரிடம் போய் உடம்பைக் காட்டு.. இந்தா இருநூறு ரூபா..போய் முதல்லே காட்டு...
(அஞ்சலை போன பின்)
ராஜா : சுய மருத்துவம் தவறு..இப்போ நகரெங்கும் டெங்கு, சிக்கன் குனியா, பன்றிக் காய்ச்சல் இப்படி பல வித காய்ச்சல்கள் மக்களை தாக்குது.. ஜாக்கிரதையா இதைக் கையாளணும் படிச்ச நாம படிக்காத மக்களுக்கு பாதை காட்டணும்..
லெட்சுமி: எப்பவும் அஞ்சலை தலைவலி இப்படி ஏதாச்சும்னா மாத்திரை கேட்பாள்.. நான் பழைய மாத்திரைகளை தருவேன்..
ராஜா: தவறு.. அதில் பல காலாவதியாகி இருக்கலாம்.. உடலுக்குக் கேடு விளைவிக்கலாம்..
லெட்சுமி: இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேங்க.
***
காட்சி 2
இடம். பள்ளி வாசல்படி
மாந்தர்: சாய்சரண், அல்கா, ராஜா, வையாபுரி
(குழந்தைகள் சாய்சரண், அல்கா இருவரும் ஆட்டோவுக்காக காத்திருக்கிறார்கள் ஆட்டோ டிரைவர் வையாபுரி வருகிறார்.)
வையாபுரி: குழந்தைங்களா.. நீங்க ஆட்டோவிலேயே இருங்க.. எனக்கு இரண்டு நாளா வயிற்றுப் போக்கு மாதிரி இருக்கு.. போய் மெடிக்கல் ஷாப்பில் சொல்லி இரண்டு மாத்திரை வாங்கி வர்றேன்..ஸ் அப்பா.. வெல வெலத்துப் போச்சே பாடி..
சிறிது நேரம் கழித்து வருகிறார் - மாத்திரை வாங்கிட்டேன்.. பழய குழம்பு சாப்பிட்டது வேலையைக் காட்டுது
சாய் சரண்: ஆட்டோக்கார்..,நான் சொல்றேனேன்னு தப்பா நினைக்கலேன்னா ஒண்ணு சொல்லட்டா..
வையாபுரி: சொல்லுங்க தம்பி!
சாய்சரண்: எங்க தாத்தாவுக்கு இது மாதிரி இருந்தப்போ மெடிக்கல் ஷாப்பில் போய் இது மாதிரி மாத்திரை வாங்கி சாப்பிட்டார்.. பேதி நிக்கலே.. நிலைமை மோசமாகி ஸலைன் போட்டாங்க ஆஸ்பத்திரியில்.. டாக்டர் உடலில் நீர்ச் சத்து குறைவாயிடுச்சின்னு சொல்லிட்டார்.. நீங்க முதல்லே டாக்டரிடம் காட்டறது நல்லது..
சாய் சரண்: அப்பா! ஆட்டோக்காருக்கு வயிற்றுப் போக்கு மாதிரி இருக்காம்.. ரொம்ப வீக்கா இருக்காம்..
ராஜா: என்ன வையாபுரி சார்.. வயிறு
சரியில்லையா..
வையாபுரி: ஆமாம் சார்.. பழைய குழம்பு சாப்பிட்டதில் இருந்து இப்படி இருக்கு.. அறூ ஏழு தரம் போயிட்டு.. வெல வெலன்னு இருக்கு.. வண்டி ஓட்டக் கூட தெம்பில்லை.. குழந்தங்களுக்கு பரிட்சை டயமாச்சேன்னு வந்தேன்..
ராஜா: அதனால் என்ன அப்பா.. முடியாத சமயங்களில் நாங்க எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டோமா.. முதல்லே நீங்க வீட்டுக்குப் போய் ஒரு ஸ்பூன் உப்பு இரண்டு ஸ்பூன் ஜீனி போட்டு ஒரு டம்ளர் சுட்டு ஆறிய தண்ணீரில் கரைச்சுக் குடிங்க.. நேரா டாக்டர் வீட்டுக்குப் போங்க உடனே.. பழைய உணவு மிச்சம் மீதியை சாப்பிடுவது கெடுதல்.. அப்படி சாப்பிட வேண்டி இருந்தாலும் நல்லா சூடாக்கிதான் சாப்பிடணும். இதை ஞாபகம் வச்சுக்குங்க!
வையாபுரி: சரிங்க ஐயா.., டாக்டர் வேணுகோபால் ஐயா வீட்டு குழந்தைங்களும் நம்ம ஸ்கூல் சவாரிதான்.. கூட்டமா இருந்தாக் கூட உடனே என்னைப் பார்த்திடுவார்.. ஐயா நாளைக்கு ஒரு நாள் மட்டும் ஆட்டோ வராதுங்க... ரெஸ்ட் எடுத்துக்கப் போறேன்
ராஜா: சரிப்பா.. பணம் இருக்கா தரட்டுமா..?
வையாபுரி: ஒரு இருநூறு தாங்க.. மாசக் கடைசியில் சம்பளத்தில் கழிச்சுக்குங்க..
(ராஜா பணம் தருகிறார்..)
***
காட்சி-3
பாட்டி லோகாம்பாள், சந்தியா,
தாத்தா சீனிவாசன், லட்சுமி,
பாட்டி லோகாம்பாளிடம்
பக்கத்து வீட்டு மருமகள்
சந்தியா: பாட்டி மூணு நாளா என் பொண்ணு ரம்யா அடி வயத்தை வலிக்குகுதுன்னு துடிக்கிறா. சில சமயம்.. வலி பொறுக்க முடியாம அழறா..அவ அப்பா வெளியூரில் வேலை பார்ப்பதால் என்ன பண்றதுன்னு புரியலே பயமா இருக்கு பாட்டி.
லோகாம்பாள்: வயசு என்ன அவளுக்கு... பன்னெண்டாவுதா.. வளர்ற வயசு.. அப்படித்தான் இருக்கும்.. விளக்கெண்ணெயை நல்லா தடவு..
தாத்தா சீனிவாசன்: கோடை உச்சத்தில் வெப்பம் உடம்பைத் தாக்குது.. வெந்தயத்தைப் பொடி பண்ணி சாப்பிடச் சொல்லுங்க..உடம்பு உஷ்ணம் போய் வலி நிக்கும்..பேயன் வாழைப்பழம் சாப்பிட்டா சூடு தணியும்
(அப்போது அங்கு வரும் லெட்சுமி சந்தியாவிடம்) - ரம்யாவுக்கு எத்தனை நாளா இப்படி இருக்கு..
சந்தியா: ஒரு மாசமா அக்கா..
லெட்சுமி: அப்போ உடனே லேடி டாக்டர் கிட்டே காட்டணும் ஸ்கேன் எடுத்துப் பார்த்திடறதும் நல்லது.. இந்த வலிக்குக் காரணம் பல விதமா இருக்கலாம்.. என் தோழிப் பெண் ஒருத்திக்கு இந்த கம்ப்ளெயிண்ட் வந்தது.. காரணம் சிறுநீரகப் பாதையில் கால்சியம் அடைப்புன்னு கண்டு பிடிச்சாங்க.. பெண் குழந்தைகள் பள்ளியில் அடிக்கடி டாய்லெட் போக பயந்துகிட்டு அடக்கிக் கொள்வதால் பலருக்கு இந்தப் பிரச்சினை வருது.. சில சமயம் அப்பெண்ட்டிசைடிஸ் எனப்படும் குடல் வால் வீக்கமும் இப்படி பொறுக்கமுடியாத வலி தரும்..உடனே டாக்டரிடம் போறது நல்லது தாமதம் இல்லாம
சந்தியா: லெட்சுமி அக்கா.. நீங்களும் கொஞ்சம் துணைக்கு வர்றீங்களா..
லெட்சுமி: கண்டிப்பா வர்றேன்..
***
காட்சி 4
இடம் ராஜா வீடு
மாந்தர்: ராஜா, லெட்சுமி, சாய் சரண்,
அல்கா, தாத்தா, பாட்டி.
ராஜா: என்ன லெட்சுமி... பக்கத்து வீட்டு ரம்யாவுக்கு வயத்து வலின்னு போனீங்களாமே.. என்ன பிரச்சினை..?
லெட்சுமி: லேடி டாக்டர் ஸ்கேன் பண்ணிப் பார்த்துவிட்டு சிறு நீரகப் பாதையில் கால்சியம் படிஞ்சிருப்பதால் இந்த வலின்னு கண்டுபிடிச்சு கரைய மாத்திரைகள் எழுதி இருக்காங்க.. நிறைய அவளைத் தண்ணீர் குடிக்கச் சொல்லி இருக்காங்க.. இந்தப் பசங்க வீட்டிலிருக்கும் போது பத்து நிமிஷத்துக்கு ஒருதரம் பாத்ரூம் போகும்..பள்ளிக்கூடத்தில் போறதே இல்லே.. பல சமயங்களில் சுத்தமா இல்லேன்னு சொல்லுதுங்க.. பாத்ரூமில் எல்லாம் வீட்டு பராமரிப்பை வெளியில் எதிர்பார்க்கலாமா..
ராஜா: என்ன பண்ணச் சொல்றே.. பல அலுவலகங்களில் கூட இந்த நிலைதான்.. பராமரிப்பு இல்லாததால் உபயோகிக்க அருவருப்பா இருக்கு.. இந்த விழிப்புணர்வு பள்ளி போன்ற இடங்களில் அவசியம் இருக்கணும்.. சுகாதாரமா இல்லாத பாத்ரூமை யூஸ் பண்ணினால் யூரின் இன்ஃபெக் ஷன் வந்திடும்.. அது ஒரு தொல்லை..
லெட்சுமி: நான் பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பில் உறுப்பினரா இருக்கேன்..மாதாமாதம் நடக்கும் கலந்தாய்வில் இந்த முறை குழந்தைகள் உபயோகிக்கும் பாத்ரூம் டாய்லெட் சுத்தப் பராமரிப்பை எடுத்துச் சொல்லப் போறேன்.. பாத்ரூம் கதவுகளின் தாழ்ப்பாள்கள் எளிதில் மூட திறக்க குழந்தைகளுக்கு எட்டும் படி இருக்கான்னு பார்க்கச் சொல்லப் போறேன்..
ராஜா: நல்ல முயற்சி. பக்கத்து வீட்டு ரம்யா போல குழந்தைகளுக்கு கால்சியம் படிமப் பிரச்சினைக்கு பாத்ரூம் சுகாதாரமற்ற தன்மையே முதல் காரணம்னு எடுத்துச் சொல்லு.. சுத்தமான குடிநீரைக் குழந்தைகள் அடிக்கடி குடிக்கவேண்டும்.. அதே சமயம் சிறுநீர் இடைவேளைக்குப் பிறகும் சிலருக்குப் பாத்ரூம் போக வேண்டி இருந்தால் எழுந்து ஆசிரியையிடம் சொல்லவும் கூச்சப்படக்கூடாது.. இதை ஆசிரியைகளும் குழந்தைகள் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்பதையும் சொல்லு..
நாங்க எல்லாம் படிக்கிற காலத்தில் எழுந்து சுண்டு விரலை உயர்த்திக் காட்டுவோம். "சரி போ' என்பார் ஆசிரியர்! நான் ஒவ்வொரு வகுப்பிலும் அப்படிக் காட்டி, பரிட்சை சமயத்திலும் காட்டி திட்டும் வாங்கி இருக்கேன்... ராத்திரியிலும் அம்மாவைத் தான் துணைக்கு எழுப்புவேன்..
சாய்சரண், அல்கா, தாத்தா, பாட்டி லெட்சுமி சிரிக்கிறார்கள்.
திரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...